இந்தியாவில் 2011-ம் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது. தோனி சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்த தருணத்தை எந்த இந்திய கிரிக்கெட் ரசிகராலும் மறக்க முடியாது. தற்போது அந்த ஆட்டம் குறித்து பெரும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது, இலங்கையில்.

என்ன நடந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் தள்ளிய இந்த இறுதிப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்திருப்பதாக புதிதாக புகார் கிளம்பி இருக்கிறது. முதலாவதாக இறுதிப்போட்டியில் சூதாட்டம் நடந்ததாக முன்னாள் இலங்கை கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா புகார் தெரிவித்திருந்தார். இது இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவிலும் விவாதமானது.
இந்த நிலையில், உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்ற காலகட்டத்தில் இலங்கை அரசின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்தா அலுத்கமகே, இந்தப் போட்டியில் மேட்ச் பிக்ஸிங் நடந்ததாகக் கூறியுள்ளார். அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சரே இந்தக் கருத்து தெரிவித்ததால் விவகாரம் இன்னும் பெரிதானது.
உள்ளூர் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே, `அமைச்சர் உலகக் கோப்பை பைனலில் `பிக்ஸிங்' நடைபெற்றது. அந்தப் போட்டியில் நாம் விலை போய்விட்டோம். பைனலில் நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் போட்டியில் சூதாட்டம் நடந்திருப்பதாக உணர்ந்தேன். இதுகுறித்து யாரிடம் வேண்டுமென்றாலும் என்னால் வாதிட முடியும். இந்தச் சூதாட்டத்தில் வீரர்களுக்குத் தொடர்பு கிடையாது என்பதை என்னால் சொல்ல முடியும். ஆனால், சிலர் இதில் ஈடுபட்டனர்” என்றார்.

முன்னாள் அமைச்சரின் இந்தக் கருத்தை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன்கள் சங்ககாரா மற்றும் ஜெயவர்தனே ஆகியோர் கடுமையாக எதிர்த்துள்ளனர். அப்போது கேப்டனாக இருந்த சங்ககாரா, `குற்றச்சாட்டு சொல்கிறார் என்றால் ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். அந்த ஆதாரங்களை அவர் ஐசிசி-யிடம் சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட தடுப்புத்துறை இது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இறுதிப்போட்டியில் சதம் அடித்த ஜெயவர்தனேவும் இந்த விவகாரத்தில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறார். ``போட்டியில் ஆடிய 11 பேர் சம்பந்தப்படாமல், மேட்ச் பிக்ஸிங் நடைபெற்றதாக எப்படிச் சொல்ல முடியும்.. அது சாத்தியமா? 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அறிவொளி பிறக்குமா?” எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில், இலங்கையின் தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் டல்லஸ் அலாஹப்பெருமா, இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை விசாரணை குறித்த அறிக்கையை தனக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.