Published:Updated:

நேற்று இல்லை நாளை இல்லை... மும்பைதான் எப்போதும் சாம்பியன்ஸ்... ஏனென்றால்?! #MIvDC

#MIvDC

ரெட்டைப்படை ஆண்டுகளில், மும்பை கப்பை வெல்லாது, அரபு மைதானம் மும்பைக்கு ராசியில்லை இப்படி எல்லாம் சொல்லப்பட்ட அத்தனை ஆருடங்களையும் பொய்யாக்கி நேற்று இல்லை, நாளை இல்லை எப்பவும் நாங்கள்தான் சாம்பியன் என விஸ்வரூப வெற்றியைப் பதித்துள்ளது மும்பை. #MIvDC

Published:Updated:

நேற்று இல்லை நாளை இல்லை... மும்பைதான் எப்போதும் சாம்பியன்ஸ்... ஏனென்றால்?! #MIvDC

ரெட்டைப்படை ஆண்டுகளில், மும்பை கப்பை வெல்லாது, அரபு மைதானம் மும்பைக்கு ராசியில்லை இப்படி எல்லாம் சொல்லப்பட்ட அத்தனை ஆருடங்களையும் பொய்யாக்கி நேற்று இல்லை, நாளை இல்லை எப்பவும் நாங்கள்தான் சாம்பியன் என விஸ்வரூப வெற்றியைப் பதித்துள்ளது மும்பை. #MIvDC

#MIvDC
ஆயிரம் அணுகுண்டுகள் முன் சின்னக் கம்பி மத்தாப்பின் வெளிச்சம் போலத்தான் முடிந்து போனது டெல்லியின் கோப்பைக் கனவு. சுனாமியில் சிக்கிய சிறு இலையாய் டெல்லி தத்தளிக்க, "உங்களுக்குத்தான் இது முதல் ஃபைனல், எங்களுக்கு, இதுவும் ஒரு ஃபைனல் அவ்வளவே!" என்று போட்டியை மிக எளிதாக எதிர்கொண்டு எந்தவிதப் பிழையுமின்றி, ஒரு தூய்மையான வெற்றியைப் பெற்று, ஐந்தாவது முறையாகக் கோப்பையைத் தங்கள் கைககளில் ஏந்தியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ்.

ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று தாங்கள் செய்த மேஜிக் கண் முன் நிழலாட, அதற்கும்மேல் பிரஷர் கேமில் சேஸிங் இன்னும் கூடுதல் அழுத்தம் தரும் என்ற காரணத்தால், டாஸ் வென்றதும், "முதலில் பேட்டிங் செய்கிறோம்!" என்றார் டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர். மும்பையோ வெல்லப் போவது விக்கெட் கணக்கிலா ரன் கணக்கிலா என்பதே எங்கள் மனக்கணக்கு, டாஸ் எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்று சற்று கர்வத்தோடே களம் கண்டது.

#MIvDC
#MIvDC

காயத்திலிருந்து மீண்டு விட்ட போல்ட், ஆயிரம் வோல்டாய் வருவாரே, அவர் என்ன செய்யக் காத்திருக்கிறாரோ என்ற பீதியிலேயே இருந்த டெல்லி ரசிகர்களுக்கு, தங்கள் பக்கம் இருந்த ஸ்டோய்னிஸையும் தவானையும் பார்த்ததும் நம்பிக்கை பிறந்தது. ஆனால் அவர்களது நம்பிக்கை அவநம்பிக்கை என்பதைப் போல் முதல் பந்திலேயே தண்டர் போல்ட்டாக மாறிய போல்ட் ஸ்டோய்னிஸை சூறையாடி, கோல்டன் டக்குடன் வெளியே அனுப்ப சல்லிசல்லியாய் நொறுங்கிப் போயின ரசிகர்களின் இதயங்கள். அதன்பிறகு உள்ளே வந்த ரஹானேவோ தொடர்ந்து எல்லாப் போட்டிகளிலும் சொதப்பியதைப் போல இன்றும் ஒற்றை இலக்கத்துடன் வெளியேற டெல்லிக்குத் தலைவலி ஆரம்பித்தது.

ஷ்ரேயாஸ் அடுத்து உள்ளே வர, அணியின் ஒப்பற்ற பலமாய்க் கருதப்பட்ட தவான், ஜெயந்த் யாதவ்வின் பந்தில் 15 ரன்களுடன் வெளியேற, நான்கு லெஃப்ட் ஹேண்டர்கள் இருப்பதனால், சஹாருக்கு பதில் ஜெயந்த்தை இறக்கிய ரோஹித்தின் மாஸ்டர் மூவ் சரியே என்றானது. நான்காவது ஓவரில், மூன்றாவது விக்கெட்டை இழந்த டெல்லிக்கு மூச்சு முட்டத் தொடங்கியது.

#MIvDC
#MIvDC

பள்ளத்தாக்கில் படுத்துக் கிடந்த அணியை, பக்குவமாய் மீட்டெடுக்கும் முயற்சியில் அடுத்ததாய் இணைந்த இரு கைகள் ஷ்ரேயாஸ் மற்றும் பண்ட்டுடையது‌. ஆளானப்பட்ட ஸ்டோய்னிஸையும் தவானையுமே தலையில் தட்டி அனுப்பிய மும்பைக்கு, சில போட்டிகளாய் சரியாக விளையாடாத ஷ்ரேயாஸும் பல போட்டிகளாக பொறுமையைச் சோதித்துக் கொண்டிருக்கும் பண்ட்டுமா பெரிய சவாலாய் இருந்து விடப் போகிறார்கள்? போட்டி 20 ஓவர்கள் முழுமையாய் நடக்குமா, நூறு ரன்களையாவது டெல்லி தாண்டுமா? - இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் எழ, போட்டியைத் தொடர்ந்து பார்த்தே ஆக வேண்டுமா என்ற எண்ணமே ரசிகர்கள் மனதில் ஏற்பட்டது.

ஆனால், சிங்கத்தின் காதினுள் புகுந்த சிற்றெறும்பாய், மும்பைக்கே ஆட்டம் காட்டினர் இந்த இளம் இந்திய வீரர்கள். பதிமூன்று வருடக் கனவு இது, கிட்டத்தட்ட இரண்டு மாத உழைப்பு இது என உணர்ந்து கொண்ட இந்த இணை, 69 பந்துகளில் 96 ரன்களைக் குவித்தது. இந்த இருவரணி, ஒன்சைடாக மாறி இருந்த போட்டியை திரிசங்கு சொர்க்கமாய் மாற்றிக் காட்டியது.

பத்தாயிரம் வாலா பட்டாசாய் ஜாலம் காட்டிய பண்ட், பின்னர் நாதன் கூல்ட்டர் நைல் பந்தில் 38 பந்துகளில் 56 ரன்களோடு வெளியேற, டெல்லியின் ரன்குவிப்புக்கு வேகத்தடை போடப்பட்டது. ஒருபக்கம் ஷ்ரேயாஸ் அரைச்சதத்தைக் கடக்க, மறுபக்கமோ, அதற்கடுத்து வந்த ஹெட்மையரையும் அக்சரையும் போல்ட்டும் கூல்ட்டர் நைலும் காலி செய்ய, இறுதியாய் டெல்லியின் ஸ்கோர் 156 என்று வந்து நின்றது. சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ், ஐபிஎல் இறுதிப் போட்டியில், இரண்டாவது பெஸ்ட் ஸ்கோரான 65 ரன்களைக் குவித்த கேப்டன் என்ற சாதனையைத் தனக்குரியதாக்கினார்.

#MIvDC
#MIvDC

ஒருகட்டத்தில் இதுதான் மொத்த ஐபிஎல் சீசனிலும் மோசமான ஸ்கோராக இருக்கப் போகிறது என்பதை மாற்றி கொஞ்சம் மதிப்பான ஸ்கோரை டெல்லி இலக்காய் நிர்ணயித்தது. மறுபக்கம் மும்பையோ மூன்று விக்கெட்டுகள் மூலம் தொடக்கத்தில் அதிர்ச்சி கொடுத்து, மிடில் ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் திணறி, பண்ட்டின் விக்கெட் மூலமாய் போட்டியைத் திரும்பவும் தங்கள் பக்கம் கொண்டு வந்தது. எனினும் இந்த இலக்கெல்லாம் மும்பைக்கு முட்டுக்கட்டை போட முடியாதே என்ற தோற்றமே உருவானது.

#MIvDC
#MIvDC

எனினும் பனிப்பொழிவு இல்லாதது, அழுத்தம் மிகுந்த நாக்அவுட் போட்டியில் செகண்ட் பேட்டிங் செய்வது இவையெல்லாம் மும்பைக்கு எதிராக அமையும் என்று கப்பின் பக்கம் ஷ்ரேயாஸின் கடைக்கண் பார்வை சென்று திரும்ப, "நாக்அவுட் ஸ்பெச்கலிஸ்ட்பா நாங்கள்!" என முதல் பந்திலிருந்தே அனல் தெறிக்க விட்டது மும்பை. ரபாடாவை வைத்து அடிப்போம் என டெல்லி கெத்து காட்ட, நாங்க அடிக்கப் போறதே ரபாடாவைத்தான் என அவரது ஓவரில் மூன்று பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் டிகாக் பறக்க விட்டார்.

பந்தை அஷ்வின் மற்றும் நார்க்கியா கைகளுக்குள் ஷ்ரேயாஸ் அனுப்ப, அப்போதும் ஓவருக்கொரு முறை பவுண்டரி லைன் பக்கம் பந்து கம்பியை நீட்ட, நொந்து போன ஷ்ரேயாஸ் இறுதியில் 'ஸ்டோய்னிஸே சரணம்' எனப் பந்தை அவர் கையில் கொடுத்தார். பேட்டிங்கில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆன. ஸ்டாய்னிஸ், பெளலிங்கில் முதல் பந்திலேயே டிகாக்கை வெளியே அனுப்பினார். 'அப்பாடா!' என ஷ்ரேயாஸ் ரிலாக்ஸ் ஆவதற்குள், உள்ளே வந்த சூர்யக்குமார் யாதவ், பேக் டு பேக் ஒரு பவுண்டரியையும் சிக்ஸரையும் ஸ்டோய்னிஸ் பந்திலேயே அடித்து அவருக்கான தண்டனையைத் தந்தார். 6 ஓவரில் 61 ரன்களைக் குவித்தது மும்பை‌. இதற்கு முன்பும் இதே 61/1 என்ற ஸ்கோரை, சிஎஸ்கேக்கு எதிராக, 2015 இறுதிப்போட்டியில் இதே மும்பைதான் அடித்திருந்தது.

#MIvDC
#MIvDC

இதற்குப்பின் ரோஹித், "இழந்த ஃபார்மை எல்லாம் இன்றே மீட்டெடுப்பேன், ஆஸ்திரேலியா தொடர் பக்கத்தில் வந்து விட்டது!" என்று வெறியாட்டம் போட, மறுபக்கம் சூர்யக்குமாரும் அவருக்கு இணையாட்டம் ஆட, பாவம் சக்கரத்துக்குக் கீழே சிக்கிய எலுமிச்சம் பழம் ஆனது டெல்லி பெளலர்களின் கதி!

போட்டியை மும்பை 15-வது ஓவரில் முடிக்குமா இல்லை ஒன்றிரண்டு ஓவர்கள் கூடக்குறையப் போகுமா என்ற கேள்வி மட்டுமே இருபக்க ரசிகர்கள் மத்தியிலும் இருக்க, சூர்யக்குமாரின் ரன் அவுட், ஒரு நம்பிக்கைக் கீற்றை டெல்லி கண்களில் ஒளிறவிட்டது. ஆனாலும் அடுத்து உள்ளே வந்த இஷானைப் பார்த்ததும், இதிகாசங்களிலும், ஹாலிவுட் படங்களிலும் ஒரு அசுரனையோ, வில்லனையோ அழித்தால், மறுபடி மறுபடி இருவராய்க் கிளம்பி வரும் காட்சிதான் கண்முன் வந்தது.

23 ரன்களில் 20 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ரோஹித் விக்கெட் விழ, அடுத்து வந்த பொல்லார்டும் இரண்டு பவுண்டரிகளுடன் வெளியேற, இனி விக்கெட் விழுந்தால் என்ன, விழாவிட்டால் என்ன என்பதுதான் டெல்லி ரசிகர்களின் மைண்ட் வாய்சாக இருந்தது. ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக்கின் விக்கெட் விழுந்தாலும் 9 பந்துகள் மிஞ்சியிருந்ததால் டெல்லியால் எந்த வித மாற்றத்தையும் செய்து விடமுடியல்லை. இந்த விக்கெட்டுகள் பவர்ப்ளே ஓவர்களில் விழுந்திருப்பின் ஒருவேளை கதை மாறி இருக்கலாம். டெல்லியின் பவர்ஃபுல் பெளலிங் யூனிட்டில் அக்ஸர், அஷ்வின் தவிர மற்ற அத்தனை பேருக்கும் ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மும்பை, இறுதியில் 18.4 ஓவர்களில் இலக்கைத் துரத்தி வெற்றிபெற்றது.

#MIvDC
#MIvDC

மும்பை இந்தியன்ஸ் என்ற பெயருக்கேற்றாற் போல் பொல்லார்டு, டிகாக், போல்ட் என ஒரு சில வீரர்களைத் தவிர்த்து, திறமைமிக்க இந்திய வீரர்களுக்கு ஆதரவளித்து வளர்த்துவிட்டதன் பலனை, கப் மேல் கப்பாய் அறுவடை செய்து மும்பை அனுபவித்து வருகிறது.

டெல்லி, இறுதிப் போட்டியில் நுழைந்ததே பெரிய விஷயம் என ஆறுதலாய் ரன்னர் அப் பேட்ஜ் குத்திக் கொண்டது. ரெட்டைப்படை ஆண்டுகளில், மும்பை கப்பை வெல்லாது, அரபு மைதானம் மும்பைக்கு ராசியில்லை இப்படி எல்லாம் சொல்லப்பட்ட அத்தனை ஆருடங்களையும் பொய்யாக்கி நேற்று இல்லை, நாளை இல்லை எப்பவும் நாங்கள்தான் சாம்பியன் என விஸ்வரூப வெற்றியைப் பதித்துள்ளது மும்பை. "மும்பை இந்தியன்ஸ் நகீ , மும்பை சாம்பியன்ஸ் போலோ" என ஆணித்தரமாய் நிருபித்து ஆக்ரோஷம் காட்டியுள்ளது.

வரணும் சென்னை சூப்பர் கிங்ஸ்தான் மும்பையை மிரட்ட வரணும்!