Published:Updated:

வி.வி.எஸ்.லட்சுமண்... சிங்கத்தின் பிடறியைப் பிடித்தே உலுக்கியவன்! - அண்டர் ஆர்ம்ஸ் 18

வி.வி.எஸ்.லட்சுமண்

ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவதைப்போல, ஓர் ஓவியன் பேரழகு ஓவியத்தை தீட்டுவதைப்போல, ஒரு டிசைனர் வளைவு நெளிவுகளுடன் காரை வடிவமைப்பதைப்போல, தன்னுடைய இன்னிங்ஸை அவ்வளவு அழகுடன், நேர்த்தியுடன், பக்குவத்துடன், பொறுமையுடன் வடிவமைப்பவர் வி.வி.எஸ். லட்சுமண்.

வி.வி.எஸ்.லட்சுமண்... சிங்கத்தின் பிடறியைப் பிடித்தே உலுக்கியவன்! - அண்டர் ஆர்ம்ஸ் 18

ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவதைப்போல, ஓர் ஓவியன் பேரழகு ஓவியத்தை தீட்டுவதைப்போல, ஒரு டிசைனர் வளைவு நெளிவுகளுடன் காரை வடிவமைப்பதைப்போல, தன்னுடைய இன்னிங்ஸை அவ்வளவு அழகுடன், நேர்த்தியுடன், பக்குவத்துடன், பொறுமையுடன் வடிவமைப்பவர் வி.வி.எஸ். லட்சுமண்.

Published:Updated:
வி.வி.எஸ்.லட்சுமண்

"கடலுக்குள் மூழ்கினேன், ராட்சத அலைகளில் நீந்தினேன், மிகவும் சிரமப்பட்டேன்" எனக் கடலுக்குள் முத்து எடுக்க மூழ்கியவன் என்ன கதை சொன்னாலும் அதைக் கேட்க யாரும் தயாராக இருக்கமாட்டார்கள். 'முத்து எடுத்துயா, இல்லையா?' என்பதுதான் எல்லோரின் கேள்வியாகவும் இருக்கும். பிசினஸ் மொழியில் சொல்லவேண்டும் என்றால் எண்ட் ரிசல்ட் என்ன என்பதுதான் முக்கியம்.

பல ஆயிரம் ரன்கள் குவித்து, பல நூறு சதங்கள் அடிப்பதைக்காட்டிலும் அணியை வெற்றிபெறவைத்த ஒருசில இன்னிங்ஸ்களே கிரிக்கெட் உலகில் காலத்துக்கும் பேசப்படும். அப்படி இந்திய அணி ஆபத்தில் இருந்தபோதெல்லாம் ஆஸ்திரேலியா எனும் பெருங்கடலில், பலமுறை எதிர்நீச்சல் அடித்து வெற்றி முத்துக்களைப் பிடுங்கிவந்தவர் வி.வி.எஸ் லட்சுமண்.

டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட், ஒன் டே ஸ்பெஷலிஸ்ட், டி20 ஸ்பெஷலிஸ்ட் என கிரிக்கெட்டில் ஸ்பெஷலிஸ்ட்டுகள் மூன்று வகைப்படுவர். ஆனால், இந்த மூன்று வகை ஸ்பெஷலிஸ்ட்டும் இல்லை லட்சுமண். இவர் ஆஸ்திரேலிய ஸ்பெஷலிஸ்ட். அதுவரை 'ஆஸ்திரேலியான்னா பயம் சார்' என்றவர்களின் மனதில் மாற்றங்களை விதைத்தது லட்சுமணின் பல இன்னிங்ஸ்கள். சிங்கத்தை அதன் பிடறியைப் பிடித்தே உலுக்கிய வெரி வெரி ஸ்பெஷல் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண்.

வி.வி.எஸ். லட்சுமண்
வி.வி.எஸ். லட்சுமண்

சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண்... இந்த லைன் அப்பை ஃபென்டாஸ்டிக் ஃபோர் என்பார்கள். 2000 டு 2005 காலகட்டத்தில் இந்த நான்கு பேரும்தான் இந்திய கிரிக்கெட்டின் அடையாளம். இந்த நான்கு பேருமே தனித்திறமையாளர்கள். இந்திய கிரிக்கெட்டின் பொற்காலத்தை தொடங்கிவைத்தது இந்த நால்வர் கூட்டணிதான். சச்சின் மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜெக்ட்ஸ்... கங்குலி துடுக்கானவர், துணிச்சலுடன் விளையாடக்கூடியவர். டிராவிட் தூண், அரணாக நின்று அணியைக் காப்பவர்... இதில் வி.வி.எஸ் லட்சுமண் என்பவன் போராளிக் கலைஞன். ஒரு சிற்பி சிற்பத்தை செதுக்குவதைப்போல, ஓர் ஓவியன் பேரழுகு ஓவியத்தை தீட்டுவதைப்போல, ஒரு டிசைனர் ஒரு காரை வடிவமைப்பதைப்போல, தன்னுடைய இன்னிங்ஸை அவ்வளவு அழகுடன், நேர்த்தியுடன், பக்குவத்துடன், பொறுமையுடன் வடிவமைப்பவர். இப்படிப்பட்ட ஒரு கலைஞன் இந்திய அணிக்குள் அதன்பிறகு வரவேயில்லை.

கங்குலி, டிராவிட்டைப் போலவே 1996-ல் இந்திய அணிக்குள் வந்தவர்தான் லட்சுமண். கமன்டேட்டர்களின் வசதிக்காக 'வி.வி.எஸ்.லேக்ஸ்மேன்'. ஐதராபாத்தைச் சேர்ந்த வலது கை பேட்ஸ்மேன். பிரமாதமான ஃபுட்வொர்க் பேட்ஸ்மேன் அல்ல லட்சுமண். டைமிங்கும், ரிஸ்ட்வொர்க்கும்தான் லட்சுமணின் பலம். அசாருதினோடு தொடர்ந்து விளையாடியவர் என்பதாலோ என்னவோ, ஃபிளிக் எல்லாம் அவ்வளவு அசால்ட்டாக ஆடுவர். ஆஃப்சைடில் எவ்வளவு விலகிப்பந்தைப்போட்டாலும், அதை லெக் சைடுக்கு திருப்பிவிடக்கூடிய திறமைசாலி. பந்து தன்னை நோக்கிவரும் வரை காத்திருந்து, அதன் வீரியத்தைப் புரிந்து அதற்கேற்றபடி ஆடக்கூடியவர். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்களின் பவுன்சர்களுக்கு புல் ஷாட்களால் பதில் சொல்லக்கூடியவர்.

VVS Laxman
VVS Laxman
Twitter

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் முதன்முதலாகக் களமிறங்கினார் விவிஎஸ். பேட்டிங் ஆர்டரில் 6-வது பேட்ஸ்மேன். அப்போதெல்லாம் பெரும்பாலும் இவர் பெளலர்களுடன்தான் கூட்டணி போடவேண்டியிருக்கும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களில் அவுட். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில், 'இவனுக்குள் என்னவோ இருக்கு' எனப் புரியவைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொருத்தவரை முதல் இன்னிங்ஸில் பெரிய இன்னிங்ஸ்கள் ஆடுவது என்பது பெரிய விஷயம் கிடையாது. இரண்டாவது இன்னிங்ஸில் தோல்வியைத் தவிர்க்க, வெற்றியைத் தொட பெரிய இன்னிங்ஸ்கள் ஆடவேண்டும். மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலை மீட்டு கரைசேர்க்க வேண்டும். அப்படித்தான் இந்தியாவை முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலேயே கரை சேர்த்தார் லட்சுமண்.

இந்தியா 91 ரன்களுக்கு டிராவிட் உள்பட 5 விக்கெட்டுகளை இழந்துவிட சுனில் ஜோஷி, ஶ்ரீநாத், கும்ப்ளே ஆகியோருடன் பார்ட்னர்ஷிப் போட்டு இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினார். லட்சுமண் அடித்த 51 ரன்கள்தான் அன்று இந்தியாவின் டாப் ஸ்கோர். இந்தியா இந்தப்போட்டியில் வெற்றிபெற்றது.

இரண்டாவது டெஸ்ட்டில் சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமண் என எல்லோருமே சொதப்பல் ஆட்டம் ஆடினர். ஆனால், லட்சுமணுக்கு மட்டும் மூன்றாவது டெஸ்ட்டில் இடம் கிடைக்கவில்லை. லட்சுமணுக்கு பதிலாக டபிள்யு.வி ராமன் சேர்க்கப்பட்டார். 22 வயது இளம் பேட்ஸ்மேனுக்கு வாய்ப்பளித்து வளர்த்துவிடவேண்டியவர்கள் 32 வயது ராமனை அணிக்குள் கொண்டுவந்தார்கள். அதுவும் சொதப்ப, பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனுக்குள் இருப்பதும், வெளியே போவதுமாக இருந்தார் லட்சுமண்.

வி.வி.எஸ். லட்சுமண், சச்சின்
வி.வி.எஸ். லட்சுமண், சச்சின்

திடீரென 1997-ல் வெஸ்ட் இண்டீஸுக்குப் போன இந்திய அணியில் நவ்ஜோத் சிங் சித்துவோடு ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறக்கப்பட்டார் லட்சுமண். 167 பந்துகளில் 64 ரன்கள். மிக மிக அழகாக, நேர்த்தியாக அளந்து அளந்து ஆடிய லட்சுமணின் ஸ்பெஷல் இன்னிங்ஸ் இது. 5 டெஸ்ட்டுகள் கொண்ட இந்தத் தொடரில் 4 டெஸ்ட்களிலுமே ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆடினார் லட்சுமண். 4-வது டெஸ்ட்டில் மீண்டும் அரை சதமும் அடித்தார். ஆனால், 5-வது டெஸ்ட்டில் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்டார்.

கிட்டத்தட்ட ஓர் ஆண்டு கழித்து 1998-ல் கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்தான் லட்சுமணுக்கும், ஆஸ்திரேலியாவுக்குமான பூர்வ ஜென்ம பந்தத்தை தொடங்கிவைத்தது. இந்த டெஸ்ட்டிலும் சித்துவோடு ஓப்பனிங் பேட்ஸ்மேனாகத்தான் ஆடினார் லட்சுமண். ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பே 191 ரன்கள். சித்து 97 ரன்கள் அடிக்க, லட்சுமண் 95 ரன்கள் அடித்தார். இதுதான் லட்சுமணின் முதல் பெரிய இன்னிங்ஸ். இந்தியா இந்தப் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றிபெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் முடிந்ததுமே ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே அணிகளுடனான பெப்ஸி முத்தரப்பு ஒருநாள் போட்டி நடந்தது. கிட்டத்தட்ட இந்திய அணிக்குள் அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் கழித்து முதல்முறையாக ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் லட்சுமண். இந்தத் தொடரில் வினோத் காம்ப்ளி தொடர்ந்து சொதப்ப, அவருக்குப் பதிலாக ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது லீக் போட்டியில் சேர்க்கப்பட்டார். இப்போதைய இந்திய அணியில் கோலியின் இடமான 1 டவுன் பேட்ஸ்மேனாகத்தான் லட்சுமண் அணிக்குள் இறக்கப்பட்டார். ஆனால், முதல் ஒருநாள் போட்டியிலேயே டக் அவுட். இதனால் அடுத்தப் போட்டியிலேயே ப்ளேயிங் லெவனில் இருந்து அவர் பெயர் டெலீட் செய்யப்பட்டது.

இதன்பிறகு சச்சினின் அதகள இன்னிங்ஸான ஷார்ஜா டெசர்ட் ஸ்டார்ம் இன்னிங்ஸில் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற சச்சினோட களத்தில் நின்றவர் லட்சுமண். Running Between The Wickets-தான் லட்சுமணின் பிரச்னையே. ஒருநாள் போட்டிகளில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்ய ஓடிக்கொண்டேயிருப்பது அவசியம். ஆனால், ரன்கள் ஓடவே ரொம்பவும் யோசிப்பார் லட்சுமண். அதனாலயே அன்று ஷார்ஜாவில் சச்சினிடம் கண்டபடி திட்டுவாங்கியிருப்பார். இந்த சீசனில் டெஸ்ட்டிலும் சரி, ஒருநாள் போட்டிகளிலும் சரி 20-30 ரன்களுக்கு மேல் அவரால் இன்னிங்ஸை பில்ட் செய்யமுடியவில்லை. இதனால் அணிக்குள் இருந்து மீண்டும் கழற்றிவிடப்பட்டார்.

வி.வி.எஸ். லட்சுமண், டிராவிட்
வி.வி.எஸ். லட்சுமண், டிராவிட்

இந்த வெளியேற்றம் லட்சுமணுக்குள் தூங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிவிட்டது. 1999/2000 ரஞ்சி சீசனில் லட்சுமணின் பேட்டில் இருந்து ரன் மழை பொழிந்துகொண்டேயிருந்தது. அந்த ஆண்டு அசாருதின் தலைமையில் ஐதராபாத் அணிக்காக விளையாடியவர் அடித்தது 1415 ரன்கள். இன்றுவரை ரஞ்சியின் ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுதான். தோனி அந்த சீசனில் ரயில்வேஸ் அணிக்காக விளையாடிகொண்டிருந்தார். ரயில்வேஸுக்கு எதிராக எல்லாம் சென்சுரிகள் பறந்தன. மொத்தம் 7 சதங்கள் அடித்தார். பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில், மைசூருக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் லட்சுமண் ஆடிய இன்னிங்ஸைப் பார்த்து இந்திய கிரிக்கெட் வீரர்களே மிரண்டனர். அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 353 ரன்கள் அடித்தார் லட்சுமண். 52 பவுண்டரிக்களும் உலகத் தரம். மைசூர் அணியில் வெங்கடேஷ் பிரசாத், சுனில் ஜோஷி, டோடா கணேஷ் என இந்திய அணிக்கு விளையாடிய பெளலர்கள் இருந்தார்கள். ஆனால், லட்சுமணை அன்று யாராலும் கட்டுப்படுத்தமுடியவில்லை.

இந்த ரஞ்சி ருத்ரதாண்டவ இன்னிங்ஸ்களுக்கு இடையில் 1999 இறுதியில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் சேர்க்கப்பட்டார் லட்சுமண். இங்கேயும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்தான். முதல் இரண்டு டெஸ்ட்களிலும் சுமாராக ஆடியவர் சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட்டில் பிரமிக்கவைத்தார். இந்தியா வெற்றிபெற 402 ரன் டார்கெட்டை வைத்தது ஆஸ்திரேலியா. இரண்டாவது இன்னிங்ஸிலும் சச்சின், டிராவிட் என எல்லோருமே அவுட் ஆகிக்கொண்டே போக ஓப்பனிங் இறங்கிய லட்சுமண் கிட்டத்தட்ட ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதுபோல விளையாடினார். இந்தியா நிச்சயம் தோற்கப்போகிறது என எல்லோருக்குமே தெரியும். ஆனால், லட்சுமண் ஆடிய ஆட்டம், தோற்றாலும் பரவாயில்லை, இந்த இன்னிங்ஸே போதும் என சொல்லவைத்தது. 198 பந்துகளில் 167 ரன்கள். இந்த இன்னிங்ஸில் மட்டும் 27 பவுண்டரிகள். எல்லாமே தரமான பவுண்டரிகள். லட்சுமணுக்கு அடுத்தபடியாக இந்த இன்னிங்ஸின் டாப் ஸ்கோரர் கங்குலி. அவர் அடித்தது 25 ரன்கள். பொதுவாகவே ஆஸ்திரேலியர்கள் மற்றநாட்டு கிரிக்கெட்டர்களுக்கு எல்லாம் ஸ்டேண்டிங் ஒவேஷன் கொடுக்கமாட்டார்கள். சச்சின், லாரா என ஒரு சிலருக்கே மட்டுமே அங்கு அந்த மரியாதை கிடைக்கும். ஆனால், அன்று சிட்னியில் லட்சுமணுக்கு கிடைத்தது ராஜமரியாதை. கிட்டத்தட்ட ஸ்டேடியத்தில் திரண்டிருந்த 40,000 ரசிகர்கள் லட்சுமணுக்கு எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

வி.வி.எஸ். லட்சுமண்
வி.வி.எஸ். லட்சுமண்

2000-த்தின் இறுதியில் மீண்டும் இந்தியா வந்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய ஸ்பெஷலிஸ்ட்டான லட்சுமணும் அணிக்குள் சேர்க்கப்பட்டார். இந்த முறை பழையபடி பேட்டிங் ஆர்டரில் 6-வது பேட்ஸ்மேன். மும்பையில் நடந்த முதல் டெஸ்ட்டில் அவமானகரமானத் தோல்வியை சந்திக்கிறது இந்தியா. ஸ்டீவ் வாக் தலைமையில் ஆஸ்திரேலியா பெறும் 17-வது தொடர் வெற்றி அது. இரண்டாவது டெஸ்ட் ஈடன் கார்டனில். 18-வது வெற்றி கொண்டாட்டத்துக்கு ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட ரெடி. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் அடிக்க, இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 171. இதில் லட்சுமண் அடித்த 59 ரன்கள்தான் அதிகபட்சம். ஃபாலோ ஆன் செய்கிறது இந்தியா.

முதல் இன்னிங்ஸில் 6-வது பேட்ஸ்மேனாக இறக்கப்பட்ட லட்சுமண் இரண்டாவது இன்னிங்ஸில் 1 டவுன் பேட்ஸ்மேனாக இறக்கப்படுகிறார். முதல் இன்னிங்ஸில் 1 டவுன் இறங்கிய டிராவிட் இந்த முறை லட்சுமண் இடத்தில். ராகுல் டிராவிட்டோடு ஐந்தாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் போடுகிறார் லட்சுமண். 376 ரன் பார்ட்னர்ஷிப். லட்சுமண் அவுட் ஆகும்போது இந்தியாவின் ஸ்கோர் 608. லட்சுமணின் ஸ்கோர் மட்டும் 281. 1983-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக சென்னையில், சுனில் கவாஸ்கர் அடித்த 236 ரன்கள்தான் அதுவரை இந்திய பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர். அதைத்தாண்டிப்போனார் லட்சுமண். இந்தியாவே கொண்டாடியது. தொடர் வெற்றிகளைப் பெற்றுவந்த ஆஸ்திரேலியா தோற்கடிக்கப்பட்டது. அதுவும் ஃபாலோ ஆனில் இருந்து மீண்டு இந்தியா பெற்ற முதல் வெற்றி!

இப்படிப்பட்ட இன்னிங்ஸ்கள் எல்லாம் வரலாற்றில் எப்போதோ ஒருமுறைதான் நடக்கும். இந்தியா ஆடிய அதிசய ஆட்டம் அது. அதை நிகழ்த்திக்காட்டியவர்கள் லட்சுமணும் டிராவிட்டும். ஆஸி பெளலர்கள் லைன் அண்ட் லென்த்தில் துல்லியம் காட்டக்கூடியவர்கள். 2000-களின் தொடக்கத்திலேயே டீமுக்குள் வீடியோ அனலிஸ்ட்டுகளை வைத்துக்கொண்டு எந்த லைனில் எப்படிப்போட்டால் ஒருவருடைய விக்கெட்டை வீழ்த்தமுடியும் என்கிற கணக்குகளோடு பந்துவீசியவர்கள். மெக்ராத், கில்லெஸ்பி, காஸ்பரோவிச், ஷேன் வார்னே என இந்த பெளலிங் சூப்பர் ஸ்டார்களாலேயே லட்சுமணுக்கு எங்கே பிட்ச் செய்வது என்பது பிடிபடவில்லை. எந்த லைனில் போட்டாலும் அடிக்கிறார், எந்த வேகத்தில் போட்டாலும் தடுக்கிறார் என லட்சுமண் அன்று ஆடிய ஆட்டம் இந்திய ரசிகர்கள் அதுவரைப் பார்த்திராதது.

வி.வி.எஸ். லட்சுமண்
வி.வி.எஸ். லட்சுமண்

காயம் ஏற்படுத்தவேண்டும் என பவுன்சர் போடுவது, லட்சுமணின் கவனத்தை திருப்ப ஏதேதோ பேசி வெறுப்பேற்றுவது என ஆஸி பெளலர்கள் என்னவெல்லாமோ செய்துபார்த்தார்கள். ஒன்றுமே வேலைக்காகவில்லை. ஆஸ்திரேலிய சாம்ராஜ்யத்தின் சரிவைத் தொடங்கிவைத்தப் போட்டி அதுதான். லட்சுமணைப் பார்த்து மிரள ஆரம்பித்தது ஆஸ்திரேலியா.

இதற்கு அடுத்து சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் ஆஸ்திரேலியவுக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்களிலுமே 65, 66 ரன்கள் அடித்து இந்தியா தொடர் வெற்றிபெற காரணமாக இருந்தார் லட்சுமண்.

இந்த ஃபார்ம் அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகளிலுமே விளையாடவைத்து. 1 டவுன் பேட்ஸ்மேன் லட்சுமண். முதல் போட்டியில் 34 பந்துகளில் 45 ரன்கள், இரண்டாவது போட்டியில் 51 ரன், மூன்றாவது போட்டியில் 83 ரன், இதில் சச்சினோடு இணைந்து 199 ரன்கள் பார்ட்னர்ஷிப் என செம ஃபார்மில் இருந்தார். ஐந்தாவது ஒருநாள் போட்டியில் சென்சுரி அடித்தார். ஒருநாள் போட்டிகளில் லட்சுமண் அடித்த முதல் சதம் இதுதான். இந்த முறை கங்குலியோடு சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 101 ரன் பார்ட்னர்ஷிப், அடுத்து டிராவிட்டோடு சேர்ந்து 97 ரன் பார்ட்னர்ஷிப் என 107 பந்துகளில் 101 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா லட்சுமணை பிரமிப்போடு பார்க்க ஆரம்பித்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் மொத்தமாகவே 6 சென்சுரிகள்தான் லட்சுமண் அடித்திருக்கிறார். இதில் நான்கு சென்சுரிகள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிக்கப்பட்டவை.

2002-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மீண்டும் அதே ஈடன் கார்டன் மைதானத்தில் சச்சினோடு இணைந்து லட்சுமண் ஆடிய ஆட்டமும் மறக்கமுடியாதது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்கள் அடிக்க, வெஸ்ட் இண்டீஸ் 497 ரன்கள் அடித்தது. 139 ரன் லீடிங்கில் இருந்தது கரீபியன். வழக்கம்போல இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிகின்றன. 6-வது பேட்ஸ்மேனாக வரும் லட்சுமண், சச்சினுக்கு பக்கபலமாக நின்று ஆடுகிறார். ஐந்தாவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 214 ரன்கள் பார்ட்னர்ஷிப் போடுகிறார்கள். சச்சின் 176 ரன்கள் அடித்து அவுட் ஆக, லட்சுமண் 154 ரன்கள் அடித்து இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நிற்கிறார். மேட்ச் டிரா ஆகிறது.

2003-ல் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு ஆச்சர்யங்கள் தர ஆஸ்திரேலியாவுக்குப் போய் இறங்கினார் லட்சுமண். இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாகின் ஃபேர்வெல் தொடர். ஆனால், ஸ்டீவ் வாகின் சாதனைப் பயணத்தை டிராவிட் - லட்சுமண் கூட்டணி நல்லபடியாக முடித்துவைக்கவிடவில்லை. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் டிராவில் முடிய, இரண்டாவது டெஸ்ட்டில் எப்படியாவது வென்றுவிடவேண்டும் என்கிற முனைப்பில் இருந்தார் கேப்டன் ஸ்டீவ் வாக். ரிக்கி பான்ட்டிங் மட்டும் 242 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 557 ரன்கள். இந்தியா முதல் இன்னிங்ஸை தொடங்கியது. சோப்ரா, ஷேவாக், சச்சின், கங்குலி என டாப் ஆர்டர் மீண்டும் சீர்குலைகிறது. ஆனால், இந்த முறை 1 டவுன் பேட்ஸ்மேனான டிராவிட்டும், 6-வது பேட்ஸ்மேனான லட்சுமணும் கொல்கத்தா சம்பவத்தை ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் மறு உருவாக்கம் செய்கிறார்கள். 303 ரன் பார்ட்னர்ஷிப். டிராவிட் இந்த முறை 233 ரன்கள் அடிக்க, லட்சுமண் 148 ரன்கள் அடிக்கிறார். இந்த விக்கெட்டை வீழ்த்த ஸ்டீவ் வாக் தன்னுடைய அத்தனை ஆண்டுகால அனுபவத்தைப் பயன்படுத்தி என்னவெல்லாமோ செய்து பார்க்கிறார். ஒன்றுமே வேலைக்காகவில்லை. ஒரு கட்டத்தில் பான்ட்டிங் கூட வந்து பெளலிங் போட்டார். ஆனால், இந்தியா 523 ரன்கள் அடித்து, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸை சீக்கிரம் முடித்து, சேஸிங்கை வெற்றிகரமாக நடத்தி வரலாற்று வெற்றிபெற்றது.

வி.வி.எஸ் லட்சுமண்
வி.வி.எஸ் லட்சுமண்

இதற்கு அடுத்த டெஸ்ட்டை ஆஸ்திரேலியா வென்றுவிட சீரிஸ் 1-1 என சமன் ஆனது. சிட்னியில் நடக்கும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட்டை வென்று ஸ்டீவ் வாகை வெற்றியோடு வழியனுப்பவேண்டும் என நினைக்கிறது ஆஸ்திரேலியா. இந்தியா முதலில் பேட்டிங். இந்த முறை முறை தனக்கு முன்பாக ஐந்தாவது பேட்ஸ்மேனாக லட்சுமணுக்கு வழிவிடுகிறார் கேப்டன் கங்குலி. அடிலெய்டில் டிராவிட்டோடு பார்ட்னர்ஷிப் போட்டதைப்போல, இந்த முறை சச்சினோடு இன்னிங்ஸை பில்ட் செய்கிறார் லட்சுமண். சச்சினும், லட்சுமணும் சேர்ந்து நான்காவது விக்கெட்டுக்கு 353 ரன்கள் அடிக்கிறார்கள். பிரெட் லீ எல்லாம் கிரிக்கெட்டே வேண்டாம் என வெறுக்கும் அளவுக்கு அன்று சச்சினும், லட்சுமணும் ஆடினார்கள். சச்சின் 241 ரன்கள் அடிக்க, லட்சுமண் 178 ரன்கள். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 705 - டிக்ளேர். ஸ்டீவ் வாகின் கடைசி தொடர் சோகத்தோடே முடிந்தது.

ஆஸ்திரேலியாவோடு மட்டுமல்ல பல நான்காவது இன்னிங்ஸ் சேஸ்களில் லட்சுமணின் பங்கு முக்கியமானது. 2010-ல் மொகாலியில் முதுகு பிடிப்பு காரணமாக பை ரன்னர் வைத்துக்கொண்டு, கடைசி விக்கெட்டுக்கு பிரக்யான் ஓஜோவோடு நின்று இந்தியாவை வெற்றிபெறவைத்தார் லட்சுமண். அன்று லட்சுமண் அடித்த 73 ரன்கள்தான் கேப்டன் தோனிக்கு டெஸ்ட்டிலும் தன்னால் கேப்டனாக வெற்றிகளைப் பெற்றுத்தரமுடியும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்தது.

வி.வி.எஸ். லட்சுமண்
வி.வி.எஸ். லட்சுமண்

ஒரு நிருபராக லட்சுமணுடனான என்னுடைய அனுபவம் என்பதும் அழகானது, காலத்துக்கும் நினைவுகூறத்தக்கது. கிரிக்கெட்டர்களை அணுகுவது என்பது 2000-களின் பிற்பகுதியில் சிரமமாகிப்போனது. அணியின் மேலாளர்களிடம் பேசி, அவர்கள் மூலம் நேரம் வாங்கினால் மட்டுமே கிரிக்கெட்டர்களைச் சந்தித்துப் பேசமுடியும். நிருபராகவே இருந்தாலும் நினைத்த நேரத்தில் ஒரு கிரிக்கெட்டரைப் பார்த்ததும் பேசிவிட முடியாது. அப்போதல்ல, இப்போதும் முகத்தைக்கூடப் பார்க்காமல் கடந்துபோவதுதான் இந்திய வீரர்களின் குணம். ஆனால், அதில் இருந்து விலகியிருந்தவர் லட்சுமண். கிரிக்கெட் மைதானமோ, ஹோட்டல் லாபியோ அவரை எங்கே வேண்டுமானாலும் பார்த்துப்பேசலாம். ஒரு புன்னகையோடு வரவேற்பார். எதைப் பற்றி பேசவேண்டும், என்ன கேள்வி, எவ்வளவு நேரம் ஆகும் என்பதையெல்லாம் கேட்டு நம்பரையும் வாங்கிக்கொண்டு அவரே போனில் அழைப்பார். இ-மெயில் மூலம் வாழ்த்துகள் அனுப்புவார்... என லட்சுமண் உண்மையிலேயே வேறு மாதிரியான கிரிக்கெட்டர்.

இந்தியாவுக்காக அவர் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்திருக்கிறார். பல அவமானகரத் தோல்விகளைத் தவிர்த்திருக்கிறார். ஆனால், அவரை ரசிகர்களோ, அணி நிர்வாகமோ, ஏன் மீடியாக்களோ கூட பெரிதாக மதித்ததில்லை. ஆனால், அவர் ஒருபோதும் ஒருவரையும் மதிக்காமல் கடந்துபோனதில்லை. சிறியவர், பெரியவர் எனப் பாகுபாடு, பாரபட்சம் காட்டியதில்லை. லட்சுமணை நீங்கள் எப்போது சந்தித்தாலும் ஒரு புன்னகை பரிசாகக் கிடைக்கும்!