திவேதியாவின் மற்றுமொரு அபார ஆட்டத்தால் தோல்யின் விளிம்பில் இருந்த மீண்டு, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.
2020 ஐபிஎல்-ல் பென் ஸ்டோக்ஸ் முதல்முறையாகக் களமிறங்கும் போட்டி, வார்னர் வெர்ஸஸ் ஸ்மித் எனப் போட்டி தொடங்குவதற்கு முன்பாக இருந்த பரபரப்பு ஆட்டத்தில் இல்லை. இரண்டாம் இன்னிங்ஸின் பாதிவரையிலும் அழுது வடிந்த போட்டி, கடைசி 6 ஓவரில் அனல் பறந்து, இதயத் துடிப்பை எகிறச் செய்து, இறுதியில் ராஜஸ்தானின் பக்கமாய் முடிந்துள்ளது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்து வீசுமாறு ராஜஸ்தான் ராயல்ஸைக் கேட்டுக் கொள்ள, ஆரஞ்சுக் கேப்புக்கான பந்தயத்தில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் வார்னரும் பேர்ஸ்டோவும் வழக்கம் போலத் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் நான்கு ஓவர்களை ஆர்ச்சரும், ஷ்ரேயாஸ் கோபாலும் வீசி ரன் குவிப்பை பெரிதும் கட்டுப்படுத்தினர். குறிப்பாக தன் வேகத்தால் மிரட்டும் ஆர்ச்சர் இந்தப் போட்டியின்போதும் அதனைத் தொடர்ந்தார். முதல் மற்றும் மூன்றாவது ஓவர்களில் மொத்தமாய் வெறும் 3 ரன்களை மட்டுமே அவர் கொடுத்திருந்தார். வார்னர் மற்றும் பேர்ஸ்டோ கூட்டணியால் அணிக்குத் தேவையான ஒரு கிக் ஸ்டார்ட்டைக் கொடுக்க முடியவில்லை.
ஐந்தாவது ஓவரை சுதீப் தியாகி வீச, மூன்றாவது பந்தில் சிக்ஸர் விளாசிய பேர்ஸ்டோ, அதற்கு அடுத்த பந்தையும் சிக்ஸருக்கு விரட்ட ஆசைப்பட்டு தூக்கி அடிக்க, சாம்சன் அற்புதமான கேட்ச் பிடித்து பேர்ஸ்டோவை ஆட்டமிழக்க செய்தார்.
அடுத்ததாய் உள்ளே வந்த மனிஷ் பாண்டே வார்னருடன் இணைந்தார். ராஜஸ்தான் வீரர்களின் சிறப்பான பந்துவீச்சால் பவர்ப்ளே ஓவரில் வெறும் 26 ரன்களை மட்டுமே சன்ரைசர்ஸால் குவிக்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து வந்த ஓவர்களில் வார்னர் மற்றும் பாண்டேக்கு இடையேயான பார்ட்னர்ஷிப் கொஞ்சம் கொஞ்சமாக நிலைத்து நின்றாலும், ராஜஸ்தான் வீரர்களின் அற்புதமான பந்து வீச்சாலும், ஃபீல்டிங் முயற்சிகளாலும் ரன்கள் ஏறவே இல்லை. அதே நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த ஸ்மித் ஒவ்வொருவராய் மாற்றிப் பார்த்தும் எந்தப் பலனும் இல்லாமல் போக, இருபக்கமும் ஆட்டம் மிகவும் மந்தமாகவே நகர்ந்தது. பென் ஸ்டோக்ஸால் கூட விக்கெட் எடுக்க முடியாத நிலையில், சன்ரைசர்ஸ் 14 ஓவர்களில் 93/1 என்ற அளவிலேயே இருந்தது.

வார்னர் மற்றும் பாண்டே கூட்டணியை உடைத்தே ஆக வேண்டும் என்பதற்காக, ஸ்மித், ஆர்ச்சரை 15வது ஓவரில் உள்ளே கொண்டு வர, அவரை ஏமாற்றாமல், அந்த ஓவரின் நான்காவது பந்திலேயே ஸ்டம்ப்புகளைத் தெறிக்கவிட்டு வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார் ஆர்ச்சர். சிறப்பாக ஆடிய வார்னர் அரைசதத்தைக் கடக்காமல் 38 பந்துகளில் 48 ரன்களுடன் வெளியேறினார். இது ராஜஸ்தானுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
வார்னரைத் தொடர்ந்து, கேன் வில்லியம்சன் களமிறங்கி பாண்டேயுடன் கை கோர்த்தார். பாண்டே 40 பந்துகளில் தனது அரைசதத்தை கடந்தார். எனினும் அதற்கு அடுத்த ஓவரில் உனத்கட் வீசிய நான்காவது பந்தில் திவேதியாவிடம் கேட்ச் கொடுத்து, 54 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து ரன்களைக் குவிக்க வேண்டிய இறுதி ஓவர்களில் கார்க், வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஆர்ச்சர் வீசிய போட்டியின் 19வது ஓவரில், 19 ரன்களையும், 20வது ஓவரில் உனத்கட்டின் பந்தில் 16 ரன்களையும் குவித்து 158 ரன்கள் என்ற என்ற இடத்திற்கு சன்ரைசர்ஸைக் கொண்டு சென்றது. வார்னர் மற்றும் மணீஷ் பாண்டே ஆடிய மந்தமான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் 20 ரன்கள் குறைவாக எடுத்தது என்றே சொல்லலாம்.
159 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தத் தொடங்கிய ராஜஸ்தானுக்கு, தொடக்கமே அதிர்ச்சி அளிப்பதாய் அமைந்தது. சமீப காலமாய் சொதப்பி வரும் ராஜஸ்தானின் ஓப்பனிங் பேட்டிங் கூட்டணி, வழக்கம் போல இன்றும் அதையே செவ்வனே செய்தது.
ஸ்டோக்ஸ் மிடில் ஆர்டர் ஆடுவார் என்று நினைத்தால் அவரை ஓப்பனிங் இறக்கிவிட்டிருந்தார்கள். இரண்டாவது ஓவரில் கலில் அஹமத் வீசிய பந்தில், ஸ்டோக்ஸ் ஸ்டம்ப்பைப் பறிகொடுத்து ஆட்டமிழக்க அடுத்தபடியாக ஸ்மித் பட்லருடன் கைகோர்த்தார். அவசியமே இல்லாமல் இரண்டாவது ரன்னுக்கு ஓடியதால், ஸ்மித் ரன்அவுட் ஆகி ஆட்டமிழந்தார். அந்த அதிர்ச்சியிலிருந்து ராஜஸ்தான் மீள்வதற்குள்ளாகவே அடுத்து வந்த ஓவரில் அஹமது வீசிய பந்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து பட்லரும் பெவிலியனுக்குத் திரும்ப, ராஜஸ்தானுக்கு அடி மேல் அடியாய் விழுந்தது. 26 ரன்களுக்கு 3 விக்கெட்கள் போய்விட, சாம்சன் உத்தப்பா ஜோடி தங்கள் ஆட்டத்தைத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாய் ரன்களை இவர்கள் சேர்க்க ஆரம்பித்த தருணத்தில் பத்தாவது ஓவரில், ரஷித் கான் வீசிய பந்தில் உத்தப்பா எல்பிடபிள்யு ஆனார். மீண்டும் ரஷித்தின் பந்திலேயே பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து, சாம்சனின் விக்கெட்டை ஐந்தாவது விக்கெட்டாய்ப் பறிகொடுத்து ராஜஸ்தான்.

49 பந்துகளில் 81 ரன்களைக் குவிக்க வேண்டும் என்ற நிலைக்கு ராஜஸ்தான் தள்ளப்பட, ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் சன்ரைசர்ஸ் பக்கமாய் நகரத் தொடங்கியது. அடுத்து உள்ளே வந்த திவேதியாவாலும் முதலில் எந்த மாயாஜாலத்தையும் நிகழ்த்திக் காட்ட முடியவில்லை. 16வது ஓவரில், அஹமது வீசிய பந்தை திவேதியா அடிக்க, காற்றில் பறந்துவந்த கேட்ச் வாய்ப்பை நழுவ விட்டார் பிரியம் கார்க். இதுதான் போட்டியின் போக்கையே மாற்றிய தருணம்.
கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட திவேதியாவும் பராக்கும் அடுத்து வந்த சந்தீப்பின் ஓவரை ஒரு கை பார்த்து 18 ரன்களைக் குவித்து பந்துகளுக்கும் தேவைப்படும் ரன்களுக்குமான இடைவெளியைக் குறைத்தனர். அதைத் தொடர்ந்து 18 பந்துகளில் 36 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது ராஜஸ்தானுக்கு. அடுத்ததாய் வந்த ரஷித் ஓவரில், ஹாட்ரிக் பவுண்டரியை விளாசிய திவேதியா, ராஜஸ்தான் ரசிகர்களின் கண்களில் ஒளியைக் கொண்டு வந்தார்.
ராஜஸ்தானை ரன் எடுக்க விடாமல் தடுக்க, 3 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே கொடுத்து, அதிலும் ஒரு மெய்டன் ஓவரைத் தந்திருந்த நடராஜனை வார்னர் 19-ம் ஓவர் வீச வைக்க, அந்த ஓவரில் ஒரு பவுண்டரியையும் சிக்ஸரையும் பறக்க விட்ட திவேதியா அணியை வெற்றியின் பக்கத்தில் கொண்டு சென்று விட்டார்.
இறுதி ஓவரில் 8 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில், பந்து வீசம் வாய்ப்பு அஹமதுக்கு அளிக்கப்பட்டது. 2, 1, 2, 1 ரன்கள் என்ற கணக்கில் முதல் 4 பந்துகள் நகர, கடைசி 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ராஜஸ்தான் இருந்தது. ஒரு ரன் எடுத்தால் சூப்பர் ஓவர், ரன் எதுவும் எடுக்காவிட்டால், வெற்றி சன்ரைசர்ஸுக்கு என்ற பரபரப்பான நொடிகளில், ஐந்தாவது பந்தை அஹமது வீசினார். பராக் பந்தைத் தூக்கி அடிக்க சிக்ஸருக்குப் பறந்து ராஜஸ்தான் ரசிகர்களின் வயிற்றில் பாலை வார்த்தது. 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தானுக்கு இந்த ஐபிஎல்-ல் இது மூன்றாவது வெற்றி.

சாம்சன் ஆட்டமிழந்தபோது, 12 ஓவர்களில், 78 ஆக இருந்த அணியின் ஸ்கோரை, 48 பந்துகளில் 85 ரன்களைக் குவித்து திவேதியா- ரியான் பராக் ஜோடி இலக்கை நோக்கி எடுத்துச் சென்றுள்ளது.
மிடில் ஓவர்களில் பேட்டிங்கில் சொதப்பியதும், சில கேட்ச்களை தவறவிட்டதும், திவேதியா - பராக் கூட்டணியை உடைக்க முடியாமல் போனதும், சன்ரைசர்ஸின் தோல்விக்குக் காரணமாய் அமைந்தன.
ராஜஸ்தான் தனது பவர்ப்ளே ஓவர்களில் விக்கெட்களை இழந்து தடுமாறியிருந்தாலும் பராக்கின் பொறுப்பான ஆட்டத்தாலும், கேம் சேஞ்சர் திவேதியாவின் அதிரடியாலும் வெற்றி அவர்களின் வசமாகி இருக்கிறது.