Published:Updated:

ஆரம்பிக்கலாங்களா... முதல்முறையாக #IPL இறுதிப்போட்டியில் டெல்லி... சென்றது எப்படி?! #DCvSRH

#DCvSRH

கடைசி ஓவரை வீச வருவது நார்க்கியாதான். அடிக்க வாய்ப்பு எல்லாம் இருக்கிறது, அடிக்க பேட்ஸ்மேன்தான் இல்லை என உணர்கிறார்கள் சன்ரைஸர்கள். #DCvSRH

Published:Updated:

ஆரம்பிக்கலாங்களா... முதல்முறையாக #IPL இறுதிப்போட்டியில் டெல்லி... சென்றது எப்படி?! #DCvSRH

கடைசி ஓவரை வீச வருவது நார்க்கியாதான். அடிக்க வாய்ப்பு எல்லாம் இருக்கிறது, அடிக்க பேட்ஸ்மேன்தான் இல்லை என உணர்கிறார்கள் சன்ரைஸர்கள். #DCvSRH

#DCvSRH
மிட்செல் மார்ஷுக்கு கணுக்காலில் காயம், புவனேஷ்வருக்கு இடுப்பில் காயம், ஷங்கருக்கும் சாஹாவுக்கும் தொடையில் காயம் என ஹைதராபாத் அணியே அவசர சிகிச்சை வார்டு போல இருந்தும், குளுக்கோஸை ஏற்றிக்கொண்டு குவாலிஃபையர் வரை கெத்தாக வந்திருக்கிறது.

2020 ஐபிஎல் சீசன் ஆரம்பத்தில், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய டெல்லி அணி கடைசி ஆறு ஆட்டங்களில் வாங்கிய ஊமைக்குத்துகளில் கொஞ்சம் அடங்கிக் கிடக்கிறது. இந்த இரண்டு அணிகளும், ஃபைனல்ஸில் மும்பையை எதிர்த்து விளையாடுவதற்கு தங்களுக்குள் நேற்று மோதிக்கொண்டன. அபுதாபியில் நடந்த இம்மோதலில், அப்படி என்னதான் நடந்தது... ஆரம்பிக்கலாங்களா..?

#DCvSRH
#DCvSRH

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். இந்த சீசனில், ஏற்கெனவே இருமுறை ஐதராபாத் அணியை சேஸ் செய்கிறேன் என அவர்கள் ஜூஸ் பிழிந்த கதை கண்கள் முன்னால் வந்துப் போனதால் கண்களை மூடிக்கொண்டு ஐதராபாத் அணியை முதலில் பந்து வீச அழைத்தார். சாம்ஸ் மற்றும் ஷாவுக்குப் பதிலாக ஹெட்மயர் மற்றும் துபே அணியில் இணைந்தனர். இது அந்த துபே இல்லை, பிரவீன் துபே. ஹைதராபாத் அணி வேற லெவலில் ஆடிக்கொண்டிருப்பதால், லெவனில் எந்தவித மாற்றமும் இல்லை. வழக்கம்போல், முதல் ஓவரை வீசவந்தார் சந்தீப்.

டெல்லி அணியின் ஓப்பனர்களாக ஷா, ரஹானே மற்றும் தவான் ஆகியோர் ஆம்லேட், ஆஃப்பாயில், ஃபுல்பாயில், பொடிமாஸ் என விதவிதமாக முட்டைகளைப் பரிமாறிக்கொண்டிருப்பதால், தவான் - ஸ்டாய்னிஸ் என ஓப்பனிங் ஜோடியை மாற்றி இறக்கினார் ஷ்ரேயாஸ். முதல் ஓவரில் வெறும் 3 ரன்களே கிடைத்தாலும், ஓப்பனர்கள் இருவரும் ஜீரோவைத் தாண்டியதாலேயே ஹீரோவைப் போல் கொண்டாடினர் டெல்லி வாலாக்கள். ஹோல்டர் வீசிய 2-வது ஓவரில், பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டு பவுண்டரி கணக்கைத் துவங்கினார் தவான். ஸ்டாய்னிஸை அவுட்டாக்க கில்லியாக ஒரு ஐடியா பிடித்து, சில்லி மிட் ஆனில் ஒரு ஃபீல்டரைப் போட்டார் வார்னர். சந்தீப்பும் அதற்கேற்ப பந்து வீசினார். 3-வது ஓவரின் 3 பந்து, இன்ஸ்விங் ஆகி வர, சில்லி மிட் ஆன் திசையில் ஒரு குத்து விட்டார் ஸ்டாய்னிஸ். அந்தப் பந்தும் அங்கு நின்றுக்கொண்டிருந்த ஹோல்டரின் கையில் பட்டு பறந்தது. ஜஸ்ட் மிஸ்ஸு, நூலிழையில் மிஸ் ஆகிடுச்சு! வெறி பிடித்த ஸ்டாய்னிஸ், டீப் ஃபார்வார்டு ஸ்கொயர் லெக் திசையிலேயே இரண்டு பவுண்டரிகளை தெறிக்கவிட்டார். 

#DCvSRH
#DCvSRH

கடந்த 10 போட்டிகளுக்கு 9 போட்டியில், எப்படியும் 2-வது ஓவருக்குள் ஒரு விக்கெட்டை இழந்துக்கொண்டிருந்த டெல்லி அணிக்கு இதுவே திட்டமிட்ட ஓப்பனிங், திகட்டாத ஹேப்பனிங்காக இருந்தது. 3-வது ஓவரை வீசவந்தார் ஹோல்டர். மிட் விக்கெட் திசையில் ஒன்று, மிட் ஆன் திசையில் ஒன்று, ஷார்ட் தேர்ட் மேன் திசையில் ஒன்று என மூன்று பவுண்டரிகளை விரட்டிய ஸ்டாய்னிஸ், இது போதாதென லாங் ஆன் திசையில் ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். `இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே' என நொந்துபோயினர் ஹைதராபாத் ரசிகர்கள்.

5-வது ஓவரில், பாயின்ட் திசையில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டு தவானும் ஆட்டத்துக்குள் வந்தார். அதே ஓவரில், ஷார்ட் ஃபைன் லெக் திசையில் நின்றுகொண்டிருந்த நட்டு ஒரு பவுண்டரியை கால்வாய் விட தவானுக்கு இன்னுமொரு பவுண்டரி கிடைத்தது. சந்தீப் நொந்துப்போனார்.

6-வது ஓவரை வீசவந்தார் நதீம். டீப் மிட் விக்கெட்டில் திசையில் ஒரு சிக்ஸரோடு வரவேற்றார் தவான். அடுத்து நோ-பாலில் இன்னொரு பவுண்டரி கிட்ட, `இன்னைக்கு நமக்கு சரியில்லை... எனக்கு என்னவோ இது சரியாப்படலை' என ஹைதராபாத் ரசிகர்கள் சோகமானார்கள். பவர் ப்ளேயின் முடிவில், 65/0 என மாஸ் காட்டியது டெல்லி. 7-வது ஓவரை வீச ரஷீத் கான் வந்தார். ஓவரின் 4-வது பந்தை, லெக் ஆன் திசையில் தவான் தட்டிவிட்டு ஓட, அங்கிருந்த ஃபீல்டரும் பந்தைக் கீப்பரிடம் எறிய, `குறுக்கே இந்த கௌஷிக் வந்தா' என உள்ளே புகுந்து பந்தைப் பிடித்து பவுண்டரிக்கு எறிந்தார் ரஷீத். மொத்தம் ஆறு ரன்கள்! `நமக்கு நேரம் சரியில்லை' என சோளியை உருட்டத் துவங்கினார்கள் சன்ரைசர்ஸ் ரசிகர்கள்.

#DCvSRH
#DCvSRH

8-வது ஓவரை வீச நடராஜன் வந்தார். யார்க்கர் சற்று மிஸ்ஸாக, அதை மிட் விக்கெட் திசையில் பவுண்டரிக்கு தூக்கினார் தவான். மீண்டும் 9-வது ஓவரை வீசவந்தார் ரஷீத். ஸ்டாய்னிஸ் காலி! ஹைதராபாத் அணி நிம்மதி பெருமூச்சு விட்டது. கேப்டன் ஷ்ரேயாஸ், தலை கவசம் ஏதுமின்றி களத்துக்குள் நுழைந்தார். நதீம் வீசிய 10-வது ஓவரில், மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸரை வெளுத்த தவான், அப்படியே 26 பந்துகளில் தனது அரைசதத்தையும் நிறைவு செய்தார். ரஷீத் வீசிய 11-வது ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே. நட்டு வீசிய 12-வது ஓவரிலும் அதே ரன்கள். நதீம் வீசிய 13-வது ஓவரில், லாங் ஆன் திசையில் பந்தை வேகமாக விரட்டினார் ஷ்ரேயாஸ். பந்தைப் பிடிக்க இரண்டு வீரர்கள் விறுவிறுவென ஓடினார்கள். கடைசியில், பந்தைப் பிடிக்க இருவரில் ஒருவர் டைவ் அடித்தாலும் மற்றொருவருக்கும் ரோமன் ரெய்ன்ஸ் ஸ்பியர் விழும் என்பதால், ஒரு பவுண்டரியைத் தியாகம் செய்தனர். ஹைதராபாத் ரசிகர்கள் உருட்டிய சோளிகள் உடைந்துவிட்டன.

ஹோல்டர் வீசிய 14-வது ஓவரில், அவுட்டானர் ஷ்ரேயாஸ். பாண்டேவுக்கு ஈஸி கேட்ச். ஹெட்மயர் உள்ளே வந்தார். நதீம் வீசிய 15-வது ஓவரில், ஒரு எக்ஸ்ட்ரா கவர் பவுண்டரியையும் விரட்டினார். 15 ஓவர் முடிவில், 139/2 என பக்கா மாஸ் காட்டியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. நட்டு வீசிய 17-வது ஓவரில், டீப் கவரில் ஒரு சிக்ஸரைப் போட்டு `ஹெட்மயர் நஹி, ஹிட்மயர் போலோ' என்றார் ஹெட்டு. ஹோல்டர் வீசிய 18-வது ஒவரில், தவான் ஒரு பவுண்டரியும் ஹெட்மயர் மூன்று பவுண்டரியும் அள்ளிப்போட்டனர். சந்தீப் வீசிய 19-வது ஓவரில், தவான் அடித்த பந்து ரஷீத்தை நோக்கி பறந்தது. பந்தைக் கோட்டைவிட்டார்! `சோளி எல்லாம் தேவையே இல்ல. இது மோசமான நாள்னு சொல்றதுக்கு' என டென்ஷன் ஆனார்கள் சன்ரைசர்ஸ் ரசிகர்கள்.

#DCvSRH
#DCvSRH

அடுத்த இரண்டாவது பந்தில், தவான் அவுட். ஃபுல் டாஸாக பாய்ந்து வந்து பேட்டில் விழுந்த பந்தை, எல்.பி.டபிள்யூவுக்கு க்ளெய்ம் செய்தார் சந்தீப். அம்பயர் ஒரு முடிவைச் சொல்வதற்குள், பெவிலியனை நோக்கி தவான் நடக்க ஒற்றைக் கையைத் தூக்கினார் அம்பயர். நடராஜன் வீசிய கடைசி ஓவரில், 7 ரன்கள் மட்டுமே கிடைத்தது. பிரமாதமான பெளலிங்! 20 ஓவர்களின் முடிவில், 189/3 என வேற லெவல் மாஸி இன்னிங்ஸை முடித்தது டெல்லி அணி!

190 ரன்கள் அடித்தால் வெற்றி மாலை சூடலாம் என வெறியோடு கிளம்பிவந்தார்கள் ஹைதராபாத் ஓப்பனர்கள் வார்னர் மற்றும் கார்க். ரவிச்சந்திரன் அஷ்வின், முதல் ஓவரை வீசினார். ஓவரின் 3-வது பந்தை டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸருக்கு அனுப்பிவைத்தார் கார்க். முதல் ஓவரில் 12 ரன்கள் கிடைத்தன. 2-வது ஓவரின், முதல் பந்திலேயே வார்னருக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார் ரபாடா. வார்னரின் காலில் பட்டு, ஸ்டெம்பைத் தெறிக்கவிட்டது பந்து. ஹைதராபாத் ரசிகர்களுக்கு ஐயம் வந்தது! அதே ஓவரில், மனீஷ் ஒரு பவுண்டரியை விரட்டி, `நான் இருக்கேன்' என்றார். நார்க்கியா வீசிய 3-வது ஓவரில், மனீஷ் ஒரு பவுண்டரியும், கார்க் லாங் லெக்கில் ஒரு சிக்ஸரும் கடாசினர். உடனே, பேட்டிங்கில் கலக்கியெடுத்து செம பாசிட்டிவாக இருந்த ஸ்டாய்னிஸை பந்துவீச அழைத்தார் ஷ்ரேயாஸ். கார்க், மனீஷ் என இரண்டு விக்கெட்களையும் கழற்றினார் மனிதர். `யாருய்யா நீ?' என டெல்லி ரசிகர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். பவர் ப்ளேயின் முடிவில், 49/3 என பின்தங்கியிருந்தது ஹைதராபாத்.

#DCvSRH
#DCvSRH

வில்லியம்சனும் ஹோல்டரும் களத்தில் இருந்தார்கள். அடுத்த 8 ஓவர்கள், வில்லியம்சன் மட்டுமே பவுண்டரிகளை அடித்துக்கொண்டிருந்தார். இறுதி ஓவர்களிலாவது, கேனுக்கு பக்கபலமாக நிற்பார் என எதிர்பார்த்திருந்த ஹோல்டர், `கேனுக்குள்ள எல்லாம் ஆட்டோ வராது' என்பதுபோல, அக்ஸர் வீசிய 12-வது ஓவரில் அவுட்டானார். 14-வது ஓவரில், தனது அரைசதத்தைக் கடந்து, ஆட்டத்தையும் கொஞ்சம் உயிர்ப்போடு வைத்திருந்தார் கேன். 15வது ஓவரில்தான், வேகம் எடுத்தார் அப்துல் சமாத். நார்க்கியா வீசிய ஓவரில், மிட் விக்கெட்டில் ஒரு சிக்ஸர், பாயின்ட்டில் ஒன்று ஷார்ட் தேர்டில் மற்றொரு பவுண்டரி என வறுத்தெடுத்தார். 15 ஓவரின் முடிவில், 30 பந்துகளில் 61 தேவை எனும் நிலை. கூட்டிக் கழித்துப் பார்த்தால் சரியாக வரும் கணக்குதான். மீண்டும் நம்பிக்கை வந்தது சன்ரைசர்ஸ் ரசிகர்களுக்கு!

16-வது ஓவரில், வில்லியம்சனுக்கு ஒரு பவுண்டரி உட்பட 10 ரன்களை விட்டுக்கொடுத்தார் அஷ்வின். மீண்டும் வந்த ஸ்டாய்னிஸ், கடைசியாக டீப் கவரில் வில்லியம்சனுக்கு ஒரு பவுண்டரியைக் கொடுத்துவிட்டு, அடுத்த பந்தே அவருடைய விக்கெட்டைக் கழட்டினார். அதே டீப் கவரில் கேட்ச் எடுத்தார் ரபாடா. அடுத்து வந்த ரஷீத் கான், அஷ்வின் வீசிய 18-வது ஓவரில் லாங் ஆனில் ஒரு சிக்ஸர், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி என வெளுத்துக்கட்டினார். 18 ஓவர்களின் முடிவில், 12 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவை எனும் நிலை. 19-வது ஓவரை வீசவந்தார் ரபடா. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சமாத், சிறிதாக ஆட்டம் காட்டிய ரஷீத், ஆட்டத்தில் இருக்கிறார் என்றே தெரியாத கோஸ்வாமி என மூன்று பேரின் விக்கெட்களையும் ஒரே ஓவரில் கழட்டினார். ஹைதராபாத் ரசிகர்கள் அப்ஸ்காண்ட் ஆனார்கள். இன்னும் 6 பந்துகளுக்கு 22 ரன்கள் தேவை எனும் நிலை.

#DCvSRH
#DCvSRH

கடைசி ஓவரை வீச வருவது நார்க்கியாதான். அடிக்க வாய்ப்பு எல்லாம் இருக்கிறது, அடிக்க பேட்ஸ்மேன்தான் இல்லை என உணர்கிறார்கள் சன்ரைஸர்கள்.

"எங்கள யாருமே ஒரு டீமாவே பெருசா மதிக்கமாட்டாங்க. நாங்கெல்லாம் அண்டர் ரேட்டர் வகையறாதான். ஆனாலும், அப்படி இப்படி ஜெயிச்சு இந்த இடத்தைப் பிடிச்சுருக்கோம். கஷ்டப்பட்டு பிடிச்ச இந்த இடத்தை, நாங்க சரியா கேட்சுகளைப் பிடிச்சுருந்தாலே தக்க வெச்சிருக்கலாம். அங்கதான் தப்பு நடந்துருச்சு. சரி விடுங்க, அடுத்த சீசன் தெம்பா வருவோம்" என்றார் வார்னர்.

"ரொம்ப பெருமையா இருக்குது. ஓப்பனிங்தான் என்ன பண்றதுனு தெரியாம முழிச்சுகிட்டு இருந்தோம். ஸ்டாய்னிஸ் இன்னைக்கு அதை சரியா பண்ணிட்டார். டீம்ல எல்லோரும் இன்னைக்கு ரொம்ப ஹேப்பி. இதே ஹேப்பி மூடோட, மும்பையை அடிச்சு துவைக்குறோம்" என்றார் ஷ்ரேயாஸ். மார்கஸ் ஸ்டாய்னிஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

முதல்முறை ஐபிஎல் ஃபைனலில் காலடி எடுத்து வைத்திருக்கும் டெல்லி அணி, கப்போடு திரும்பி வருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.