Published:Updated:

சென்னையின் வெற்றிகரமான 7வது தோல்வி... தோனியின் விளக்கங்களும், தொடரும் அலட்சியங்களும்! #CSKvRR

தோனி

சென்னையின் இன்னிங்ஸில் மட்டும் 43 டாட் பால்கள்... சாம் கரண்தான் டாட் பால் டாப்பர். 11 பந்துகளில் அற்புதமான டொக்குகள் வைத்தார் சாம் கரண். இரண்டாம் இடம் ராயுடு-வுக்கு. 10 பந்துகளை சாப்பிட்டார். டாட் பால் ஸ்பெஷலிஸ்ட்டான தோனிக்கு இந்தமுறை மூன்றாவது இடம்தான் கிடைத்தது.

Published:Updated:

சென்னையின் வெற்றிகரமான 7வது தோல்வி... தோனியின் விளக்கங்களும், தொடரும் அலட்சியங்களும்! #CSKvRR

சென்னையின் இன்னிங்ஸில் மட்டும் 43 டாட் பால்கள்... சாம் கரண்தான் டாட் பால் டாப்பர். 11 பந்துகளில் அற்புதமான டொக்குகள் வைத்தார் சாம் கரண். இரண்டாம் இடம் ராயுடு-வுக்கு. 10 பந்துகளை சாப்பிட்டார். டாட் பால் ஸ்பெஷலிஸ்ட்டான தோனிக்கு இந்தமுறை மூன்றாவது இடம்தான் கிடைத்தது.

தோனி
சென்னையோடு இறுதிப்போட்டியில் மோதப்போவது யார் என்கிற கேள்வியோடு தொடங்கிய 2020 ஐபிஎல் சீசன், சென்னையோடு கடைசி இடத்துக்கு மோதப்போவது யார் என்கிற கேள்வியை நோக்கி வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிறது.

10 போட்டிகளில் விளையாடி வெற்றிகரமாக 7வது தோல்வியைச் சந்தித்திருக்கிறது சென்னை. இன்னும் 4 போட்டிகள்தான் இருப்பதால் முதல்முறையாக ப்ளே ஆஃபுக்குள் நுழைய முடியாத நிலையை சந்திக்க இருக்கிறது சிஎஸ்கே. ப்ளே ஆஃபுக்குள் நுழையமுடியாவிட்டால் பரவாயில்லை, கடைசி இடத்தில் இருந்தாவது கொஞ்சம் முன்னேறுங்கள் என்பதுதான் சென்னை ரசிகர்களின் கடைசி வேண்டுகோள்.

பேட்டிங் செய்ய கடினமான பிட்ச்களில், பிட்ச்சின் தன்மையைப் புரிந்துகொண்டு, அதற்கேற்றபடி விளையாடி வெற்றிபெறவைப்பார்கள் என்பதற்காகத்தான் சென்னை அணியில் அத்தனை சீனியர் பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால், பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க கடினமாக இருந்த அபுதாபி பிட்ச்சில், சீனியர் பேட்ஸ்மேன்கள் அத்தனைப் பேரும் சொதப்பிவிட்டு, பெளலர்களிடம் மேஜிக்கை எதிர்பார்த்து ஃபீல்டில் நின்றுகொண்டிருந்ததைப்பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

#CSKvRR
#CSKvRR

ஐபிஎல் வரலாற்றில் அதிகப்போட்டியில் விளையாடிய வீரராக 200-வது போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக விளையாடினார் தோனி. டாஸ் வென்றதும் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தவர், தனது சர்ப்ரைஸ் ப்ளேயிங் லெவனை அறிவித்தார். கேதர் ஜாதவ் நிச்சயம் ப்ளேயிங் லெவனில் இருக்கவேண்டும், இம்ரான் தாஹிரை எக்காரணம் கொண்டும் ப்ளேயிங் ஃபீல்டிக்குள் இறக்கிவிடக்கூடாது என்கிற வியூகத்தோடு ஒவ்வொரு போட்டியிலும் களமிறங்கும் கேப்டன் தோனி, ராஜஸ்தானுக்கு எதிராகவும் அதே ஃபார்முலாவோடுதான் வந்திருந்தார். கொஞ்சம்கூட பிசிறு தட்டவில்லை. பிராவோ காயமடைந்துவிட்டதால் அவருக்குப் பதிலாக ஜோஷ் ஹேஸில்வுட்டையும், கடந்த போட்டியில் சிறப்பாகப் பந்துவீசாததால் உடனடி மாற்றமாக கார்ன் ஷர்மாவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக இந்த சீசனில் சிறப்பாகப் பந்துவீசி தன் திறமையை தொடர்ந்து நிரூபித்துகொண்டிருக்கும் பியூஷ் சாவ்லாவையும் கொண்டுவந்தார் தோனி.

தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பும் வாட்சனை ஒரு மேட்சில்கூட பென்ச்சில் உட்காரவைக்கக்கூடாது என்கிற சிஎஸ்கே-வின் கொள்கை முடிவால் அவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. ரிலாக்ஸாக இருந்தார். உண்மையில் ராஜஸ்தானுக்கு எதிரானப்போட்டியில் வாட்சன்தான் டாட் பால்கள் ஆடாத சென்னையின் ஒரே பேட்ஸ்மேன். நன்றி வாட்டோ!

சாம் கரண் - டுப்ளெஸ்ஸிதான் ஓப்பனிங். சென்னை அணியில் ஃபார்மில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேனான டுப்ளெஸ்ஸி மூன்றாவது ஓவரிலேயே 10 ரன்களில் அவுட் ஆக, சென்னையின் சரிவு சிறப்பாகத் தொடங்கியது. முதல் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டரிகளை அடித்துவிட்டு மூன்றாவது பந்தில் அவுட் ஆனார் வாட்சன். 25 பந்துகளில் 22 ரன்கள் அடித்துவிட்டு சாம் கரண் அவுட் ஆனார். சென்னையின் இன்னிங்ஸில் ஒரே சிக்ஸர் அடித்த ஒற்றை பேட்ஸ்மேன் சாம் கரண்தான்.

#CSKvRR
#CSKvRR

பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என ராயுடு மேல் மொத்த நம்பிக்கையையும் வைத்தால் 'அவ்ளோ டேலன்ட்லாம் இல்ல பிரதர்' என 19 பந்துகளில் 13 ரன்கள் அடித்துவிட்டு அவுட் ஆனார் ராயுடு. அதற்கு அடித்து தோனியும் - ஜடேஜாவும்... இனி ரன் அடிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை, கேதர் ஜாதவை க்ரீஸுக்கு கொண்டுவந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக ஆடினார்கள். 46 பந்துகளில் இந்தக் கூட்டணி 51 ரன்களை அடித்தது. கடைசி 3 ஓவர்களில் ஆர்ச்சரையெல்லாம் அடித்து நொறுக்கப்போகிறார் தோனி என எதிர்பார்க்கும் நேரத்தில் இரண்டாவது ரன்னுக்கு ஆசைப்பட்டு வழக்கம்போல ரன் அவுட் ஆனார். முதல் ரன்னை எடுக்க தோனி ஓடிய வீடியோ ஹாட்ஸ்டாரில் கிடைத்தால் தோனி ரசிகர்கள் அதை அடிக்கடி பார்த்து இன்புறலாம்.

எது நடக்கக்கூடாது என தோனியும் - ஜடேஜாவும் நினைத்தார்களோ அது நடந்துவிட்டது. ஆக்ரோஷ பேட்ஸ்மேன் கேதர் ஜாதவ் 18வது ஓவரில் களத்துக்கு வந்துவிட்டார். சிக்ஸர்கள் எல்லாம் அசால்ட்டாக அடித்துப்பழக்கப்பட்ட கேதரின் கேட்சை கோட்டைவிட்டார் ஜோஃப்ரா ஆர்ச்சர். கேதர் 7 பந்துகளில் 4 ரன்கள் அடித்துமுடித்துவிட்டு, நாட் அவுட் பேட்ஸ்மேனாக பெவிலியனை நோக்கி நடந்த அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஜடேஜா 30 பந்துகளில் 35 ரன்கள் அடிக்க, 20 ஓவர்களில் 125 ரன்கள் என்கிற இமாலய இலக்கை எட்டியது சென்னை.

#CSKvRR
#CSKvRR

சென்னையின் இன்னிங்ஸில் மட்டும் 43 டாட் பால்கள்... சாம் கரண்தான் டாட் பால் டாப்பர். 11 பந்துகளில் அற்புதமான டொக்குகள் வைத்தார் சாம் கரண். இரண்டாம் இடம் ராயுடு-வுக்கு. 10 பந்துகளை சாப்பிட்டர். டாட் பால் ஸ்பெஷலிஸ்ட்டான தோனிக்கு இந்த முறை மூன்றாவது இடம்தான் கிடைத்தது. 9 பந்துகளை மட்டுமே அவரால் வீணடிக்க முடிந்தது. ஜடேஜா 8 பந்துகளோடு நிறுத்திக்கொள்ள, தலைவன் கேதர் ஜாதவின் முக்கியமான இன்னிங்ஸில் இரண்டே இரண்டு டாட் பால்கள்தான்.

பெளலர்களுக்கு சாதகமாக பிட்ச் இருந்ததால் 125 ரன்களே வெற்றிக்குப்போதுமானதுதான் என்கிற தெம்போடு, பெளலிங் படையை அழைத்துக்கொண்டு களமிறங்கினார் தோனி. 2 ஸ்லிப், ஒரு கல்லி என பவர்ப்ளேவில் ஃபீல்டிங் செட் அப்பே பயங்கர அதிரடியாக இருந்தது. தீபக் சஹார் முதல் விக்கெட்டாக பென் ஸ்டோக்ஸைத் தூக்கினார். அடுத்து உத்தப்பா ஹேசில்வுட் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட். ஒரு சீசனுக்கு ஒரு போட்டியில் மட்டுமே அடிக்கும் விநோத ஃபார்ம் கொண்ட சாம்சன் சிங்கிள் டிஜிட்டை அல்ல பூஜ்ஜியத்தையே தாண்டவில்லை.

#CSKvRR
#CSKvRR

5 ஓவர்களுக்குள்ளாகவே 28 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துவிட்டது ராஜஸ்தான். ஆனால், இங்குதான் சென்னை பேட்ஸ்மேன்களுக்கும், ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களுக்குமான வித்தியாசம் இருக்கிறது. சீனியர் பேட்ஸ்மேன்களான கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், ஜோஸ் பட்லரும் பொறுப்பை உணர்ந்து அழகான இன்னிங்ஸ் ஆடினார்கள். இவர்களும் டாட் பால் ஆடினார்கள். ஆனால், இடையிடையே பவுண்டரிகள் தங்குதடையின்றி தொடர்ந்துகொண்டே இருந்தன.

தீபக் சஹாரின் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனதால் அவரது பந்துகளை மட்டும் டாட் பால்களாக்கிவிட்டு, மற்றவர்களின் பந்துகளில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துகொண்டேயிருந்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்தே சென்னையின் டார்கெட்டை சேஸ் செய்து முடித்தார்கள். இவர்களின் பார்ட்னர்ஷிப் 98 ரன்கள். ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 70 ரன்கள் அடிக்க, ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். 18வது ஓவரின் மூன்றாவது பந்தில் வெற்றிக்கான 126 ரன்களை அடித்தது ராஜஸ்தான். சென்னை புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்துக்குப்போனது.

தோல்விக்குப்பின் விளக்கம் அளிக்க வந்தார் தோனி. ''நான் எப்போதும் சொல்வதுபோல பிராசஸில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்கவேண்டும். பிராசஸில் பிரச்னையா அல்லது அதை நாங்கள் செயல்படுத்துவதில் பிரச்னையா என ஆராய வேண்டும். அடிக்கடி வீரர்களை மாற்றிக்கொண்டேயிருந்தால் ஒரு கட்டத்தில் எது சரியான அணி என்பதே பிடிபடாமல் போய்விடும். இவர் சரியாக ஆடவில்லை என்று இன்னொருவரை எடுப்போம், அவர் சரியாக ஆடவில்லை என்று இவரை எடுப்போம் என வீரர்களிடையே ஒரு பாதுகாப்பின்மை உணர்வு வந்துவிடும். இளைஞர்களை முயன்றோம் . ஆனால், அவர்களிடம் நாங்கள் எதிர்பார்த்த ஸ்பார்க் இல்லை. இனிமேல் இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவோம். இனி அவர்கள் பிரஷர் இல்லாமல் விளையாடலாம்'' என்றவர் கப்பலில் விழுந்த ஓட்டைகளை சரிசெய்ய முடியவில்லை என்பதை ஜென்டில்மேனாக ஒப்புக்கொண்டார்.

#CSKvRR
#CSKvRR
தோனியே சொல்லியிருப்பதால் கடைசி நான்கு போட்டிகளிலாவது ஜெகதீசன், சாய் கிஷோர், ருத்துராஜ் என இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புவோம்... அப்ப இம்ரான் தாஹிருக்கு இடம் கிடைக்காதா எனக் கேட்கிறீர்களா... இம்ரான் தாஹீரை விளையாட வைப்பதற்கான சரியான பிட்சை தேடிக்கொண்டிருக்கிறார் தோனி. அதைக் கண்டுபிடித்ததும் தாஹிரை சேர்த்துக்கொள்வார். கவலை வேண்டாம்!