Published:Updated:

CSKvPBKS: தவான் குடும்பத்தையே பச்சை குத்திய தீவிர ரசிகர்; மஞ்சள் கூட்டத்தில் கலக்கிய சிகப்பு மனிதர்!

Dhawan Fan

எதற்கு தவாணின் சகோதரி படத்தையெல்லாம் பச்சை குத்தியிருக்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

Published:Updated:

CSKvPBKS: தவான் குடும்பத்தையே பச்சை குத்திய தீவிர ரசிகர்; மஞ்சள் கூட்டத்தில் கலக்கிய சிகப்பு மனிதர்!

எதற்கு தவாணின் சகோதரி படத்தையெல்லாம் பச்சை குத்தியிருக்கிறீர்கள் என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

Dhawan Fan

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் ஐ.பி.எல் போட்டி இன்று நடைபெற்றது. சேப்பாக்கத்தில் ஒரு போட்டி நடைபெறுகிறதென்றால் அங்கே முழுவதுமாக மஞ்சள் கூட்டத்தை மட்டுமே பார்க்க முடியும். ஆயிரக்கணக்கில் கூடும் அத்தனை பேரும் தோனி ரசிகராகவும் சிஎஸ்கே ரசிகராகவுமே இருப்பார்கள். ஆக, போட்டி தினங்களில் சேப்பாக்கம் மைதானத்திற்குள் மற்ற ரசிகர்களைக் காண்பதே அரிது.

அப்படி ஒரு அரிதான விஷயத்தை சென்னை vs பஞ்சாப் போட்டியில் நாம் கண்டடைந்தோம். சென்னை ரசிகர்கள் சூழ தில்லாக தனியாக தவானுக்காக ஆராவாரம் செய்து கொண்டிருந்த ரசிகர் ஒருவரை K கேலரியில் சந்தித்தோம்.
தவான் ரசிகர்
தவான் ரசிகர்

இந்த மஞ்சள் கூட்டத்திற்குள் ஒரு சிகப்பு நிற பஞ்சாப் ரசிகர் என்பதே பெரும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அதிலும் அவர் உடலில் செய்திருந்த வேலைப்பாடுகளை பார்க்கையில் இன்னும் ஆச்சர்யம் கூடியது. ஒரு தவான் ரசிகர் தவானை உடலில் பச்சைக் குத்தி கொள்ளலாம் அதில் ஒரு நியாயம் இருக்கிறது.

CSKvPBKS: தவான் குடும்பத்தையே பச்சை குத்திய தீவிர ரசிகர்; மஞ்சள் கூட்டத்தில் கலக்கிய சிகப்பு மனிதர்!
ஆனால், நாம் சந்தித்த அந்த ரசிகரோ தவானின் அப்பா, அம்மா உட்பட அவரின் சகோதரிகள் வரை பச்சை குத்தி வைத்திருந்தார். உருவம் மட்டுமல்ல அத்தனை பேரின் பெயரையுமே தனித்தனியாக பச்சை குத்தி வைத்திருந்தார்.

தவான் வீட்டின் ரேஷன் கார்டு மட்டும்தான் மிஸ்ஸிங். இதுபோக, தவான் அடித்த ஒவ்வொரு செஞ்ச்சூரியை பற்றியுமே குறிப்பெழுதியும் வைத்திருந்தார். உடம்பெங்கும் மீசையை முறுக்கிய தவானின் புகைப்படங்கள் வேறு.

ரீல் கஜினியின் ரியல் வெர்ஷன் போல இருந்த இந்த ரசிகரின் நிஜப்பெயர் 'சங்கர் கீதா தவான்'.
சங்கர் கீதா தவான்
சங்கர் கீதா தவான்

சென்னை அணி எதாவது சிறப்பாக செய்யும்போது ஒட்டுமொத்த கூட்டமும் ஆராவாரம் செய்ய இவர் மட்டும் அதிருப்தியில் கன்னத்தில் கை வைத்து உட்காந்துவிடுகிறார். அதேநேரத்தில் பஞ்சாப் சிறப்பாக செயல்படும்போது ஒட்டுமொத்த மஞ்சள் கூட்டமும் அமைதியாக இருக்க சங்கர் தவான் மட்டும் எழுந்து பஞ்சாப் கொடியை பட்டொளி வீச பறக்க வைக்கிறார். சங்கர் தவானிடம் பேச்சுக் கொடுத்தோம்.

'இந்தக் கூட்டத்த பார்த்தெல்லாம் நமக்கு ஒன்னும் பயம் இல்ல ப்ரதர். யார் இருந்தாலும் இல்லாட்டியும் கப்பாருக்கு சப்போர்ட் பண்ணிட்டேதான் இருப்பேன். இப்போ இல்ல 12 வருசமாவே இதுதான்.

தவான் ரசிகர் குத்தியிருக்கும் பச்சை
தவான் ரசிகர் குத்தியிருக்கும் பச்சை
அவரை அண்டர் 19 காலத்துல இருந்தே ஃபாலோ பண்ணிட்டு வரேன். அவர்கிட்ட இருக்க அந்த ஆதிக்கமான அட்டிடியூடும் ஸ்டைலும் எனக்கு எப்பவுமே பிடிக்கும்.

நானும் சின்ன வயசுல இருந்தே கிரிக்கெட் ஆடுறேன். டிஸ்ட்ரிக்ட் லெவல்லாம் ஆடியிருக்கேன். ஒரு ஆக்சிடண்ட்னால முட்டில ஆடி பட்டு கிரிக்கெட் ஆட முடியாம போயிருச்சு. இப்ப கூட ஹைதராபாத்ல ஸ்போர்ட்ஸ் ஷாப்தான் வச்சிருக்கேன். கடை பேரு 'கப்பார் ஸ்போர்ட்ஸ்'. அவருக்கிட்ட அனுமதி கேட்டு அவர் மனப்பூர்வமா அனுமதி கொடுத்துதான் இந்த பேர வச்சிருக்கேன்.' என சொல்லும் சங்கருக்கு சொந்த ஊர் பெங்களூர்.

தவானை நேரில் சந்தித்திருக்கிறீர்களா என கேட்டேன். '2014 வாக்கில் ஒரு முறை டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி பெங்களூருவிற்கு வந்து டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்கள். அப்போது எனக்கு தெரிந்த ஆட்களை வைத்து மைதானத்திற்குள் நுழைந்துவிட்டேன். ஆனால், உள்ளே தவானைப் பார்க்கவே முடியவில்லை. ப்ளேயர்கள் செல்லும் பஸ்ஸின் அருகேயே நீண்ட நேரம் காத்திருந்தேன். அப்போதுதான் முரளி விஜய், இஷாந்த் சர்மா போன்ற வீரர்கள் என் உடம்பில் குத்தியிருக்கும் டேட்டோக்களை பார்த்து ஆச்சர்யப்பட்டு தவானை அழைத்துக் காண்பித்தார்கள். அவர் அப்படியே என்னை கட்டி அணைத்துக் கொண்டார். அதன்பிறகு அடிக்கடி என்னை சந்திப்பார். பேட், கூலிங் க்ளாஸ் போன்ற பரிசுகளையும் வழங்கியிருக்கிறார். போட்டிகளுக்கான டிக்கெட்டையுமே அவர்தான் வாங்கிக் கொடுப்பார்.'

Shankar with Dhawan Family
Shankar with Dhawan Family

எதற்கு அவரின் குடும்பத்தையெல்லாம் பச்சைக் குத்தியிருக்கிறீர்கள்? என்றேன்.

என்ன எப்போ நேர்ல பார்த்தாலும் என்னோட குட்டிப் பொண்ணு நீத்து எப்டி இருக்கான்னுதான் தவான் கேட்பாரு. என்னோட குடும்பத்த பத்தி அவரு விசாரிக்காம விட்டதே இல்ல. நாங்க நல்லா இருக்குறத எப்பவுமே உறுதி பண்ணிக்கிட்டே இருப்பாரு. என் குடும்பத்து மேல அக்கறை எடுத்துகிறவரோட குடும்பத்துக்கு நான் செய்யுற மரியாதை அது' என்கிறார் சங்கர் கீதா தவான்!
சங்கர் கீதா தவான்
சங்கர் கீதா தவான்

சச்சின், தோனி போன்றோருக்குத்தான் இதேபோன்ற ரசிகர்களை பார்த்திருப்போம். தவானுக்கும் இப்படி ஒரு ரசிகர் இருக்கிறார் என்பது இப்போதுதான் தெரியவருகிறது.

மனிதர்கள் ஆச்சர்யமானவர்கள். தீவிர ரசிகர்கள் பேராச்சரியம் ஆனவர்கள்!