Published:Updated:

``ஐ.பி.எல் வாய்ப்பு நம் கையில் இல்லை!” - டாப் ஸ்பின்னர் சாய் கிஷோர்

Sai Kishore
Sai Kishore ( TNPL )

``இதற்கு முன்பும், ஏலத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். ஒரு கட்டத்துக்கு மேல், இவையெல்லாம் நம் கைகளில் இல்லை என்று புரிந்துவிடும். வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாகச் செயல்பட முயற்சி செய்யலாம். இல்லையெனில், இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்."

சாய் கிஷோர் - தமிழ்நாடு உருவாக்கியிருக்கும் அடுத்த சுழல் புயல்! கடந்த ரஞ்சி சீசனில், தமிழக அணியின் டாப் விக்கெட் டேக்கரான இவர், இந்த ஆண்டு ஒட்டுமொத்த சையது முஷ்தாக் அலி தொடரின் டாப் விக்கெட் டேக்கர். ரவிச்சந்திரன் அஷ்வின், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஷ்வின், வருண் சக்கரவர்த்தி, சித்தார்த் என சுழற்பந்துவீச்சாளர்கள் நிறைந்த தமிழக அணியில், அத்தனை போட்டிக்கு மத்தியிலும் தனக்கென ஒரு நிரந்தர இடத்தைத் தக்கவைத்திருக்கிறார், இந்த 23 வயது வீரர். TNPL அணியை வழிநடத்த வேண்டுமா, தயார். பவர்பிளேவில் பந்துவீச வேண்டுமா, தயார். முக்கிய பார்ட்னர்ஷிப்களை முறியடிக்க வேண்டுமா, தயார். எப்படியான சவாலையும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார். அந்தச் சவால்கள் தோல்வியில் முடிந்தாலும், தனக்கே பாடம் கற்றுக்கொடுக்கும் முதிர்ச்சியை அடைந்திருக்கிறார். விரைவில் ஐ.பி.எல் அரங்கில் கால்பதிக்கவிருக்கும் அவரிடம் பல விஷயங்களைப் பற்றி உரையாடினோம். அந்தப் பேட்டியிலிருந்து…

``கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி போட்டியில் 3 பந்துகள் மீதமிருக்கையில், தமிழ்நாடு அணி தோற்றது. தோல்வியின் காரணம் என்ன என நினைக்கிறீர்கள்?"

``போட்டி, 4 நாள்களும் முழுமையாக நடக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் மெதுவாக ரன் எடுத்தோம் என்று நினைக்கிறேன். 30 ஓவர்களில் சுமார் 45-50 ரன்கள்தான் எடுத்திருந்தோம். கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால் முடிவு வேறு மாதிரி மாறியிருக்கும். முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்குப் பிறகு, நிலையான பார்ட்னர்ஷிப்களும் அமையவில்லை. அதுவும் தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது.''

Sai Kishore
Sai Kishore
TNPL

``கர்நாடகாவுக்கு எதிரான இந்தத் தொடர் தோல்விகள் எப்படியான பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது?"

``தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது. இந்த சீசனில் அவர்களிடம் மூன்று முறை தோற்றிருந்தோம். நான்காவது முறை வெற்றிபெற்றாக வேண்டும் என்று நினைத்திருந்தோம். `இதற்கு மேலும் இவர்களிடம் தோற்றுவிடக் கூடாது. இந்தப் போட்டியோடு அதற்கு முடிவு கட்ட வேண்டும்’ என்றுதான் எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன். பௌலிங் செய்தபோதும் சரி, பேட்டிங் செய்தபோதும் சரி, வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்துகொண்டே இருந்தது. ஆனால், முடிவு எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துவிட்டது.''

``இந்த சையது முஷ்தாக் அலி தொடரின் டாப் விக்கெட் டேக்கர் நீங்கள்தான் என்பதை எப்படி உணர்கிறீர்கள்?"

``மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற ஒரு பெரிய தொடரில் சிறப்பாகச் செயல்பட்டிருப்பது எல்லையில்லாத சந்தோஷத்தைக் கொடுத்தது. செய்த அத்தனை கடின உழைப்புக்கும் பலன் கிடைத்திருக்கிறது என்ற திருப்தி ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், அடுத்தடுத்து சிறப்பாகச் செயல்பட முடியும் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.''

Sai Kishore
Sai Kishore

``அந்த சிறப்பான செயல்பாடின் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்? முன்பு சிக்கனமாகப் பந்து வீசிக்கொண்டிருந்தாலும், அதிகப்படியான விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருந்தது. இந்த முறை சிக்கனமாகவும் பந்துவீசி, விக்கெட் வேட்டையும் நடத்தியிருக்கிறீர்கள். அது எப்படி சாத்தியமானது?"

``நீங்கள் சொல்வதுபோல், என்னால் எப்போதுமே சிக்கனமாகப் பந்துவீச முடிந்திருக்கிறது. TNPL தொடரிலும் அப்படித்தான், சிக்கனமாகவே இருந்தேன். விக்கெட் வீழ்த்துவற்கு, என் அட்டாகிங் கேமில் கவனம் செலுத்தினேன். எப்போது,எப்படிப் பந்துவீசவேண்டும் என்ற `டெசிஷன் மேக்கிங்’ ஏரியாவை மேம்படுத்திக்கொண்டேன். ஆட்டத்தின் போக்கை சரியாகக் கணித்துக்கொண்டு, அதன்படி சரியான டெலிவரிகளைச் செய்தேன். சரியான பந்துகளைச் சரியான நேரத்தில் வீசியதனால்தான் விக்கெட்டுகளைப் பெற்றுத்தந்தன. அந்த முடிவுகள்தாம் என் ஆட்டத்தில் நான் செய்த மாற்றம் என்று நினைக்கிறேன்.''

``TNPL தொடரில் (திருச்சி வாரியர்ஸ்) கேப்டனாகச் செயல்பட்டது, இந்த விஷயத்தில் உங்களுக்கு கைகொடுத்தது என்று நினைக்கிறீர்களா?"

``நிச்சயமாக. நான் பலரிடமும் சொல்லியிருக்கிறேன். அந்த அனுபவம் எனக்கு எப்படி உதவியது என்பதை. ஒரு அணியை வழிநடத்திவிட்டு இப்போது ஆடும்போது, மிகவும் எளிதாக இருக்கிறது. ஆட்டத்தின் போக்கை நன்கு கணிக்க முடிகிறது. எந்நேரமும் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று விழிப்போடு இருக்கிறேன். அதேபோல், கேப்டனாக இருக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் யோசிக்காமல், ஒவ்வொரு வீரரைப் பற்றிய சிந்தனையையும் மனதுக்குள் ஓட்டிக்கொண்டிருப்போம். அதெல்லாம் இப்போது நன்றாகக் கைகொடுக்கிறது.''

Sai Kishore
Sai Kishore
TNPL

``ஒரு ஸ்பின்னர் பவர்பிளேவில் பந்துவீசுவதென்பது சாதாரண விஷயமல்ல. ஆனால், நீங்கள் சிறப்பாகச் செயல்பட்டீர்களே!"

``ஆம், பவர்பிளேவில் பந்துவீசுவது எளிதான காரியமில்லை. இரண்டு ஃபீல்டர்கள் மட்டுமே வெளியில் இருக்கும்போது நெருக்கடியாகத்தான் இருக்கும். அங்கு இரண்டு விஷயங்கள்தான் சாத்தியம். ஒன்று, பயங்கரமாக அடி வாங்குவோம். இல்லையேல், மிகச் சிறப்பாகச் செயல்படுவோம். அந்த இடத்தில் நெருக்கடியை சரியாகக் கையாள வேண்டும். பவர்பிளேவில் நன்றாகப் பந்துவீச அதுதான் மிகவும் முக்கியம். நான் அதை சிறப்பாகச் செய்தேன். அவ்வளவுதான்.''

``முன்பைவிட, இப்போது உள்ளூர் போட்டிகள் பலவும் பகலிரவுப் போட்டிகளாக நடத்தப்படுகின்றன. அப்போதெல்லாம், சர்வதேச அரங்குக்குப் போகும்போதுகூட சக வீரர்களுக்கு லைட்ஸுக்குக் கீழே ஆடிய அனுபவம் குறைவாகத்தான் இருக்கும். அது மாறிக்கொண்டிருக்கும் வேளையில், TNPL போன்ற ஒரு தொடரில் லைட்ஸுக்குக் கீழே ஆடுவது உதவியிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?"

``அதுதான் எங்களில் பலருக்கும் அனுபவத்தை ஏற்படுத்தியது. தொடக்கத்தில், பகலிரவுப் போட்டிகளில் ஆடுவது சிரமமாகத்தான் இருந்தது. ஏனெனில், யாருமே அதற்குப் பழக்கப்படவில்லை. TNPL தொடங்கி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது, பகலிரவுப் போட்டிகளில் ஆடும்போது பெரிய வித்தியாசம் தெரிவதில்லை. எல்லோருக்குமே நன்றாகப் பழகிவிட்டது. உண்மையிலேயே TNPL ஆடியது இந்த விஷயத்தில் மிகப்பெரிய உதவியாக அமைந்திருக்கிறது.''

Sai Kishore
Sai Kishore
TNPL

``கடந்த ரஞ்சி சீசனில், தமிழக அணியின் டாப் விக்கெட் டேக்கர் நீங்கள்தான். இந்த முறை உங்களிடம் என்ன எதிர்பார்க்கலாம்?"

``என்னால் என்னவெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்ய வேண்டும். தமிழ்நாடு ரஞ்சிக் கோப்பையை வெல்வதற்கு எந்த வகையிலெல்லாம் பங்களிக்க முடியுமோ அதைச் செய்வதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். பர்சனலாக, எனக்கென்று எந்த இலக்கும், எதிர்பார்ப்பும் நான் வைத்துக்கொள்வதில்லை. அணி வெற்றிபெறுவதற்கு என்ன தேவையோ அதைச் செய்ய வேண்டும். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என ஒவ்வொன்றிலும் அணிக்குப் பங்களிக்க வேண்டும். ஆட்டம் முடிந்து அறைக்குத் திரும்பும்போது, `அணிக்காக நம்மால் முடிந்ததைச் செய்திருக்கிறோம்’ என்ற திருப்தி ஏற்பட வேண்டும். அதுதான் என்னுடைய இலக்கு.''

``சையது முஷ்தாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் தமிழ்நாடு அணி தொடர்ந்து சிறப்பாகச் செயல்படுகிறது. ஆனால் ரஞ்சிக் கோப்பையில், கடந்த சில ஆண்டுகளாக சுமாராகவே செயல்படுகிறது. இந்த ஆண்டு, அணியின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது? டிரெஸ்ஸிங் ரூம் மனநிலை எப்படி இருக்கிறது?"

``அணியின் ஒவ்வொரு வீரருமே கடுமையாக உழைப்பவர்கள். அணிக்காக அனைத்தையும் கொடுக்கும் வீரர்கள். ஒரு போட்டியில் தோற்றாலும், யாரும் யாரையும் குறைசொல்வதோ, விட்டுக்கொடுப்பதோ இருக்காது. ஒருவர் சரியாக விளையாடாதபோது, சக நண்பராக அவர்கள் என்ன செய்யலாம், எப்படி செய்திருக்கிலாம் என்று ஆலோசிக்கிறோம். ஒருவர் நன்றாக விளையாடும்போது, அனைவருமே அதற்காக சந்தோஷப்படுவோம். ஒரு நல்ல அணிக்கு அதுதான் அழகு. இந்த விஷயத்தில், இந்த ஆண்டு அணிக்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அனைவருமே மகிழ்ச்சியாக இருக்கிறோம். நான் ஏற்கெனவே சொன்னதுபோல். ஒவ்வொருவருமே கடுமையாக உழைக்கக்கூடியவர்கள். கர்நாடகாவிடம் தோற்றுவிட்டோம். ஆனால், உடனேயே அடுத்த போட்டியில் வெல்வதற்கு என்ன செய்யலாம் என்று ஆலோசிக்கத் தொடங்கிவிட்டோம். முன்பைவிட இந்த முறை அணிக்குள் பாசிட்டிவிட்டி நிலவுகிறது. எல்லோருமே பாசிட்டிவ்வாக உணர்கிறோம். அதைச் செயல்பாட்டிலும் காட்டிக்கொண்டிருக்கிறோம். அதனால், இந்த முறை முடிவுகள் மாறும் என்று எதிர்பாக்கலாம்.''

``புதிய பயிற்சியாளர் வாசுவின் கீழ் விளையாடுவது எப்படி இருக்கிறது?"

``முதல் தரப் போட்டிகளில், சுமார் 3000 ரன்களும் 250 விக்கெட்டுகளும் எடுத்த ஒருவர், பயிற்சியாளராக இருப்பது மிகவும் சாதகமான விஷயம். ஒவ்வொரு வீரருக்குமே அவரது அனுபவம் உதவிகரமாக இருக்கும். அதேபோல், மற்றொரு பயிற்சியாளர் பிரசன்னா. தமிழ்நாடு அணியின் விலைமதிக்க முடியாத வீரராகத் திகழ்ந்தவர். இப்படி இரண்டு அனுபவசாலிகள் பயிற்சியாளர்களாக இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். ஒவ்வொரு சூழ்நிலையிலும், அவர்கள் என்ன செய்வார்கள் என்று அவர்களது ஆட்ட அனுபவங்களைக் கேட்டு அறிந்துகொள்கிறோம். எங்களைத் தயார்படுத்திக்கொள்ள அவர்களின் அனுபவம் மிகப்பெரிய கருவியாக இருக்கிறது.''

``விரைவில் ஐ.பி.எல் ஏலம் நடக்கப்போக்கிறது. சையது முஷ்தாக் அலி தொடரின் செயல்பாடு, ஐ.பி.எல் கதவுகளைத் திறக்கும் என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறதா?"

``ஐ.பி.எல் வாய்ப்பை எதிர்பாக்கலாம் என்ற நம்பிக்கையை அது நிச்சயம் கொடுத்திருக்கிறது. ஆனால், அது எதுவும் நமது கைகளில் கிடையாது. இதற்கு முன்பும், ஏலத்தில் எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறேன். ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். ஒரு கட்டத்துக்கு மேல், இவையெல்லாம் நம் கைகளில் இல்லை என்று புரிந்துவிடும். வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாகச் செயல்பட முயற்சி செய்யலாம். இல்லையெனில், இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அப்படி நம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். சாதாரணமாக, நம்மால் எதிர்பார்க்காமல் இருக்க முடியாதுதான். நான் எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால், ஏலத்தின் முடிவு என்னைப் பெரிதாகப் பாதிக்காது. ஒவ்வொரு நாளும் என் திறனை நான் அதிகரித்துக்கொள்ள வேண்டும். அதுதான் எப்போதுமே என் இலக்கு. ஐ.பி.எல் ஆடினாலும் இல்லாவிட்டாலும் அந்த விஷயத்தில் என் கவனம் குறையாது.''

Sai Kishore
Sai Kishore
TNPL

``சி.எஸ்.கே அணியின் நெட் செஷன்களில் கிடைத்த அனுபவம், அங்கு ஹர்பஜனுடன் கலைந்துரையாடிய அனுபவம் பற்றி…"

``அது எனக்கு மிகச்சிறந்த அனுபவம். அதுபோன்ற டாப் வீரர்களுக்கு அதற்கு முன் அப்படி தொடர்ச்சியாகப் பந்துவீசியது இல்லை. அது எனக்கு மிகப்பெரிய பாடம். அப்படிப்பட்ட டாப் வீரர்கள் ஆடும்போது, அவர்களை எப்படி சமாளிப்பார்கள் என்று ஹர்பஜன் போன்ற சீனியர்களிடம் விவாதித்தது பயனுள்ளதாக இருந்தது. மிகவும் வெளிப்படையாக அவர்கள் கொடுத்த பதில்கள் என் ஆட்டத்தில் மாற்றம் கொண்டுவர உதவின. அந்த அனுபவத்தைத் தொடர்ந்து என் ஆட்டத்தில் காட்ட வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன்.''

``சமீபமாக, பல விளையாட்டு வீரர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள். சாரா டெய்லர் முதல் மேக்ஸ்வெல் வரை பல முன்னணி வீரர்களே அந்தப் பிரச்னையால் அவதிப்படுகிறார்கள். நீங்கள் அப்படியான சூழ்நிலையை சந்தித்ததுண்டா... உங்கள் மீதான நெருக்கடிகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?"

`` சிக்கல் இல்லாதவர்கள் யாருமே இல்லை. யாருக்கு பிரச்னை இல்லாமல் இருக்கிறது? உங்கள் வாழ்க்கையில் பிரச்னையில்லாமல் இருக்கிறதா என்ன? என் குடும்பத்தினருக்கும் பிரச்னைகள் இருக்கின்றன. இதை இப்போதுதான் வெளியே சொல்லத் தொடங்கியிருக்கிறார்களே தவிர, எப்போதுமே எல்லோருமே சிக்கல்களுக்குள் இருந்திருக்கிறார்கள். அதை எப்படி திடமாக நின்று சமாளிக்கிறோம் என்பதுதான் விஷயம். என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கையில் சந்திக்கும் நெருக்கடிகளைவிட, களத்தில் பெரிய நெருக்கடி இருந்துவிடப்போவதில்லை. அதை நான் பெரிய பிரச்னையாகப் பார்ப்பதில்லை. அப்போதுதான் அதை எளிதாகக் கடந்துபோக முடியும்.''

``தமிழக அணியில் இப்போது எக்கச்சக்க ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். இந்தப் போட்டியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?"

``அந்தப் போட்டிதான் என்னை மேலும் மேலும் உந்தித் தள்ளுகிறது. அவர்கள் நன்றாகச் செயல்படும்போது, `நாம் இன்னும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்’ என்ற எண்ணம் தானாக எழுகிறது. அதேசமயம், அவர்கள் சிறப்பாகச் செயல்படும்போது, அதற்கு நாம் சந்தோஷப்பட வேண்டும். அப்போதுதான் நாம் சிறப்பாகச் செயல்படும்போது அவர்கள் மகிழ்ச்சியடைவர்கள். இந்த ஆரோக்கியமான போக்கு இருந்தால்தான் அணி வெற்றிபெறும். கிரிக்கெட் போன்ற டீம் கேமில் அது மிகவும் முக்கியம். அந்த குணங்களை எப்போதும் கடைபிடிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன்.''

Vikatan

``சமீபமாக, பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துகிறீர்களாமே?"

``ஆம், கடந்த இரண்டு ஆண்டுகளாக பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். பயிற்சியின்போது, முன்பைவிட அதிக நேரம் பேட்டிங்குக்கு செலவுசெய்கிறேன். கூடிய விரைவில் அதற்கான ரிசல்ட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.''

Sai Kishore
Sai Kishore
TNPL

``உங்களுடைய கரியரின் சிறந்த பர்ஃபாமன்ஸ் என்று கேட்டால், எதைச் சொல்வீர்கள்?"

``சையது முஷ்தாக் அலி டிராபியில், பஞ்சாப்புக்கு எதிரான போட்டி (4 - 1 - 10 - 3) எனக்கு மிகவும் பிடித்த ஆட்டம். மிகவும் திருப்திகரமாக இருந்தது. பவர்பிளேவிலேயே மூன்று விக்கெட்டுகள் எடுத்து ஆட்டத்தை தமிழக அணியின் பக்கம் திருப்பிய அந்தச் செயல்பாடு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இப்போதைக்குத்தான் அது என் ஃபேவரைட். விரைவில் அது மாறும்!''

``தமிழக அணியில், சர்வதேச அனுபவம்கொண்ட வீரர்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களோடு விளையாடுவது எப்படியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது?"

``கண்டிப்பாக அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில், பல முதல்தரப் போட்டிகளில் விளையாடித்தான் அவர்கள் அந்த நிலையை அடைந்திருக்கிறார்கள். பல சூழ்நிலைகளைச் சந்தித்திருக்கிறார்கள். மீண்டும் அப்படியொரு சூழ்நிலை வரும்போது, அவர்களது அனுபவத்தைப் பயன்படுத்தி உடனே நமக்கு ஆலோசனை கொடுப்பார்கள். களத்தில் இருக்கும்போது அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நீண்ட நாள்களாக அவர்களோடு விளையாடிக்கொண்டிருப்பதால், என் அனுபவத்தைப் பெருக்கிக்கொள்ள அது உதவுகிறது.''

``கிரிக்கெட் களம் தாண்டி சாய் கிஷோர் யார்..?"

``எனக்கு படம் பார்க்க ரொம்பப் பிடிக்கும். நிறைய புத்தகங்கள் படிப்பேன். சுயசரிதைகள், ஃபிக்‌ஷன் புத்தகங்கள் மிகவும் பிடிக்கும். என் நாய்க்குட்டியோடு விளையாடுவது மிகவும் பிடிக்கும். மற்றபடி, என் குடும்பத்தோடு அதிக நேரம் செலவிட வேண்டுமென்று விரும்புவேன். ஏனெனில், அதிக நேரம் வெளியில் பயணித்துக்கொண்டே இருப்பதால், அவர்களோடு இருக்க முடிவதில்லை. அவர்களை மிகவும் மிஸ் செய்வேன். சமீபத்தில்கூட, என் சகோதரி நிச்சயதார்த்தத்துக்குக்கூட போக முடியாத நிலை ஏற்பட்டது. இவையெல்லாம் மிகவும் வருத்தமாக இருக்கும். அவர்களுடனேயே வளர்ந்திருப்போம், இப்போது அவர்களோடு இருக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இதுபோன்ற விஷயங்களைத்தான் நான் வாழ்க்கை என்று நினைக்கிறேன். கிரிக்கெட் மிகவும் பிடித்து விளையாடுவதுதான். ஆனால், வாழ்க்கை என்று வரும்போது, குடும்பம்தான். முடிந்த அளவுக்கு அவர்களோடு இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அவ்வப்போது என் நெருங்கிய நண்பர்களுடன் வெளியே செல்வேன். அவர்களோடு அதிகமாக டீக்கடைக்குச் செல்வேன். சிறுவனாக இருக்கும்போது என்னவெல்லாம் செய்துகொண்டிருந்தேனோ, அதைத்தான் இப்போதும் செய்ய விரும்புகிறேன்.''

அடுத்த கட்டுரைக்கு