Published:Updated:

IPL 2020: யானையிடம் சிட்டுக்குருவிகளின் ஆட்டம் பலிக்குமா... மும்பையை வெல்லுமா டெல்லி?! #MIvDC

#MIvDC | IPL 2020 Final ( twitter.com/IPL )

கருத்துக் கணிப்புகளையும், ஆருடங்களையும், விமர்சனங்களையும் தாண்டி கிரிக்கெட்டில் வெற்றி என்பது, அந்த நாளில் அந்தந்த அணிகள் களத்தில் செயல்படுவதைப் பொறுத்தே அமையும். #MIvDC

Published:Updated:

IPL 2020: யானையிடம் சிட்டுக்குருவிகளின் ஆட்டம் பலிக்குமா... மும்பையை வெல்லுமா டெல்லி?! #MIvDC

கருத்துக் கணிப்புகளையும், ஆருடங்களையும், விமர்சனங்களையும் தாண்டி கிரிக்கெட்டில் வெற்றி என்பது, அந்த நாளில் அந்தந்த அணிகள் களத்தில் செயல்படுவதைப் பொறுத்தே அமையும். #MIvDC

#MIvDC | IPL 2020 Final ( twitter.com/IPL )
மதம் பிடித்த யானையிடம் சினங்கொண்ட சிட்டுக்குருவி மாட்டிக்கொண்டால் என்னாகும் என்பதைத்தான் இன்று இரவு பார்க்கப்போகிறோம். நான்கு முறை ஐபிஎல் கோப்பையை வென்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ், 13 ஆண்டுகால வரலாற்றில் ஐபிஎல்-ன் இறுதிப்போட்டியையே எட்டிப்பிடிக்காத டெல்லியுடன் மோத இருக்கிறது. இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன... மும்பை ஐந்தாவது முறையாகக் கோப்பையை வெல்லுமா?!

மும்பையின் லைன் அப் எதிர்த்து ஆடும் எப்பேர்ப்பட்ட அணியையுமே அச்சம்கொள்ள வைக்கும். இந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே சென்னையிடம் தோற்றாலும், தொடர்ந்து வந்த எல்லாப் போட்டிகளிலும், அசுரபலம் காட்டி, இந்த அணி கோப்பையை வெல்லத் தகுதி வாய்ந்ததுதான் என எதிரணி ரசிகர்களையே சொல்ல வைத்திருக்கிறது. பேட்டிங்கில் ரோஹித் சுத்தமாக எடுபடாமல் போயும் கூட அணியின் பேட்டிங் யூனிட் ஆட்டம் காணவில்லை. காரணம், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், பொல்லார்ட், பாண்டியா பிரதர்ஸ் என ஒருவரை விட்டால் ஒருவர் வந்து என அணியைத் தோளில் தூக்கிச் சுமந்து விடுகின்றனர். ஓப்பினிங்கில் விக்கெட் விழுந்தாலும் சரி, டெத் ஓவர்களில் விழுந்தாலும் சரி, எதுவும் இவர்களை பயம்கொள்ளச் செய்வதுமில்லை, பின்வாங்கச் செய்வதுமில்லை. தொடர்ந்து பவுண்டரி, சிக்ஸர் என ரன் மழை பொழிந்து கொண்டே இருக்கும்.

#MIvDC
#MIvDC
twitter.com/mipaltan

இலக்கை நிர்ணயிப்பதென்றாலும் சரி, துரத்துவதென்றாலும் சரி இவர்களின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தவே முடிவதில்லை. போட்டியின் போக்குக்கு ஏற்றாற்போல் தங்கள் விளையாட்டின் தன்மையை மாற்றிக் கொள்வது இவர்களது கூடுதல் பலம். மொத்தத்தில் ஆயிரம் பருத்தி வீரர்களாய் எந்த பெளலர் கிடைப்பார், நாம் அவரது பந்தாலேயே அவரைப் பந்தாடலாம் என்று வலம் வருகிறது மும்பை பேட்டிங் படை. இந்த சீசனில், கடைசி நான்கு ஓவர்களில் இவர்களது ரன்ரேட் 12.68 என்பது சொல்லும் இவர்களது பலத்தை!

அடுத்ததாக பெளலிங்கில் மும்பை பலவான்கள் திறன் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. இந்திய வீரர்களிலேயே ஐபிஎல்-ல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராக பும்ரா பலம் காட்ட, ராகுல் சஹார் அவருக்கு பக்கபலமாய்க் கைகொடுக்க, காயத்திலிருந்து மீண்டிருக்கும் போல்ட்டும் சம்பவங்களைச் செய்யக் காத்திருக்கிறார். ஃபீல்டிங்கிலும் பெரும்பாலும் மும்பை வீரர்கள் தவறுகளைச் செய்வதில்லை. கேட்ச் டிராப், மிஸ் ஃபீல்டிங், ஓவர் த்ரோ என்பதெல்லாம் இவர்களிடம் நடக்காத கதை.

#MIvDC
#MIvDC
twitter.com/mipaltan

இவை எல்லாவற்றையும் விட மும்பையின் பெரிய பாசிட்டிவான அம்சம், ப்ளேயிங் லெவனில் நம்மால் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியாமல் போவது. ஆனால் டெல்லியோ, தொடர்ந்து ப்ளேயிங் லெவனில் மியூசிக்கல் சேரும், பேட்டிங் ஆர்டரில் பல்லாங்குழியும் ஆடி வருகின்றனர். ஓப்பனிங் இடத்திற்கு தொடர்ந்து வாஸ்து சரியில்லாமல் போக, பிரித்வி ஷா, ரஹானே என இருவராலும் அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை. போன போட்டியில் ஸ்டோய்னிஸ் அந்த இடத்திற்கு உரிய நியாயம் கற்பித்ததால் மட்டுமே சன்ரைசர்ஸுக்கு எதிராக பெரிய டார்கெட்டை டெல்லியால் செட் செய்ய முடிந்தது. தவானோ கெயிலைப் போல, செட் ஆகிவிட்டால் அசைக்க முடியாத ஆலமரமாய் சவாலான வீரராய் விளங்குகிறார்.

#MIvDC
#MIvDC
twitter.com/IPL

ஷ்ரேயாஸிடம் உள்ள ஒரே குறைபாடு நிலைத்தன்மையற்ற ஆட்டமே. இன்றைய நாள் அவருடைய நாளாக மாறி விட்டால் அவரும் தடுத்து நிறுத்த முடியாத காட்டாறுதான். எடுத்தால் 30 ரன்களுக்கு கீழ்தான் என சத்தியப் பிரமாணம் செய்து கொடுத்துள்ள பன்ட்டோ, பின்ச் ஹிட்டர் ஹெட்மையரோ இக்கட்டான இறுதிப் போட்டியில் அணிக்குக் கை கொடுத்தால், அணிக்கு யானைபலம் சேரும். கடைசிப் போட்டிக்கு முந்தைய போட்டி வரை தொடர்ந்து சொதப்பி வந்த டெல்லி, அதனைச் சரிசெய்து பேட்டிங்கில் நல்ல கம்பேக் கொடுத்தது. அதையே இன்றும் தொடர்ந்தால், அவர்களது வெற்றி வாய்ப்பு அதிகமாகும்.

பெளலிங்கில் அவர்களது பலம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஐபிஎல்-ன் ஒரு சீசனில் அதிக விக்கெட் எடுத்த இந்தியரான பும்ரா எங்கள் வசம் என்று மும்பை மார்தட்டினால், ஐபிஎல்லின் ஒரு சீசனிலேயே அதிக விக்கெட் எடுத்த வீரரான ரபாடாவே எங்கள் பக்கம் என டெல்லி கெத்தாக நடக்கிறது. நார்க்கியா, அக்ஸர், அஷ்வின் என பெளலிங்கைப் பொறுத்தவரை, எதிரணி கூடாரத்தைக் காலி செய்யப் போதுமான பலத்தோடே டெல்லி வலம் வருகிறது. மும்பையின் பேட்டிங் வெர்ஸஸ் டெல்லியின் பெளலிங்தான் இன்றையப் போட்டியின் சுவாரசியம் மிக ஸ்பைஸ் ஆக இருக்கப் போகிறது. டெல்லியின் ஃபீல்டிங்கும் திருப்திகரமானதாகவே காணப்படுகிறது. மொத்தத்தில் மும்பைக்கு, முன்னாள் சென்னை அணி அளவு நெருக்கடி கொடுக்க முடிந்த அணியாக டெல்லி இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தாலும் கைகளைத் தூக்கி மொத்தமாய் சரண்டர் ஆகாத அணியாய் இருக்கும் என நம்பலாம்.

ரோஹித், ஷ்ரேயாஸுடைய கேப்டன்ஷிப்பை வைத்துப் பார்த்தால், அனுபவத்தின் அடிப்படையில் ரோஹித்தின் பக்கமே தராசின் தட்டு இறங்குகிறது. இதுவரை 27 போட்டிகளில் மும்பையும் டெல்லியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் மும்பை 15 முறையும், டெல்லி 12 முறையும் வென்றுள்ளன‌. இதிலும் இந்த சீசனில் இவர்கள் மூன்று முறை மோதிக் கொண்டதில், மும்பை டெல்லிக்கு மரண அடி கொடுத்து 3-0 என ஒட்டுமொத்தமாய் வென்றுள்ளது சற்றே அச்சமூட்டுவதாய் டெல்லி ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

#MIvDC
#MIvDC

எனினும் கருத்துக் கணிப்புகளையும், ஆருடங்களையும், விமர்சனங்களையும் தாண்டி கிரிக்கெட்டில் வெற்றி என்பது, அந்த நாளில் அந்தந்த அணிகள் களத்தில் செயல்படுவதைப் பொறுத்தே அமையும். அப்படி ஒரு நாளாய், இன்றைய நாள் அமைந்து டெல்லியின் பக்கம் காற்று வீசினால் முதல் முறையாய் டெல்லி ஐபிஎல் கோப்பையை முத்தமிடலாம். ஆனால் கட்டுப்படுத்த முடியாத ஃபார்மில் இருக்கும் மும்பைக்கு எதிரே போட்டி நடக்கிறது என்பதால், அதற்கான வாய்ப்புக் குறைவு என்பதே மறுக்க முடியாத உண்மை!