Published:Updated:

`இந்தியாவில் விரைவாக முடிவு எட்டப்பட்ட போட்டி?' - புதிய சாதனையை நோக்கி கொல்கத்தா டெஸ்ட் #INDvBAN

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி, 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருக்கிறது.

இந்திய அணி
இந்திய அணி ( BCCI )

இந்தியா - வங்கதேச அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு அணிகளின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் இந்தப் போட்டிக்கு வரவேற்புக் கொடுத்தனர். முதல்நாளில் வங்கதேச அணி, இந்திய பந்துவீச்சில் 106 ரன்களுக்கு சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. கோலி 59 ரன்களுடனும் ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் முதல் நாளிலேயே இந்திய அணி 68 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

விராட் கோலி
விராட் கோலி
BCCI

இன்று, இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணி கோலி - ரஹானே ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ரன் குவித்தது. 4வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரஹானே 51 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த ஜடேஜா 12 ரன்களுக்கு வெளியேறி ஏமாற்றமளித்தார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் கோலி, டெஸ்ட் அரங்கில் 27வது சதத்தைப் பதிவு செய்தார். டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக கோலிக்கு இது 20வது சதமாகும். அதேபோல், கேப்டனாக அதிக சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் சாதனையையும் (41 சதங்கள்) இன்றைய சதம் மூலம் கோலி சமன் செய்தார். மேலும், பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் கோலி இன்று தனதாக்கிக் கொண்டார்.

`பாண்டிங் சாதனை சமன்; கேப்டனாக 5000 ரன்கள்'- ஈடன் கார்டனில் கோலி ரன் வேட்டை!

136 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இபாதத் ஹூசைனின் அசத்தல் கேட்சில் கோலி ஆட்டமிழந்து வெளியேறினார். இந்திய அணி 9 விக்கெட்டுகளுக்கு 347 ரன்கள் எடுத்திருந்த நிலையில், டிக்ளேர் செய்தது. 241 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணிக்கு இஷாந்த் ஷர்மா தொடக்கத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். முதல் ஓவரின் 5வது பந்திலேயே ஷத்மான் ஹூசைனின் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த், தனது அடுத்தடுத்த ஓவர்களில் மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உமேஷ் யாதவும் தனது பங்குக்கு ஒரு விக்கெட் வீழ்த்த, வங்கதேச அணி 13 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ரஹானே - கோலி ஜோடி
ரஹானே - கோலி ஜோடி
BCCI

இதையடுத்து 5வது விக்கெட்டுக்குக் கைகோத்த அனுபவ வீரர்களான மகமதுல்லா - முஷிபிகூர் ரஹீம் ஜோடி விரைவாக ரன் சேர்த்ததுடன் விக்கெட் விழாமலும் பார்த்துக் கொண்டது. 41 பந்துகளில் 39 ரன்கள் சேர்ந்திருந்தநிலையில் மகமதுல்லா, காயம் காரணமாக ரிட்டையர்டு ஹர்டாகி வெளியேறினார். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முஷிபுகூர் ரஹீம், அரைசதம் கடந்து அசத்தினார். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்திருக்கிறது.

`பிங்க் பால்’ டெஸ்டில் மிரட்டிய இஷாந்த் புதிய சாதனை! - முதல்நாளிலேயே இந்திய அணி முன்னிலை

இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட வங்கதேச அணி, 89 ரன்கள் பின்தங்கியிருக்கிறது. முஷிபிகூர் ரஹீம் 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருக்கிறார். இந்தியா தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இன்றைய போட்டியில் இந்திய அணி பல கேட்சுகளைத் தவறவிட்டது. குறிப்பாக அஷ்வின் பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்றிருந்த துணைக் கேப்டன் ரஹானே 2 கேட்சுகளைத் தவறவிட்டார்.

இஷாந்த் ஷர்மா
இஷாந்த் ஷர்மா
BCCI

இந்தியாவின் முதல் `பிங்க் பால்' டெஸ்ட் உள்நாட்டில் குறைவான பந்துகளில் முடிவு எட்டப்பட்ட போட்டி என்ற சாதனையைப் படைக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டு நாள்களில் இதுவரை 916 பந்துகள் வீசப்பட்டிருக்கும் நிலையில், இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற 3 அல்லது 4 (மகமதுல்லா மீண்டும் பேட்டிங் செய்யும்பட்சத்தில்) விக்கெட்டுகள் வீழ்த்தினால் போதும் என்ற நிலை இருக்கிறது. இந்திய மண்ணில் குறைந்த பந்துகளில் முடிவு எட்டப்பட்ட டெஸ்ட் போட்டி என்ற சாதனை ஆப்கானிஸ்தானுக்கு எதிராகக் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் வசம் இருக்கிறது. இந்திய அணி வெற்றிபெற்ற அந்தப் போட்டியில் 1028 பந்துகள் வீசப்பட்டன. இந்திய அணி, மூன்றாவது நாள் ஆட்டத்தின்போது 18.3 ஓவர்களுக்கு உள்ளாகவே வெற்றிபெற்றால், இந்தப் போட்டி புதிய சாதனையைப் படைக்கும்.