Published:Updated:

CWC22: தொடரும் மிதாலியின் ஸ்லோ இன்னிங்ஸ்... மந்தமான பேட்டிங்கால் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா!

Newzealand ( ICC )

இந்திய அணி ஸ்கோர் செய்ய தடுமாறியது. ஸ்ட்ரைக் ரொட்டேட் ஆகவில்லை. பவுண்டரியே வரவில்லை. ரன்ரேட் எகிறியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்தன. ஒரு முனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் மட்டும் நின்று அரைசதம் அடித்து தன்னால் இயன்ற அளவு போராடியிருந்தார்.

CWC22: தொடரும் மிதாலியின் ஸ்லோ இன்னிங்ஸ்... மந்தமான பேட்டிங்கால் நியூசிலாந்திடம் தோற்ற இந்தியா!

இந்திய அணி ஸ்கோர் செய்ய தடுமாறியது. ஸ்ட்ரைக் ரொட்டேட் ஆகவில்லை. பவுண்டரியே வரவில்லை. ரன்ரேட் எகிறியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்தன. ஒரு முனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் மட்டும் நின்று அரைசதம் அடித்து தன்னால் இயன்ற அளவு போராடியிருந்தார்.

Published:Updated:
Newzealand ( ICC )
பெண்கள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் இன்று நியூசிலாந்தை எதிர்கொண்டிருந்தது. இந்தப் போட்டியை 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்றிருக்கிறது. மந்தமான பேட்டிங்கினால் இந்திய அணி இந்த உலகக்கோப்பையில் முதல் தோல்வியை அடைந்திருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியை இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் ரொம்பவே சுலபமாக வென்றிருந்தது. பாகிஸ்தான் அவ்வளவு வலுவான அணி இல்லை என்பதால் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியே இந்திய அணிக்கு பெரும் சவால்மிக்க போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில், உலகக்கோப்பை தொடங்குவதற்கு வெகு சமீபத்திற்கு முன்புதான் நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியிருந்தது. அந்த தொடரை 1-4 என மோசமாக தோற்றிருந்தது. இதனாலயே இந்தப் போட்டி இந்தியாவிற்கு கடும் சவால்மிக்கதாக இருக்கும் என அனுமானிக்கப்பட்டது.

பூஜா வஸ்த்ராக்கர்
பூஜா வஸ்த்ராக்கர்
ICC

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதேநேரத்தில், இன்னொரு பக்கம் நியூசிலாந்துக்குமே இந்தப் போட்டி முக்கியமானதாக பார்க்கப்பட்டது. ஏனெனில், இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக நியூசிலாந்து வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை அடைந்திருந்தது. அடுத்த போட்டியிலேயே வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தாலும் புள்ளிப்பட்டியலில் கொஞ்சம் பின் தங்கியே இருந்தது. இதனால், இந்தியாவிற்கு எதிரான போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற முனைப்பில் நியூசிலாந்து களமிறங்கியது.

இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜே இந்த முறையும் டாஸை வென்றிருந்தார். சேஸ் செய்யப்போவதாக அறிவித்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் முதலில் பேட்டிங் ஆடி பெரிய ஸ்கோர்களை எடுத்த போதும் அவற்றை டிஃபண்ட் செய்ய முடியாமல் இந்தியா திணறியிருந்தது. அதன் காரணமாக சேஸ் செய்யும் முடிவை எடுத்திருக்கக்கூடும். நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 260 ரன்களை எடுத்தது. சீரான இடைவெளியில் இந்திய அணி விக்கெட்டுகளை எடுத்திருந்தது. நியூசிலாந்திற்கு ஒரு சில நல்ல பார்ட்னர்ஷிப்கள் அமைந்திருந்தன.

இந்தியா சார்பில் அதிக கவனம் ஈர்த்திருந்தவர் பூஜா வஸ்த்ராக்கர். கடந்த போட்டியில் பேட்டிங்கில் இக்கட்டான சூழலில் ஒரு அட்டகாசமான இன்னிங்ஸை ஆடி அணியை கரை சேர்த்தவர், இந்த முறை பௌலிங்கிலும் ஃபீல்டிங்கிலும் கலக்கியிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நியூசிலாந்தின் மிக முக்கியமான இரண்டு விக்கெட்டுகளான சூசி பேட்ஸ் மற்றும் சோஃபி டிவைன் இருவரின் விக்கெட்டையுமே பூஜாதான் வீழ்த்தியிருந்தார். பேட்ஸை ஒரு டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆக்கி மிரட்டியிருந்தார். இந்திய அணிக்கு பவர்ப்ளேயில் கிடைத்திருந்த ஒரே விக்கெட் இதுதான். பவர்ப்ளே முடிந்த பிறகு பூஜாவின் கைக்கு பந்து சென்றது. அப்போது நல்ல இடம் கொடுத்து ஷாட் ஆடத் தூண்டும் வகையில் பூஜா வீசிய ஒரு பந்திற்கு பேட்டை விட்டு டிவைன் எட்ஜ் ஆகி அவுட் ஆகியிருந்தார். 35 ரன்களை எடுத்திருந்த டிவைன் 7 பவுண்டரிகளை அடித்திருந்தார். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக சதமடித்து நல்ல ஃபார்மில் இருந்த டிவைனை சரியான நேரத்தில் பூஜா வீழ்த்தியிருந்தார்.

அமலியா கெர்
அமலியா கெர்
ICC

10 ஓவர்களை வீசியிருந்த பூஜா 34 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். வேகமாக ஏறிக்கொண்டிருந்த நியூசிலாந்தின் ரன்ரேட்டிற்கு ப்ரேக் போட்டது பூஜாவின் ஓவர்களே. 47வது ஓவரில் தொடர்ச்சியாக இரண்டு விக்கெட்களை வீழ்த்தி ஹாட்ரிக் வாய்ப்பை பெற்றிருந்தார். ஆனால், ஹாட்ரிக் கைக்கூடவில்லை.

நியூசிலாந்து சார்பில் அமலியா கெர்ரும், சேட்டர்த்வெய்ட்டும் அரைசதங்களை அடித்திருந்தனர்.

அமலியா கெர் இந்தியாவிற்கு எதிராக சமீபமாக வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடந்த அந்த 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3 அரைசதங்கள் ஒரு சதத்தை இந்தியாவிற்கு எதிராக அடித்திருந்தார். அதே ஃபார்மை இங்கேயும் தொடர்ந்தவர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார்.

சேட்டர்த்வெய்ட் 75 ரன்களை அடித்திருந்தார். இவர் வந்தவுடன் இடதுகை ஸ்பின்னரான ராஜேஸ்வரியை ஒரே ஓவரில் கட் செய்தார் மிதாலி. ஆனால், இடது கை ஸ்பின்னர் அல்ல. எந்த ஸ்பின்னர் வீசினாலும் அடிப்பேன் என சேட்டர்த்வெய்ட் சிறப்பாக ஆடியிருந்தார். இவர்களால் நியூசிலாந்து அணி 260 ரன்களை எடுத்தது.

சேட்டர்த்வெய்ட்
சேட்டர்த்வெய்ட்
ICC

இலக்கை நோக்கி இந்திய அணி சேஸிங்கை தொடங்கியது. நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக ஆடிய போட்டியில் இந்தியா சேஸ் செய்தே வென்றிருந்ததாலும், எதிர்பார்த்ததை விட நியூசிலாந்து கொஞ்சம் குறைவாகவே டார்கெட் வைத்ததாலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது. ஆனால், அந்த எண்ணமெல்லாம் முதல் 40 நிமிடங்களிலேயே பொய்யாகிவிட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்மிருதி மந்தனாவும் யஸ்திகா பாட்டியாவும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். யஸ்திகா ஷெஃபாலி வர்மாவிற்கு பதில் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தவர். சமீபமாக சீராக ஸ்கோர் செய்து கவனம் ஈர்த்த இளம் வீராங்கனை. உலகக்கோப்பைக்கு முன்பான பயிற்சி ஆட்டங்கள் இரண்டிலுமே கூட நன்றாக ஆடியிருந்தார்.

ஓப்பனிங்கில் தனது பார்ட்னராக வரும் யார் சொதப்பினாலும் சீராக ஸ்கோர் செய்வதே வழக்கமாகக் கொண்டிருந்த மந்தனாவே இந்த முறை முதல் ஆளாக விக்கெட்டை விட்டிருந்தார். ஆஃப் சைடை முழுவதுமாகக் கட்டம் கட்ட வைத்து ஜெஸ் கெர் ஓவர் தி விக்கெட்டில் வந்து ட்ரைவ் ஆடும் லெந்த்தில் வீசிய பந்தை கவர்ஸில் நின்ற பேட்ஸிடம் க்ளீன் கேட்ச் ஆக கொடுத்து மந்தனா 6 ரன்களில் வெளியேறினார். இது ஒரு பெரும் வீழ்ச்சிக்கான தொடக்கமாக அமைந்தது.

இதன்பிறகு, இந்திய அணி ஸ்கோர் செய்ய தடுமாறியது. ஸ்ட்ரைக் ரொட்டேட் ஆகவில்லை. பவுண்டரியே வரவில்லை. ரன்ரேட் எகிறியது. தொடர்ச்சியாக விக்கெட்டுகள் சரிந்தன.

Smirthi Mandana
Smirthi Mandana
ICC
ஒரு முனையில் ஹர்மன்ப்ரீத் கவுர் மட்டும் நின்று அரைசதம் அடித்து தன்னால் இயன்ற அளவு போராடியிருந்தார். ஆனாலும் ஹர்மன்ப்ரீத் ஃபார்முக்கு வந்த திருப்தியை மட்டுமே இந்த இன்னிங்ஸால் கொடுக்க முடிந்தது.

இந்திய அணி 198 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து 62 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இந்திய அணிக்கு அதன் பேட்டர்களின் சொதப்பலே மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலும் பேட்டர்கள் கடுமையாக சொதப்பியிருந்தனர். பூஜாவும் ஸ்நே ராணாவும் ஆடிய ஆட்டம் மட்டுமே அணியைக் காப்பாற்றியிருந்தது. முதல் போட்டியில் நடந்த அதே சொதப்பல்கள் இங்கேயும் அரங்கேறின.

முதல் 10 ஓவர்கள் பவர்ப்ளேயில் இந்திய அணி அடித்திருந்த ஸ்கோர் 26-2. 60 பந்துகளில் 45 பந்துகளை டாட் ஆக்கியிருந்தனர். இரண்டே இரண்டு பவுண்டரிகள் மட்டுமே வந்திருந்தன. ஏறக்குறைய இங்கேயே இந்திய அணி தோல்விப்பாதையை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டது.

முதல் 20 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோர் 50-3. 120 பந்துகளில் 87 பந்துகளை டாட் ஆக்கியிருந்தனர். மொத்தமே 3 பவுண்டரிகளை மட்டுமே அடித்திருந்தனர். இந்திய அணி சேஸிங்கை தொடங்கிய போது தேவைப்பட்ட ரன்ரேட் 5.2 மட்டுமே. ஆனால், முதல் 20 ஓவர்களில் இந்திய அணி 2.5 என்ற விகிதத்திலேயே ஸ்கோர் செய்திருந்தது. 20 ஓவர்கள் முடிவில் தேவைப்பட்ட ரன்ரேட் 7 க்கும் மேல் சென்றது. தொடர்ந்து ரன்ரேட் அதிகரித்துக் கொண்டே இருந்தது. முதல் 20 ஓவர்களில் ஆடிய மந்தமான ஆட்டம் தோல்வியை உறுதி செய்துவிட்டது.

மிதாலி
மிதாலி

இந்தப் போட்டி என்றில்லை, அதிகமாக டாட் ஆடி ரன்ரேட்டை உயர்த்திவிட்டு தோற்கும் வழக்கம் இந்திய அணியின் நீண்ட நாள் பிரச்னையாகவே இருக்கிறது. இந்த உலகக்கோப்பையிலுமே பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் இந்திய அணி முதல் 34 ஓவர்களில் 115-6 என்ற மோசமான நிலையிலேயே இருந்தது. குறிப்பாக, கேப்டன் மிதாலி ராஜ் தொடர்ச்சியாக மந்தமாக ஆடி ஏமாற்றி வருகிறார். அவர் ஸ்கோர் செய்தாலும் ஸ்ட்ரைக் ரேட் என்பது பெரும் பிரச்னையாகவே இருக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் 36 பந்துகளில் 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான இந்தப் போட்டியில் 56 பந்துகளில் 31 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். கியரை மாற்றி அடுத்தக்கட்டத்துக்கு செல்ல வேண்டிய சூழலில் சரியாக அவுட் ஆகியிருந்தார். யஸ்திகா, ஸ்மிருதி மந்தனா ஆகியோருமே இந்தப் போட்டியில் அதிக பந்துகளை ஆடி குறைவான ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர்.

நியூசிலாந்தின் அமலியா கெர் பேட்டிங்கில் மட்டுமில்லை பௌலிங்கிலும் இந்தியாவிற்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். சர்ப்ரைஸ் கூக்ளிக்களுடன் கூடிய லெக் ப்ரேக்கால் மிதாலி ராஜ், ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் கவுர் என மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

HarmanPreet Kaur
HarmanPreet Kaur
ICC

சேட்டர்த்வெய்ட் பேட்டிங் ஆட வந்த போது ஒரு இடது கை பேட்டருக்கு இடதுகை ஸ்பின்னர் வேண்டாம் என மேட்ச் அப்பை பொறுத்து மிதாலி ராஜ் ராஜேஸ்வரியின் முதல் ஸ்பெல்லை ஒரே ஓவரில் கட் செய்திருப்பார். அதே மேட்ச் அப்பை கொஞ்சம் பேட்டிங்கிலும் உபயோகித்திருக்கலாம். இந்திய அணியின் டாப் 3 பேட்டர்கள் மூவருமே இடது கை பேட்டர்களாக இருந்தனர். இதனால் லெக் ஸ்பின்னரான அமலியா கெர்ரை முதலில் வீச வைக்காமல் இன்னிங்ஸின் பிற்பகுதியிலேயே வீச வைத்திருப்பார்கள். அவரை அட்டாக் செய்யும் பொருட்டு மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்டர் இறக்கப்பட்டிருந்தால் இந்திய அணி ஆட்டத்தை இன்னும் நெருக்கமாக கொண்டு சென்றிருக்க முடியும்.

அதீத தற்காப்போடு மெதுவாக ஆடும் ஆட்டத்தைக் கைவிட்டு ரிஸ்க் எடுத்து அட்டாக்கிங்காக ஆடும்பட்சத்திலேயே இந்திய அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism