சென்னைக்கும் லக்னோவுக்கும் இடையேயான போட்டி முடிந்த பிறகு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு தோனி துஷார் தேஷ்பாண்டேவை அனுப்பியிருந்தார். அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கி துஷாரை நிலைப்படுத்தும் எண்ணம் தோனிக்கு இருக்கக்கூடும். யார் இந்த துஷார் தேஷ்பாண்டே?

1. துஷார் உதய் தேஷ்பாண்டே, தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் வீரர்.
2. மும்பையைச் சேர்ந்த துஷார் தேஷ்பாண்டே, 2016-17ல் மும்பை அணிக்காகத் தனது முதல் ரஞ்சி கோப்பை போட்டியை விளையாடினார்.
3. 27 வயதாகும் துஷார், இதற்கு முன் ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார். தற்போது சென்னை அணியில் அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக ஐ.பி.எல் போட்டியின் முதல் இம்பேக்ட் ப்ளேயராக களம் இறக்கப்பட்டார்.
4. இடது கை பேட்ஸ்மேன் மற்றும் ரைட் ஆர்ம் மீடியம் பந்துவீச்சாளரான இவர், இதுவரை 9 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

5.கடந்த சீசனுக்கு முன்பான மெகா ஏலத்தில் துஷார் தேஷ்பாண்டேவை சென்னை அணி 20 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
6. லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய நேற்றைய போட்டி உட்பட, இதுவரை விளையாடிய ஐபிஎல் போட்டிகளில் 7 விக்கெட்டுகள் எடுத்துள்ளார், அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 2-37 அவரின் சிறந்த ஆட்டமாக உள்ளது.
7. 2019-20 துலீப் கோப்பை தொடருக்காக இந்தியாவின் ப்ளூ டீம் அணியில் சேர்க்கப்பட்டார்.
8. லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில், அந்த அணியின் முக்கிய வீரரான பூரனின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். மேலும், 16 மற்றும் 18 ஆகிய ஓவர்களில் எக்கனாமிக்கலாக வீசி அணியின் வெற்றிக்கு உதவினார்.
9. நேற்றைய ஆட்டத்தில் தான் வீசிய முதல் ஓவரில் 18 ரன்களை கொடுத்த போதும், எக்ஸ்ட்ராஸைத் தாண்டி, டெத் ஓவர்களில் சிறப்பாக வீசி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியதற்காகப் பாராட்டப்பட்டார்.

போட்டிக்குப் பிறகு பேசிய துஷார், ``நான் முடிந்து போன ஒன்றை விட, தற்போது நிகழ்வதையே நம்புபவன். ஒரு T20 ஆட்டத்தில் நோ பால் வீசுவது பெரிய குற்றம் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் அதையே யோசித்துக் கொண்டு இருந்தால், நான் இன்னும் பத்து ரன்கள் அதிகமாகக் கொடுத்திருக்க நேர்ந்திருக்கும். அதனால் நான் போட்டியில் எப்படி கம்பேக் கொடுப்பது என்பதை மட்டுமே சிந்தித்தேன். நான் இந்த அணிக்காக நிச்சயமாக இந்தப் போட்டியில் வெற்றியை பெற்றுத் தருவேன் என எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்" என்றார் துஷார்.