இன்சமாம் உல் ஹக்
இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது?
அவர் அடித்த 20,580 சர்வதேச ரன்கள், 32 சதங்கள், நியூசிலாந்துக்கு எதிரான அந்த முச்சதம், ’92 உலகக் கோப்பை செமி பைனல் இன்னிங்ஸ் - இது எதுவுமே ஞாபகம் வந்திருக்காது.
இன்சமாம் - இந்தப் பெயரைப் பார்த்ததும் அவருடைய உருவம் ஞாபகம் வந்திருக்கும். அவரோட உருவம் ஞாபகம் வந்திருந்தாலும் பரவாயில்லை, ஜான்டி ரோட்ஸ் முகம் கூட ஞாபகம் வந்திருக்கும். இன்சமாமை ரன் அவுட் செய்ய அவர் ஓடிவந்து டைவ் அடித்தது உங்கள் கண்முன் வந்து போயிருக்கும். இதுதான் நமக்கு, இந்த உலகத்துக்கு இன்சமாமின் அடையாளம்.
இவ்வளவு ஏன் இன்சமாம் என்பதுதான் எனக்குமே அடையாளமாக இருந்தது. எனக்கு மட்டுமா, என்னைப் போன்ற பருமனான பலருக்குமே அந்தப் பெயர் தானே அடையாளமாக இருந்திருக்கும்!
இந்த உலகம் ரொம்ப ‘judgemental’. நான் பள்ளிக் காலத்தில் கால்பந்து விளையாடினேன் என்று சொன்னால் அவ்ளோ சீக்கிரம் நம்ப மாட்டார்கள். ஒரு கால்பந்து வீரருக்கு இவர்கள் வைத்திருக்கும் டெம்ப்ளேட்டுக்குள் நம் உடல் ஃபிட் ஆகாதே. அதன்பிறகு நாம் விளையாடிய கதை, நம்மை நம் கோச் பாராட்டின கதையெல்லாம் சொல்லி, நம் ஈகோவை காப்பாற்றிக்கொள்ளவேண்டும்.
அதெல்லாம் கூடப் பரவாயில்லை. நான் ஒரு ‘Sports Journalist’ என்று சொன்னாலே பலர் நம்பமாட்டார்கள். ஒரு போட்டியைக் கவர் செய்யப் போகும் இடத்திலோ, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிலோ நான் மற்றவர்களோடு பொருந்திப்போவது எளிதல்ல. ஒரு அத்லெட்டை நேர்காணல் செய்யப் போனால், அங்கு இருக்கும் PR கூட மேலும் கீழும் பார்த்திருக்கிறார்கள்.

ஆக, இங்க இருக்கும் ஸ்டீரியோடைப் ஒன்றுதான். விளையாடுபவர், விளையாட்டை நேசிப்பவர், விளையாட்டைப் பற்றி எழுதுபவர் - ஃபிட்டாக, ஒல்லியாகத்தான் இருப்பார். அந்த ஸ்டீரியோடைப்புக்குள் நுழையாதவர்கள் எல்லோருமே இந்த உலகத்துக்கு இன்சமாம்தான்.
யோசித்துப் பாருங்களேன். நமக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பட்டப் பெயர் இருந்திருக்கும். பள்ளியில் ஒரு மாதிரி கூப்பிட்டிருப்பார்கள், கல்லூரியில் ஒரு பெயர் இருந்திருக்கும், அலுவலகத்தில் ஒன்றிருக்கும். எனக்கும் அதுபோலத்தான். 5 பள்ளிகளில் படித்ததால், எக்கச்சக்க பெயர்கள் இருக்கின்றன. ஆனால், எல்லா இடத்திலும் இன்சமாம் என்ற பெயர் பொதுவாக இருந்திருக்கிறது. பேட்டைக் கையில் பிடித்து கிரவுண்டுக்குள் நுழைந்தால் பெரும்பாலானவர்கள் ‘இன்சி’ என்றுதான் அழைப்பார்கள்.

இன்று நம் போர்ட் என்னவோ நீல ஜெர்சியில் காவியைக் கலந்து, பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒதுக்கி வைத்திருக்கிறது. ஆனால், அப்போது நாம் விளையாடிய இடமெல்லாம் பச்சை மயமாத்தானே இருந்தது. காட்டுத்தனமாக ஓடி வந்து எறிந்தால் அக்தர்; இடது கையில் பந்துவீசினால் அக்ரம்; கண்ணை மூடிக்கொண்டு பேட்டை சுத்தினால் அப்ரிடி; என்னை மாதிரி இருந்தால் இன்சமாம். பெரும்பாலானவர்களின் பட்டப் பெயரெல்லாம் பாகிஸ்தான் வீரர்களுடையதாகத்தான் இருக்கும்.
நமக்கு எதுக்கு அரசியல். மீண்டும் கிரிக்கெட் பக்கம் வருவோம்.
பெரிய பசங்களோடு விளையாடும்போது, நம்மைத்தான் கடைசி ஆளாக எடுப்பார்கள். ‘சின்ன பையன்னு நினைச்சுக்காதீங்க. இன்சி மாதிரி பலமான ஆளு’ என்று எங்கள் அணியின் கேப்டன் சொன்னார். கடைசி விக்கெட்டுக்கு இறங்கினால், ‘பை ரன்னர் வேணுமா குட்டி இன்சமாம்’ என்று விக்கெட் கீப்பர் கிண்டல் செய்வார். நான்கு பந்துகள் பிடித்துவிட்டு, ஐந்தாவது பால் ரன் அவுட் ஆகும்போது, ‘அப்படியே இன்சமாம் மாதிரி அவுட் ஆயிட்டியேடானு’ எல்லோரும் ஜாலியாக கேலி செய்வார்கள்.

எல்லோருக்கும் அதுதான் இன்சமாம்: குண்டானவர். எப்போதுமே ரன் அவுட் ஆகும் ஒருவர். ஓடவே முடியாத ஒருவர்.
ஒரு விஷயம் சொல்லவா... அவர்கள் அப்படிக் கலாய்த்தது எனக்கு வருத்தமாக இருந்ததே இல்லை. என்னை இன்சமாம் எனக் கூப்பிட்டது கூப்பிட்டவர்களுக்குத்தான் கிண்டலாக, கேலியாக தெரிந்திருக்கிறது. எனக்குமே அப்படித் தெரிந்ததில்லை.

அதே போட்டியில், பை ரன்னர் வேண்டுமா என்று கீப்பர் கிண்டல் அடித்துக்கொண்டு இருந்தபோது, நான் ஸ்டிரைக்கர் எண்டில் இருந்த எங்கள் கேப்டன் என்னை அழைத்தார்.
“டேய் இதெல்லாம் காதுல போட்டுக்காத. நான் உன்னை விளையாட்டுக்குலாம் இன்சமாம்னு சொல்லல. அவர் சாதாரண ஆள் கிடையாது. சும்மாலாம் ஒரு ஆள் பாகிஸ்தான் டீம் கேப்டனா இருக்க முடியாது. அந்த உடம்பை வச்சிகிட்டு 10 வருஷத்துக்கும் மேல ஆடிட்டு இருக்காரு. உன்னால இங்க ஆட முடியாதா, ஓட முடியாதா?!” என்றார். கடைசி விக்கெட்டுக்கு நான் எத்தனை ரன்கள் எடுத்துவிடப் போகிறேன் என்று யாரும் பை ரன்னர் கூட வரவில்லை. அப்படிப்பட்ட என்னிடம் அவர் அதைச் சொல்லிருக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஆனால், தன் வார்த்தைகளால் என் கேப்டன் நம்பிக்கைக் கொடுத்தார். இன்சமாம் நம்பிக்கைக் கொடுத்தார்!
அதன்பிறகு பள்ளி, கல்லூரி என எத்தனையோ பேர், எத்தனையோ முறை இன்சமாம் என்று கூப்பிட்டிருக்கிறார்கள். அது எல்லாமே நம்பிக்கைதான் கொடுத்திருக்கிறது. சொல்லப்போனால், என் உடம்பைப் பற்றி, உருவத்தைப் பற்றி நினைக்காமல் நான் ஒவ்வொரு முறையும் பேட்டையும் பாலையும் தொட்டதற்குக் காரணம் அந்த நம்பிக்கைதான். யார் என்ன வேண்டுமானால் சொல்லட்டும், நம்மால் ஆட முடியும் என்ற நம்பிக்கை கொடுத்தது அதே இன்சமாம் உல் ஹக் தான்.

ஒருவேளை அந்த நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால், தொடர்ந்து விளையாடிருப்பேனா, கிரிக்கெட் பார்த்திருப்பேனா, இன்று கிரிக்கெட் பற்றி எழுதிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பேனா தெரியவில்லை. எனக்கு மட்டுமில்லை, என்னை மாதிரி இருந்த, இருக்கும் ஒவ்வொருவருத்தருக்குமே அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்தான். ஒரு மிகப்பெரிய நம்பிக்கைதான்.
அதனால்தான் அவருக்கு நன்றி சொல்லவேண்டுமென்று தோன்றியது. ஒரு கிரிக்கெட் ரசிகனாக ‘அவர் ஒரு நம்பிக்கை, ஒரு இன்ஸ்பிரேஷன்’ என்று சொல்லிவிட்டேன். ஆனால், எனக்கு அது போதாது. ஒரு பத்திரிகையாளனாக, அவர் மேல் இருக்கும் பிம்பத்தையும் உடைக்கவேண்டும். உடைக்க முடியாவிடில், கொஞ்சமாவது அதை மாற்ற முயற்சி செய்யவேண்டுமென்று நினைத்தேன். அதுதான் இந்த முயற்சி.
எங்கிருந்து ஆரம்பிக்கலாம். நம்மவர்கள்தான் ரன் அவுட் ஆனாலே இன்சமாம் என்று கலாய்ப்பவர்கள் ஆயிற்றே. அங்கிருந்தே தொடர்வோம். உண்மையிலயே அவர் ரன் அவுட் ஆனதால் மட்டும்தானா அந்த அடையாளம் ஏற்பட்டது. அந்த உருவம்தான் எல்லாருக்குமான உறுத்தல். ‘Numbers don’t lie’ என்று சொல்வார்களே. அந்த எண்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போமே.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இன்சமாம் 40 முறை ரன் அவுட் ஆகியிருக்கிறார். ஆனால், அட்டப்பட்டு அவரைவிட அதிகம். 41! நம் டிராவிட் கூட 40 முறை ரன் அவுட் ஆகியிருக்கிறார். இதற்கும், இன்சமாமை விட அவர்கள் இருவரும் குறைவான இன்னிங்ஸ்தான் விளையாடிருக்கிறார்கள். அவர்கள் அவுட் ஆனதைக் கூட விட்டுவிடுவோம். தங்கள் பார்ட்னர்களை ரன் அவுட்டாக்கி விட்ட கணக்கை எடுத்தாலும்கூட இன்சமாமை விட மோசமான ரெக்கார்ட் வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள்.
அவர் அவுட்டானது, பார்ட்னர்களை அவுட் ஆக்கியதென்று 104 ரன் அவுட்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார் ஸ்டீவ் வாஹ். டிராவிட் 101, சச்சின் 98, ஜெயவர்த்தனே கணக்கில் 95 ரன் அவுட்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இன்சி கணக்கில் 92 தான்! இப்படி பார்ட்னர்களை ரன் அவுட் ஆக்கிய கணக்கில் ஸ்டீவ் வாஹ், சந்தர்பால், சச்சின், தில்ஷன், அரவிந்த் டி சில்வா எல்லோரும் அரைசதமே அடித்திருக்கிறார்கள். இன்சமாம் அந்த விஷயத்திலும் மோசம் இல்லை.

சரி, இந்த ரன் அவுட் ஒப்பீடுகளை விடுங்கள். அனைவரும் கேலி செய்த அந்த உடம்பை வைத்துக்கொண்டு அவர் 17 வருடம் சர்வதேச அரங்கில் விளையாடிருக்கிறார். 20,000 ரன்களுக்கு மேல அடித்திருக்கார். அது எல்லாமே ஃபோர்களாலும், சிக்ஸர்களாலும் மட்டுமே வந்தது இல்லையே! 2076 ஃபோர்களும், 193 சிக்ஸர்களும் அடித்திருக்கிறார். அந்த வகையில் 9462 ரன்கள் வந்துவிட்டன. அவர் எடுத்த 20,580 ரன்களிலிருந்து இதைக் கழித்தால், 11118 ரன்கள் அவர் ஓடியே எடுத்தவை. அந்த விக்கெட்டுகளுக்கு நடுவே (22 யார்ட் - 20.21 மீட்டர்) 2,27,436.48 மீட்டர் ஓடியிருக்கிறார். இது அவருக்காக ஓடியது மட்டும்தான். கிரிக்கெட் வாழ்க்கை போன்றதல்லவா. நம் பார்ட்னருக்காகவும் ஓடவேண்டுமல்லவா?! அந்தக் கணக்குப்படி பார்த்தால் மனிதர் எவ்வளவு ஒடியிருப்பார்.

இப்போது ICC-யின் முழு நேர உறுப்பினர்களாக இருக்கும் 12 நாடுகளிலிருந்து மட்டும் இதுவரை சுமார் 3786 வீரர்கள் சர்வதேச அரங்கில் கிரிக்கெட் விளையாடிருக்கிறார்கள். அதுபோக, ஈஸ்ட் ஆப்பிரிக்கா, கென்யா, UAE போன்ற நாடுகளைக் கணக்கெடுத்தோமெனில் நிச்சயமாகக் குறைந்தபட்சம் 4000 வீரர்களாவது சர்வதேச கிரிக்கெட் ஆடியிருப்பார்கள். அதில், விக்கெட்டுகளுக்கு நடுவில் ஓடி இன்சமாமை விட அதிக ரன் எடுத்தவர்கள் மொத்தம் பத்துப் பேர் மட்டுமே!

எல்லோரும் அவரைப் போல 500 போட்டிகளில் ஆடவில்லையே என்று கேட்கலாம். அதைத்தான் நானும் சொல்ல வருகிறேன். ஓட முடியாது என்று அடையாளப்படுத்தப்படும் ஒருவரால் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடிட முடியுமா என்ன? இன்சமாம் 17 வருஷம் ஓடியிருக்கிறார்!
இருந்தாலும் பாருங்களேன், இன்சமாம் என்னமோ ஓடியதே இல்லை என்பதைப் போலவும், அவரைத் தவிர வேறு யாருமே ரன் அவுட்டே ஆனதில்லை என்பதைப் போலவும்தான் இன்றுவரை அனுகிக்கொண்டிருக்கிறோம். ஏன்? அந்த உடம்புதான்! 'குண்டாக இருப்பவர்களால் ஓட முடியாது. அதை மீறி அவர்கள் செய்வதெல்லாம் பெரிய விஷயம்’ என்றுதான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
மறக்க முடியாத ரன் அவுட் எனில், ரோட்ஸ் இன்சியை பறந்து அவுட்டாக்கியது டக்கென்று நமக்கு ஞாபகம் வரும். அதுபோல், மறக்க முடியாத கேட்ச்கள் என்று யோசித்தால், ரோட்ஸ் பிடிச்ச கேட்ச் எதுவும் ஞாபகம் வருதா சொல்லுங்கள்! ஆனால், 2007 உலகக் கோப்பையில் டுவைன் லெவராக் பிடித்த கேட்ச் நிச்சயம் எல்லோருக்கும் ஸ்டிரைக் ஆகியிருக்கும். ஏன், அந்த உடம்பை வைத்துக்கொண்டு அவர் பிடித்ததுதான் அதிசயமாயிற்றே. நாம் இப்படித்தான். குண்டா இருந்தால் அவர்களால் இவ்ளோதான் பண்ண முடியும் என்று சுருக்கி வைத்திடுவோம். அதைத் தாண்டி எதாவது செய்துவிட்டால், அதுவே பெரியதாகத் தெரியும்.

இப்போது நான் சொன்ன விஷயங்களெல்லாம் பார்த்துக்கூட, இன்சமாம் இவ்ளோ ஓடியிருக்கிறாரா என்று நீங்கள் அதிர்ச்சியாகலாம். அதை பெரிய விஷயம் என்று நான் சொல்லவில்லை. அவரும் மற்றவர்கள் அளவுக்கு ஓடியவர்தான் என்பதைப் புரியவைக்கத்தான் சொன்னேன். அந்த உடம்பு எந்த வகையிலும் அவருக்குத் தடையாக இருக்கவில்லை. 17 வருடம் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். என்னைப் போல் இருந்தவர்களுக்கு ஒரு நம்பிக்கையாக இருந்திருக்கிறார். ரன் அவுட் ஆனாலும் பரவாயில்லை, மற்றவர்கள் கலாய்த்தாலும் பரவாயில்லை என்று பேட் எடுத்து ஆடவைத்திருக்கிறார். ஓடவைத்திருக்கிறார்.
Inzamam is an Inspiration. Thank You Inzi!