Published:Updated:

உள்ளூர், வெளியூர் வேறுபாடின்றி ஆதிக்கம் செலுத்தும் இந்தியா... மீண்டும் ஒரு தொடர் வெற்றி!

இந்திய அணி
News
இந்திய அணி ( BCCI )

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் ஐ.சி.சி தரவரிசையில் இந்தியா தான் இழந்த முதலிடத்தை மீண்டும் எட்டிப்பிடித்துள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து முடிந்திருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 372 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதன் மூலம் 1-0 என இந்தத் தொடரையும் வென்றுள்ளது.

கடைசியாக 2012-ம் ஆண்டில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்திருந்த அலஸ்டயர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணி, டெஸ்ட் சீரிஸில் 2-1 என இந்தியாவை வீழ்த்தியிருந்தது. அதன்பிறகு, இந்திய அணி எந்த ஹோம் சீரிஸிலும் தோல்வியே தழுவவில்லை என்கிற ரெக்கார்டை இந்த சீரிஸிலும் தொடர செய்துள்ளது.

ஓடிஐ, டி20 என லிமிடெட் ஓவர் போட்டிகளில் குறிப்பாக ஐ.சி.சி தொடர்களில் இந்தியா கொஞ்சம் தடுமாற்றமாக பெர்ஃபார்ம் செய்தாலும், டெஸ்ட் போட்டிகளில் இந்தியா நாளுக்கு நாள் வலுவடைந்துக் கொண்டேதான் செல்கிறது. குறிப்பாக இந்த ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செய்த அளவுக்கு வேறெந்த அணியும் ஆதிக்கம் செய்திருக்கவில்லை.

IND v NZ
IND v NZ

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உள்ளூர், வெளியூர் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லா தொடர்களிலும் ஒரு சீரான பெர்ஃபார்மென்ஸையே கொடுத்திருக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் அடிலெய்டு போட்டியில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி சொதப்பினாலும், உடனடியாக மீண்டு வந்து அந்த தொடரை 2-1 என வென்றிருந்தனர். அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான உள்ளூர் தொடரில் 3-1 என வென்றிருந்தனர். அதே இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் 2-1 என முன்னிலையில் இருக்கிறது. ஒத்திவைக்கப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றாலும் தொடரை இழக்கப்போவதில்லை. இப்போது நியூசிலாந்துக்கு எதிரான உள்ளூர் தொடரையும் 1-0 என வென்றிருக்கிறார்கள். 2-0 என வென்றிருக்க வேண்டியது, போதிய வெளிச்சம் இல்லாததால் முதல் போட்டியை நியூசிலாந்து தட்டுத்தடுமாறி டிரா செய்திருந்தது.

இடையில் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் மட்டுமே இந்தியா தோற்றிருந்தது. அந்த ஒரு தோல்வியை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால் போட்டியின் முடிவுகளைத் தாண்டி ஒவ்வொரு தொடரிலுமே இந்தியா சிறப்பாகவே பெர்ஃபார்ம் செய்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வீரர்களை பயன்படுத்திய அணியாக இந்தியாவே இருக்கிறது. ஒட்டுமொத்தமாக 27 வீரர்களை இந்தியா பயன்படுத்தியிருக்கிறது. வேறெந்த அணியும் இத்தனை வீரர்களை பயன்படுத்தியிருக்கவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோற்றதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது. நிலையாக இல்லாமல் அடிக்கடி வீரர்களை மாற்றுவதும் ஒரு பிரச்னையாக முன் வைக்கப்பட்டது. ஆனால், உண்மையில் அது பிரச்னையல்ல. அந்த வீரர்கள் எப்படி பயன்படுத்தப்பட்டார்கள் என்பதில்தான் பிரச்சனை இருந்தது.

வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழலில் எதிரணி ஸ்பின்னர்களே இல்லாமல் இறங்கிய போது, இந்தியா ஒன்றுக்கு இரண்டு ஸ்பின்னர்களை வைத்து ஆடியிருந்தது. சரியான நேரத்தில் சரியான முடிவுகள் எடுப்பதில் ஏற்பட்ட பின்னடைவே தோல்விக்குக் காரணமாக அமைந்ததே தவிர, அதிகமான வீரர்களை பென்ச்சில் வைத்திருப்பது ஒரு பிரச்னையே அல்ல. சொல்லப்போனால், இந்தியாவின் சீரான பெர்ஃபார்மென்ஸுக்கு அதுதான் மிக முக்கிய காரணமாக அமைந்தது. கோலி, ரோஹித், ரஹானே, பும்ரா, ஷமி என இப்படி எந்த வீரர் அணியில் இல்லையென்றாலும் இந்த அணி வெல்லும். நடந்து முடிந்திருக்கும் நியூசிலாந்து சீரிஸுமே இதையேத்தான் நிரூபித்திருக்கிறது.

Mayank Agarwal
Mayank Agarwal
BCCI
இங்கிலாந்து தொடரில் ஓப்பனர்களாக ஆடிய ரோஹித் - ராகுல் இங்கே இல்லை. சுப்மன் கில்லும் மயங்க் அகர்வாலுமே ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். இரண்டாவது போட்டியில் மயங்க் அகர்வால் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதத்தையும் அடித்திருந்தார். இந்தப் போட்டியை வெல்ல அவரே மிக முக்கிய காரணமாகவும் இருந்தார்.

இளம் வீரரான சுப்மன் கில்லும் முதல் போட்டியை விட இரண்டாவது போட்டியில் நன்றாகவே ஆடியிருந்தார். ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சுப்மன் கில், மயங்க் அகர்வால் என 4 ஓப்பனர்கள் இப்போதைக்கு இந்தியாவின் கையில் தயாராக இருக்கிறார்கள். இதுபோக, ப்ரித்திவி ஷா வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மெல்பெர்ன் டெஸ்ட் சதத்திற்கு பிறகு மீண்டும் ஃபார்முக்குத் திரும்புவதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்த ரஹானேவுக்கு மாற்றாக ஸ்ரேயாஸ் ஐயர் பார்க்கப்படுகிறார். அவரும் இந்த நியூசிலாந்துக்கெதிரான தொடரில் தனது முதல் டெஸ்ட்டிலேயே சதம் மற்றும் அரைசதத்தை அடித்து அசத்தியிருக்கிறார். இந்த தொடக்கத்தை வைத்து மட்டுமே ரஹானேவுக்கு மாற்று ஸ்ரேயாஸ் ஐயர் எனக் கூறிவிட முடியாது எனினும், இது ஒரு நம்பிக்கை அளிக்கக்கூடிய நல்ல தொடக்கம். அடுத்தடுத்த தொடர்களில் ஸ்ரேயாஸ் எப்படி பெர்ஃபார்ம் செய்கிறார் என்பதை பொறுத்து ரஹானேவின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.

Shreyas Iyer
Shreyas Iyer

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக துடிப்புமிக்க ரிஷப் பண்ட் இந்த தொடரில் இல்லையென்றாலும், விருத்திமான் சஹா எதிர்பார்த்ததை விட மிகச்சிறப்பாகவே பெர்ஃபார்ம் செய்திருக்கிறார். விக்கெட் கீப்பிங்கைத் தாண்டி பேட்டிங்கிலும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் ஆடியிருந்தார். முதல் டெஸ்ட்டில் இந்தியா கொஞ்சம் தடுமாறியபோது அரைசதம் அடித்து காப்பாற்றியிருந்தார். சஹாவுக்குக் காயம் என்றவுடன் அவருக்கு பதில் கீப்பிங் செய்ய வந்த ஸ்ரீகர் பரத்தும் மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆக, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கும் இந்திய அணிக்கு 3 ஆப்சன்கள் இருப்பது நியூசிலாந்து தொடர் மூலம் உறுதியாகியிருக்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆண்டில் 50 விக்கெட்டுகளை எடுத்த முதல் பௌலராக அஷ்வின் கலக்கி வருகிறார். இங்கிலாந்துக்கு எதிராக 4 போட்டிகளில் பென்ச்சில் வைக்கப்பட்ட பிறகும், நடந்து முடிந்திருக்கும் நியூசிலாந்து தொடரில் மீண்டு வந்து 14 விக்கெட்டுகளை வீழ்த்தி பல சாதனைகளை செய்து அசத்தியிருக்கிறார்.

முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் விக்கெட்டே விடாமல் சிறப்பாக சேஸ் செய்து கொண்டிருந்த நியூசிலாந்துக்கு கடிவாளம் போட்டது ஜடேஜாவே. அவர் எடுத்த 4 விக்கெட்டுகளே நியூசிலாந்தை டிராவை நோக்கி ஆட வைத்தது. அஷ்வின், ஜடேஜா இருவரும் அணியின் மெயின் ஸ்பின்னர்களாக பார்க்கப்பட்ட வேளையில் இப்போது அக்ஸர் படேல், ஜெயந்த் யாதவ் இருவருமே மிகச்சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருக்கின்றனர். அஷ்வின், ஜடேஜா ஆட முடியாதபட்சத்தில் அவர்களின் ரோலை அப்படியே ஜெயந்த் யாதவ் மற்றும் அக்சர் படேலால் செய்து கொடுக்க முடியும். மேலும், நால்வரும் பேட்டிங்கும் ஆடக்கூடியவர்கள் என்பது கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது.

Ashwin
Ashwin
BCCI

வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றி சொல்ல வேண்டிய தேவையே இல்லை. சிராஜ், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா என ஒரு படையே கையில் இருக்கிறது. அனுபவ வீரரான இஷாந்த் சர்மாவுக்கு பதில் இரண்டாவது டெஸ்ட்டில் ப்ளேயிங் லெவனுக்குள் வந்த சிராஜ் முதல் இன்னிங்ஸில் வீசிய மிரட்டலான ஸ்பெல்லை இன்னும் பல காலத்திற்கு யாராலும் மறக்க முடியாது.

இத்தனை வீரர்களையும் வழிநடத்தும் கேப்டனாக விராட் கோலி, அவரது உடல்மொழியில் அக்ரசன் குறைந்திருந்தாலும் அவரது கேப்டன்சியில் அக்ரசன் என்பது ஒரு சதவிகிதம் கூட குறையவில்லை.

கடந்த சில ஆண்டுகளில் இப்படி உள்ளூர்/வெளியூர் என்ற வேறுபாடு இல்லாமல் முழுமையாக ஆதிக்கம் செய்யும் ஒரு அணியை எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. மேலும், இந்த அணி எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் சார்ந்திருக்கவில்லை.

கோலி, புஜாரா, ரஹானே என மும்மூர்த்திகளும் சொதப்பினாலும் இந்த இந்திய அணியால் ஒரு டெஸ்ட் போட்டியை வெல்ல முடிகிறது. எந்த வீரர் அணியில் இல்லையென்றாலும் வெற்றிடம் உருவாகாமல் அந்த இடத்தை அப்படியே நிரப்பும் வகையிலான மாற்று வீரர்களும் தாராளமாக இருக்கின்றனர்.
Virat Kohli
Virat Kohli
BCCI

எல்லாவற்றுக்கும் மேல் தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் அசாத்தியங்களின் மீது நம்பிக்கை வைத்து தீர்க்கமாகச் செயல்படும் நெஞ்சுரம் இந்த அணிக்கு வாய்க்கப் பெற்றிருக்கிறது. இவையெல்லாம் இந்த நியூசிலாந்து தொடரிலும் மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. வெல்டன் பாய்ஸ்!