Published:Updated:

மும்பை இந்தியன்ஸ் அல்ல, மும்பை சாம்பியன்ஸ்... டெல்லிக்கி இன்னொரு சான்ஸ் இருக்கி... ஆனா?! #MIvDC

#MIvDC

மும்பைக்கு இருக்கும் முனைப்பை வைத்து பார்க்கையில், இவர்களை மீறி வேறு ஒரு அணியால் இந்த 2020 ஐபிஎல் கோப்பையைத் தூக்க முடிந்தால் அது மிகப்பெரிய சாதனையாகத்தான் இருக்கும். #MIvDC

Published:Updated:

மும்பை இந்தியன்ஸ் அல்ல, மும்பை சாம்பியன்ஸ்... டெல்லிக்கி இன்னொரு சான்ஸ் இருக்கி... ஆனா?! #MIvDC

மும்பைக்கு இருக்கும் முனைப்பை வைத்து பார்க்கையில், இவர்களை மீறி வேறு ஒரு அணியால் இந்த 2020 ஐபிஎல் கோப்பையைத் தூக்க முடிந்தால் அது மிகப்பெரிய சாதனையாகத்தான் இருக்கும். #MIvDC

#MIvDC
"டெல்லிக்குத்தான் டாஸ் என்பது ஒரு பெரிய விஷயம். அதன் மூலமாய் அவர்களால் மும்பையை முதலில் பேட்டிங் செய்ய வைக்க முடியும். ஆனால், மும்பைக்கோ டாஸ் என்பது, ஒரு பொருட்டே இல்லை. ஏனென்றால் அது அவர்களை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவது இல்லை...''
- மும்பை வெர்ஸஸ் டெல்லியின் முதல் ப்ளேஆஃப் போட்டி தொடங்குவதற்கு முன் கவாஸ்கர் சொன்ன வார்த்தைகள் இவை.

அவர் சொன்னது அப்படியே வார்த்தை மாறாமல் நடந்தும் முடிந்திருக்கிறது. டாஸை வென்ற டெல்லி போட்டியில் தோற்றிருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் என்பதைவிட மும்பை சாம்பியன்ஸ், இந்தப் பெயர்தான் இவர்களுக்குப் பொருத்தமாய் இருக்கும். சாம்பியன்ஸுக்கு உண்டான சகல அம்சங்களும் பொருந்திய அணி என்பதை மும்பை எல்லாத் தருணங்களிலும் நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.

#MIvDC
#MIvDC

டாஸ் வென்ற டெல்லி பனிப்பொழிவைக் காரணம் காட்டி, பெளலிங்கைத் தேர்ந்தெடுக்க, "மாட்டினீங்களா?" என்னும் மைண்ட் வாய்சுடன், மும்பை இந்தியன்ஸ் நமட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டனர். ரோஹித்துடன் ஓப்பனிங் இறங்கிய டிகாக், பவுண்டரியுடன் பிள்ளையார் சுழி போட்டதோடு, அந்த ஓவரிலேயே 19 ரன்களுடன் தொடங்க, இன்னைக்கு சம்பவம் இருக்கிறது என்பது அப்போதே தெளிவானது. அடுத்த ஓவரிலேயே அஷ்வின், வருடம் தவறாமல், ப்ளேஆஃப் என்றாலே தொடர்ந்து சொதப்பி வரும் ரோஹித்தை கோல்டன் டக் ஆக்க, டெல்லி ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதந்தனர். ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை‌. உள்ளே வந்த சூர்யக்குமார் டிகாக்குடன் கூட்டணி அமைத்து, டெல்லி பெளலர்களை டெபாசிட் இழக்க வைக்க வேண்டும் என்பது போல் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட, ஷ்ரேயாஸ் மீண்டும் அஷ்வினை உள்ளே கொண்டு வர, அவரோ, தனது இரண்டாவது ஓவரில் 11 ரன்களைக் கொடுத்து ஏமாற்றினாலும், அதற்கடுத்த ஓவரிலேயே, 25 பந்துகளில் 40 ரன்களைக் குவித்திருந்த டிகாக்கை அனுப்பி வைத்தார்.

அடுத்து உள்ளே வந்ததோ, இஷான் கிஷன். இதற்கடுத்து, நாங்கள்லாம் ரொம்ப அடக்க ஒடுக்கமானவங்க என்பதைப் போல சில ஓவர்களுக்கு மும்பை அடக்கி வாசிக்க, நார்க்கியாவும் சூர்யக்குமாரை வெளியே அனுப்ப, அடுத்த ஓவரில் உள்ளே வந்த பொல்லார்டை வந்த வேகத்திலேயே பூமராங்காக அஷ்வின் திருப்பி அனுப்ப, "அப்பாடா, போட்டி நம்ம கைல வந்திடுச்சு!" எனத் துள்ளிக் குதித்தது டெல்லி. ஏனென்றால் இந்த சமயத்தில், அணியின் ஸ்கோர் 101/4 என இருந்தது. ஆனாலும் ரன்ரேட் 8 என்ற கணக்கில் இருந்தது என்பது கொஞ்சம் அச்சமூட்டுவதாகவே டெல்லிக்கு இருந்தது. எஞ்சியிருக்கும் 48 பந்துகளை கட்டுக்கோப்பாக வீசி போட்டியைத் தங்கள் பக்கம் மொத்தமாய் கொண்டு வரலாம் என டெல்லி கனவு காண, 'அந்த சீனே இங்கே இல்லை!' என்பதைப் போல், இஷான் அமைதி மோடில் இருந்து அதிரடி மோடுக்கு மாறினார். இன்னொரு பக்கம் பெரிய தம்பி குர்னால் போய், சின்னத் தம்பி ஹர்திக் உள்ளே வர, அவரும் இஷானும் சேர்ந்து டெல்லி பெளலர்களை கதிகலங்க வைத்தனர். முதல் 11 பந்துகளில் 14 ரன்களை எடுத்திருந்த இஷான், கடைசி 16 பந்துகளில் 44 ரன்களைக் குவிக்க, தன் பங்கிற்கு 264 ஸ்ட்ரைக் ரேட்டில் 37 ரன்களை ஹர்திக் குவித்து டெல்லியை மொத்தமாய் காலி செய்ய, அணியின் ஸ்கோர் 200-ல் வந்து நின்றது.

#MIvDC
#MIvDC

பொலார்டும், ரோஹித்தும் காட்டடி அடிக்கவில்லை... சீரான இடைவெளியில் விக்கெட்டுகளும் விழுந்தன என்றபோதிலும், 201 என்பது இலக்கு. இந்த எண்களே மும்பை இந்தியன்ஸ் அணி பேட்ஸ்மேன்களின் முரட்டு ஃபார்ம் என்ன என்பதனையும், ஏன் வெல்ல முடியாத அணியாக வலம் வருகிறதென்பதையும் சொல்லும். அஷ்வின் திரும்பவும் ஆஃப் ஸ்பின்னில் என்னை அடித்துக் கொள்ள யாருமேயில்லை என்பதனை நிரூபித்துக் காட்டியுள்ளார். ரபாடா, நார்க்கியா ஆகிய பெளலர்களின் எக்கானமி எல்லாம் சூடான காபியில் வைத்த தெர்மாமீட்டரின் குறியீடு மாதிரி எகிற, அஷ்வின் மட்டும் வெறும் 7.2 என முடித்திருந்தார்.

நாக் அவுட் போட்டிகளில், 201 என்பது இருளவைக்கும் இலக்குதான் என்றாலும், 16 புள்ளிகளைப் பெற்று டாப் 2 இடத்தில் இருக்கின்ற அணிக்கு இது நிச்சயமாய் எட்டக்கூடிய இலக்குதான் என கனவு கண்டார்கள் டெல்லி ரசிகர்கள். ஆனால், அது பகல் கனவு என்பதைப் போலத்தான் ஒட்டுமொத்த இரண்டாவது இன்னிங்ஸும் அமைந்தது.

மும்பையின் ராட்சசக் கைகளுக்குள் சிக்கிய டெல்லி பேட்ஸ்மேன்கள் சின்னாபின்னமானதுதான் மிச்சம். முதல் ஓவரில் விக்கெட் விழுந்தால் அதிர்ச்சி தொடக்கம் எனச் சொல்லுவோம். ஆனால், டெல்லியிலோ பிரித்வி ஷா விளையாடினால்தான் அது அதிர்ச்சி தொடக்கமாய் அமையும். இன்றைய போட்டியிலும் இரண்டாவது பந்திலேயே பிரித்வி ஷா டக்அவுட் ஆக, போன மேட்சில் தற்காலிக ஃபார்முக்குத் திரும்பி இருந்த ரஹானே, பேக் டு த ஃபார்ம் ஆக, போல்ட்டின் பந்தில் எல்பிடபிள்யு ஆனார்.

#MIvDC
#MIvDC

இரண்டு விக்கெட்டுடன் மெய்டன் ஓவர் என அட்டகாசமான ஒரு தொடக்கத்தை போல்ட் கொடுக்க, அதற்கடுத்த ஓவரிலேயே தவானின் விக்கெட்டை பூம்ரா வீழ்த்த, டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூவரும் டக்அவுட் ஆக, டெல்லி தள்ளாடத் தொடங்கியது. கேப்டன் ஷ்ரேயாஸோ தன் பங்கிற்கு மூன்று பவுண்டரிகள் மூலம் 12 ரன்களை மட்டும் சேர்த்து விட்டு, ஆட்டமிழக்க, ரசிகர்களின் கண்களில் ரத்தக் கண்ணீர் வராததுதான் குறை. பன்ட்டும் 3 ரன்களுடன் ஏமாற்ற, ஸ்டாய்னிஸ் பொறுப்பாக ஆடி, 46 பந்துகளில் 63 ரன்களையும், அக்ஸர் பட்டேல் 33 பந்துகளில் 42 ரன்களையும் குவித்து அணியின் மானத்தைக் கொஞ்சம் காப்பாற்றினர். 143 என்று ஓரளவுக்கு ஓகேவான ஸ்கோரை எட்டியது டெல்லி.

மும்பையின் ராக்கெட் ராஜா பும்ரா வழக்கம் போல விக்கெட் வேட்டை நடத்தி 4 பேட்ஸ்மேன்களை திரும்ப அனுப்பினார். மேலும் இந்த ஐபிஎல்-ல் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார்.
#MIvDC
#MIvDC

இப்படி மரண ஃபார்மில் இருக்கும் பும்ராவை ஏன் கடந்த போட்டியில் வெளியே உட்கார வைத்து, எங்கள் ப்ளேஆஃப் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டீர்கள் என கொல்கத்தா ரசிகர்களின் புலம்பல் கேட்டது. நான்கு பேட்ஸ்மேன்கள் டக்அவுட் ஆனதை நினைத்து அழுவதா, இறுதிப் போட்டிக்கு போக இன்னுமொரு வாய்ப்பு இருப்பதை நினைத்து ஆறுதல் கொள்வதா என டெல்லி ரசிகர்கள் குழம்பி இருக்க, இந்த வருடமும் கப் எங்களுக்கு மட்டுமே என கம்பீரமாய் இறுதிப் போட்டிக்குள் முதல் அணியாக நுழைந்துள்ளது மும்பை. அவர்களுக்கு இருக்கும் முனைப்பை வைத்து பார்க்கையில், இவர்களை மீறி வேறு ஒரு அணியால் இந்த 2020 ஐபிஎல் கோப்பையைத் தூக்க முடிந்தால் அது மிகப்பெரிய சாதனையாகத்தான் இருக்கும்.