Published:Updated:

அடித்து வெளுத்த அம்பதி... செம ஃபார்ம் சிஎஸ்கே... தொடரும் மும்பை சோகம்! #MIvsCSK

#MIvsCSK

07.29க்கு ரிட்டயர்டான தோனி, 07.30க்கு ஸ்டேடியத்துக்குள் வந்தார். கரீபியன் ப்ரீமியர் லீகிலேயே, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்துவீசாத பிராவோ, முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை.

Published:Updated:

அடித்து வெளுத்த அம்பதி... செம ஃபார்ம் சிஎஸ்கே... தொடரும் மும்பை சோகம்! #MIvsCSK

07.29க்கு ரிட்டயர்டான தோனி, 07.30க்கு ஸ்டேடியத்துக்குள் வந்தார். கரீபியன் ப்ரீமியர் லீகிலேயே, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்துவீசாத பிராவோ, முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை.

#MIvsCSK
ஏப்ரலில் ஆரம்பித்து விடுமுறைக்குள் முடிந்துவிடக்கூடிய திருவிழா... இந்த முறை எல்லாமே மாற்றம். வீக்கெண்டில் இரு போட்டிகள் இல்லை. நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் இல்லை. தோனி, கோலி என கர்ஜிக்கும் ரசிகர்கள் இல்லை. டான்ஸ் ஆடும் சியர் லீடர்ஸ் கூட இல்லை. எல்லாவற்றையும் மொத்தமாய் இந்த கொரோனா சூழல் மாற்றிவிட்டது. கரீபியன் ப்ரீமியர் லீகும், இங்கிலாந்து ஆஸ்திரேலியா தொடருமே, இந்த முறை ஐபிஎல் எப்படி இருக்கப்போகின்றது என்பதை சிறு சாம்பிளாக நடத்திக்காட்டிவிட்டன.

ஓர் ஆண்டுக்கும் மேல் கிரவுண்டில் இறங்காத தோனியைப் பார்க்காத ரசிகனுக்கு, தோனி டாஸ் சொல்லும் நாளே பொன்னாள். ஐபிஎல் ப்ளே ஆஃப்னா அதுல சென்னை இருக்கும் என்பது எழுதப்படாத ஐபிஎல் விதி. அதே சமயம், மும்பையுடன் போட்டி என்றாலே சென்னைக்கு லைட்டாக தொண்டை கவ்வ ஆரம்பிக்கும். 2012-ம் ஆண்டு சீசனுக்குப் பின்னர், மும்பை ஓப்பனிங் போட்டியில் வெற்றி பெற்றதில்லை எனும் உற்சாக டானிக்கை குடித்தபடி டிவி முன் அமர்ந்தனர் சென்னை ரசிகர்கள். தோனி ரிட்டயர்டாகி ஆகிவிட்டார். வாட்டோ ரிட்டயர்டாகி நாலு ஆண்டுகள் ஆகப்போகின்றன். தாஹிரை எல்லாம் டக் அவுட்டில் பார்த்தாலே நமக்கு வயதாகிவிடும் போலிருந்தது. ரிட்டயர்டு வீரர்கள். ஓராண்டாக போட்டிகளில் பங்கேற்காத வீரர்கள் என 'லிங்கா' படத்து சீனியர் ரஜினி நண்பர்கள் போல் இருந்த கூட்டத்தைப் பார்த்தபோது, 'என்ன சிவாஜி போயிடுமோ' என லைட்டாக ஜெர்க் ஆனாலும், தோனியின் மீது பாரத்தை போட்டுவிட்டு மேட்ச் பார்க்க ஆயத்தமானேன்.

டாஸ் வென்ற தோனி, பந்துவீச்சை தேர்வு செய்ய, 'விடு மச்சி சேஸிங்ல பாத்துக்கலாம். எல்லாம் ஒரு காரணமாத்தான் இருக்கும்' என மனதுக்குள் மத்தாப்பை சொல்லிக்கொண்டனர் ரசிகர்கள். ரோஹித்தும் தன் பங்குக்கு, நானும் பெளலிங்தான் தேர்வு செய்திருப்பேன் எனச்சொல்ல, 'அதான் சொன்னேன்ல, எல்லாம் ஒரு காரணம் இருக்கும்'னு என மீண்டும் சொல்லிக்கொண்டனர். என்னப்பா தோனி, ஷேவ் பண்றப்ப பாதில எந்திரிச்சு வந்த மாதிரி தாடி ஸ்டைல் வச்சிருக்காரு எனக்கேட்டாலும், எல்லாம் ஒரு காரணம் இருக்கும் என பதில் வரும் என்பதால், ஆட்டையைக் கவனிப்பதில் மும்முரமானேன்.

07.29க்கு ரிட்டயர்டான தோனி, 07.30க்கு ஸ்டேடியத்துக்குள் வந்தார். கரீபியன் ப்ரீமியர் லீகிலேயே, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்துவீசாத பிராவோ, முதல் போட்டிக்கான பிளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. செவ்வாய்க்கிழமை நடக்கவிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியிலும் பிராவோ பங்கேற்பது சந்தேகமே என அறிவித்திருக்கிறார் சென்னையின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெம்மிங்.

#MIvsCSK
#MIvsCSK

சென்னை XI: விஜய், வாட்டோ, டுப்பிளெஸ்ஸி, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி, ஜட்டூ, சாம் குர்ரன், தீபக் சஹர், சாவ்லா, இங்கிடி

மும்பை XI: ரோஹித், டி காக், சூர்யகுமார் யாதவ், சௌரப் திவாரி, க்ரூனால் பாண்டியா, ஹார்டிக் பாண்டியா, பொல்லார்டு, பேட்டின்சன், பும்ரா, போல்ட், ராகுல் சஹார்.

டி காக்கும், ரோஹித்தும் உள்ளே நுழைய, பார்வையாளர்களின் கூக்குரல்கள் அதிகமாயின. இதென்னடா தில்லாலங்கடி, சிபிஎல்-ல எல்லாம் அமைதியாத்தான் போட்டியைப் பார்த்தோம் என யோசித்தபோதே, இது ஐபிஎல் பாஸ், என நடுமண்டையில் கொட்டு கொட்டினார் பிக்பாஸ். முன்பே பதிவுசெய்யப்பட்ட ரசிகர்கள் கோஷத்துடன் இணைத்து, ஸ்கிரீன்களில் சியர் லீடர்களையும் ஆட விட்டிருந்தார்கள். எல்லாத்துலயும் மசாலா கேட்கறாங்கல்ல!

சென்னையின் ஆஸ்தான முதல் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான தீபக் சஹார் முதல் ஓவரை வீசினார். முதல் பந்திலேயே ரோஹித் ஒரு பவுண்டரி. அதே ஓவரில் டி காக்கும் ஒரு பவுண்டரி அடிக்க, முதல் ஓவர் முடிவில், 12 ரன்கள் எடுத்தது மும்பை. அடுத்த ஓவர் குட்டிப் பையன் சாம் கரண். வெறும் ஏழே ரன்கள். மீண்டும் சஹார். நான்காவது ஓவரை வீச வந்தார் இங்கிடி. ஸ்விகி டெலிவெரியை கீழே சென்று வாங்கிவிட்டு வந்து பார்த்தாலும், இங்கிடி இன்னும் பெளலிங் போட்டுக்கொண்டேயிருந்தார். 'என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்க நீயி' எனப் பார்த்தால், சூரி பரோட்டாவுக்கு கோடு கிழித்தது போல், பவுண்டரி, ஒய்டு, பவுண்டரி , ஒய்டு, பவுண்டரி என தென் ஆப்பிரிக்க வள்ளலாக மாறி 18 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார் இங்கிடி. என்ன சென்னை இந்த முறையும் 'மௌக்கா மௌக்கா'வா என நக்கலடித்த ஆர்சிபி ரூம் மேட்டிடம், இந்த வருஷமாவது போகி கொண்டாட முயற்சி பண்ணுங்கடா என சொல்லிவிட்டு, அடுத்த ஓவருக்கு காத்திருந்தேன்.

#MIvsCSK
#MIvsCSK

ரோஹித் ஷர்மாவுக்கு ஐபிஎல் சீசன்களில் லெக் ஸ்பின்னர்கள் என்றாலே சோதனை காலம்தான். அதை மேலும் சோதித்துப் பார்த்தார் தோனி. அடுத்த ஓவர் பப்ளி பியூஷ் சாவ்லா. சாவ்லா சாதாரணமாகத்தான் பந்து வீசுவார், ஆனால் யாராவது கஷ்டப்பட்டு கேட்ச் பிடிச்சா விக்கெட் விழுந்துடும். காலம் காலமாக நடப்பது இதுதான். ஃபீல்டரின் மேல் பாரத்தைப் போட்டதற்கு கால் மேல் பலன். டைமிங்கே இல்லாமல், வெண் பொங்கல் சாப்பிட்டு வந்ததைப் போல், ரோஹித் அடித்த அந்த பந்து சாம் கரண் கைகளில் ஜாலியாய் லேண்டானது. அடுத்த சாம் கரண் ஓவரில் டி காக்கும் அவுட். பவர் பிளேவுக்குள் ஓப்பனர்கள் காலி.

அடுத்து ஒன் டவுன் சூர்யகுமார் யாதவும், டூ டவுன் சௌரப் திவாரியும். சூர்யகுமார் யாதவ் எப்பவுமே அடிக்கற தம்பி, இந்த சௌரப் திவாரிதான் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டார். ரோஹித் ஏன் இஷான் கிஷானுக்கு பதிலாக சௌரப் திவாரியை எடுத்தார் என யோசித்துக்கொண்டிருக்கும் போதே, ஜடேஜா பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்து வாங்கினார் திவாரி. சூர்யகுமார் யாதவ் ஸ்பின்னர்கள் என்றால் அட்டாக் செய்வார் என்பதால், தீபக் சஹாரை மீண்டும் அழைத்தார் தோனி. சாம் கரணிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சூர்யா.

MIvsCSK
MIvsCSK

அடுத்ததாக பாண்டியா சகோதர்களில் மூத்தவரான ஹர்திக் என்ட்ரி. அட நம்ம ஜட்டூடா என்பது போல, ஜடேஜாவின் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள். அடுத்து இங்கிடி பந்துவீச்சில் திவாரி பவுண்டரிகள் என மும்பை ஜாலி மோடில் விளையாடிக்கொண்டிருந்தது. சாவ்லாவின் ஓவரை தெளிவாக புறந்தள்ளிவிட்டு, பிற ஓவர்களில் அடித்து ஆட ஆரம்பித்தனர், மீண்டும் ஜட்டு பவுலிங். நாமளும் சிக்ஸ் அடிக்கலாம் எனத் திவாரி தூக்கி அடிக்க, ஸ்பிரிங்காய் பறந்து பவுண்டரி லைன் அருகே கேட்ச் பிடித்து அசத்தினார் டுப்ளெஸ்ஸி. தான் பிடித்த அந்த மேஜிக்கல் கேட்ச்சை ரீப்ளே செய்து காட்டுவது போல், ஹர்திக் பாண்டியாவும் சிக்ஸருக்கு ஆசைப்பட, அதே போல் மீண்டும் கேட்ச் பிடித்து அசத்தினார் டுப்ளெஸ்ஸி.

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்தாலும், ரன்ரேட் குறையாமல் பார்த்துக்கொண்டனர் மும்பைகர்ஸ். இறுதியாக இருபது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்திருந்தது மும்பை அணி. கரீபியன் லீக் ஃபார்மில் வந்து பொல்லார்டு அசத்துவார் என எதிர்பார்த்த நிலையில், சௌரப் திவாரி அடித்தது ஆச்சர்ய பேக்கேஜ்.

முதல் ஓவரிலேயே வாட்டோ அவுட். குட்டித் தல ரெய்னாவும் இல்லை என்பதால், மான்க், டுப்பிளெஸ்ஸி மீது பெருத்த நம்பிக்கை வைத்து டிவியைப் பார்க்க ஆரம்பித்தேன். பேட்டின்சன் வீசிய நான்காவது பந்தில் விஜய் அவுட். போச்சுடா என உட்காந்தால், அம்பயர் அவுட் தரவில்லை. விஜய்யும் கேசுவலாக இருக்க, ரோஹித்தும் டிஆர்எஸ் கேட்கவில்லை. அடப்பாவிகளா, சரி இன்னிக்கு லக் இருக்கு போல, என நினைத்தால், அதே ஓவரின் கடைசி பந்தில் அதே டைப்பில் விஜய் எல்பிடபிள்யூ. பேட்டின்சன் அவுட் என கத்த, இது நாட் அவுட்ல என ரசிகர்கள் சிரிக்க, அவுட் கொடுத்துவிட்டார் அம்பயர். டுப்பிளெஸ்ஸி ரிவ்யூ கேளு விஜய் என கேட்டும், 'நோ பின் வச்ச காலை, முன்வைக்க மாட்டேன்' என நடையைக் கட்டினார் விஜய். அவுட்டை, நாட் அவுட் என்றும், நாட் அவுட்டை அவுட் என்றும், முதல் போட்டியிலேயே சொதப்பிய அம்பயர்களின் மீது என்ன சொல்வது, விதி வலியது.

#MIvsCSK
#MIvsCSK

டூ டவுன் பேட்ஸ்மேனாக களமிறங்கினார் அம்பதி ராயுடு. விக்கேட்டும் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதே சமயம் தேவையான ரன் ரேட்டும் எகிறிவிடக்கூடாது என்று பக்குவமாக ஆடினார் ராயுடு. எப்போதும் ஷார்ப்பாக வீசும் பும்ரா, நோ பால் வீச, அதை பவுண்டரிக்கு விளாசினார் ராயுடு. அடுத்த ஃப்ரீஹிட்டில் சிக்ஸ் என பவர் பிளே முடிவில் 37 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. சூப்பர் சீனியர் டீம், இந்த வேகத்துல போன பத்தாது என்பதை உணர்ந்து, அடுத்தடுத்த ஓவர்களில் அடித்து ஆட ஆரம்பித்தனர். பும்ரா பந்துவீச்சில் பவுண்டரி அடித்து அரை சதத்தை பூர்த்தி செய்தார் ராயுடு.

டுப்ளெஸ்ஸி - ராயுடு பார்ட்னர்ஷிப் 100 ரன்களைக் கடந்து செல்ல, 'யாராவது அவுட்டானா தோனி வருவார்ல' என பில்லி சூனியத்தை இறக்கினார் பக்கத்தில் அமர்ந்து மேட்ச் பார்த்த தோனி ரசிகன். ராகுல் சஹார் பந்துவீச்சில் ராயுடு அவுட். தோனி, தோனி என கத்த ஆரம்பிக்க, லட்டுக்கு பதில் ஜட்டு உள்ளே நுழைந்தார். 'இதென்னமோ எனக்கு சரியாப் படலை' என்பது போல் சோர்ந்து போயினர் தோனி ரசிகர்கள். க்ரூணால் பாண்டியா பந்துவிச்சில் ஜட்டு வந்து வேகத்தில் இரண்டு பவுண்டரி அடித்துவிட்டு அவுட்டாக, மறுபடியும் தோனி தோனி என ஆரம்பிக்க. அட பொறுங்கடா என டக் அவுட்டை நோக்கி பார்வையை செலுத்தினேன்.

#MIvsCSK
#MIvsCSK

குட்டிப் பையன் சாம் கரணை இறக்கி ட்விஸ்ட் கொடுத்தார் தோனி. இது நம்ம லிஸ்ட்டுலயே இல்லையே என ட்ரீம் 11 அணியை ஒருமுறை பார்க்க, வந்த வேகத்தில் அதிரடியாய் சிக்ஸர் அடித்தார் சாம். அடுத்த பந்திலேயே பவுண்டரி. கடைசி இரண்டு ஓவர்களில் 16 ரன்கள் தேவை. பேட்டிங் சாம் கரண். பெளலிங் யார்க்கர் புகழ் பும்ரா. ஸ்டம்ப்பு உடையப்போகுது என நினைத்தால், டீப் மிட் விக்கெட் திசையில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார் கரண். ஜெயிச்சாச்சே என கத்தி முடிப்பதற்குள், பேக் ஷாட் அடிக்கறேன் என அவுட்டானார் கரண். டி20 உலகக்கோப்பையில் மிஸ்பா முயன்ற அதே ஷாட். ஸ்ரீசாந்தை தோனி நிறுத்தியது போல, பேட்டின்சனை ரோஹித் அங்கு நிறுத்தியிருந்தார். ஆனால், அதை பின்னாடியே ஓடிச்சென்று ரிவர்ஸில் பிடித்து அசத்தினார் பேட்டின்சன்.

தோனி வந்த வேகத்தில் , முதல் பந்திலேயே விக்கேட் கீப்பர் கேட்ச் முறையில் அவுட் கொடுத்தார் அம்பயர். தோனி ரிவ்யூ செய்ய, பிறகென்ன, வழக்கம் போல நாட் அவுட்தான். பவுன்சரை புல் ஷாட் அடிக்க முயன்ற தோனி, பந்தை மொத்தமாக மிஸ் செய்திருந்தார். ஆனாலும், இதற்கு எப்படி அவுட் கொடுத்தார் என்பது அம்பயருக்கே வெளிச்சம். கடைசி ஓவரில் ஐந்து ரன் தேவை. போல்ட் வீச, கடைசி பந்து வரை தோனி த்ரில் செக்மென்ட் வைத்திருப்பார் என யூகித்திருந்தனர் ரசிகர்கள். ஆனால், அதற்கு எவ்வித வேலையும் வைக்காமல், முதலிரண்டு பந்துகளிலேயே அடுத்தடுத்து பவுண்டரி அடித்து வெற்றி பெற வைத்தார் டுப்ளெஸ்ஸி.

#MIvsCSK
#MIvsCSK

தோனி சென்னை அணியின் கேப்டனாக தன் நூறாவது வெற்றியை பதிவு செய்தார். 161 போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர், பெறும் 100வது வெற்றி இது. ஓப்பனிங் போட்டி என்றாலே தோற்றுவிடுவேன் என்கிற மும்பையின் லாஜிக், இந்த முறையும் வீண் போகவில்லை. அதிரடியாக ஆடி, 71 ரன்கள் எடுத்து சென்னையை வெற்றி பெறச் செய்த முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரரான அம்பதி ராயுடு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.