கட்டுரைகள்
Published:Updated:

“பேட்ஸ்மேன் நின்னாதான் யார்க்கரே போட வரும்!”

நடராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
நடராஜன்

ஐபிஎல்-ல செலக்ட் ஆனப்பவே எங்க ஊர்ல ஒரு கிரிக்கெட் அகாடமி ஆரம்பிச்சிருக்கேன்.

ந்தியாவின் புதிய `யார்க்கர்’ மன்னன்... டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்... 2020 ஐபிஎல்-லின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு... நம்மூர் நடராஜன்! சர்வதேச மற்றும் முன்னணி இந்திய பௌலர்களைவிடவும் இந்த ஐபிஎல் தொடரில் அதிக யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக விளையாடிவரும் நடராஜனை பிஸி பிராக்டீஸ் செஷனுக்கு இடையில் வீடியோ காலில் பிடித்தோம்.

``நடராஜனுக்கு முதன்முதலில் கிரிக்கெட் ஆர்வம் எப்போது, எப்படி வந்தது?’’

“எங்க ஊர் சின்னப்பம்பட்டி. அங்க டென்னிஸ் பால்லதான் எனக்கு கிரிக்கெட் அறிமுகமாச்சு. சைக்கிள் எடுத்துட்டுப் போய் மேட்சுக்கு ஆள் கூட்டிட்டு வருவோம். ஒவ்வொரு ஆளா வந்துசேரும்வரை வெயிட் பண்ணி விளையாடுவோம். இப்பகூட லாக்டௌன் டைம்ல ஊர்ல இருந்தப்ப டென்னிஸ் பால் கிரிக்கெட்தான் ஆடினேன்.”

“பேட்ஸ்மேன் நின்னாதான் யார்க்கரே போட வரும்!”

``கிரிக்கெட்டை எப்ப சீரியஸா, அதுவும் ஒரு கரியரா பார்க்க ஆரம்பிச்சீங்க?’’

``உண்மையைச் சொல்லணும்னா நான் இதை சீரியஸாவே எடுத்துக்கல. எனக்கு கிரிக்கெட்ல இவ்ளோ வாய்ப்புகள் இருக்குன்னுகூடத் தெரியாது. ஊர்ல இருக்கற ஜெயப்பிரகாஷ் அண்ணா மற்றும் நண்பர்கள்தான் ஹெல்ப் பண்ணினாங்க. இவ்ளோ வேகமா வீசறன்னு என்னை முதன்முதலாப் பாராட்டினதே அண்ணன்தான். சென்னையில அவருதான் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தாரு. நான் இடதுகை மித வேகப்பந்து வீச்சாளர்ங்கறது எனக்கு இன்னும் உதவியா இருந்துச்சு, நல்லா ரீச்சாக அதுவும் ஒரு காரணம்.

இப்பவும் வீட்ல கிரிக்கெட்னா என்னன்னே தெரியாது. கொஞ்சம் பெரிய குடும்பம். நான்தான் மூத்த பையன். இவ்ளோ பெரிய குடும்பம் உன்னை நம்பி இருக்கு. நீ இன்னும் கிரிக்கெட் ஆடிட்டு இருக்கன்னு ஊர்க்காரங்க சொல்லுவாங்க. ஆனா, வீட்ல ஜெயப்பிரகாஷ் அண்ணா பொறுப்புல விட்டத்துக்கு அப்புறம் எதுவும் கண்டுக்கல. ரஞ்சி டிராபி, பர்ஸ்ட் டிவிஷன், செகண்ட் டிவிஷன்னு நான் செலக்ட் ஆனப்போ எல்லாம் அவங்களுக்கு எதுவும் புரியல. ஐபிஎல் வந்தப்பதான், இதுல இவ்ளோ விஷயம் இருக்கான்னு புரிஞ்சுகிட்டாங்க.”

``ஜெயப்பிரகாஷ் என்கிற ஜெ.பி... அவரைப் பத்திச் சொல்லுங்க... உங்க ஜெர்ஸிலகூட ‘நட்டு’க்கு முன்னாடி அவரோட பெயர்... உங்க கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவர் எப்படி உதவினார்?’’

“நான் ஏழாவது படிச்சப்ப ஜெ.பி அண்ணனோட டென்னிஸ் பால் டீம்தான் டாப். எந்த டோர்னமென்ட் போனாலும் எங்க ஊர்தான் ஜெயிக்கும். என்னோட கனவெல்லாம் அண்ணன் டீம்ல ஆடணும்னுதான். ஒரு நாள் அண்ணன் என்னை விளையாட சேர்த்திக்கிட்டார். அவர்கூட அடிக்கடி விளையாட ஆரம்பிச்சப்போதான் டோர்ன மென்ட்டுக்கும் கூப்பிட்டார். இப்படித்தான் எல்லாமே ஆரம்பிச்சது.”

நடராஜன்
நடராஜன்

``டிஎன்பிஎல் உங்களோட வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் உதவுச்சு?’’

“2015-ல என்னோட பௌலிங் ‘Suspected action’னு சொல்லிட்டாங்க. பிசிசிஐ கரெக்‌ஷன் அது இதுன்னு மென்டலா ரொம்ப ஸ்ட்ரெஸ். டக்குனு ஆரம்பிச்ச கிரிக்கெட் கரியர் டப்புனு முடிஞ்ச உணர்வு. நிறைய பேர் இதை க்ளியர் பண்ண முடியாதுன்னு பயமுறுத்தினாங்க. ஜெ.பி அண்ணா, சென்னை லீக் பர்ஸ்ட் டிவிஷன்ல பரத் ரெட்டி சார், அப்புறம் என்னோட கோச்சஸ் எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணினாங்க, ஒரு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு கிளியரன்ஸ் வாங்கினேன். ஆனா, திரும்ப ரஞ்சி டிராபில செலக்ட் ஆக என்ன பண்ணுறதுன்னு புரியல. அப்போதான் டிஎன்பிஎல் ஸ்டார்ட் பண்ணினாங்க. லைவ் மேட்ச், அதுவரைக்கும் டென்னிஸ் பால், ரெட் கிரிக்கெட் பால்ல மட்டும் ஆடினவனுக்கு முதல்முறை ‘வைட் பால்’ கிரிக்கெட். டிஎன்பிஎல்-ல ஏதாவது பெருசா செய்யணும்னு தோணுச்சு. அப்பதான் இந்த யார்க்கர் போடற டெக்னிக்கை வளர்த்துக்கிட்டேன். தமிழ்நாடு கிரிக்கெட் அசோஷியேஷன் இப்படியொரு டோர்னமென்ட் நடத்தலைன்னா இன்னைக்கு நான் உங்க முன்னாடி இப்படிப் பேசியிருக்க முடியாது.

``உங்க யார்க்கர் பிராக்டீஸ் சீக்ரெட்ஸ் கொஞ்சம் சொல்லுங்க... ‘நட்டு’னு சொன்னாலே ‘யார்க்கர்’னு பிரபலமாகிடுச்சு. பிரெட் லீ வரைக்கும் உங்க ‘யார்க்கர்’ பால் பத்திப் பேசிட்டாங்க. இந்த ஐபிஎல்-ல அதிகமான யார்க்கர்ஸ் போட்டிருக்கீங்க... அந்தத் துல்லியம் எப்படி சாத்தியமாச்சு?’’

“ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி அதை பிராக்டீஸ் பண்ணுவாங்க. குறிப்பா ஒரு சிலர் ஸ்டம்ப்ஸ் கிட்ட ஷூ வெச்சு அதுக்கு பால் போட்டு பிராக்டீஸ் பண்ணுவாங்க. ஆனா, எனக்கு பேட்ஸ்மேன் நின்னாதான் யார்க்கரே போட வரும். பேட்ஸ் மேனோட மூவ்மென்ட் ரொம்ப கவனிப்பேன். இல்லைன்னா எனக்கு அது சரியா வராது. அவரை மாதிரி ஒரு பெரிய பௌலர் இப்போ என்னை வாழ்த்தினது ரொம்ப சந்தோஷம்.”

“பேட்ஸ்மேன் நின்னாதான் யார்க்கரே போட வரும்!”

``கிங்ஸ் லெவன் பஞ்சாப் டீம்ல இருந்த வீரேந்திர ஷேவாக் தமிழ்நாட்டு நடராஜனை எப்படிக் கண்டுபிடிச்சாரு?’’

“டிஎன்பிஎல் - குறிப்பா நான் போட்ட சூப்பர் ஓவர்தான் காரணம்னு நினைக்கிறேன். ஏதாவது ஒரு ஐபிஎல் டீம் நம்மளை எடுத்தா போதும்னுதான் இருந்தேன். ஆனா, ஷேவாக்கோட பஞ்சாப் டீம் அப்பவே மூணு கோடி கொடுத்து என்னை எடுத்ததும்தான் எனக்கு இன்னும் பிரஷர் அதிகமாயிடுச்சு. ஷேவாக் ரொம்ப நல்லா மோட்டிவேட் பண்ணுவார். இன்னமும் எனக்கு இருக்கற ஒரே பிரச்னை இந்திதான். எனக்குப் புரியும், ஆனா திரும்பப் பேச வராது. தமிழில்தான் பதில் சொல்லுவேன்.’’

``உங்களோட ஆதர்ஷமான பௌலர் யார்?’’

“ஆஸ்திரேலிய பௌலர் மிட்சல் ஜான்சன் ரொம்பப் பிடிக்கும்.”

``வளர்ந்துவரும் பௌலர்களுக்கு நீங்க இப்ப என்னவெல்லாம் செய்றீங்க?’’

“ஐபிஎல்-ல செலக்ட் ஆனப்பவே எங்க ஊர்ல ஒரு கிரிக்கெட் அகாடமி ஆரம்பிச்சிருக்கேன். அங்க சுத்தி இருக்கற கிராமங்களிலிருந்து வாய்ப்பில்லாம கஷ்டப்படற நிறைய பேருக்கு கிரிக்கெட்டைக் கொண்டு போனோம். முதல்ல கட்டணம் வெச்சிருந்தோம். அப்புறம் அங்க இருக்கற நிலைமையப் பார்த்துட்டு இப்போ முழுக்க முழுக்க இலவசமா சொல்லித் தர்றோம். கிரவுண்டு மெயின்டனென்ஸ் கட்டணம்னு ஒண்ணு மட்டும் வாங்குவோம். இந்த வருஷம் எங்க அகாடமில இருந்து ரெண்டு பேர் செலக்ட் ஆகியிருக்காங்க. போன வருஷம் பெரியசாமி எங்க அகாடமில இருந்துதான் செலக்ட் ஆனார். நல்லா பர்பார்ம் பண்ணி நிறைய அவார்டு வாங்கினார். விகடன் விருதுகூட வாங்கியிருக்கார். அவரும் நானும் இப்போ தமிழ்நாடு டீமுக்கு ஓப்பனிங் ஸ்பெல் போட்டோம். மறக்க முடியாத ஓர் உணர்வு அது!”

(சர்ப்ரைஸாக நடராஜனின் மனைவி பவித்ராவும் காலில் இணைந்தார்)

``உங்களோடது லவ் மேரேஜ்னு கேள்விப்பட்டோம். உங்க காதல் கதையைச் சொல்லுங்க...’’

``நட்டுவும் நானும் ஸ்கூல்மேட்ஸ். ரொம்ப பெஸ்ட் பிரெண்ட்ஸ் அப்பவே! ஆனா, ஸ்கூல் முடிச்சதுக்கு அப்பறம் டச்லயே இல்லை. திரும்ப அஞ்சு வருஷம் கழிச்சுதான் மீட் பண்ணினோம். அப்புறம் நட்டு, நீ கொஞ்சம் கன்டினியூ பண்ணேன்...’’ (செல்லமாகக் கட்டளையிட, நடராஜன் தொடர்ந்தார்).

``நான் மெசேஜ் பண்ணினேன். என்னோட பேரு சொல்லியும், ‘யாரு நீங்க, தெரியலையே’ன்னு சொன்னாங்க. அப்புறம், சொன்னவுடனே லேட்டா ரிப்ளை வந்துச்சு. என்ன பண்ணுறோம்னு பேசினப்ப, கிரிக்கெட் ஆடறேன். ரஞ்சி டிராபி செலக்ட் ஆகியிருக்கேன்னு சொன்னப்ப, நம்பவே இல்லை. ‘நீயா, பொய் சொல்லாத’ன்னு சொன்னாங்க. கூகுள் பண்ணச் சொன்னேன். செக் பண்ணிட்டு உடனே கால் பண்ணிட்டாங்க. அப்படித்தான் பேச ஆரம்பிச்சோம்.”