Published:Updated:

``இந்த உண்மையை எல்லா கிரிக்கெட் வீரர்களும் ஏற்கவேண்டும்!" - முருகன் அஷ்வின்

மு.பிரதீப் கிருஷ்ணா

``நான் இத்தனை ஆண்டுகள் கற்றுக்கொண்ட விஷயம் இதுதான் - 'ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டியது நமது கடமை'. அதைக் கடமையாய் நினைக்கும்போதுதான் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்"

Murugan Ashwin
Murugan Ashwin

TNPL நான்காவது சீசனை வென்று, இரண்டு முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது சேப்பாக் சூப்பர் கில்லீஸ். பேட்டிங், பௌலிங் என அனைத்து ஏரியாவிலும் தொடர் முழுக்க பட்டையைக் கிளப்பியது அந்த அணி. அந்த அணியின் சீனியர் ஸ்பின்னர் முருகன் அஷ்வின், இப்போது சீனியர் ஆல்ரவுண்டர்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அட்டகாசமாகப் பந்துவீசியவர், TNPL தொடரில் பேட்ஸ்மேனாகவும் சில கலக்கல் பெர்ஃபாமன்ஸ் கொடுத்தார். அதில் முக்கியமான ஒன்று, இறுதிப் போட்டியில் சசிதேவுடன் இவர் அமைத்த 61 ரன் பார்ட்னர்ஷிப். மொத்தமே 240 ரன்கள் மட்டுமே அடிக்கப்பட்ட அந்தப் போட்டியில், இந்த பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தை மாற்றியது.

இந்தப் போட்டி மட்டுமல்லாமல், பல போட்டிகளில் மிடில் ஆர்டரில் இறங்கி விஜய் சங்கரின் இழப்பைப் பூர்த்தி செய்தார். பந்துவீச்சிலும் இளம் ஸ்பின்னர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார். மிகச் சிறந்த சீசனைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் முருகன் அஷ்வினைச் சந்தித்துப் பேசியதிலிருந்து...

TNPL எவ்வளவு மாற்றம் கண்டுள்ளது என்று நினைக்கிறீர்கள்?

நான்கு சீசன்கள் ஆகிவிட்டது. வீரர்கள் எல்லோரும் நன்றாக அனுபவப்பட்டிருக்கிறார்கள். தொடக்கத்தில், லைட்ஸுக்குக் கீழ் விளையாடுவது என்பதே பலருக்குப் புதிதாக இருந்தது. இப்போது அதற்குப் பழக்கப்பட்டிருக்கிறார்கள். ரசிகர் கூட்டத்துக்குப் பழகியிருக்கிறார்கள். இந்த ஃபார்மட்டில் தொடர்ந்து ஆடி நன்றாக அனுபவம் அடைந்திருக்கிறார்கள். வீரர்களின் தரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்தத் தொடர்.

Murugan Ashwin
Murugan Ashwin

நிறைய ஸ்பின்னர்கள் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றனர். உங்கள் அணியில் அலெக்சாண்டர்... சிலம்பரசன் என ஸ்பின்னர்கள் நிறைய பேர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எல்லா அணிகளிலும் நல்ல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். நான் முன்பே சொன்னதுபோல், இந்த ஃபார்மட்டில் நிறைய போட்டிகள் விளையாடி நன்கு அனுபவப்பட்டிருக்கிறார்கள். எங்கள் அணியிலேயே என்னைத் தவிர்த்து, அலெக்சாண்டர், சித்தார்த் இருவரும் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அதுபோக, இரு அருண்கள் இருக்கிறார்கள். இப்படி ஒவ்வோர் அணியிலுமே பல ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். அதில் யார் அதிக விக்கெட்டுகள் எடுக்கிறார்கள். யார் சரியான லைன், லென்த்தில் பந்துவீசுகிறார்கள். யார் அதிக வேரியேஷன்கள் காட்டுகிறார்கள் எனப் பல விஷயங்கள் உண்டு. அதுதான் அவர்களின் அடுத்தகட்ட வாய்ப்பைப் பெற்றுத்தரும்.

TNPL போன்ற தொடரை, இளம் வீரர்களை அடையாளம் காணும் (Scouts) பலர் பார்த்துக்கொண்டிருப்பார்கள். நான் சொன்னதுபோல், மிகவும் சிறப்பாகச் செயல்படும் வீரர்களுக்கு, இந்தத் தொடர் நிச்சயம் மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றுத்தரும்.

டி-20 போன்ற ஃபார்மட்டில், ஃபிங்கர் ஸ்பின்னர்களைவிட ரிஸ்ட் ஸ்பின்னர்களால் சிறப்பாகச் செயல்படமுடியும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஒரு ரிஸ்ட் ஸ்பின்னராக அதில் உடன்படுகிறீர்களா?

ரிஸ்ட் ஸ்பின்னர்களுக்கு அட்வான்டேஜ் இருக்கிறது, இல்லை என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ரிஸ்ட் ஸ்பின்னர்களால் சுழலுக்கு ஒத்துழைக்காத ஆடுகளங்களிலும் பந்தைச் சுழலவைக்க முடியும். நிறைய வேரியேஷன்கள் காட்ட முடியும். அதனால்தான் அப்படியொரு பேச்சு எழுகிறது. ஆனால், இப்போது ஃபிங்கர் ஸ்பின்னர்களாலும் நிறைய வேரியேஷன்கள் காட்ட முடிகிறது. இப்போதைய சூழ்நிலையில், கிரிக்கெட்டில் எந்த அளவுக்குப் புதுமையைக் காட்டுகிறோம் என்பது முக்கியம். ஸ்பின்னர்களைப் பொறுத்தவரை, அந்தப் புதுமையால் பேட்ஸ்மேன்களை எந்த அளவுக்கு ஏமாற்றுகிறோம் என்பது முக்கியம். பேட்ஸ்மேன் நம்மைக் கணித்துவிடக் கூடாது. அவ்வளவுதான். அதற்காக எவ்வளவு வேரியேஷன் காட்டுகிறோம் என்பதுதான் விஷயம்.

Murugan Ashwin
Murugan Ashwin

வேரியேஷன்களின் முக்கியத்துவம் பற்றிப் பேசினீர்கள்... இந்த ஐபிஎல் தொடரில் அதிகமாக கூக்ளிகள் வீசினீர்கள். பெங்களூரு அணிக்கெதிரான போட்டி என்று நினைக்கிறேன், அந்த ஒரு போட்டியில் மட்டுமே சுமார் 20 கூக்ளிகள் வீசியதாக எனக்கு நினைவு. நிறைய வேரியேஷன்கள் இருந்தும் கூக்ளியை அதிகமாகப் பயன்படுத்துவது ஏன்? சிக்கனமாகப் பந்துவீச வேண்டும் என்பதாலா, இல்லை கோலி, ஏ.பி போன்றவர்கள் கூக்ளிக்குத் தடுமாறினார்கள் என்பதாலா?

நீங்கள் சொல்லும் போட்டியில் அப்படி இருப்பதாக நினைவில்லை. ஆனால், நீங்கள் சொல்லும் ஸ்டேட் சரியாக இருக்கலாம். எங்கேயேனில், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அதிகமாக கூக்ளி வீசியிருப்பேன். பொதுவாகவே, தங்களிடமிருந்து விலகிச் செல்லும் பந்துகளுக்கு பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள். அதனால், இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அதிகமாக வீசியிருப்பேன். வலது கை பேட்ஸ்மேன்களுக்கான எண்களை எடுத்துப் பார்த்தீர்களேயேனால், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் என எல்லாம் சம அளவில்தான் இருக்கும். நான் ஏற்கெனவே சொன்னதுபோல், பேட்ஸ்மேன்களை எந்த அளவுக்கு ஏமாற்றுகிறோம் என்பது முக்கியம்.

இந்த ஐபிஎல் தொடர் (2019) உங்களுக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. ஆர்.அஷ்வின், முஜீப், வருண் என பல ஸ்பின்னர்கள் இருந்த அணியில், பிளேயிங் லெவனுக்குள் நுழைவதே கடினமாக இருந்திருக்கும். நீங்கள் அதைச் செய்தது மட்டுமல்லாமல், மிகவும் சிறப்பாகச் செயல்பட்டீர்கள். ஒவ்வொரு போட்டியிலுமே மிகவும் சிக்கனமாகப் பந்துவீசினீர்கள். இந்த ஐபிஎல் அனுபவம் எப்படி இருந்தது?

இந்த ஐபிஎல் தொடர் எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. அணி நிர்வாகமும் கேப்டனும் என்னைக் கையாண்ட விதம்தான் அதற்கு முக்கியக் காரணம். எனக்குக் கொடுத்த வாய்ப்புகளுக்கு அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அனைத்துப் போட்டிகளும் ஆடுவதற்குத் தயாராகித்தான் ஐபிஎல் தொடருக்குள் நுழைந்தேன். நீங்கள் சொன்னதுபோல், அணிக்குள் நுழைவதற்கு கடும் போட்டி இருந்தது. அணிக்கு நான் கொடுக்கவேண்டியது என்ன என்பதை கேப்டன் எனக்குத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் என்னைக் கையாண்டவிதம் மிகவும் உதவிகரமாக இருந்தது. ஆர்.அஷ்வின் கேப்டனாக இருந்தது, என்னைச் சிறப்பாகச் செயல்பட வைத்தது.

Murugan Ashwin
Murugan Ashwin

முந்தைய சில ஐபிஎல் சீசன்கள் நீங்கள் எதிர்பார்த்ததுபோல் அமையவில்லை. ஐபிஎல் மட்டுமில்லை - தமிழ்நாடு அணிக்காக ஆடியபோதும் அப்படித்தான் இருந்தது. 2012 சீசனில் ஆடினீர்கள். ஆனால், அதன்பின் மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகுதான் தமிழ்நாடு வாய்ப்பு வந்தது. ஒவ்வொருமுறையும் எப்படி உங்களால் அந்தப் பின்னடைவிலிருந்து மீண்டு வர முடிகிறது?

ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை அப்படித்தான் இருக்கப்போகிறது. அதுதான் நிதர்சனம். அது ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அதற்கு எல்லோரும் தயாராக இருக்க வேண்டும். நான் இத்தனை ஆண்டுகள் கற்றுக்கொண்ட விஷயம் இதுதான் - `ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அதைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டியது நமது கடமை'. அதைக் கடமையாய் நினைக்கும்போதுதான் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஆம், என் கிரிக்கெட் பயணத்தில் நிறைய சறுக்கல்கள் இருந்தது. நிறைய இடைவெளி இருந்தது. ஆனால், ஒவ்வொரு முறையும் நான் என் ஆட்டத்தில் முன்னேற்றம் கண்டுகொண்டேதான் இருந்தேன். என்னைச் சுற்றி சப்போர்டிவான சில சீனியர் வீரர்கள் இருந்தார்கள். அதுவும் எனக்கு ஆதரவாக இருந்தது. ஃபிட்னஸ், ஸ்கில் என நிறைய பயிற்சிகள்... எல்லாம் ஒரு பிராசஸ்தான். அந்த பிராசஸை சரியாகச் செய்தால், அதில் விடாமுயற்சி இருந்தால் நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் முடிவு கிடைக்கும்.

இந்த TNPL தொடரில், டாப் ஆர்டரிலும் மிடில் ஆர்டரிலும் பேட்டிங் செய்தீர்கள். பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துகிறீர்களா?

இல்லை. நான் முன்பே சொன்னதுபோல், அணியின் தேவைக்கு ஏற்ப என் பங்களிப்பைக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். அந்த நாள், அந்தப் போட்டிக்கு என்ன திட்டம் வைத்திருந்தோமோ அதற்கேற்ப களமிறங்கினேன். ஒரு போட்டியில் நான்காவது வீரராக இறங்கியிருப்பேன், இன்னொரு போட்டியில் டெய்லெண்டில்தான் களமிறங்கியிருப்பேன். கண்டிப்பாக, Flexible-ஆக இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். நான் அதை மிகவும் விரும்பினேன். கடைசியில் வந்து அதிரடி காட்டும் Floater ரோல் எனக்குப் பிடிக்கும். அனைத்து பொசிஷனில் ஆட வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது.

Murugan Ashwin
Murugan Ashwin

உங்களுடைய அடுத்த இலக்கு என்ன?

எல்லோருக்கும் இருப்பதுபோல் இந்திய அணிக்கு ஆட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. அதுதான் என் மிகப்பெரிய இலக்கு. ஆனால், எப்போதும் நான் அதைப்பற்றிச் சிந்திப்பதில்லை. ஒவ்வொரு முறையும் அணியின் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும் என்பதுதான் நான் வைத்துக்கொள்ளும் இலக்கு. எந்த அணிக்கு விளையாடினாலும், அதற்காக 100 சதவித உழைப்பைக் கொடுப்பது, களத்துக்கு உள்ளேயும் வெளியேவும் இந்த விளையாட்டை மதிப்பது... இதைத்தான் ஒவ்வொரு நாளும் செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.