Election bannerElection banner
Published:Updated:

ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் வீழ்த்திய இந்தியாவின் டாப் 5 போட்டிகள்! #AUSvIND

#AUSvIND
#AUSvIND

நாளை (நவம்பர் 27) இந்திய - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் கிரிக்கெட் யுத்தம் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தியா அபாரமாய் வெற்றிவாகை சூடிய சிறந்த ஐந்து ஒருநாள் போட்டிகள் குறித்த தொகுப்பு இங்கே!

"ஆஸ்திரேலியாவை அவர்கள் மண்ணிலேயே வைத்து வீழ்த்த இந்தியாவால் மட்டுமே முடியும்!"
மைக்கேல் வாஹன்

கடந்த ஆண்டு பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வொயிட்வாஷ் செய்து அனுப்பியபோது, இங்கிலாந்தின் மைக்கேல் வாஹன் சொன்ன வார்த்தைகள் இவை. இதே காரணத்தால்தான் எப்போதும், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர், ஆஷஸ் தொடருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியா ரசிகர்களாலும், பாகிஸ்தானுடனான தொடர்களுக்கு இணையாக இந்திய ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது. தொடக்க காலகட்டங்களில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி இருந்ததை ஒட்டு மொத்தமாய் மாற்றி, இந்தியாவும் ஆஸிக்கு இணையான அணியாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. நாளை (நவம்பர் 27) இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் கிரிக்கெட் யுத்தம் தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்தியா அபாரமாய் வெற்றிவாகை சூடிய சிறந்த ஐந்து ஒருநாள் போட்டிகள் குறித்த தொகுப்பு இங்கே...

Sachin
Sachin

2008 காமன்வெல்த் பேங்க் முத்தரப்புத் தொடர் - முதல் மற்றும் இரண்டாம் இறுதிப் போட்டிகள்!

இந்தத் தொடரில் லீக் சுற்றோடு இலங்கை வெளியேற, சிறப்பாய் விளையாடி, இறுதிப் போட்டிக்கு முன்னேறின இந்தியாவும் ஆஸியும். மொத்தம் மூன்று இறுதிப் போட்டிகள் நடைபெறும் வடிவுடைய தொடரமைப்பில், இறுதிப் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பே, கேப்டன் பான்ட்டிங், ''முதல் இரண்டு போட்டிகள் மட்டுமே நடைபெறும்... அது இரண்டிலுமே ஒரே அணியே வென்று கோப்பையை கையிலேந்தும்" என்றார். அவர் சொன்னது ஆஸ்திரேலிய அணியை மனதில்வைத்து. ஆனால் நடந்தது வேறு!

முதல் போட்டியில், பிரவீன் குமாரின் அற்புதப் பந்துவீச்சால், தொடக்க விக்கெட்டுகளை ஆஸி பறிகொடுத்து, 239 ரன்களில் சுருண்டது‌. சிட்னியில் நடைபெற்ற அந்தப் போட்டியில், அதுவரை அங்கு நடைபெற்ற 11 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா ஒன்றில்கூட வென்றதில்லை. முதல்முறையாக சிட்னியில் வெற்றியைப் பதிவு செய்தது இந்தியா. அதேபோல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல சதங்களை சச்சின் அடித்திருந்தாலும், அவர்கள் மண்ணில் சதம் அடித்ததில்லை. அங்கு நடைபெற்ற 38 ஒருநாள் போட்டிகளில், ஒரு சதத்தைக் கூட தான் பதிவு செய்ததில்லை என்ற வேதனையும் உடைத்தார் சச்சின். மற்ற வீரர்கள் ஜொலிக்காத போதிலும், ஒற்றை மனிதராய் நின்று போராடிய அவருக்குப் பக்கபலமாய் ரோஹித் வலுசேர்க்க, 25 பந்துகள் எஞ்சியிருந்த நிலையிலேயே இந்தியா இலக்கைத் தொட்டது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற இரண்டாவது இறுதிப் போட்டியில், முதல் போட்டியில் கிடைத்த மொமன்ட்டத்தைத் தக்க வைத்துக் கொண்ட இந்தியா, சச்சினின் மீண்டுமொரு அற்புத ஆட்டத்தால் வெற்றிபெற்றது. சச்சின் 91 ரன்கள் குவிக்க, உத்தப்பா, யுவராஜ், தோனியின் 30+ ரன்களால் 259 என்ற இலக்கை நிர்ணயித்தது இந்தியா. முதல் போட்டியில் நடந்ததைப் போலவே தனது கடைசிப் போட்டியில் விளையாடிய கில்கிறிஸ்ட்டையும், பான்ட்ட்டிங் விக்கெட்டுகளையும் மீண்டும் தூக்கிய பிரவீன் குமார் மேலும் இரண்டு விக்கெட்டுகளையும் சரிய வைத்து, வெற்றியை இந்தியாவுக்கு எளியதாக்கினார்.

2007-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அசுரபலத்தோடு இருந்த அணியை, அதில் மோசமான தோல்வியைப் பதிவு செய்த இந்தியா வென்றது வரலாற்றுச் சாதனையாக அமைந்தது. மேலும், சச்சின் மகுடம் சூட்டிக் கொண்ட தொடர் இது.

2004 விபி சீரிஸ் - தொடரின் ஐந்தாவது போட்டி!

#AUSvIND
#AUSvIND

இந்த முத்தரப்புத் தொடரில், கங்குலியின் சிறப்பான தலைமையில் களம் கண்டது இந்திய அணி. முதலில் விளையாடிய இந்தியா, லட்சுமணனின் சதத்தாலும், சச்சின் மற்றும் டிராவிட்டின் முறையே 86 மற்றும் 74 ரன்களாலும் 304 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. கில்லெஸ்பி மற்றும் பிரட் லீ-யின் மிரட்டல் பெளலிங்கையும் மீறி அதுவும் ஆஸ்திரேலியா மண்ணிலேயே 300+ ரன்களை இந்தியா எடுத்தது. எனினும் இதனை இந்தியா டிஃபெண்ட் செய்யுமா இல்லையா என்பது பெளலர்களின் கையில் இருக்கிறது என்ற எண்ணம் எழ, ஹேடன் ருத்ரதாண்டவம் ஆடி சதம் அடித்து பீதியை ஏற்படுத்தினாலும், நம்மூர் நாயகன் பாலாஜி மற்றும் இர்ஃபான் பதான் முறையே நான்கு மற்றும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த, இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 300+ இலக்கை வைக்கும் அளவுக்கு பேட்ஸ்மேன்களும் எங்களிடம் உண்டு, எதிரணியை ஆல்அவுட் செய்யும் திறமையுள்ள பெளலர்களும் எங்கள் வசமுண்டு என இந்தியா ஆணித்தரமாய் நிரூபித்த போட்டி இது. இந்தத் தொடரை இந்தியா இழந்திருந்தாலும், குறிப்பிட்ட இந்தப் போட்டி நிறைய கிரிக்கெட் ரசிகர்களுடைய பெர்சனல் ஃபேவரைட்!

2012 - காமன்வெல்த் பேங்க் முத்தரப்புத் தொடர் - லீக் சுற்றின் நான்காவது போட்டி!

2011 உலகக்கோப்பையை வென்ற உற்சாகத்தோடு இந்தியா உலவிக் கொண்டிருந்த காலகட்டம். 2015 உலகக் கோப்பைக்காய் அணியைத் தயார்படுத்தும் விதமாய் கம்பீர், சச்சின், ஷேவாக்குக்கு சுழற்சி முறையில் வாய்ப்பு அளிக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் இந்தப் போட்டியில் சச்சின் விளையாடவில்லை. அவரது இடத்தை நிரப்பும் விதமாய் ஆங்கர் ரோலை மிகச் சிறப்பாகச் செய்தார் கம்பீர். 270 ரன்களை எட்ட வேண்டும் என்ற இலக்குடன் ஆடிய இந்தியாவிற்கு ஷேவாக் 20 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தாலும், இன்னொரு ஓப்பனராய் இறங்கிய கம்பீர் பொறுப்பாக ஆடி 92 ரன்களைக் குவித்தார். ரோஹித்தும் கம்பீரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஒரு கட்டத்தில் 16 ஓவர்களில் 92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்து நின்றது இந்தியா. கைகோத்த தோனியும் ரெய்னாவும் நிதானமான ரன்சேர்ப்பில் ஈடுபட்டனர். குறிப்பாய் தோனி முதல் 15 பந்துகளில் வெறும் இரண்டு ரன்களை மட்டுமே எடுக்க, போட்டியில் ஆஸ்திரேலியாவின் கை ஓங்கத் தொடங்கி, கடைசி ஒன்பது ஓவர்களில் 68 ரன்கள் வேண்டும் என மாறியது. ரன் ரேட்டோ 7.55-க்கு உயர்ந்தது. ஒருபுறம் ரெய்னா தேவைப்படும் ரன்ரேட் அதிகரிக்காது பார்த்துக் கொள்ள மறுபுறம் தோனி பந்துகளை வீணாக்க, போட்டி ஆஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் மாறிமாறிப் போய் வந்தது.

#AUSvIND
#AUSvIND

46-வது ஓவரில் ரெய்னாவும், அதற்கடுத்து வந்த ஜடேஜாவும் 49-வது ஓவரில் வெளியேற, கடைசி ஓவரில், 13 ரன்கள் வேண்டுமென்ற நிலையில் களத்தில் நின்றதோ தோனியுடன் அஷ்வின். முதல் பந்தை வீணடித்த அஷ்வின் இரண்டாம் பந்தில் ஸ்ட்ரைக்கை தோனியிடம் தர, மூன்றாம் பந்தை 112 மீட்டர் தூரம் சிக்ஸருக்கு அனுப்பிய தோனி, நான்காம் மற்றும் ஐந்தாம் பந்துகளில் தலா மூன்று ரன்களை எடுத்து, இப்படியும் ஃபினிஷ் செய்யலாம் என வகுப்பெடுத்தார். இந்தியா தாங்கள் ஏன் சாம்பியன்ஸ் என மறுபடி ஒருமுறை நிரூபித்த போட்டி இது. தோனியின் அந்த இறுதி ஓவர் மாபெரும் சிக்ஸர் இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

2016 - இந்தியா ஆஸிக்கு இடையேயான ஐந்தாவது ஒருநாள் போட்டி, சிட்னி!

தொடரின் முதல் நான்கு போட்டிகளை வென்று கோப்பையை ஏற்கனவே கைப்பற்றி ஆஸ்திரேலியா, 5-0 எனத் தொடரை முடிக்க ஆசைப்பட்டது. முதலில் பேட்டிங் செய்கையில் கிடைத்த அத்தனை பெளலர்களையும் துவம்சம் செய்த வார்னரின் வானவேடிக்கைகளாலும், மார்ஷின் மெர்சலாட்டத்தாலும் 330 ரன்களைக் குவித்தது. அறிமுக வீரரான பும்ராவைத் தவிர வேறு யாருடைய பந்துவீச்சும் சிறப்பாய் அமையவில்லை. முடிந்தது இந்தியாவின் கதை, என்பதுதான் ஆஸ்திரேலிய ரசிகர்களின் எண்ணமாய் இருந்தது. அதை உடைத்து எறிந்தனர், ரோஹித் மற்றும் தவான். ரோஹித் 99 ரன்னில் அவுட் ஆக, தவானோ 56 பந்துகளில் 78 ரன்களைக் குவித்து வெறியாட்டம் ஆட, இதற்கு அடுத்த வந்த மனீஷ் பாண்டேவின் இன்னிங்ஸ்தான் உச்சகட்டம். இலவச இணைப்பாய் கூட்டிச் செல்லப்பட்ட அவர், ரஹானேவுக்கு காயம் ஏற்பட்டதால் கிடைத்த வாய்ப்பை கனகச்சிதமாய்ப் பயன்படுத்தி 81 பந்துகளில் 104 ரன்களைக் குவித்து தனது முதல் சதத்தைப் பதிவிட்டு அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார். ஆஸ்திரேலிய மண்ணில் 331 ரன்களை சேஸ் செய்வதெல்லாம் இந்தியாவுக்கு சாதாரணமாகிப் போனது.

#AUSvIND
#AUSvIND

2019 - இந்தியா ஆஸிக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி, மெல்போர்ன்!

முதல் இரண்டு போட்டிகளில் இருவரும் ஆளுக்கு ஒரு போட்டிகளில் வெற்றிபெற முன்றாவது போட்டி சீரிஸ் டிசைடராக வந்து நின்றது. முதல் போட்டியின் தோல்வியின்போது தோனியின் ஆட்டம் பலத்த சர்ச்சைக்குள்ளானது. அவர் 96 பந்துகளைச் சந்தித்து 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஒருபக்கம் ரோஹித் அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க அவருடன் ஆடிய தோனி பந்துகளை அதிகமாக வீணடித்ததனால்தான் இந்தத் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது என்ற கடுமையான விமர்சனம் எழுந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவின் ஆறு விக்கெட்டுகளை சஹால் பார்சல் செய்து அனுப்ப, 230 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா. ஓப்பனிங் இறங்கிய தவானும், ரோஹித்தும் சோபிக்கவில்லை. கோலியும் 46 ரன்களில் அவுட் ஆக, இந்தியா அவ்வளவுதானா என கேள்வி எழுந்த நிலையில் உள்ளே வந்த தோனி இந்த முறை எந்த பிரஷரும் இல்லாமல் கேதர் ஜாதவுடன் இணைந்து மேட்ச்சை முடித்தார்.

114 பந்துகளை சந்தித்த தோனி 6 பவுண்டரிகள் அடித்து 87 ரன்கள் எடுத்து, இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். முதல் போட்டியில் எழுந்த விமர்சனங்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளில் அரைச்சதம் அடித்து, தொடரையும் வென்று கொடுத்து, தன் மீது வந்த விமர்சனங்களைத் துடைத்தார் தோனி.

எத்தனை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா ஆடினாலும், இந்திய ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு, சிங்கத்தை அதன் குகையிலேயே போய் வேட்டையாடுவதைப் போல், இந்தச் சுற்றுப்பயணம், சிறப்பு விருந்துதான். கோலியின் கேப்டன்ஷிப்பும் இந்த விருந்தில் மசாலா சேர்க்க, சற்று சுவை தூக்கலானதாகவே 2020 தொடரும் அமையப் போகிறது. குறிப்பாய், முதல் டெஸ்ட் போட்டியோடு தாயகம் திரும்பும் கோலி, லிமிடெட் ஓவர் போட்டிகளை மொத்தமாய்த் தட்டித் தூக்க முனைப்புக் காட்டுவார் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. கெட் ரெடி ஃபோக்ஸ்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு