Published:Updated:

ஸ்டோக்ஸ் வந்தால்... ஸ்மித் கேப்டன்ஸியில் கலக்கினால்... கரைசேருமா ராஜஸ்தான் ராயல்ஸ்?! LEAGUE லீக்ஸ்-5

Rajasthan Royals ( twitter.com/rajasthanroyals )

ராஜஸ்தானின் அடையளமாக அவர்கள் ஒரு வீரரைக்கூட இதுவரை உருவாக்கவில்லை. ரஹானேவையும் இப்போது டெல்லிக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு முழுமையான டீமாக அவர்கள் இதுவரை உருமாறவில்லை.

Published:Updated:

ஸ்டோக்ஸ் வந்தால்... ஸ்மித் கேப்டன்ஸியில் கலக்கினால்... கரைசேருமா ராஜஸ்தான் ராயல்ஸ்?! LEAGUE லீக்ஸ்-5

ராஜஸ்தானின் அடையளமாக அவர்கள் ஒரு வீரரைக்கூட இதுவரை உருவாக்கவில்லை. ரஹானேவையும் இப்போது டெல்லிக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு முழுமையான டீமாக அவர்கள் இதுவரை உருமாறவில்லை.

Rajasthan Royals ( twitter.com/rajasthanroyals )

ராஜஸ்தான் ராயல்ஸ் - சிறு வரலாறு :

ஐபிஎல்-ன் முதல் சாம்பியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ். ஷேன் வார்னே தலைமையில் முதல் ஐபிஎல் தொடரை வென்றவர்கள் அதன்பிறகு சாம்பியன்ஷிப் ரேஸிலேயே இல்லை. அதன்பிறகு மூன்று முறை ப்ளே ஆஃபுக்குத் தகுதிபெற்றிருக்கிறார்களே தவிர ஒருமுறை கூட இறுதிப்போட்டியில் விளையாடியதில்லை. வார்னே, டிராவிட், கிராம் ஸ்மித், ஷேன் வாட்சன், ரவீந்திர ஜடேஜா, யூசஃப் பதான், டேமியன் மார்ட்டின், ராஸ் டெய்லர், பட்லர், ஸ்டோக்ஸ், ரஹானே, ஸ்டீவ் ஸ்மித், ஜோஃப்ரா ஆர்ச்சர் என பல நட்சத்திர வீரர்கள் ஆடிய அணி ராஜஸ்தான். ஆனால், இவ்வளவு ஸ்டார்கள், மேட்ச் வின்னர்கள் இருந்தும் அந்த அணியால் கோப்பையை வெல்லமுடியாததற்கு காரணம் என்ன?

David Miller
David Miller
twitter.com/rajasthanroyals

பிரச்னை ஒன்று - சரியான காம்பினேஷன் இல்லை!

ராஜஸ்தான் அணி எதிரணிகளை அச்சுறுத்தும் அணியாக எப்போதுமே இருந்ததில்லை. பலம் வாய்ந்த பேட்டிங் லைன் அப்போ, பயமுறுத்தும் பெளலிங் படையோ அவர்களிடம் இல்லை என்பதே பிரச்னை. வெளிநாட்டு வீரர்கள் நன்றாக ஆடினால் மட்டுமே ப்ளே ஆஃப்க்குத் தகுதி பெறுவார்கள். அவர்கள் சொதப்பினால் டேபிளின் கீழே போய்விடுவார்கள். ராஜஸ்தானின் அடையளமாக அவர்கள் ஒரு வீரரைக்கூட இதுவரை உருவாக்கவில்லை. ரஹானேவையும் இப்போது டெல்லிக்கு அனுப்பிவிட்டார்கள். ஒரு முழுமையான டீமாக அவர்கள் இதுவரை உருமாறவில்லை. அதனால்தான் ராஜஸ்தான் அணி கடந்த ஆண்டு விளையாடிய 14 போட்டிகளில் 9 போட்டிகளில் தோல்வியடைந்து ஏழாவது இடம்பிடித்தது.

பிரச்னை இரண்டு - கலக்கல் கேப்டன்!

டி20 போட்டிகளில் வெற்றிபெற அதிரடியாக, உடனடியாக, சமயோசிதமாக முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன் அவசியம். ஆனால், ராஜஸ்தானுக்கு அப்படிப்பட்ட கேப்டன்கள் ஷேன் வார்னேவுக்குப்பிறகு அமையவேயில்லை. இல்லை ராஜஸ்தான் நிர்வாகம் அப்படி அமையவிடவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸின் கேப்டனாக மீண்டும் ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இப்போது இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலிய அணியில் இருக்கிறார். டி20 போட்டிகளில் விளையாடியவர், ஒருநாள் போட்டிகளுக்கு முன்பு காயம் அடைய இதுவரை நடந்த இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவில்லை. மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் 17-ம் தேதிதான் துபாய் வருகிறார்கள். அவர்கள் துபாய் வந்ததும் ஆறு நாள் குவாரன்டைனில் இருக்கவேண்டும் என்பதால் முதல் போட்டியில் ஸ்மித் விளையாடமாட்டார்.

Riyan Parag, Yashasvi Jaiswal
Riyan Parag, Yashasvi Jaiswal
twitter.com/rajasthanroyals

பிரச்னை மூன்று - இங்கிலாந்தின் ஆதிக்கம்!

பல அணிகள் ஆஸ்திரேலிய, வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை சார்ந்திருக்க ராஜஸ்தான் ராயல்ஸ் மட்டும் இங்கிலாந்து வீரர்களை அதிகம் சார்ந்திருக்கிறது. இன்றுவரை பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல்-ல் விளையாடுவாரா இல்லையா என்பது உறுதிசெய்யப்படவில்லை. ஜாஸ் பட்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாம் கரண் என இங்கிலாந்தின் ஸ்டார் பர்ஃபாமெர்கள் ராஜஸ்தான் அணியில் இருக்கிறார்கள். கடந்த பல ஆண்டுகளாக இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல்-ன் பாதியிலேயே தங்கள் நாட்டுக்காக விளையாடக் கிளம்பிவிடுவார்கள். ஆனால், இந்த முறை ஐபிஎல் முழுவதும் அவர்கள் அணிக்குள் இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதால் ராஜஸ்தான் ஓரளவு நம்பிக்கையோடு இருக்கலாம். ஆனால், பென் ஸ்டோக்ஸ் பிரச்னையை எப்படித் தீர்க்கப்போகிறது எனத்தெரியவில்லை. அக்டோபர் மாதவாக்கில் அவர் அணிக்குள் இணையலாம் எனத் தகவல்கள் வருகின்றன.

2020 சவால்கள் - கேப்டன் ஸ்மித்!

மீண்டும் கேப்டனாகியிருக்கும் ஸ்டீவன் ஸ்மித் தற்போது ஃபார்மில் இல்லை என்பது ஆஸ்திரேலிய தொடரில் தெரிந்தது. இரண்டு போட்டிகளை வைத்து ஃபார்மை முடிவுசெய்துவிடமுடியாது என்றாலும் அரபு பிட்ச்களை சமாளிக்க அவர் தனிப்பட்ட முறையில் போராடவேண்டியிருக்கும். அதேநேரத்தில் கேப்டனாகவும் பல கடுமையான முடிவுகளை எடுக்கவேண்டியிருக்கும். ஜோஃப்ரா ஆர்ச்சரும், ஜாஸ் பட்லரும் அணிக்குள் முக்கியமானவர்கள். ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு விதமான ப்ளேயிங் லெவனோடு விளையாடாமல் அணியை ஸ்மித் செட் செய்தாகவேண்டும். அப்போதுதான் ப்ளே ஆஃப் வெளிச்சம் தெரியும்.

Steve Smith
Steve Smith

ஓப்பனிங் குழப்பம்!

பட்லர் ஓப்பனிங் ஆடப்போகிறார் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டது. ஆனால், அவருடன் இணைந்து ஆடப்போகும் வீரர் யார் என்பதில்தான் ராயல்ஸின் வெற்றி இருக்கிறது. கொல்கத்தா அணியில் இருந்து வந்திருக்கும் சீனியர் பேட்ஸ்மேனான ராபின் உத்தப்பா இருக்கிறார். அதேசமயம் ஜூனியர் உலகக்கோப்பையில் கலக்கிய மும்பை வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருக்கிறார். ஸ்மித், பட்லருடன் ஜெய்ஸ்வாலை இறக்கவே விரும்புவார் என எதிர்பார்க்கலாம். ஸ்மித்தும், சஞ்சு சாம்சனும் அதற்கு அடுத்த இடங்களில் இறங்குவார்கள். ஐந்தாவது பேட்ஸ்மேனாக பென் ஸ்டோக்ஸ் இருந்திருப்பார். ஆனால், அவர் இப்போதைக்கு இல்லை என்பதால் தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் அல்லது இந்திய வீரர் ரியான் பராக்கை ராஜஸ்தான் பயன்படுத்தும். பெளலிங்கைப் பொறுத்தவரை ஜோஃப்ரா ஆர்ச்சரும், டாம் கரணும் வேகப்பந்து ஏரியாவை நிரப்பிவிடுவார்கள். இங்கே வெளிநாட்டு கோட்டா நான்கைத்தாண்டினால் இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகியைப் பயன்படுத்தலாம்.

ஸ்பின் டு வின்!

ஸ்பின்னைப் பொருத்தவரை மயாங்க் மார்க்கண்டே, ஷ்ரேயாஸ் கோபால், ராகுல் டெவட்டியா என ஆஃப், லெக் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ஷ்ரேயாஸ் கோபாலின் லெக் ஸ்பின் அரபு பிட்ச்களில் அட்டகாசமாக செட் ஆகும் என நம்புகிறது ராஜஸ்தான். இவர்களை ஒருங்கிணைக்க அணியின் மென்ட்டாராக ஷேன் வார்னே இருக்கப்போகிறார் என்பது கேப்டன் ஸ்மித்துக்குப் பெரும்பலமாக இருக்கும்.

Shreyas Gopal
Shreyas Gopal
twitter.com/rajasthanroyals
கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தின் முடிவுகளும், இங்கிலாந்து வீரர்களின் பர்ஃபாமென்ஸுமே ராஜஸ்தானைக் காப்பாற்றும். ஸ்டோக்ஸ் அணிக்குள் வருவதே அந்த அணியின் நம்பிக்கையை உயர்த்தும். பொறுத்திருந்து பார்ப்போம்!