IPL 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டு 96 ரன்கள் விளாசி குஜராத் அணிக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும், நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு உதவியாகவும் இருந்திருக்கிறார். இதற்கு முன்பே டெல்லி அணிக்கு எதிராகவும் தன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
'இன்னும் இரண்டு ஆண்டுகளில் இவர் இந்திய அணியில் முக்கிய இடத்தைப் பிடிப்பார்' - டெல்லிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற தமிழக வீரர் சாய் சுதர்சன் பற்றி குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா இவ்வாறு பேசியிருக்கிறார். யார் இந்த சாய் சுதர்சன்?

*தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் சாய் சுதர்சனின் தந்தை ஒரு தடகள வீரர், அவரின் தாயார் மாநில அளவிலான வாலிபால் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.
* சாய் சுதர்சன் உடல்எடை, உணவு எல்லாவற்றுக்கும் அம்மா தான் கோச். ஆனால் சாய் ஆடும் ஆட்டத்தை பார்க்க மாட்டாராம். மேட்ச் முடியும் வரை பூஜை அறையில் வேண்டுதல் தான். அம்மாக்களுக்கேயுரிய மனப்பதட்டம். டாட் பந்தே இல்லாமல் மகன் அடித்து விளாசிக் கொண்டிருக்கும் இந்த ஆட்டமும் உஷாம்மா இனிமேல் தான் பார்ப்பார்.
*சென்னையைச் சேர்ந்த சாய் சுதர்சன் 2021ல் தமிழ்நாடு அணிக்காகத் தனது முதல் விஜய் ஹசாரே போட்டியில் விளையாடினார்.
*இவர் தனது முதல் T20 ஆட்டத்தை 2021-22ல் சையத் முஷ்தாக் அலி கோப்பைக்காக விளையாடினார்.

*கடந்த விஜய் ஹசாரே தொடரில் 8 இன்னிங்ஸ்களில் 610 ரன்களை சாய் சுதர்சன் குவித்திருந்தார். இதில், மூன்று சதங்களும் இரண்டு அரை சதங்களும் அடங்கும். அந்தத் தொடரின் அதிக ரன் அடித்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை சாய் சுதர்சன் பிடித்திருந்தார்.
*தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், லைகா கோவை கிங்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடிச் சிறப்பான பங்களிப்புகளை கொடுத்துள்ளார்.
*21 வயதேயாகும் சாய் சுதர்சன், கடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இடம் பெற்றார், அணியிலிருந்த விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டு விலகியதனால், இவருக்கு விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
*கடந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராகத் தனது முதல் போட்டியில் விளையாடியிருந்தார். அதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உட்பட 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
*டெல்லி அணிக்கு எதிராக விளையாடிய நேற்றைய போட்டியில், 48 பந்துகளில் 62 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவியுள்ளார். இதனால் அந்த அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றுள்ளது.

*டெல்லி அணியின் அதிவேக பந்துவீச்சாளர் நோர்கியா நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசியிருந்தார். குஜராத் அணியின் ஓப்பனர்கள் கில், சஹா என இருவரின் விக்கெட்டையும் அவர்தான் வீழ்த்தியிருந்தார். 150 கி.மீ க்கு நெருக்கமாக புயல் வேகத்தில் வீசிக்கொண்டிருந்தார். ஆனால், சாய் சுதர்சனுக்கு எதிராக இவரின் வேக ஜாலங்கள் எதுவும் பலிக்கவில்லை. நோர்கியாவிற்கு எதிராக 12 பந்துகளை சந்தித்த அவர் 24 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 200. மேலும் நோர்கியாவிற்கு எதிராக பைன் லெக்கில் இவர் ஆடிய ஷாட்கள் அத்தனையும் மிரட்டலாக இருந்தது.

'கடந்த 15 நாட்களாக சுதர்சன் பல மணி நேரங்களை பேட்டிங்கிற்காக செலவிட்டு வந்தார். அவரின் கடின உழைப்பின் பலன் இது. இன்னும் இரண்டு வருடங்களில் ஐ.பி.எல் மற்றும் இந்திய அணிக்காக மிகப்பெரிய சாதனைகளை அவர் செய்வார். என் கணிப்பு தவறாகாது என நினைக்கிறேன்' என போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் சாய் சுதர்சன் குறித்து ஹர்திக் பாண்ட்யா புகழாரம் சூட்டியிருந்தார். மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சாய் சுதர்சன் மற்றும் மில்லரின் படத்தை ஸ்டோரியாக வைத்து 'Outstanding' என பாராட்டியிருக்கிறார்.
இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் விளாசி 96 ரன்கள் எடுத்திருக்கிறார். துஷார் தேஷ்பாண்டே ஓவரில் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகள், பதிரனா வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்கள் என அதிரடியாக விளையாடி குஜராத் அணியின் ஸ்கோரை 200 -க்கும் அதிகமாக எடுத்துச் சென்றார். இன்றைய ஆட்டம் அவருக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.
வாழ்த்துகள் சாய் சுதர்சன்!