உலகக் கோப்பை முடிந்ததும் இந்திய வீரர்கள் ஓய்வில் இருந்தனர். ஓய்வுக்குப் பிறகுதான் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்துக்கு எல்லோரும் கிளம்பினர். TNPL தொடரில் பங்கேற்க வேண்டிய வீரர்களுமே, சில போட்டிகளுக்குப் பிறகே அணியில் இணைந்தனர். விஜய் சங்கர் - பும்ராவின் மிரட்டல் யார்க்கரால் காயமடைந்து, உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியவர், அதிக நாள்கள் ஓய்வெடுக்கவில்லை. காயத்துக்குப் போட்டிருக்கும் கட்டோடு, தன் அணியுடனருடன் (சேப்பாக் சூப்பர் கில்லீஸ்) களத்தில் இறங்கி உரையாடிக்கொண்டிருந்தார். போட்டி தொடங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்னால் டக் அவுட்டுக்கு அருகே சந்தித்துப் பேசினேன்.
உங்களுடைய உலகக் கோப்பை அனுபவம் எப்படி இருந்தது?

``இந்த உலகக் கோப்பை, என் வாழ்வின் மிகச் சிறந்த அனுபவங்களுள் ஒன்று. கிரிக்கெட் விளையாடும் அனைவருக்குமே, உலகக் கோப்பை போன்ற தொடரில் விளையாட வேண்டும் என்ற கனவு இருக்கும். எனக்கும் அப்படித்தான். அந்தக் கனவு இப்போது நிறைவேறியிருக்கிறது. அப்படி ஒரு தொடரில், இந்திய அணியின் அங்கமாக நானும் இருந்திருக்கிறேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி!''
உலகக் கோப்பையின்போது காயமடைந்து அணியிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது. அப்போது எப்படி உணர்ந்தீர்கள்?
``உண்மையிலேயே அது மிகவும் சங்கடமான தருணம். இந்திய அணியிலிருந்து வெளியேற வேண்டும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால், வேறு வழியில்லையே. என்னதான் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், பிராக்டிகலாக அந்தச் சூழ்நிலையை மாற்ற வழியில்லை. ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். வருத்தத்துடனேயே இங்கு திரும்பினேன். ஆனால், இந்தியாவின் ஒவ்வோர் ஆட்டத்தையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டேதான் இருந்தேன். நியூசிலாந்துக்கு எதிராகத் தோற்றபோது மிகவும் கவலையாக இருந்தது. மிகப்பெரிய பாரத்தை உணர முடிந்தது. அங்கு இல்லாமல் போய்விட்டோமே என்ற ஏமாற்றம் நிச்சயமாக இருந்தது.''
உலகக் கோப்பை அணியில் உங்களுடைய தேர்வு சில இடங்களில் கேள்விக்குட்பட்டது. உங்களுக்கும் அந்தத் தேர்வை சரியென நிரூபிக்க வேண்டிய நெருக்கடியும் உங்களுக்கும் இருந்திருக்கும். அப்படியிருக்கும்போது, டிரெஸ்ஸிங் ரூமில் உங்களுக்கு எப்படியான ஆதரவு கிடைத்தது?
``அணியினர் எப்போதுமே எனக்கு ஆதரவு அளித்துக்கொண்டுதான் இருந்தனர். சொல்லப்போனால் அது பெரிய விஷயமெல்லாம் இல்லை. கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அணிக்குள் நுழைவதுதான் பிரச்னை. அணிக்குள் நுழைந்துவிட்டாலும், வீரர்களும் சரி, சப்போர்ட் ஸ்டாஃப்களும் சரி, எப்போதுமே நமக்கு சப்போர்டிவாகத்தான் இருப்பார்கள். தனிப்பட்ட முறையில் நானும் அதைப்பற்றியெல்லாம் யோசிக்கவே மாட்டேன். என்னைப் பொறுத்தவரை நான் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே யோசிப்பேன். நான் நல்ல பங்களிப்பைக் கொடுத்து அணி வெற்றி பெற வேண்டும். அதுமட்டும்தான். அதுதான் நான் கவனம் செலுத்தும் விஷயம்.''

``விஜய் சங்கர் தொடக்கத்திலிருந்தே தன்னுடைய திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு எதிராக நான் விளையாடியபோது அவர் வேறு ஒரு வீரராக இருந்தார். இப்போது, ஒவ்வொரு விஷயத்திலும் பெரிய முன்னேற்றம் கண்டிருக்கிறார். தன் பேட்டிங்கை மேம்படுத்த கடுமையான முயற்சிகள் எடுத்துக்கொண்டே இருக்கிறார். பேட், பால் இரண்டிலுமே அணிக்குத் தேவையான பங்களிப்பை அவரால் அளிக்க முடியும். அந்த பேலன்ஸை அடைந்திருக்கிறார். இந்தக் குறுகிய காலகட்டத்தில், அவர் இந்திய அணியின் உடையில் வியக்கத்தக்க செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது சர்வதேச டி-20 பயணம் எதிர்பார்த்ததைப்போல் இல்லை. ஆனால், அதிலிருந்து மீண்டு, இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்து சிறப்பாகச் செயல்பட்டார். அடுத்து, உலகக் கோப்பை அணிக்கும் தேர்வானார். இந்தக் காலகட்டத்தில் எக்கச்சக்க விஷயங்களைச் செய்திருக்கிறார். இதுவே அவர் தன்னுடைய ஆட்டத்தில் எவ்வளவு உழைப்பைக் கொட்டுகிறார் என்பதை உணர்த்தும். இதுமட்டுமல்லாமல், ஃபிட்னஸ் விஷயத்திலும் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். சில பல காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், தன் உடல்வாகை சரியாகப் பராமரிப்பது போன்ற விஷயங்களில் கடந்த சில ஆண்டுகளாக நன்றாகவே செயல்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து செய்தால், நிச்சயமாக அணியில் நிரந்தர இடம் இவருக்கு உண்டு.''- அபிஷேக் நாயர்
இந்திய ஒருநாள், டி-20 அணியில் இடம் பிடித்திருக்கிறீர்கள். அந்த இடத்தைத் தக்கவைக்க, அந்த ஃபார்மட்டில் மட்டும் கவனம் செலுத்தப்போகிறீர்களா, இல்லை ரெட் பால் ஃபார்மட்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்போகிறீர்களா?
``என்னைப் பொறுத்தவரை கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். அவ்வளவுதான். ரெட் பால், வைட் பால் என்று ஃபார்மட்களைப் பிரித்துப்பார்க்கவும் நான் விரும்பவில்லை. அனைத்து ஃபார்மட்களும் முக்கியம்தான். நான்கு நாள் போட்டிகளும் முக்கியம்தான். சொல்லப்போனால், நான் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காலத்தில், டெஸ்ட் அணிக்குத் தேர்வாக வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது. டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவது ஒவ்வொரு வீரருக்குமே முக்கியமான ஒன்று. அதேபோல், இப்போதைய டிரெண்டிங் டி-20, ஒருநாள் ஃபார்மட்கள். அதிலும் சிறப்பாக ஆடவேண்டியது அவசியம். ஒரு கிரிக்கெட்டராக நான் மூன்று ஃபார்மட்டுக்கும் ஏற்றது போல் என்னைத் தயார்படுத்திக்கொள்வது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அதற்கு உழைக்கத் தொடங்க வேண்டும்.''
TNPL தொடர் எந்த அளவுக்குத் தமிழக கிரிக்கெட் வட்டாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
``இந்தத் தொடர் பல இளம் வீரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. பல புதிய வீரர்கள் ஒவ்வோர் ஆண்டும் வாய்ப்புப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். சென்னையைத் தவிர்த்து, பல மாவட்டங்களிலிருந்தும் நிறைய வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கிறார்கள். ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பதற்கும், தமிழக அணிக்குத் தேர்வாவதற்கும் மிகச் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. இதெல்லாமே, இந்தத் தொடரால் ஏற்படும் நல்ல விஷயங்கள்.''