Published:Updated:

IPL 2015 Final: தொடர் சொதப்பலிலிருந்து மீண்டுவந்த மும்பை... சிஎஸ்கே 1.0 முடிவுக்கு வந்த நாள்!

IPL 2015 Final | MIvCSK ( iplt20.com )

திடீரென நியூசிலாந்துக்கு பறந்த மெக்கல்லம்... புரட்டியெடுத்த பொல்லார்ட்... சிஎஸ்கேவின் முதல் வெர்ஷன் முடிவுக்கு வந்த நாள்!

Published:Updated:

IPL 2015 Final: தொடர் சொதப்பலிலிருந்து மீண்டுவந்த மும்பை... சிஎஸ்கே 1.0 முடிவுக்கு வந்த நாள்!

திடீரென நியூசிலாந்துக்கு பறந்த மெக்கல்லம்... புரட்டியெடுத்த பொல்லார்ட்... சிஎஸ்கேவின் முதல் வெர்ஷன் முடிவுக்கு வந்த நாள்!

IPL 2015 Final | MIvCSK ( iplt20.com )
2015 ஐபிஎல் இறுதிப்போட்டி. மும்பை மற்றும் சென்னை அணியின் ரைவல்ரியில் மறக்க முடியாத போட்டி இது. சென்னை அணி இரண்டு வருட தடைக்கு முன்பாக ஆடிய கடைசிப்போட்டி இதுதான். இந்தப் போட்டிக்கு பிறகுதான் தோனி, ரெய்னா இருவருமே வெவ்வேறு அணிகளுக்கு ஆடும் நிலை வந்தன. அதனாலேயே இந்தப் போட்டியை ரசிகர்களால் எளிதில் மறக்க முடியாது.

இந்த சீசனில் தட்டுத்தடுமாறி முட்டி மோதி ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிப்பெற்ற மும்பை அணி இறுதிப்போட்டியில் வழக்கம் போல சென்னையை சம்பவம் செய்திருந்தது.

ஒப்பீட்டளவில் பார்த்தால் இந்த சீசனில் மும்பை அணியை விட சென்னை அணியே சிறப்பாக செயல்பட்டிருந்தது. லீக் போட்டிகளில் 9 போட்டிகளில் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த சென்னை அணி ப்ளே ஆஃப்ஸ்க்குள் சுலபமாக நுழைந்தது. லீக் போட்டிகளில் பல வெறித்தனமான பர்ஃபார்மென்ஸ்களையும் கொடுத்திருந்தது. டெல்லிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 150 ரன்னை டிஃபண்ட் செய்து 1 ரன் வித்தியாசத்தில் அட்டகாசமாக வென்றிருந்தது சென்னை அணி. தொடர்ந்து, கொல்கத்தாவுக்கு எதிராக 134 ரன்களை டிஃபண்ட் செய்து 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கும். பஞ்சாபை ஒரு போட்டியில் 100 ரன்களுக்காக ஆல் அவுட் ஆக்கியிருக்கும். அடுத்து ராஜஸ்தானுக்கு எதிராகவும் ஒரு 150 டார்கெட்டை டிஃபண்ட் செய்திருக்கும்.

Nehra, Bravo | IPL 2015 Final | MIvCSK
Nehra, Bravo | IPL 2015 Final | MIvCSK
iplt20.com

இந்த சீசன் முழுவதுமே இப்படி பல குறைவான ஸ்கோர் போட்டிகளை அதிரடியாக வென்றிருந்தது சென்னை அணி. அந்தளவுக்கு அட்டகாசமான பௌலிங் லைன் அப்பை வைத்திருந்தது. நெஹ்ரா கம்பேக் கொடுத்து கலக்கிக்கொண்டிருக்க, ப்ராவோ தனது உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். ப்ராவோ இந்த சீசனின் பர்ப்பிள் கேப் வின்னர். 22 விக்கெட்டுகளோடு அதிக விக்கெட் எடுத்தவர்களின் பட்டியலில் டாப்-5 ல் நெஹ்ராவும் இருந்தார். இவர்களோடு அஷ்வின், ஜடேஜா, ஈஸ்வர் பாண்டே போன்றோரும் கைக்கொடுக்க பௌலிங்கில் நெருப்பாக சீறியது சென்னை அணி. பேட்டிங்கிலும் எந்தக் குழப்பமும் இல்லாமல் செட்டில் ஆன லைன் அப்போடு பட்டையை கிளப்பியது சென்னை. ஓப்பனிங்கில் மெக்கல்லம் டாப் கியரில் அடித்து நொறுக்க அடுத்து ஸ்மித், ரெய்னா சிறப்பாக பார்ட்னர்ஷிப் போட தோனி, ப்ராவோ, ஜடேஜா ஃபினிஷிங்கில் பிரமாதப்படுத்த ஒரு அணியாக மொத்தமாகவே சென்னை அணி மிரட்டலான ஃபார்மில் இருந்தது.

ஆனால், மும்பை அணி இந்த சீசனை கொஞ்சம் மோசமாகவே தொடங்கியிருந்தது. கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுற்ற மும்பை அணி முதல் மூன்று போட்டிகளிலுமே தோற்றிருந்தது. ஆனால், பல்தான்ஸ் இதற்கெல்லாம் அசந்துவிடவில்லை. காரணம், முதலில் இப்படி தோற்றால்தான் சாம்பியன் ஆவார்கள் என்ற ராசி இருப்பதால் மும்பை ரசிகர்கள் இந்தத் தோல்விகளையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. எதிர்பார்த்ததை போலவே எம்.ஜி.ஆர் ஸ்டைலில் மூன்று அடி வாங்கிவிட்டு திருப்பி அடிக்க ஆரம்பித்தது மும்பை அணி. தொடர் வெற்றிகள் வந்தாலும், கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸை வீழ்த்தினால் மட்டுமே ப்ளே ஆஃப்ஸ்க்கு தகுதிபெற முடியும் என்ற நிலைக்கு வந்து நின்றது. 'நாங்க பார்க்காத must win மேட்ச்சா' என மும்பை அணி சன்ரைசர்ஸை லெஃப்ட் ஹேண்ட்டில் டீல் செய்தது. சன்ரைசர்ஸை 114 ரன்களுக்கு காலியாக்கி டார்கெட்டை எளிதில் சேஸ் செய்து வென்று ப்ளே ஆஃப்ஸ்க்கு முன்னேறியது. பேட்டிங்கில் சிம்மோன்ஸ், பார்த்திவ் படேல், ரோஹித், பொல்லார்ட் பௌலிங்கிற்கு மெக்லெகன், மலிங்கா என மும்பை அணியும் முரட்டுத்தனமாகவே இருந்தது.

லீக் போட்டிகளில் நேருக்கு நேர் இரண்டு முறை மோதியிருந்த மும்பை-சென்னை அணிகள் ஆளுக்கொரு போட்டியில் வென்றிருந்தனர். இந்நிலையில் ப்ளே ஆஃப்ஸில் முதல் தகுதிச்சுற்று போட்டியில் மீண்டும் இரு அணிகளும் மோதின.

Mike Hussey | IPL 2015 Final | MIvCSK
Mike Hussey | IPL 2015 Final | MIvCSK
iplt20.com

சதமெல்லாம் அடித்து அதிரடியான ஃபார்மில் இருந்த மெக்கல்லம் சர்வதேச தொடருக்காக நியூசிலாந்துக்கு பறந்துவிட மைக் ஹஸ்ஸி வைத்து தோனி சமாளித்துக் கொண்டிருந்தார். தகுதிச்சுற்று போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. சிம்மோன்ஸ் ஒரு அரைசதம் அடிக்க, கடைசியில் பொல்லார்ட் அடித்து துவைத்தெடுக்க 180+ டார்கெட்டை செட் செய்தது மும்பை அணி.

சேஸிங்கில் ஸ்மித் டக் அவுட் ஆக ஹஸ்ஸி, ரெய்னா, தோனி எல்லாருமே செட்டில் ஆகி பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சொதப்பியிருந்தனர். டூப்ளெஸ்சிஸ் மட்டும் கொஞ்சம் நின்று போராடினாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சென்னையை எளிதில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றது மும்பை அணி. பரம எதிரியான மும்பைக்கு எதிரான தோல்வி வலித்தாலும், அடுத்த எலிமினேட்டர் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் வைத்து நடைபெறுவதால் சென்னை எப்படியும் வென்று இறுதிப்போட்டிக்கு சென்றுவிடும் என்ற நம்பிக்கை சென்னை ரசிகர்களுக்கு வலுவாக இருந்தது. அதேமாதிரியே, ஆர்சிபியை வீழ்த்தி தோனியின் சொந்த மண்ணிலிருந்து மும்பையை ரிவென்ஜ் எடுக்கக் கிளம்பியது சென்னை அணி.

முந்தைய சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் ஆகியிருந்ததால் இறுதிப்போட்டி கொல்கத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. மீண்டும் ஒரு முறை மும்பை Vs சென்னை, தோனி Vs ரோஹித் என்கிற பெரும்யுத்தம் வங்க மண்ணில் தொடங்கியது.

தோனி தன் படைத்தளபதிகளோடு ஃபீல்டிங் செய்ய, மும்பை அணி முன்கள வீரர்களான சிம்மோன்ஸையும் பார்த்திவ் படேலையும் இறக்கிவிட்டது. முதல் ஓவரிலேயே சென்னை அணி தன்னுடைய தாக்குதலை வலுவாக தொடுத்தது. பார்த்திவ் படேல் மிட் ஆனில் தட்டிவிட்ட ஒரு பந்தை சிறப்பாக ஃபீல்ட் செய்து பாய்ந்து விழுந்து டைரக்ட் ஹிட் ஆக்கியிருப்பார் டூப்ளெஸ்சிஸ். முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்ததால் தொடர்ந்து சென்னை அணியின் கை ஓங்கும் என எதிர்பார்க்கையில், மும்பை அணி எதிர்பாராதவிதமாக எதிர்தாக்குதல் நடத்தத் தொடங்கியது. பவர்ப்ளேயில் கேப்டன் ரோஹித் சர்மா அடித்து துவம்சம் செய்ய 6 ஓவர்களில் 61 ரன்கள் வந்தது. ரோஹித் மற்றும் சிம்மோன்ஸ் இருவருமே அதிரடியாக ஆடியதால் ரன்ரேட் 10 க்கு கீழ் குறையவே இல்லை. இருவருமே அரைசதத்தை கடந்தனர்.

Rohit Sharma | IPL 2015 Final | MIvCSK
Rohit Sharma | IPL 2015 Final | MIvCSK
iplt20.com

ரோஹித் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் ப்ராவோவின் ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். ஸ்மித் வீசிய அடுத்த ஓவரிலேயே சிம்மோன்ஸும் காலியானார். இனியாவது சென்னை அணி ஆட்டத்திற்குள் வரும் என எதிர்பார்க்கையில் பொல்லார்ட் உள்ளே வந்து மிரட்டியெடுத்தார். சென்னை அணி என்றாலே பொல்லார்ட் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எனர்ஜியோடும் வெறியோடுமே பேட்டிங் ஆடுவார். இன்றைக்கு வரைக்குமே அப்படித்தான். இந்தப் போட்டியிலும் 18 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்திருப்பார். வருங்காலத்தில் சென்னை அணிதான் தனக்கு வாழ்க்கை கொடுக்கப்போகிறது என்பது தெரியாமலதே அம்பத்தி ராயுடும் வெளுத்தெடுத்தார். இவர்களின் அதிரடியால் மும்பை அணியின் ஸ்கோர் 200 ஐ தாண்டியது. சென்னை அணிக்கு டார்கெட் 203.

இறுதிப்போட்டியில் 200+ டார்கெட் என்றால் டிஃபண்ட் செய்யும் அணிக்கே வாய்ப்பு அதிகம் என்றாலும் சென்னை அணியின் பேட்டிங் லைன் அப் மீது பெரும் நம்பிக்கை இருந்தது. ஆனால், சென்னை அணி ரொம்ப சுமாராகவே ஆட்டத்தைத் தொடங்கியது.

முதல் பந்தையே ஒரு வெறித்தனமான யார்க்கரோடு தொடங்கியிருப்பார் மலிங்கா. தொடர்ந்து, மெக்லகனும் அசத்தலாக வீச சென்னை அணிக்கு தோனி எப்போதும் எதிர்பார்க்கும் மொமண்டம் கிடைக்கவேயில்லை. ஹஸ்ஸி 9 பந்துகளில் 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மித் அவுட்டும் ஆகாமல் அடிக்கவும் முடியாமல் திணறிக்கொண்டே இருப்பார். இதனாலயே பவர்ப்ளேயில் சென்னை அணி 31 ரன்களை மட்டுமே சேர்த்தது.

திக்குமுக்காடி கொண்டிருந்த ஸ்மித், ஹர்பஜன் வீசிய 12 வது ஓவரில் lbw ஆகி வெளியேறினார். மொத்தமாக முடிந்திருந்த 71 பந்துகளில் 48 பந்துகளை ஆடியிருந்த ஸ்மித் 57 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். 200+ டார்கெட்டுக்கு ஆட சொன்னால் 130+ டார்கெட்டுக்கு ஆடியதை போல் ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டு ஸ்மித் பெவிலியனுக்கு திரும்பும் போது கமெண்ட்ரி பாக்ஸில் 'சிறப்பான ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டு ஸ்மித் பெவிலியனுக்கு செல்கிறார்' என கவாஸ்கர் கூற அப்போதே சென்னை ரசிகர்களுக்கு போட்டியின் முடிவு ஓரளவுக்கு தெரிந்துவிட்டது.

IPL 2015 Final | MIvCSK
IPL 2015 Final | MIvCSK
iplt20.com

ஸ்மித் செய்த காரியத்தால் ரன்ரேட் 15 க்கும் மேல் ராக்கெட் வேகத்தில் எகிற ரெய்னா, தோனி, ப்ராவோ என யாராலும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. வினய்குமார் வீசிய கடைசி ஓவரில் மோஹித் சர்மா இரண்டு சிக்சர்களை அடிக்க 'ஸ்மித்துக்கு பதிலா மோஹித்தயே ஓப்பனிங் இறக்கியிருக்கலாமடா' என சிஎஸ்கே ரசிகர்கள் பரிதாபமாக யோசிக்க மும்பை அணி மூன்றாவது முறையாக கோப்பையை தட்டிச்சென்றது.

சிஎஸ்கேவின் முதல் வெர்ஷன் இந்தப் போட்டியுடன் தான் முடிவுக்கு வந்தது. இந்த தோல்விக்கு 2.0 வாக கம்பேக் கொடுத்த சென்னை அணி 2018 சீசனின் முதல் போட்டியிலேயே மும்பை அணிக்கு பதிலடி கொடுத்திருந்தாலும், இறுதிப்போட்டிகளில் தொடர்ந்து மும்பையிடம் சொதப்புவது சென்னை ரசிகர்களுக்கு நீங்கா சோகமாகவே நீடிக்கிறது.