Published:Updated:

WTC இறுதிச்சுற்று – 7: ஆங்கில மண்ணில் கேப்டன் கோலியின் எழுச்சி! | INDvENG 2018

தொடரை 4-1 என்ற வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றாலும் இத்தோல்வி முன்னர் தோற்ற இங்கிலாந்து தொடர்கள் போல விமர்சிக்கப்படவில்லை. ஏனென்றால்...

விராட் கோலி. இந்த ஒற்றை மனிதனின் பெயரை விடுத்து கடந்த பத்து வருட இந்திய கிரிக்கெட் வரலாற்றினை நினைத்துக்கூட பார்க்கமுடியாது. அந்தளவுக்கு இந்திய அணியின் மிக முக்கிய வீரராக மட்டுமல்லாமல் தனது பேட்டால் பல்வேறு சாதனைகளை புரிந்து இன்று உலக கிரிக்கெட் வரலாற்றின் தலைச்சிறந்த வீரர்களுள் ஒருவராகவும் உயர்ந்து நிற்கிறார்.

சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், விரேந்தர் சேவாக் என பல்வேறு ஜாம்பவான்கள் நிறைந்திருந்த போதுதான் அணிக்குள் கோலியின் வரவு நிகழ்ந்தது. ஆனால், களத்தில் தனக்கென்று இருந்த பிரத்யேக போராட்ட குணத்தை எவரிடத்திலும் எவ்விடத்திலும் விட்டுக்கொடுக்காமல் கோலி இன்றுவரை பின்பற்றுவருகிறார், இனியும் பின்பற்றுவார். அது அவரின் பிறவி குணம். கர்நாடகாவிற்கு எதிரான ரஞ்சி போட்டியின் போது தந்தையின் இறப்பு செய்தி செவிகளை எட்டியும் களத்தை விட்டு வெளியேறாமல் 90 ரன்களை விளாசிவிட்டு வீடு திரும்பிய 18 வயது பாலகனின் போர் குணம் பின்னே எப்படி இருக்கும்?!

INDvENG 2018
INDvENG 2018
AP

பொதுவாக கிரிக்கெட்டில், முதலில் பேட் செய்து தங்களால் முடிந்த ஸ்கோரை அடித்துவிட்டு பௌலர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கத்தான் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் விரும்புவர். காரணம் ஸ்கோர்போர்ட் பிரஷர், Required ரன் ரேட் என போராட்டமிகுந்த இரண்டாம் இன்னிங்ஸில் உள்ள இவை எதுவும் முதல் பேட்டிங்கில் கிடையாது. ஆனால், இத்தகைய சவால்களையும் போராட்டங்களையும் விரும்பி ஏற்பவர் விராட் கோலி. ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான 183, காமன்வெல்த் போட்டியில் இலங்கைக்கு எதிரான 133 என அவர் சேஸிங்கில் ஜொலித்த இன்னிங்ஸ்களை பட்டியலிட்டால் அது முடிவில்லாமல் நீண்டுக்கொண்டே போகும். அந்தளவுக்கு டெஸ்ட், ஒருநாள், டி20 என எந்த ஃபார்மேட்டாக இருந்தாலும் சரி, மாடர்ன்-டே கிரிக்கெட்டிற்குப் புதிதொரு இலக்கணம் வகுத்தார் இந்த ரன் மெஷின்.

சோதனைகளும் சவால்களும் கொஞ்சமும் குறையாமல் இருப்பதுதானே மனித வாழ்கையின் இயல்பு. அச்சோதனையை தன் திறமையால் எவ்வாறு புறந்தள்ளி ஒருவன் மேலெழுகிறவனோ அவனே சாதனையாளனாக உருவாகிறான். இந்திய அணிக்கான புதிய தலைமுறை டெஸ்ட் அணியினை கட்டமைத்து வந்த கேப்டன் கோலிக்கு முன்னால் புதியதொரு சவால் முளைத்தெழுந்தது. அது சவால் மட்டுமல்ல அவரை வெகுநாள் துரத்தி வந்த சாபமும் கூட.

விராட் கோலி என்னும் மாவீரன் எதிரணி பந்துவீச்சாளர்களிடம் அடிபணிந்த ஒரே மண், ஆங்கிலேய மண். தென்னாப்பிரிக்கா அணியுடனான தொடரை அடுத்த இங்கிலாந்து அணியை சந்திக்க அதன் சொந்த மண்ணிற்கு பயணப்பட்டது இந்திய அணி. அத்தொடர் நெருங்க நெருங்க கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கண்களும் கோலியின் மீதே பதிந்திருந்தன. இன்-ஸ்விங்கும் அவுட்-ஸ்விங்கும் நம்பமுடியாதபடியாகும் முற்றிலும் புதிய தட்பவெப்ப நிலை கொண்ட இங்கிலாந்தில் காத்திருக்கும் சவால்களை எப்படிச் சமாளிக்கப்போகிறார் கோலி என்ற எதிர்பார்ப்பே அதற்கான காரணம். என்னதான் முந்தைய சில தொடர்களில் சில பல சதங்களையும், இரட்டை சதங்களையும் விளாசி உச்சக்கட்ட ஃபார்மில் இருந்தாலும் இங்கிலாந்தில் அது எடுபடுமா எனப் பலரும் சந்தேகித்தனர்.

INDvENG 2018
INDvENG 2018
AP

ஏனென்றால் கோலியின் முந்தைய இங்கிலாந்து தொடர்களில் அவரின் செயல்பாடுகள் அப்படி. 2014-ம் ஆண்டு இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, 3-1 என்ற கணக்கில் 2011-ம் ஆண்டை போலவே மிக மோசமான தோல்வியை சந்தித்து திரும்பும். இத்தொடரின் பத்து இன்னிங்ஸ்களில் பேட்செய்யும் கோலி, 13.4 என்ற சராசரியுடன் மொத்தமாக வெறும் 134 ரன்கள் மட்டுமே குவித்திருப்பார். இங்கிலாந்தின் ஸ்விங் பந்துவீச்சிற்கு மிகவும் தடுமாறும் கோலி, ஓர் இன்னிங்ஸில் கூட அரைசதம் அடிக்காமல் மிக மோசமான ஃபார்மில் தவிப்பார். இதனால்தான் வரவிருக்கும் தொடரில் கோலியின் பேட்டிங்கை மதிப்பிட பலரும் காத்திருந்தனர். தற்போது கேப்டனாக வேறு இருப்பதால் இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதிச்சுற்று - 6: நம்பர் 1 டி20 பௌலரை டெஸ்ட் கிரிக்கெட் ஆட வைத்த கோலி! | SAvIND 2017-18

ஆனால், தன் திறனை மட்டம்தட்டி குறைக்கூற நாற்திசையிலும் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான வாய்களுக்கு தன் பேட்டால் பதில் கூறினார் விராட் கோலி. செயலில் காண்பிப்பதுதானே மேற்கூறிய சாதனையாளர்களுக்கு அழகு. அதை இம்மிபிசகாமல் செய்து முடித்தார் கோலி. முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலேயே இங்கிலாந்து மண்ணில் தனது முதல் டெஸ்ட் சதம். மூன்றாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 97 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிடும் கோலி அதை இரண்டாவது இன்னிங்ஸில் கச்சிதமாக நிறைவேற்றுவார். அந்தளவுக்கு இங்கிலாந்து மண்ணில் அவர்களின் பந்துவீச்சாளர்களை குறிப்பாக ஆண்டர்சனை சந்திக்க தனது ஆட்டமுறைகளில் மிக நுணுக்கமான மாற்றங்களை செய்திருப்பார் அவர். கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்ஸில் முதல் பந்திலேயே டக் அவுட்டாகித் திரும்பினாலும் அத்தொடரில் ஏற்கெனவே சுமார் 593 ரன்களை விளாசியிருந்தார் கோலி (சராசரி-59.3).

INDvENG 2018
INDvENG 2018
AP

தொடரை 4-1 என்ற வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றாலும் இத்தோல்வி முன்னர் தோற்ற இங்கிலாந்து தொடர்கள் போல விமர்சிக்கப்படவில்லை. ஏனென்றால் இத்தொடரின் ஒரு போட்டியைத் தவிர மீதம் விளையாடிய நான்கு போட்டிகளிலும் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தது இந்திய அணி. இத்தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சர்வதேச டெஸ்ட் அரங்கில் அறிமுகமாகிறான் புதியதோர் வீரன். தனது முதல் டெஸ்ட் ரன்னினை தனக்கேயான பாணியில் ஒரு பிரம்மாண்ட சிக்ஸருடன் தொடங்குகிறான். அவ்வீரன்தான் ரிஷப் பண்ட்!

- களம் காண்போம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு