எல்லா துறைகளிலும் நாளுக்கு நாள் சாதனைகள் என்பது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன. அதுவும் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்படும் சாதனைகளுக்குப் பஞ்சமே இல்லை. ஏறக்குறைய எல்லாப் போட்டிகளிலும் எதாவது ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டுக் கொண்டேயிருப்பதுதான் கிரிக்கெட்டின் அழகு. ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் முறியடிக்க முடியாத, முறியடிக்கப்படாத சாதனைகள் என்று கிரிக்கெட்டில் சிலவற்றைச் சொல்லலாம். அப்படி நீண்ட காலமாக முறியடிக்கப்படாத சாதனைகளைப் பற்றித்தான் இங்கு பார்க்கப் போகிறோம்.
`டான் ஆஃப் கிரிக்கெட்'
ஆஸ்திரேலியக் கிரிக்கெட்டின் `ஆண்டவர்', டெஸ்ட் கிரிக்கெட்டின் `டான்' எனக் கெத்தாக வலம் வந்தவர் டான் பிராட்மேன். அவர் தன்வசம் வைத்துள்ள ஒரு சாதனை, 72 ஆண்டுகளாக முறியடிக்கப்படாமலேயே உள்ளது. `டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச சராசரி' என்பதுதான் அந்தச் சாதனை. 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,996 ரன்கள் குவித்துள்ள பிராட்மேனின் டெஸ்ட் சராசரி 99.94! முதல்தர டெஸ்ட் போட்டிகளிலும் 28,067 ரன்களுடன் 95.14 என்ற சராசரி பெற்றுள்ளார் பிராட்மேன். ஆஸ்திரேலியாவுக்காக 124-வது டெஸ்ட் வீரராகக் களம் கண்டார் பிராட் மேன்; அதன் பின்னர் 334 வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்காகவும் ஆயிரத்துக்கும் மேலான வீரர்கள் மற்ற தேசங்களுக்காகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி விட்டனர். ஆனால், அவரது டெஸ்ட் சராசரியை எவராலும் நெருங்கக் கூட முடியவில்லை. அவருக்கு அடுத்த இடத்திலிருக்கும் ஸ்மித்தின் சராசரிகூட 62.84 தான்.

ஓடி உழைத்த 96!
ஒருநாள் போட்டிகளில் பவுண்டரிகளோ, சிக்ஸர்களோ இல்லாமல் 30, 40 ரன்கள் எடுக்கலாம். ஆனால், 96 ரன்கள் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு சாதனைதான். தன் அணிக்காக ஓடி ஓடி உழைத்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் பரோரே. 1994-ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 203 நிமிடங்கள் களத்தில் நின்று 138 பந்துகளைச் சந்தித்தவர் தப்பித் தவறிக் கூட ஒரு பவுண்டரியை அடிக்கவில்லை. சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தவர் கடைசி ஓவர் என்பதால் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார். அது கேட்ச் ஆனதால் 96 ரன்களோடு பெவிலியனுக்குத் திரும்பினார் பரோரே.

முறியடிக்கப் பிறந்துவிட்டார்?
``இந்தச் சாதனையை முறியடிக்கனும்னா எவனாவது பிறந்துதான் வரணும்" என்கிற மாதிரியான ஒரு சாதனைதான் `சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள்'. அந்த சாதனையை சில பல ஆண்டுகளாகத் தன்வசம் வைத்திருப்பவர் சச்சின் டெண்டுல்கர். மொத்தம் 664 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 34,357 ரன்கள் குவித்திருக்கிறார் சச்சின். `இந்தச் சாதனையை முறியடிக்கப் பிறந்தவர்தான் விராட் கோலி' என்று இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் நம்பி வருகிறார்கள். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றக் கோலி அடிக்க வேண்டிய ரன்கள் 12,580. தற்போது கோலியின் வயது 31. குறைந்தது இன்னும் 6 ஆண்டுகளாவது சர்வதேசப் போட்டிகளில் கோலி விளையாடுவார். அப்படி 6 ஆண்டுகள் விளையாடினால் ஆண்டுக்கு, கோலி 2,100 ரன்கள் அடிக்க வேண்டியிருக்கும்.
இந்தச் சாதனையைக் கோலி முறியடிப்பாரா என்பதற்கான பதிலைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
சதங்களில் சதம்!
சதங்களில் சதமடித்தவர் சச்சின். அதாவது 100 முறை சர்வதேசப் போட்டிகளில் 100 ரன்களைக் கடந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். சச்சின் இந்தச் சாதனையையும் விராட் கோலி முறியடிப்பார் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் இப்போதே 70 சதங்களுடன் மூன்றாமிடத்துக்கு வந்துவிட்டார் கோலி. வெகு விரைவில் ரிக்கி பான்ட்டிங்கை (71) ஓரம்கட்டி இரண்டாமிடத்துக்கு வந்துவிடுவார். கோலி, சர்வதேசப் போட்டிகளில் அதிக சதம் என்ற சாதனையை முறியடித்தாலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் (51 சதங்கள்) என்ற டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பது மிக மிகக் கடினம்.

டெஸ்ட்டில் 400!
டெஸ்ட் போட்டிகளில் சேவாக் முதல் பந்தில் பவுண்டரி அடிக்கும்போதே, `இன்னைக்கு லாரா ரெக்கார்டு காலி' என்று ஒவ்வொரு இந்திய ரசிகனும் முடிவு செய்துகொள்வான். ஆனால், சேவாக் ஓய்வுபெறும்வரை அந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. ஏன், இன்று வரையிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 என்ற மந்திர எண்ணை அடைய எவராலும் முடியவில்லை. 2004-ம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணிலேயே 400 ரன்களைக் குவித்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்தார் ப்ரெய்ன் லாரா. டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் மூன்றாமிடத்திலும் லாராதான் இருக்கிறார். 1994-ம் ஆண்டு அதே இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 375 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் லாரா.

சுழல் மன்னனின் விக்கெட் வேட்டை!
1990-கள் மற்றும் 2000-களில் பேட்ஸ்மேன்களைத் திணறடித்த சுழல் மன்னன் முத்தையா முரளிதரன்தான் `சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள்' என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். 495 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி மொத்தம் 1,347 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் முரளிதரன். இவரைத் தவிர ஷேன் வார்னே(1001) மட்டுமே சர்வதேச போட்டிகளில் 1000 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார். தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்ஸன் 871 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது அவருக்கு வயது 37. குறைந்தபட்சம் இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே சர்வதேசப் போட்டிகளில் ஆண்டர்ஸன் விளையாடுவார். எனவே, 2 ஆண்டுகளில் அவரால் 476 விக்கெட்டுகளை வீழ்த்த முடியாது என்பதே உண்மை. டெஸ்ட் போட்டிகள் விளையாடுவது குறைந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் முரளிதரனின் இந்தச் சாதனையை முறியடிப்பதென்பது முடியாத ஒன்றாகும்.
மூன்று 200!
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து கிட்டதட்ட 40 ஆண்டுகள் கழித்துதான் முதல் இரட்டைச் சதமே அடிக்கப்பட்டது. அந்த முதல் இரட்டைச் சதத்தை அடித்தவர் சச்சின். இதுவரை இந்த இரட்டைச் சத சாதனையை 3 இந்திய வீரர்களும் 3 வெளிநாட்டு வீரர்களும் நிகழ்த்தியுள்ளனர். ரோகித் ஷர்மா மட்டுமே இந்தச் சாதனையை மூன்று முறை செய்துவிட்டார். மூன்று முறைக்கு மேல் இரட்டைச் சதம் கடந்து ரோகித்தின் சாதனையை எவரேனும் முறியடிப்பார்களா என்பது சந்தேகமே.

ஒருநாள் போட்டிகளில் அணியாக சேர்ந்தே சராசரியாக 300 ரன்கள்தான் அடிக்கப்படுகின்றன. ஆனால், ரோகித் தனியாக நின்று 264 ரன்களைக் குவித்தது வேற லெவல் ரெக்கார்ட். இந்த ரெக்கார்டை முறியடிக்கப் பல யுகங்கள் ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
998 டிஸ்மிசல்ஸ்!
தன்னுடைய 15 வருட விக்கெட் கீப்பிங்கில் 998 டிஸ்மிசல்களில் ஈடுபட்டவர் மார்க் பவுச்சர். மார்க் பவுச்சர், டெஸ்ட் போட்டிகளில் 532 கேட்ச்களையும், ஒருநாள் போட்டிகளில் 403 கேட்ச்களையும் டி20 யில் 18 கேட்ச்களையும் பிடித்துள்ளார். இந்த மூன்று ஃபார்மெட்களையும் சேர்த்து சர்வதேசப் போட்டிகளில் மொத்தம் 46 முறை ஸ்டம்பிங் செய்துள்ளார். இதுவரை சர்வதேசப் போட்டிகளில் 900 டிஸ்மிசல்களுக்கு மேல் இரண்டு வீரர்கள் மட்டுமே செய்துள்ளனர். ஒருவர் மார்க் பவுச்சர் மற்றவர் ஆடம் கில்கிறிஸ்ட் (905). எனவே, 998 டிஸ்மிசல்கள் என்ற சாதனை விக்கெட் கீப்பிங்கிற்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கும்.

மிஸ்டர் ஸ்ட்ரைக் ரேட்!
மைதானத்தின் அனைத்துப் பக்கங்களிலும் பந்துகளைச் சிதறடிப்பதால் மிஸ்டர் 360 என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் ஏ பி டி. இதுவரை ஒருநாள் போட்டிகளில் மட்டும் 25 சதங்களை அடித்துள்ளார் டி வில்லியர்ஸ். 25 சதங்கள் என்பது சாதனையல்ல. ஆனால், அடித்த 25 சதங்களிலும் அவரது ஸ்ட்ரைக் ரேட் 100 ப்ளஸ் என்பதுதான் சாதனை. அதுவும் மேற்கிந்தியத் தீவுகளோடு 44 பந்துகளில் 149 ரன்கள் குவித்தபோது ஏ பி டி-யின் ஸ்ட்ரைக் ரேட் 338.63! இனிமேல் ஏ பி டியை மிஸ்டர் ஸ்ட்ரைக் ரேட் என்றும் அழைக்கலாம். ஒருநாள் போட்டிகளில் அதிவேக சதமடித்தவர் ஏ பி டிதான். 31 பந்துகளில் சதம் கடந்து அவர் செய்த சாதனையை இன்னும் சில ஆண்டுகளில் யாரேனும் முறியடிக்கலாம். ஆனால், 25 சதங்களை 100 ப்ளஸ் ஸ்ட்ரைக் ரேட்டில் கடப்பதென்பது முறியடிக்க முடியாத ஒன்றாகவே இருக்கும் எனலாம்.
வயதான கேப்டன்!
`கிரிக்கெட்டின் தந்தை' என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டவர் வில்லியம் கில்பர்ட் கிரேஸ். 1880 முதல் 1899 வரை இங்கிலாந்து அணிக்கு விளையாடிய கிரேஸ் 22 டெஸ்ட் போட்டிகளில் 1098 ரன்கள் அடித்திருக்கிறார். தனது 50 வயது வரை இங்கிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்த கிரேஸ்தான் சர்வதேச கிரிக்கெட்டில் மிகவும் வயதான கேப்டன்.

எட்ட முடியாத 8!
2001-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை வீரர் சமிந்தா வாஸ் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில், ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளை ஒரே பந்துவீச்சாளர் வீழ்த்திய சாதனை 11 முறை அரங்கேறியுள்ளது. ஆனால், ஒரு போட்டியில் 8 விக்கெட்டுகள் என்பது வாஸை தவிர வேறு எவருக்கும் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது.

நைட் வாட்ச்மேனின் டபுள் செஞ்சூரி!
ஆட்ட நேரம் முடியும் தருணத்தில் இன்னொரு பேட்ஸ்மேனை களமிறக்கி, அவர் பெளலர்களைக் கணித்து ஆடத் தவறினால் அன்றைய நாளில் மேலுமொரு விக்கெட் போய்விடும் என்பதால் பெளலர்களை நைட் வாட்ச்மேனாக களமிறக்குகிறார்கள். அப்படி நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய எவரும் சதம் கூட அடித்ததில்லை, கில்லஸ்பியைத் தவிர. ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி, வங்கதேசத்துக்கு எதிராக நைட் வாட்ச்மேனாக களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் கில்லஸ்பி 425 பந்துகளைச் சந்தித்தது மட்டுமல்லாமல் 201 ரன்களையும் சேர்த்திருந்தார். அதிக பந்துகளைச் சந்தித்த, அதிக ரன்களைக் குவித்த நைட் வாட்ச்மேன் என்ற சாதனையை வேறொருவர் பிறந்து வந்தால்கூட முறியடிக்க முடியுமா என்று தெரியவில்லை.

டபுள் ஹாட்ரிக்!
அதுவரை 2,555 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றிருந்தன. ஆனால் ஒரு பந்துவீச்சாளர்கூட தொடர்ந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை. 2,556-வது சர்வதேச ஒருநாள் போட்டி தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்றது. 2007-ம் ஆண்டு உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றுப் போட்டி அது. தென்னாப்பிரிக்க அணி ஜெயிக்க 32 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. 5 விக்கெட்டுகள் மீதமிருந்தன. 45-வது ஓவரின் கடைசி இரண்டு பந்துகளிலும் 47-வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் விக்கெட்களை வீழ்த்தி டபுள் ஹாட்ரிக் சாதனையைப் படைத்தார் மலிங்கா! (ஆனால், அந்தப் போட்டியில் இலங்கை 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது). இந்தச் சாதனையை எவராலும் சமன்கூட செய்ய முடியாது என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு, `ஆம்! நீங்கள் நினைத்தது உண்மைதான். வேறு எவராலும் முடியாது. ஆனால், நானே மீண்டுமொரு முறை இதைச் செய்வேன்' என்று, தனது 24 வயதில் செய்த அதே டபுள் ஹாட்ரிக் சாதனையை 36-வது வயதிலும் அச்சு பிசகாமல் செய்து காட்டினார் மலிங்கா. கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியின் 3-வது ஓவரில் தொடர்ந்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை மண்ணில் தன் ரசிகர்கள் முன்பு மாஸ் காட்டினார் மலிங்கா!
சர்வதேசப் போட்டிகளில், 5 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் லசித் மலிங்கா மட்டுமே!
ஆல் ரவுண்டர்களின் அடையாளம்!
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர் என்ற அடையாளத்தோடு வலம் வந்தவர்களில் மிக முக்கியமானவர் தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸ். பேட்டிங் பெளலிங் என இரண்டிலும் முழுமை காட்டிய வெகு சில ஆல் ரவுண்டர்களில் இவரும் ஒருவர். சர்வதேசப் போட்டிகளில் 25,534 ரன்களும் 577 விக்கெட்டுகளும் பெற்றுள்ளார் காலிஸ். தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் ஆல் ரவுண்டர்களில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் 11,752 ரன்களையும் 562 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார். அவருக்கு இப்போது 32 வயது முடிந்தவடைந்துள்ளது. சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியது குறித்து ஐசிசி-க்கு தகவல் தெரிவிக்காத காரணத்தால் 2 ஆண்டுகள் ஷகிப் அல் ஹசனுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை நீங்கிய பின் நான்கு ஐந்து ஆண்டுகள் வங்கதேச அணிக்காக விளையாடினாலும் ஜாக் காலிஸின் விக்கெட் சாதனைகளை முறியடிக்க முடியுமே தவிர ஆல் ரவுண்டராக 25,000 ரன்கள் என்பதை முறியடிப்பது சாத்தியமில்லாத ஒன்று. இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் சர்வதேசப் போட்டிகளில் 7,120 ரன்களும் 223 விக்கெட்டுகளும் பெற்றுள்ளார். பென் ஸ்டோக்ஸின் வயது 28. இதே ஃபார்மில் இன்னும் 10 வருடங்கள் விளையாடினால் காலிஸின் சாதனையை காலி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

இரண்டு இன்னிங்ஸிலும் ராஜா!
1956-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜிம் லேக்கர் நிகழ்த்திய ஒரு சாதனையை இன்றுவரை வேறு எவரும் சமன்கூட செய்யவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஒரு டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 19 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார் லேக்கர். 1913-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் சிட்னி ப்ரேன்ஸ் முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். மொத்தமாக அந்தப் போட்டியில் அவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். வேறு எவரும் ஒரு டெஸ்ட் போட்டியில் 17 விக்கெட்டுகள்கூட வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு டெஸ்டில் 456!
ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 30 வருடமாக முதலிடத்தில் இருப்பவர் இங்கிலாந்து வீரர் கிரகாம் கூச். 1990-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 333 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 123 ரன்களும் சேர்த்திருந்தார் கூச். மொத்தமாக அந்தப் போட்டியில் மட்டும் 456 ரன்களைக் குவித்திருந்தார் கிரகாம் கூச்.

எகானமியில் ரெக்கார்ட்!
1992-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் வேகப் பந்துவீச்சாளர் ஃபில் சைமன்ஸ் 10 ஓவர்கள் வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். 10 ஓவர்களில் 8 மெய்டன் ஓவர்கள் அடங்கும். அவரது எகானமி வெறும் 0.30 மட்டுமே! இவருக்குப் பின் இந்தப் பட்டியலில் இங்கிலாந்து வீரர் Dermot Reeve 0.40 என்ற எகானமியுடன் இடம்பெற்றுள்ளார். இவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்கள் வீசி 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

கோப்பையில் ஹாட்ரிக்!
பேட்டிங் பெளலிங்கில் ஹாட்ரிக் என்பதைத் தாண்டி அணியாகவே ஹாட்ரிக் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. 1999, 2003, 2007 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் தொடர்ந்து உலகக் கோப்பையைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனையைப் புரிந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இதுவரை 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஒரே அணியும் ஆஸ்திரேலியாதான். இந்தச் சாதனையைக் கூட ஒரு நாள் ஏதோ ஒரு அணி முறியடித்துவிடும். ஆனால், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் உலகக் கோப்பை போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை கோப்பையைத் தட்டிச் செல்ல முடியுமா என்பது சந்தேகமே.

இலங்கை அணியின் இமாலய ரன் குவிப்பு!
டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் 900 ரன்கள் என்பது இரு முறை மட்டுமே குவிக்கப்பட்டுள்ளது. 1938-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 903 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 59 ஆண்டுகள் கழித்து இந்தச் சாதனையை முறியடித்தது இலங்கை அணி. 1997-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 952 ரன்கள் குவித்திருந்தது இலங்கை அணி. இலங்கை வீரர் சனாத் ஜெய்சூர்யா இந்தப் போட்டியில் 340 ரன்கள் குவித்திருந்தார்.

முறியடிக்க முடியாத சாதனைகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் கமென்ட்டில் சொல்லுங்கள்!