Published:Updated:

IPL 2009 Final: கும்ப்ளேயின் கனவைக் காலி செய்த கில்லியின் டெக்கான்... ஆர்சிபியை சாய்த்த அந்த ஓவர்!

IPL 2009 Final | DCvRCB

வெற்றி சுலபமாக ஆர்சிபியின் வசப்படும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், ஆர்சிபிக்கும் ஐபிஎல் கோப்பைக்குமான ஏழாம் பொருத்தம், அப்போதே கண்விழித்துச் சிரித்தது.

Published:Updated:

IPL 2009 Final: கும்ப்ளேயின் கனவைக் காலி செய்த கில்லியின் டெக்கான்... ஆர்சிபியை சாய்த்த அந்த ஓவர்!

வெற்றி சுலபமாக ஆர்சிபியின் வசப்படும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், ஆர்சிபிக்கும் ஐபிஎல் கோப்பைக்குமான ஏழாம் பொருத்தம், அப்போதே கண்விழித்துச் சிரித்தது.

IPL 2009 Final | DCvRCB
இணைப் பிரபஞ்சத்தின் இன்னொரு ஆர்சிபியைக்கூட 'ஈ சாலா கப் நமதே!' என சொல்ல வைக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கியது, 2009 ஐபிஎல் சீசன். கேப்டனாகவும், பௌலராகவும், கும்ப்ளேயின் முயற்சிகள் வீணாக, கோப்பை என்ன, கோப்பையின் கைப்பிடியைக் கூட கைசேராது நழுவ விட்டது ஆர்சிபி.

2008 ஐபிஎல்லில், புள்ளிப்பட்டியலின் பாதாளத்தில் பதுங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி, அதற்கடுத்த 2009 சீசனிலேயே, காளையாய்ச் சீறிப்பாய்ந்து, டேபிள் டாப்பராக, பிளேஆஃபிற்கு முன்னேறியது மட்டுமின்றி தங்களது முதல் கோப்பையையும் தட்டித்தூக்கியது.

2009-ம் ஆண்டில், ஐபிஎல்லின் இரண்டாவது சீசன், பாராளுமன்ற தேர்தல் காரணமாக, தென்னாப்ரிக்காவில் நடைபெற்று வந்தது. பாகிஸ்தான் வீரர்கள், அந்தத் தொடரில் இடம்பெறக்கூடாது என பிசிசிஐ அறிவித்துவிட்டது.

2008-ம் ஆண்டில், கடைசி இரண்டு இடத்தில் முடித்த டெக்கான் சார்ஜர்ஸும், ஆர்சிபியும், 2009-ல் நம்பிக்கையின் அடையாளமாக, இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தன.

IPL 2009 Final | DCvRCB
IPL 2009 Final | DCvRCB
twitter.com/rcbtweets

முந்தைய சீசனில், கடைசியிடத்தில் முடித்திருந்ததால், இரண்டு பக்கங்களுமே, கேப்டன்களையும், கோச்களையும் மாற்றிக் களமிறங்கின. டெக்கான், விவிஎஸ் லக்ஷ்மணிடமிருந்து கேப்டன்ஷிப்பை வாங்கி கில்கிறிஸ்டிடம் ஒப்படைத்திருந்தது. அவரும், விளையாடிய முதல் நான்கு போட்டிகளிலும் வென்று, அமர்க்களமாக சீசனைத் தொடங்கினார். லீக் சுற்றில், பதினான்கு போட்டிகளில், பத்தில் வென்று முதல் அணியாக, பிளே ஆஃபிற்கு முன்னேறியது, டெக்கான். மறுபக்கமோ, கேப்டனாக இருந்த டிராவிட்டை மாற்றி, இரண்டாவது சீசனில், கெவின் பீட்டர்சனைக் கேப்டனாக்கியது ஆர்சிபி. ஆனால், விளையாடிய முதல் ஆறு போட்டிகளில், இரண்டில் மட்டுமே வென்று பின்தங்கியது. சர்வதேசப் போட்டிகளில் விளையாட பீட்டர்சனும் வெளியேற, கும்ப்ளேயைக் கேப்டனாக்கியது, ஆர்சிபி நிர்வாகம். உடனடி விளைவாய், லீக் சுற்றில், கடைசி நான்கு போட்டிகளையும் அதிரடியாக, வரிசையாக வென்ற ஆர்சிபியும், மூன்றாவது இடத்திற்கு முன்னேறி, பிளே ஆஃபிற்குச் சென்றது.

அரையிறுதிப் போட்டியில், டெல்லி டேர்டெவில்ஸைச் சந்தித்த டெக்கான் சார்ஜர்ஸ், 35 பந்துகளில், 85 ரன்களைக் குவித்த கில்கிறிஸ்டின் அதிரடியால், ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது. இன்னொரு அரையிறுதிப் போட்டியில், சிஎஸ்கேவைச் சந்தித்த ஆர்சிபி, அதேபோல் ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தது.

இந்த இரண்டு அணிகளுமே, லீக் போட்டிகளில் இரண்டுமுறை சந்தித்துக் கொண்டு, தலா ஒரு வெற்றியைப் பெற்று, சமபலத்தோடு இருந்ததால், வெற்றி யாருக்குக் கிட்டும் என யூகிக்க முடியாதவாறே இருந்தது. ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற அத்தனை போட்டிகளிலும் வென்றிருக்கிறோம் என்று சற்று கூடுதல் நம்பிக்கையோடே களமிறங்கியது, ஆர்சிபி.

IPL 2009 Final | DCvRCB
IPL 2009 Final | DCvRCB

டாஸை வென்ற கும்ப்ளே, அந்த சீசனில் சேஸ் செய்த ஒன்பது போட்டிகளில், ஆறில் வென்றிருந்ததால் ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். கில்கிறிஸ்டும், கிப்ஸும் ஓப்பனிங் இறங்க, கும்ப்ளே முதல் ஓவரை வீச வந்தார். கேப்டன் வெர்ஸஸ் கேப்டன் நேருக்குநேர் மோதலில், வீசிய மூன்றாவது பந்திலேயே கில்கிறிஸ்டின் விக்கெட்டை வீழ்த்தினார் கும்ப்ளே. அந்த சீசனில், 495 ரன்களைக் குவித்து அபாயகரமானவராக இருந்த அவரது விக்கெட்டை ஜாக்பாட்டாகப் பார்த்தது ஆர்சிபி‌. இதைத் தொடர்ந்து உள்ளேவந்த திருமலைசெட்டியின் விக்கெட்டை வினய் குமார் வீழ்த்த, 18/2 என திணறியது டெக்கான். இதனையடுத்து உள்ளேவந்த சைமண்ட்ஸ், பவுண்டரியுடன் நாளைத் தொடங்கினார். அவர் வினய்யின் பந்தில் தந்த கேட்ச்வாய்ப்பை டிராவிட் நழுவவிட, போட்டியின் மொமண்டத்தை அது மாற செய்தது. சைமண்ட்ஸின் அதிரடி ஆட்டமும் ஆரம்பமாகியது. பவர்பிளேவின் முடிவில், 31 ரன்களை எடுத்திருந்தது டெக்கான். அந்த சீசனில், பவர்பிளேயில் அவர்களது குறைந்தபட்ச ஸ்கோர் அதுதான்.

சுதாரித்துக் கொண்ட கிப்ஸ் - சைமண்ஸ், அதற்கடுத்த காலீஸின் ஓவரை, மூன்று பவுண்டரிகளுடன் சிறப்பாகக் கவனிக்க, ரன்கள் கொஞ்சம் ஏறத் தொடங்கின. 32 பந்துகளில் 40 ரன்களைக் குவித்திருந்த இந்தக் கூட்டணியையும் கும்ப்ளேயே உடைத்தார். கில்கிறிஸ்டுக்கு வீசியது போன்ற இன்னொரு ராங் அன்னின் மூலமாக 33 ரன்களோடிருந்த சைமண்ட்ஸைக் காலி செய்து, ஆர்சிபி ரசிகர்களை நிம்மதிப்பெருமூச்சு விட வைத்தார். ரோஹித் ஷர்மா உள்ளே வந்தார்.

அடுத்த நான்கு ஓவர்களிலும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசியது ஆர்சிபி. மொத்தமே 15 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தனர், எனினும் விக்கெட் எதுவும் வீழவில்லை. பின், பிரவீன்குமாரின் ஓவரில் ஓவர் தி மிட்விக்கெட்டிலும், ஓவர் தி டீப் ஸ்கொயர் லெக்கிலும் விளாசிய இரண்டு சிக்ஸர்கள் மூலமாக, ரன்ரேட் சரிவுக்குக் கொஞ்சம் முட்டுக்கொடுத்தது டெக்கான்.

IPL 2009 Final | DCvRCB
IPL 2009 Final | DCvRCB

ரன்கள் ஏற ஆரம்பித்ததைப் பார்த்த கும்ப்ளே, தன்னுடைய கடைசி ஓவரை வீசக் களமிறங்க, இம்முறை மணீஷ் பாண்டே பிடித்த ஒரு அற்புத கேட்சால் ரோஹித்தின் விக்கெட் வீழ்ந்தது. கும்ப்ளே நிகழ்த்திய அற்புதம் அதோடு நிற்கவில்லை. அதே ஓவரின் கடைசிப்பந்தில் வேணுகோபால் ராவையும் வீழ்த்தினார். நான்கு ஓவர்களில், நான்கு எக்கானமியோடு, நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி, உண்மையில் ஒரு கேப்டன் ஸ்பெல்லை வீசியிருந்தார் கும்ப்ளே. எனினும் மறுபக்கம், கிப்ஸ் மட்டும், விக்கெட்டை விடாமல், பொறுமையாக நின்று விளையாடி, தான் சந்தித்த 47-வது பந்தை, சிக்ஸருக்குத் தூக்கி, அரைசதம் கடக்க, 143 ரன்களை எடுத்தது டெக்கான் சார்ஜர்ஸ். காலீஸ், உத்தப்பா, டிராவிட், ராஸ் டெய்லர் உள்ளிட்டவர்களைக் கொண்ட ஆர்சிபியின் பவர்ஃபுல் பேட்டிங் லைன்அப்புக்கு, இது சவாலான இலக்கு இல்லை, வெற்றி சுலபமாக ஆர்சிபியின் வசப்படும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனால், ஆர்சிபிக்கும் ஐபிஎல் கோப்பைக்குமான ஏழாம் பொருத்தம், அப்போதே கண்விழித்துச் சிரித்தது.

144 ரன்கள் மேல் கண்வைத்து இறங்கினர் காலீஸும் மணீஷ் பாண்டேவும்‌. இதே டெக்கானுக்கு எதிரான லீக் போட்டியில், 73 பந்துகளில் 114 ரன்களைக் குவித்த மணீஷ், இந்தப் போட்டியையும் ஒற்றை ஆளாகவே வென்றுதருவார் என்பதே ரசிகர்களின் மைண்ட்வாய்ஸாக இருந்தது‌. ஹாரீஸைக் கொண்டு பௌலிங்கைத் தொடங்கினார் கில்கிறிஸ்ட். முதல் ஓவரில், லெக்பையில் ஒரு ரன்னை மட்டுமே எடுத்து மோசமாகத் தொடங்கியது ஆர்சிபி. மறுமுனையில், பர்ப்பிள் கேப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்த ஆர்பி சிங்கும் சிறப்பாகப் பந்து வீசினார். தான் வீசிய இரண்டாவது ஓவரிலேயே, காலீஸை ஷார்ட் பால் மூலமாக ஆட்டமிழக்கச் செய்து அவர் வெளியேற்ற, அடுத்ததாக வந்த ரால்ப், ஹாரீஸின் ஓவரில் இரண்டு சிக்ஸர்களைத் தூக்கி, டெக்கானுக்கு அறைகூவல் விடத்தொடங்கினார்.

IPL 2009 Final | DCvRCB
IPL 2009 Final | DCvRCB

ஏழாவது ஓவரிலேயே, சுழலால் மிரட்ட ஓஜாவை கில்கிறிஸ்ட் கொண்டுவர, வீசிய முதல் பந்திலேயே, மணீஷின் விக்கெட்டை அவர் வீழ்த்த, டிராவிட் உள்ளே வந்தார். இந்த நிலைவரையில் 83 பந்துகளில், 108 ரன்கள் தேவையென ரன்ரேட் 7.7ஐ சுற்றியே வட்டமிட்டது. மறுமுனையில் ரால்ப் வெற்றிக்கோட்டைத் தொட்டுவிட்டுதான் மறுவேலை என்னும் ரீதியில் ஆடிக்கொண்டிருந்தார். சைமண்ட்ஸ் பந்தில் அவரடித்து ஓவர் த டீப் ஸ்கொயர் லெக்கில், பவுண்டரிலைனைத் தாண்டி தரையைத் தொட்ட பந்து, கோப்பையை எடுத்து வையுங்கள் என்றது. ஓஜாவை கில்கிறிஸ்ட் மறுபடி வீசவைக்க, இம்முறை வலையில் சிக்கினார் ரால்ப். 21 பந்துகளில் 32 ரன்ளோடு, மூன்று சிகர சிக்ஸர்களை விளாசி டெக்கானுக்கு ரெட் சிக்னல் காட்டிக்கொண்டிருந்தவர் அவுட்டானார்.

எனினும், ஆர்சிபி அன்று அடங்குவதாயில்லை. இம்முறை, உள்ளேவந்த ராஸ் டெய்லர், ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். எனினும், 12-வது ஓவரில் ஹர்மீத், டிராவிட்டை போல்டாக்கி அனுப்ப, நான்காவது விக்கெட்டை இழந்தது ஆர்சிபி. இதுவரைகூட போட்டியின் லகான், ஆர்சிபியின் கையில்தான் இருந்தது‌. 48 பந்துகள், 65 ரன்கள் என தொடக்கூடியதாகவே இருந்தது இலக்கு.

ஆனால், மொத்தப் போட்டியையும், யூ டர்ன் அடிக்க வைத்தது, சைமண்ட்ஸின் ஒரு ஓவர்தான். 6 ஓவர்களில், 45 ரன்கள் தேவை எனக் கோப்பையை ஆர்சிபி நெருங்கிவிட்ட நொடியில் சைமண்ட்ஸ் வீசிய அந்த 15-வது ஓவர்தான், போட்டி கைமாறிய தருணம். செட்டிலாகி ஆடிக் கொண்டிருந்த இரு பேட்ஸ்மேன்களையும் இரண்டே பந்துகளில் காலி செய்தது டெக்கான். டெய்லரை சைமண்ட்ஸ் வீழ்த்த, கோலியை அற்புதமான ஸ்டம்பிங்கால் கில்கிறிஸ்ட் அனுப்ப, அதகளம் காட்டியது டெக்கான். எனினும் பௌச்சர் மற்றும் உத்தப்பா, ரன் எ பால் எடுத்து, தவறான பந்துகளைத் தண்டித்தால்கூட தேவையான ரன்கள் வந்துவிடுமென்ற நம்பிக்கையில் இருந்தனர் ரசிகர்கள்.

IPL 2009 Final | DCvRCB
IPL 2009 Final | DCvRCB

ஆனால், வெறும் 5 ரன்களோடு ஹர்மீத், பௌச்சரை வெளியேற்றி ஹார்ட் அட்டாக் கொடுக்க, அடுத்த ஓவரிலேயே ஓஜா, பிரவீனை வெளியேற்ற, கொஞ்சம் கொஞ்சமாக கோப்பையின் மீதான பிடியை நழுவவிட்டது ஆர்சிபி. வினய்யின் பவுண்டரியும், உத்தப்பாவின் சிக்ஸரும், இறங்கிய இதயத்துடிப்பை ஏறச்செய்து எகிறச் செய்து, எதுவும் நடக்கலாம் என்ற நிலைக்கு எடுத்துச் சென்றாலும், வினய்யின் விக்கெட்டை வீழ்த்திய ஹாரீஸ் ஆர்சிபிக்கு அதிர்ச்சியளித்தார்.

பெண்டுலம் போல் இருபக்கமும் போன போட்டியின் கடைசி ஓவரில், 15 ரன்கள் தேவையென்னும் நிலையில், தனது கோப்பைக்கனவு கருகுவதைக்காண மட்டுமே கும்ப்ளே உள்ளே வந்தார். ஆர்சிபியின் இறுதியுரையை எழுத ஆர்பி சிங் வந்தார். முதல்பந்தில் ஒரு ரன் எடுத்து, கும்ப்ளே ஸ்ட்ரைக்கை உத்தப்பாவிடம் தர, இரண்டு பந்துகளை வீணடித்து, அப்போதே போட்டியின் முடிவைத் தெரிய வைத்துவிட்டார் உத்தப்பா. எஞ்சிய மூன்று பந்துகளில், ஏழு ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டு, ஆறு ரன்கள் வித்தியாசத்தில், கோப்பையைப் பறிகொடுத்தது ஆர்சிபி.

IPL 2009 Final | DCvRCB
IPL 2009 Final | DCvRCB

நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காக கும்ப்ளே ஆட்டநாயகனாகவும், 495 ரன்களோடு, 10 கேட்சுகள் மற்றும் 8 ஸ்டம்பிங்குகளுக்காகவும் கில்கிறிஸ்ட் தொடர்நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 23 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த ஆர்பிசிங் பர்ப்பிள் கேப்பையும், 572 ரன்களோடு ஹெய்டன் ஆரஞ்சுக் கேப்பையும் வென்றிருந்தனர்.

குறைந்த ரன்களை டிஃபெண்ட் செய்திருந்த டெக்கான், அதன் பலனாக முதல் கோப்பையை முத்தமிட்டது. ஓஜாவின் மூன்று விக்கெட்டுகள், சைமண்ட்ஸின் அந்த முக்கிய இரண்டு விக்கெட்டுகள் ஓவர், ஆர்பிசிங்கின் எக்கானமிக்கலான ஓவர்கள் எல்லாம் சேர்ந்து, டெக்கானுக்கு வெற்றித் திலகமிட்டது. ரால்ப் மற்றம் ராஸ் டெய்லர் தவிர மற்ற பேட்ஸ்மென்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால், அன்று கோப்பையை நூலிழையில் தவறவிட்டது ஆர்சிபி ஆர்மி.

அன்று கைநழுவிய கோப்பைக்காக, இன்றுவரை ஏங்கித் தவித்துக் கொண்டேதான் இருக்கின்றனர், ஆர்சிபியும் அதன் ரசிகர்களும்!