அனைத்துவிதமான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெறுவதாக ராபின் உத்தப்பா அறிவித்திருக்கிறார். இன்றைய தேதிக்கு ராபின் உத்தப்பா பெரிய சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடைய வீரரெல்லாம் இல்லை. ஆனாலும், உத்தப்பாவின் இந்த ஓய்வு முடிவையொட்டி ரசிகர்கள் பலரும் பலவிதமான நெகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
காரணம், கடந்த காலங்களில் இந்திய அணிக்காக அவர் செய்திருக்கும் பங்களிப்பும், நினைத்தாலே புத்துணர்வை அளிக்கக்கூடிய வகையிலான அவரின் நேர்த்தியான ஆட்டமுறையுமே.
உத்தப்பாவின் கரியரை 'சென்ற இடமெல்லாம் சிறப்பு' என்கிற இந்த ஒற்றைச் சொற்றொடருக்குள் அடக்கிவிட முடியும். இளம் வயதில் துடிப்பாக இருந்தபோதும் சரி, கரியரின் கடைசிக்கட்டத்தை எட்டியபோதும் சரி, தான் ஆடிய அணிகளில் தனக்கான சரியான இடமும் மரியாதையும் கிடைக்கும்பட்சத்தில், அந்த அணிக்கென தன்னுடைய உயிரைக் கொடுத்து ஆடுவார். அதன் பலனாக அந்த அணிகளும் மிகப்பெரிய சிகரங்களைத் தொட்டிருக்கும்.

2007 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிய அந்த பவுல் அவுட் போட்டி ஆண்டுகள் பல கடந்தும் எவர் நினைவிலிருந்தும் அகலவில்லை. அந்தப் போட்டியை இந்தியா வென்றதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்ததே உத்தப்பாதான். இந்திய அணி முதலில் பேட் செய்திருக்கும். அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்து தடுமாற்றமான நிலையில் இருக்கும்போது ஒரு அரைசதத்தை அடித்து அணியைக் காப்பாறியிருந்தார். அதேமாதிரிதான் போட்டி டை ஆகி பவுல் அவுட்டிற்குச் சென்ற சமயத்திலும் சிறப்பாக பந்து வீசி ஸ்டம்புகளைத் தகர்த்து அணியின் வெற்றியை உறுதி செய்திருந்தார்.
உத்தப்பா அடித்த அந்த அரைசதத்திற்கும் பவுல் அவுட்டில் வீசிய அந்த ஒரு பந்திற்கும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கிய இடமுண்டு. இவ்விரண்டும் உத்தப்பாவால் நிகழ்த்தப்படாமல் போயிருந்தால் 2007 உலகக்கோப்பையில் இந்தியாவின் பயணம் இன்னும் கடினமாக மாறியிருக்கக்கூடும்.
ஐ.பி.எல்-லில் உத்தப்பா ஆடிய இரண்டு அணிகள் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றன. அந்த அணிகள் சாம்பியனான இரண்டு சீசன்களிலுமே உத்தப்பாதான் அந்த அணிகளின் துருப்புச்சீட்டாக இருந்திருக்கிறார். 2014 சீசனில் முதல்முறையாக கொல்கத்தா அணிக்காக ஆடியிருந்தார். அந்த சீசனில் மட்டும் 16 போட்டிகளில் 660 ரன்களை அடித்திருந்தார். ஆரஞ்சு கேப் வின்னரே அவர்தான். கொல்கத்தாதான் அந்த சீசனின் சாம்பியன்ஸ்.
2020 ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி கடுமையாக சொதப்பியிருந்தது. ஐ.பி.எல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆஃப்ஸூக்கு கூட தகுதிபெறாமல் சென்னை அணி வெளியேறியிருந்தது. அந்தத் தோல்வியிலிருந்து மீண்டு ஒரு பயங்கரமான கம்பேக்கை நிகழ்த்திக் காட்டி 2021 சீசனில் சென்னை அணி சாம்பியன் ஆனது. இந்த வெற்றியிலும் உத்தப்பாவின் பங்களிப்பை மறந்துவிடவே முடியாது. சீசன் முழுக்க பென்ச்சிலேயே உட்கார வைக்கப்பட்டு கடைசிக்கட்டத்தில்தான் அவருக்கான வாய்ப்பை சென்னை அணி வழங்கியிருக்கும். ஆனாலும் சோர்வுறாமல் ப்ளே ஆஃப்ஸில் வந்து வெளுத்து வாங்கி மீண்டுமொரு முறை தோனி வெற்றிக்கோப்பையை ஏந்த காரணமாகியிருந்தார்.
இடையில் ஆடிய பெங்களூரு, ராஜஸ்தான், புனே போன்ற அணிகளுக்குமே கணிசமான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் என்பதையும் மறந்துவிட முடியாது.

வீரர்களைக் காலம் கடந்தும் நினைவில் பொதிந்து கொள்ள அவர்களை நினைத்தாலே புத்துணர்வு அளிக்கக்கூடிய ஏதோ ஒரு தனித்துவமான விஷயத்தை மனம் தேடிக்கொண்டே இருக்கும்.
சச்சினுக்கு ஒரு ஸ்டரைட் ட்ரைவ், தோனிக்கு ஒரு ஹெலிகாப்டர் ஷாட் என்பது போல உத்தப்பாவை நினைத்தாலே க்ரீஸை விட்டு இரண்டு அடி நடந்து வந்து அசால்ட்டாக ஃபீல்டை க்ளியர் செய்யும் அந்த ஷாட்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும்.
மற்ற பேட்டர்கள் தொடத் தயங்கும் அதிபயங்கர வேகப்பந்து வீச்சாளர்களைக் கூட உத்தப்பா நேருக்கு நேர் இறங்கி வந்து வெளுத்தெடுப்பதை பார்க்கும்போது குதூகலமாக இருக்கும். 'எங்கேயும் எப்போதும்' படத்தின் க்ளைமாக்ஸில் அந்த இரண்டு பேருந்துகளும் இயந்திர மிருகமாக நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் காட்சியை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்.
கிட்டத்தட்ட உத்தப்பா வேகப்பந்து வீச்சாளர்களை க்ரீஸை விட்டு நடந்து வந்து எதிர்கொள்வதை சைட் வியூவில் பார்த்தால் அந்த காட்சிக்கு ஒப்பான வீரியமே இருக்கும். ஆனால், இந்த மோதலில் சேதாரம் எப்போதுமே உத்தப்பாவின் எதிர்த்திசையில் இருக்கும் பௌலருக்கு மட்டுமே. ஒரு பேட்டர் பௌலரின் தலைக்கு மேல் ஷாட் அடித்தால் பௌலரின் ஈகோ சுரண்டப்படும். உன்னை எதிர்கொள்வதெல்லாம் எனக்குப் பெரிய விஷயமே இல்லை என பேட்டர் சொல்லாமல் சொல்வதைப் போன்றது அந்த வகை ஷாட்கள்.
2007-08 காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் நடந்த காமென்வெல்த் மற்றும் நெட்வெஸ்ட் சீரிஸின் ஹைலைட்ஸை எடுத்துப்பாருங்கள்.

`The Walking assassin' என்ற உத்தப்பாவின் செல்லப்பெயருக்கான அர்த்தம் அப்போதுதான் தெரியவரும்.
ப்ரெட் லீ, ஆண்டர்சன், ப்ராட் என உலகத்தரமான பௌலர்கள் அத்தனை பேரையும் இரண்டே அடி இறங்கி வந்து காலி செய்திருந்தார். உங்களை எதிர்கொள்வதெல்லாம் எனக்கு பெரிய விஷயமே இல்லை என உத்தப்பா சொல்லாமல் சொல்லிய இடங்கள் அவை.
நேருக்கு நேராக மோதி பார்க்கும் ஆட்ட சுபாவத்தைக் கொண்ட உத்தப்பா, கிட்டத்தட்ட நிஜ வாழ்க்கையிலும் அப்படியானவரே. கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்த சமயத்திலேயே முன்பு அவர் ஆடிய அணிகளில் அவர் எப்படி நடத்தப்பட்டார் என்பது போன்ற விஷயங்களை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். உத்தப்பாவை பொறுத்தவரை உரிய மரியாதையையும் அணியில் அவருக்கான சரியான இடத்தையும் கொடுக்கும்பட்சத்தில் அணிக்காக உயிரைக் கொடுத்துக்கூட ஆடுவார்.
உத்தப்பா வெளியிட்டிருக்கும் ஓய்வு அறிக்கையில் அனைத்துவிதமான இந்திய கிரிக்கெட்டிலிருந்து மட்டும்தான் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். ஆக, வெளிநாடுகளில் நடைபெறும் ப்ரீமியர் லீக் போட்டிகளில் உத்தப்பா ஆடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இல்லையேல், எதாவது பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

சென்ற இடத்தையெல்லாம் சிறப்பாக்கியவர், இனி செல்லும் இடத்தையெல்லாம் சிறப்பாக்கட்டும்!
ராபின் உத்தப்பாவின் மறக்க முடியாத இன்னிங்ஸ்களில் உங்களின் ஃபேவரைட் எது என்பதை கமென்ட்டில் சொல்லுங்கள்.