Published:Updated:

எதிர்த்து நின்ற ஏபிடி... கடைசி வரை கேம் ஆடிய கேன்! ஈ சாலாவும்... #SRHvRCB

#SRHvRCB

பிரஷர் ஏறும்போது எல்லாம் "என்னமா அங்க சத்தம்?!" என ஒரு சிக்ஸரைத் தூக்கி, ஆர்சிபிக்கு ஆப்பு வைத்து, "நான் இருக்கும் வரை எதுவும் முடிந்து விடவில்லை" எனக் காட்டினார் கேன். #SRHvRCB

Published:Updated:

எதிர்த்து நின்ற ஏபிடி... கடைசி வரை கேம் ஆடிய கேன்! ஈ சாலாவும்... #SRHvRCB

பிரஷர் ஏறும்போது எல்லாம் "என்னமா அங்க சத்தம்?!" என ஒரு சிக்ஸரைத் தூக்கி, ஆர்சிபிக்கு ஆப்பு வைத்து, "நான் இருக்கும் வரை எதுவும் முடிந்து விடவில்லை" எனக் காட்டினார் கேன். #SRHvRCB

#SRHvRCB
கம்மியான ஸ்கோரை டிஃபண்ட் செய்யும் முயற்சியில், கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்துச் சென்ற ஆர்சிபி, கோப்பை என்பது "வெறுங்கனவா பார்த்திபா!" என்னும் வழக்கமான ஏக்கப் பெருமூச்சுடன் வெளியேற, கடைசி நேரத்தில் பிளே ஆஃப் பேருந்தைப் பிடித்த சன்ரைசர்ஸோ கோப்பையை எட்டித் தொடுவதற்காக எதிர்கொள்ள வேண்டிய மூன்று நாக் அவுட் போட்டிகளில் முதல் கட்டத்தை வெற்றிகரமாய்க் கடந்திருக்கிறது.
#SRHvRCB
#SRHvRCB

அபுதாபியில் நடந்த கடைசி ஐந்து போட்டிகளிலும் சேஸிங் செய்த அணியே வென்றிருக்கிறது என்பதனால், மற்ற அரபு மைதானங்களைப் போல் இங்கும் டாஸ் முக்கியம் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. இந்தத் தொடரில் ஏற்கெனவே 14 போட்டிகளில் 10 போட்டிகளில் டாஸை வென்றிருந்த வார்னர், இந்தப் போட்டியிலும் டாஸை வெல்ல, எதிர்பார்த்ததைப் போலவே, சன்ரைசர்ஸ் முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. அந்த அணி சாஹா, பேர்ஸ்டோ என்னும் இரண்டு பேட்டிங் பலங்கள் இல்லாமல் களம் கண்டது. ஆர்சிபியிலோ மோரீஸ், உடானா, பிலிப், ஷபாஸுக்குப் பதிலாக பிஞ்ச், ஆடம் ஜம்பா, மொயின் அலி, சைனி என மெகா மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தன. மோரிஸ் மட்டுமே காயத்தால் விளையாட முடியாத சூழ்நிலை இருந்த நிலையில், மற்ற வீரர்களை தேவையின்றி மாற்றியதிலேயே அணியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது.

ஓப்பனராக பிஞ்ச் தொடர் முழுவதும் உதைபட்டதை மனதில் நிறுத்தியோ என்னவோ, படிக்கல்லுடன் கோலி, ஓப்பனிங் இறங்கினார். பிளே ஆஃபில் ஏன் இந்த விஷப் பரிட்சை என்பது ஆர்சிபி-க்கே வெளிச்சம்.

முதல் ஓவரை சந்தீப் வீச, இதற்கு முன் கோலி அவரது பந்தில் ஏழு முறை ஆட்டமிழந்தது ரசிகர்கள் கண்ணில் வந்து வந்து போனது. முதல் ஓவர் முடிந்ததும் கண்டத்தின் முதல் கட்டம் முடிந்ததாய் நிம்மதிப் பெருமூச்சு விட, அவுட் ஆஃப் சிலபஸாய் வந்த ஹோல்டர் அடுத்த ஓவரிலேயே கோலி விக்கெட்டைக் காலி செய்தார். ஃபிஞ்ச் உள்ளே வந்தார். நான்காவது ஓவரிலேயே படிக்கல்லின் விக்கெட்டையும் வீழ்த்தி மர்டரர் ஹோல்டர் மிரட்ட, 15 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி, அல்லாடத் தொடங்கியது. ஏபிடி உள்ளே வந்தும் எஞ்சியிருந்த பவர் பிளே ஓவர்களில் ரன்களை ஏற்ற முடியாமல் போக, இந்த 2020 ஐபிஎல் சீசனில் தன்னுடைய இரண்டாவது மோசமான பவர்பிளே ஸ்கோரான 32/2 என்பதைப் பதிவு செய்தது ஆர்சிபி. முன்னதாய், 30/2 என்ற இந்த சீசனின் மிகக் குறைவான தங்கள் பவர்பிளே ஸ்கோரையும், இதே சன்ரைசர்ஸுக்கு எதிராகத்தான் ஆர்சிபி பதிவு செய்திருந்தது.

#SRHvRCB
#SRHvRCB

இரண்டு முக்கிய விக்கெட்டுகள் இழந்த நிலையில், ஏபிடி - ஃபிஞ்ச் கூட்டணியால் வெகு நிதானமாகவே ஆட முடிந்தது. 41 பந்துகளில் 41 ரன்களை மட்டுமே இவர்களால் சேர்க்க முடிந்தது. ரன்கள் ஏறவில்லையே என்ற கவலையை விட விக்கெட் விழுந்து விடுமோ என்ற பதற்றமே அதிகமாக காணப்பட்டது. பிட்சும் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்காமல் போக, ரன் எடுக்க சிரமம் இருந்தது கண்கூடாயத் தெரிந்தது. மூன்று பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் எடுத்து ஃபிஞ்ச் 32 ரன்களுடன் ஆட்டமிழக்கும் வரை, ஏபிடி, தான் சந்தித்த 20 பந்துகளில் ஒரு பவுண்டரியைக் கூட எடுக்கவில்லை என்பதே இதற்குச் சான்று. இதற்கடுத்து உள்ளே வந்த மொயின் அலி, அடுத்த ஓவரிலேயே, ஃப்ரீ ஹிட் பந்திலேயே ரன் அவுட் ஆக, இதற்கு நோ பால் கொடுக்கப்படாமலே இருந்திருக்கலாமே என ரசிகர்கள் நொந்து கொண்டனர்.

இதற்கடுத்து உள்ளே வந்த துபேவை ஹோல்டர் ஆட்டமிழக்கச் செய்து, மொத்தம் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி வண்ண ஜாலம் காட்டினார். 'இப்ப என் ஷோ!', என்பது போல், வாஷிங்டன் சுந்தரை ஒற்றை இலக்கத்தில் வழியனுப்பிய நடராஜன் அடுத்து ஆடியதுதான் ருத்ரதாண்டவம். ஒரு பக்கம் விக்கெட் விழுந்த வண்ணமே இருந்தாலும் கொஞ்சமும் அசராமல், ஒன் மேன் ஆர்மியாக அணியைத் தன் தோள்களில் சுமந்து கொண்டிருந்தார் ஏபிடி. அப்போது 'யார்க்கரின் ராஜா' நடராஜன் எந்த பேட்ஸ்மேனாலும் அடிக்க முடியாத ஒரு யார்க்கர் மூலமாக, மிடில் ஸ்டம்பைக் தகர்க்க, ஆர்சிபி-யின் மொத்த நம்பிக்கையும் தகர்ந்தது. இதற்கு அடுத்ததாய் இணைந்த சிராஜ் - சைனி, 13 பந்துகளில், 18 ரன்களை எடுத்து, 131 என்று அணியின் ஸ்கோரைக் கொண்டு சென்றனர்.

#SRHvRCB
#SRHvRCB

ஏபிடியின் அரைச்சதத்தையும் ஃபிஞ்சின் 30 ரன்களையும் கழித்துப் பார்த்தால், ஒட்டுமொத்த ஆர்சிபி பேட்டிங் ஆர்மியும், துளி கூட போராட்டத்தை வெளிப்படுத்தாமல் சன்ரைசர்ஸ் பௌலர்களிடம் டோட்டல் சரண்டர் ஆகிவிட்டது.

ஆர்சிபி, கடந்த சன்ரைசர்ஸுக்கு எதிரான லீக் போட்டியை எப்படி ஆடியதோ அச்சுப் பிசகாமல் அதே பாதையில்தான் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் பயணம் செய்தது. அதிலிருந்து எந்தப் பாடத்தையும் இவர்கள் கற்றுக் கொள்ளவில்லையா என்பதுதான் ரசிகர்களின் ஆதங்கமாக இருந்தது.

131 ரன்களுக்குள் டிஃபண்ட் செய்ய வேண்டும் என்ற கடின இலக்குடன் பௌலிங் போட இறங்கியது ஆர்சிபி. கோஸ்வாமி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலமாய் சிராஜ் ஸ்வீட் சர்ப்ரைஸைக் கொடுத்தாலும், கேகேஆருக்கு எதிராக நிகழ்த்தியதைப் போல நம்ப முடியாத மூன்று விக்கெட்டுகள், இரண்டு மெய்டன் சம்பவத்தை அவரால் மீண்டும் நிகழ்த்த முடியவில்லை. பின்பு இரண்டாவது ஸ்பெல் வீச திரும்பி வந்தவர், பேக் டூ பேக் பவுண்டரிகளைக் கொடுத்தாலும், நான்காவது பந்திலேயே வார்னிங் இன்றி வார்னரை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். அந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த இரண்டு ஓவருக்குள்ளாகவே ஜாம்பா, மணீஷ் பாண்டேயை வீழ்த்தி ஆர்சிபிக்குத் தேவைப்பட்ட மிகப்பெரிய பிரேக்கைத் தர, 8.3 ஓவர்களில், 55 ரன்களுடன் 3 விக்கெட்டுகளை இழந்து திணறத் தொடங்கியது ஐதராபாத். சஹாலால், பந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த கார்க்கின் விக்கெட் விழ, பந்துக்கும், தேவைப்படும் ரன்களுக்குமான இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாய் கூடியது. ஆர்சிபிக்கு புது உத்வேகம் உள்ளே வந்தது.

#SRHvRCB
#SRHvRCB

பார்ட்னர்ஷிப்கள் பில்டப் ஆகாமல் விக்கெட்டுகள் விழுந்தாலும், களத்தில் நிற்பது கேன் வில்லியம்சன் என்பது ஆர்சிபிக்கு கொஞ்சம் திகிலூட்டுவதாகவே இருந்தது. ஒருபக்கம் பனிப்பொழிவு இல்லாதது ஸ்பின்னர்களுக்குச் சாதகமோ, நான்கு ஸ்பின்னர்களோடு ஆடும் ஆர்சிபியின் ஐடியா சரியானதோ எனத் தோன்றும் போதெல்லாம், "என்னமா அங்க சத்தம்?!" என ஒரு சிக்ஸரைத் தூக்கி, ஆர்சிபிக்கு ஆப்பு வைத்து, "நான் இருக்கும் வரை எதுவும் முடிந்து விடவில்லை" எனக் காட்டினார் கேன். 18வது ஓவரில் கேன் அடித்த பந்தை, படிக்கல்லால் சிக்ஸருக்குப் போகாமல் தடுக்க முடிந்ததே தவிர பிடிக்க முடியவில்லை‌. பிடிக்கப்பட்டிருந்தால், அது கேம் சேஞ்சிங் பந்தாக அமைந்திருக்கலாம்.

இறுதியில் கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை என்ற தருணத்தில், கேன் வில்லியம்சனுக்கு பக்கபலமாய் நின்ற ஹோல்டர், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விரட்டி, பந்தின் மூலம் காட்டிய மேஜிக்கை இன்று பேட்டின் மூலமாகவும் காட்ட, சன்ரைசர்ஸ் இரண்டு பந்துகள் எஞ்சியிருக்கும் போதே இலக்கைத் தொட்டது.

#SRHvRCB
#SRHvRCB

முக்கியமான நாக் அவுட் போட்டியில், எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் போல நான்கு வீரர்களை மாற்றியது, பேட்டிங் ஆர்டரைத் தேவை இல்லாமல் மாற்றியது, கொஞ்சமேனும் முனைப்புக் காட்டி, இன்னும் 20-30 ரன்களைச் சேர்க்கத் தவறியது, பவர்பிளே ஸ்டார் சுந்தருக்கு, தொடக்கத்தில் ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தது, சைனியின் இரண்டு ஓவர்களை முதலிலேயே முடித்து விட்டது என ஆர்சிபி செய்த ஏகப்பட்ட தவறுகள், அவர்களுக்குப் பாதகமாக அமைந்துவிட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக கூல் மேன் கேன் மொத்தமாய் ஆர்சிபியின் கோப்பைக் கனவை மென்று விழுங்கி ஏப்பம் விட்டு விட்டார். வழக்கம் போல, 'அடுத்த ஆண்டு கப் நமதே' என ஆர்சிபி தொடரிலிருந்து வெளியேறியது.

கடைசியாய் நடந்த ஆறு போட்டிகளில், ஐந்தில் வென்று மரண ஃபார்மில் இருக்கும் சன்ரைசர்ஸ், நாளை நடக்க இருக்கும் போட்டியில் டெல்லியைச் சந்திக்கிறது. அதனை வெல்லும் பட்சத்தில் ஃபைனலில் மும்பைக்கு டஃப் பைட் கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.