Published:Updated:

மோடியின் கனவு, அமித்ஷாவின் திட்டம், ட்ரம்ப் வருகை... - உலகின் #1 மைதானமான மோதிராவின் கதை!

சர்தார் படேல் மைதானம்
சர்தார் படேல் மைதானம்

பழைமை அடைந்த பின் சர்தார் படேல் மைதானத்தில் சீரமைப்புப் பணியை மேற்கொள்ளாமல் முற்றிலுமாக இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டியது ஏன்?

கிரிக்கெட் மைதானம்!
சினிமா பிரியர்களுக்கு சினிமா எவ்வளவு பிடிக்குமோ அதே அளவு திரையரங்குகளையும் பிடிக்கும். அதே போலத்தான் கிரிக்கெட் பிரியர்களுக்கும் கிரிக்கெட் மைதானங்கள் மீது கொள்ளைக் காதல் இருக்கும்.

என்னதான் வீட்டில் ஹோம் தியேட்டர் செட் அப்பில் மேட்ச் பார்த்தாலும், நமக்குப் பிடித்த வீரர்கள் அடிக்கும் சிக்ஸர்களையும் எடுக்கும் விக்கெட்டுகளையும், தாவிப் பிடித்து பந்துகளைத் தடுக்கும் ஃபீல்டிங்கையும் கைதட்டி, விசில் அடிக்கும் த்ரில் முழுமையடைவது மைதானங்களுக்கு நேரில் சென்று பார்க்கும்போது மட்டுமே! சேப்பாக்கம், ஈடன் கார்டன் தொடங்கி வான்கடே வரையிலும் இந்தியர்கள் கொண்டாடித் தீர்த்த கிரிக்கெட் மைதானங்கள் ஏராளம். அந்தப் பட்டியலில் புது வரவாய் சேரவுள்ள மைதானம்தான் அகமதாபாத்தின் மோதிரா பகுதியில் அமைந்துள்ள சர்தார் படேல் மைதானம்.

Sardar Patel Stadium
Sardar Patel Stadium
BCCI
ட்ரம்ப் - மோடி இணைந்து திறந்து வைத்த சர்தார் வல்லபபாய் படேல் கிரிக்கெட் மைதானம்தான் இந்தக் கட்டுரையின் பேசுபொருள்.

ஏற்கெனவே அகமதாபாத்தின் மோதிரா நகரில் அமைந்திருந்ததுதான் சர்தார் வல்லபபாய் படேல் கிரிக்கெட் மைதானம். பிறகு, எப்படி இது புது மைதானமாகும் என்று கேட்கிறீர்களா... அதற்கான பதிலை அடுத்த பத்தியில் காணலாம். அதற்கு முன்பாகப் பழைய சர்தார் வல்லபபாய் படேல் மைதானம் பற்றிய டேட்டாவை கீழே உள்ள இன்ஃபோகிராபிக்ஸில் படித்துவிடுங்கள்.

Old Sardar patel stadium
Old Sardar patel stadium
Vikatan Infographics

இந்த மைதானம் குஜராத்தின் மோதிராவில் 1982-ம் ஆண்டு கட்டப்பட்டது. பொதுவாக மைதானங்கள் பழைமை அடையும்போது அவற்றைச் சீரமைப்பதும் விரிவாக்கம் செய்வதும்தான் வழக்கம். ஆனால், சர்தார் படேல் மைதானத்தில் சீரமைப்புப் பணிகள் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக, 2016-ம் ஆண்டு அந்த மைதானத்தை முற்றிலுமாக இடித்துவிட்டு புதிதாக மைதானம் கட்ட குஜராத் கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டது. அந்தத் திட்டத்தின்படிதான் மோதிராவில் உள்ள சர்தார் படேல் மைதானம் இன்று புது மைதானமாக உருவெடுத்துள்ளது.

World's Biggest Cricket Stadium
World's Biggest Cricket Stadium
Vikatan Infographics
பழைய மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட சில சாதனைகளை அடுத்தடுத்தப் பத்திகளில் காணலாம்...

டெஸ்ட்

1983-ம் ஆண்டு முதல் இங்கு சர்வதேச போட்டிகள் நடைபெற்று வந்தன. இதுவரை பழைய சர்தார் படேல் மைதானத்தில் 12 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை தன் வசம் வைத்திருப்பவர் இந்திய வீரரான ராகுல் டிராவிட். மொத்தம் 7 போட்டிகளில் விளையாடி 771 ரன்களைக் குவித்திருக்கிறார்.

Dravid In Sardar patel stadium
Dravid In Sardar patel stadium
GCA

இந்தப் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கும் சச்சின், 9 போட்டிகளில் 642 ரன்கள் சேர்த்திருக்கிறார். அனில் கும்ப்ளே 7 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 36 விக்கெட்டுகள் பெற்று இந்த மைதானத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் குவித்தவராகத் திகழ்கிறார்.

Test Records In Old Sardar Patel Stadium
Test Records In Old Sardar Patel Stadium
Vikatan Infographics
சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியது இந்த மைதானத்தில்தான்.
1999-ம் ஆண்டு சச்சின் தனது முதல் இரட்டைச் சதத்தை பதிவு செய்தது சர்தார் வல்லபபாய் படேல் கிரிக்கெட் மைதானத்தில்தான். இந்திய ரசிகர்களால் மினி சுவர் (MINI WALL) என்று செல்லமாக அழைக்கப்படும் புஜாராவும் தனது முதல் இரட்டைச் சதத்தை இங்குதான் பதிவு செய்தார்.
கபில்தேவ் தனது 432-வது டெஸ்ட் விக்கெட்டை இந்த மைதானத்தில்தான் வீழ்த்தினார். அதன் மூலம், அந்தக் காலகட்டத்தில் `அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரர்' என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் கபில்தேவ்.

ஒருநாள் போட்டிகள்

இதுவரை இங்கு 24 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஒருநாள் போட்டிகளிலும் ராகுல் டிராவிட்தான் டாப் ஸ்கோரர்! இந்த மைதானத்தில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி மொத்தம் 342 ரன்களைச் சேர்த்திருக்கிறார் டிராவிட். 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 316 ரன்களுடன் இந்தப் பட்டியலில் இரண்டாமிடத்தில் இருக்கிறார் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த வீரரான கிறிஸ் கெய்ல். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 6 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் கபில்தேவ்.

ODI Records In Old Sardar Patel Stadium
ODI Records In Old Sardar Patel Stadium
Vikatan Infographics
`சூச்சின்' டெண்டுல்கர்... `டொலாண்ட்' ட்ரம்ப்..! - வைரலாகும் `நமஸ்தே ட்ரம்ப்’ உரைகள் #TrumpInIndia
சச்சின், ஒருநாள் போட்டிகளில் 18,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியது இந்த மைதானத்தில்தான்.
அதிக ஒருநாள் போட்டிகள் நடைபெற்ற இந்திய மைதானங்களுள் சர்தார் படேல் மைதானத்துக்கு 4-வது இடம்!

சர்வதேச டி20 போட்டிகள்

இதுவரையிலும் பழைய சர்தார் படேல் மைதானத்தில் ஆண்கள் அணி ஒரே ஒரு சர்வதேச டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. 2012-ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா அணி ஆடிய அந்தப் போட்டியில், சர்தார் படேல் மைதானத்தின் எல்லா திசைகளிலும் பந்துகளைப் பறக்கவிட்ட யுவராஜ் சிங், 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 36 பந்துகளில் 72 ரன்களைக் குவித்திருந்தார். இதுதவிர 2011-ம் ஆண்டு இந்த மைதானத்தில், இந்திய மகளிர் அணி மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. அதில் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றிபெற்று கோப்பையைக் கைப்பற்றியது இந்திய மகளிர் அணி.

T20I  Records In Old Sardar Patel Stadium
T20I Records In Old Sardar Patel Stadium
Vikatan Infographics
பழைய சர்தார் படேல் மைதானத்தில் சில சாதனைகளை வெளிநாட்டு வீரர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர். அந்தச் சாதனைகள் எல்லாம் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சர்தார் படேல் மைதானத்தில் இந்திய வீரர்களால் தகர்த்தெறியப்படும் என்பதில் ஐயமில்லை.

இப்போது புது மைதானத்தின் கதைக்கு வருவோம்... முதலில் பழைய மைதானத்தையே சற்று விரிவுபடுத்திச் சீரமைக்கலாம் என்ற திட்டமே பிசிசிஐ-யிடம் இருந்தது. ஆனால், இந்த மைதானத்தை முற்றிலுமாக இடித்துவிட்டு உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக இதை மாற்ற வேண்டுமென்று பிரதமர் மோடி திட்டமிட்டார். அதன் விளைவாகத்தான் இன்று உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக மாறியுள்ளது சர்தார் படேல் மைதானம்.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள மோதிரா மைதானம், நமது பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம். உலகின் மிகப் பெரிய மைதானமாகவும் வேறெந்த மைதானங்களிலும் இல்லாத வசதிகளுடனும் இதைக் கட்டி முடிக்க வேண்டுமென்பதும் பிரதமர் மோடியின் யோசனை. அவர் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் (GCA) தலைவராக இருந்தபோது எடுக்கப்பட்ட முடிவு இது. மோடிக்குப் பின் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அமித்ஷா, இந்த மெகா திட்டத்தை வகுத்துச் செயல்படுத்தத் தொடங்கினார்.
பரிமல் நத்வானி, முன்னாள் துணைத் தலைவர், GCA
sardar patel stadium
sardar patel stadium
Populous

சர்தார் படேல் மைதானம் புதிதாக கட்டப்படுவதற்கு முன், உலகின் மிகப் பெரிய மைதானமாக இருந்தது ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானம். அந்த மைதானத்தை வடிவமைத்த பாப்புளஸ் நிறுவனம்தான் இந்த மைதானத்தையும் வடிவமைத்துள்ளது.

மோதிராவில் புதிய கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கான டென்டர் ஏலம் விடப்பட்டது. 677 கோடி ரூபாய் என்று குறைந்த பட்ஜெட்டில் திட்டம் வகுத்துக் கொடுத்த லார்சன் & டர்போ (L&T) நிறுவனத்துக்குக் கட்டுமானப் பணி வழங்கப்பட்டது. பழைய மைதானம் இடிக்கப்பட்டதிலிருந்து 4 ஆண்டுகளுக்குள்ளாக இந்த மைதானம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 63 ஏக்கர் நிலப்பரப்பில் 800 கோடி ரூபாய் பொருட்செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தை பிரதமர் மோடியுடன் இணைந்து திறந்து வைத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

New Sardar Patel Stadium
New Sardar Patel Stadium
Test Records In Old Sardar Patel Stadium

1,10,000 பேர் அமரும் அளவுக்கான இருக்கைகளைக் கொண்டது புதிய சர்தார் படேல் மைதானம். 76 கார்பரேட் ஏசி பாக்ஸ்கள் இங்குள்ளன. ஒவ்வொரு கார்பரேட் பாக்ஸிலும் 25 பேருக்கான இருக்கைகள் உள்ளன. ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தரத்துக்கான மிகப் பெரிய நீச்சல் குளம், வீரர்களுக்கான ஹைடெக் ஜிம் ஆகியன உள்ளன. மைதானத்துக்குள் உணவகம், பார்ட்டி ஹால் மற்றும் ரூம் வசதிகள் கொண்ட 55 கிளப் ஹவுஸ்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மழை பெய்து நின்ற பிறகு, 30 நிமிடங்களுக்குள்ளாக மைதானத்தில் தேங்கி நிற்கும் தண்ணீர் முழுவதும் உலர்ந்துவிடும். அதற்கேற்ப உலகத் தரத்தில் மைதானத்தின் மேற்பரப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மழை காரணமாகப் போட்டிகள் கைவிடப்படுவது வெகுவாகக் குறையும்.
தன்ராஜ் நத்வானி, துணைத் தலைவர், GCA

மோதிரா மைதானத்தின் ஒவ்வொரு ஸ்டாண்டுகளிலும் கழிப்பறை வசதியும் சிற்றுண்டி உணவக வசதியும் செய்யப்பட்டுள்ளது. எந்த மைதானத்திலும் இல்லாத வகையில் இங்கு 4 டிரெஸிங் ரூம் வசதிகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. சர்தார் படேல் மைதானத்தில் மொத்தம் 11 பிட்ச்கள் உள்ளன. அதில் 3 உள்விளையாட்டு பயிற்சி பிட்ச்களும் 6 வெளி விளையாட்டு பயிற்சி பிட்ச்களும் அடங்கும்.

`சச்சின் முதல் கோலி வரை... தீவிரவாதம் முதல் ராணுவம் வரை!' - `நமஸ்தே ட்ரம்ப்’ ஹைலைட்ஸ் #LiveUpdate
உலகின் மிகப் பெரிய மைதானமான சர்தார் படேல் மைதானத்தில் இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு. எனவே, ஐபிஎல் முடிந்தவுடன் இந்தப் புதிய மைதானத்தில், முதல் சர்வதேசப் போட்டி நடைபெறும். அந்தப் போட்டி எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்போடு கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்!
அடுத்த கட்டுரைக்கு