வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, ஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. 2-1 என ஒரு நாள் தொடரை வென்ற இந்திய மகளிர் அணி, 5-0 என டி-20 தொடரில் வெஸ்ட் இண்டீஸை வொயிட் வாஷ் செய்துள்ளது.

2020 டி-20 உலகக்கோப்பைக்கு தயாராகிக்கொண்டிருக்கும் இந்திய அணிக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்தத் தொடர் வெற்றி மிக முக்கியமானது!
பேட்டிங் அதிரடி!
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, முதல் போட்டியிலிருந்தே ஆதிக்கம் செலுத்தியது. டேரன் சமி மைதானத்தில் நடந்த முதல் டி-20 போட்டியில், ஸ்மிரிதி மந்தனாவுடன் ஓப்பனிங் களமிறங்கிய 15 வயது ஷஃபாலி வர்மா, சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் அரை சதத்தைக் கடந்தார். 15 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரை சதம் கடந்த ஷஃபாலி வர்மா, சச்சினின் 30 ஆண்டுக்கால ரெக்கார்டை முறியடித்தார். அதுமட்டுமல்ல, முதல் டெஸ்ட் போட்டியில் 143 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் நின்ற இந்த ஜோடி, டி-20 கிரிக்கெட்டில் இந்திய மகளிரின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரெக்கார்டைச் செய்தது.

ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ராட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர் என ஏற்கெனவே இந்திய அணியில் உள்ள அதிரடி பேட்ஸ்வுமன்களின் வரிசையில் புதிதாக இணைந்துள்ளார் ஷஃபாலி ஷர்மா. இவர்களோடு வேதா கிருஷ்ணமூர்த்தி பேட்டிங்கில் அதிரடி காட்டினால், டி-20 உலகக்கோப்பையில் இந்திய அணி பேட்டிங் பற்றி மெனக்கெட வேண்டியதில்லை.
இந்திய அணிக்குக் கைக்கொடுத்த ஸ்பின்னர்ஸ்
தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராதா யாதவ், அனுஜா பாட்டீல் என இந்திய அணி சுழற்பந்துவீச்சாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்வுமனை ரன் எடுக்கவிடாமல் திணறிடித்தனர். இரண்டாவது டி-20 போட்டியின்போது, 4 ஓவர்கள் வீசிய தீப்தி ஷர்மா, வெறும் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். தொடர் முழுவதுமே ஸ்பின்னர்களுக்குச் சாதகமாக இருந்ததைப் பயன்படுத்திக்கொண்ட இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்வுமன்களின் விக்கெட்டுகளை எடுத்தது.

டி-20 தொடரில் இந்திய அணி
முதல் போட்டி - 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
இரண்டாவது போட்டி - 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மூன்றாவது போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
நான்காவது போட்டி - 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐந்தாவது போட்டி - 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
தொடரின் மூன்றாவது போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்த வெஸ்ட் இண்டீஸ் அணியை, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 59 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி. அந்தப் போட்டியில் ஜெமிமா ராட்ரிக்ஸ் (40*) ரன் சேர்க்க, போட்டியை வென்று தொடரை வென்றதை இந்திய அணி உறுதிப்படுத்திக் கொண்டது.
முதல் போட்டியிலிருந்து கடைசி போட்டி வரை, வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய ஒவ்வொரு பேட்டிங் இன்னிங்ஸிலும் குறைந்தது 5 விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஐந்து போட்டிகளையும் வென்ற இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸை சீரிஸ் வொய்ட் வாஷ் செய்தது.
ஆஸ்திரேலியாவில் 2020 பிப்ரவரி 21-ம் தேதி தொடங்கும் டி-20 உலகக்கோப்பை, மார்ச் 8-ம் தேதி வரை நடக்க உள்ளது. ஏற்கெனவே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் டி-20 உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றுவிட்டன.

இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் ஐந்து அணிகள் இடம் பிடித்துள்ளன. குரூப் போட்டிகளின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெறும். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, வங்கதேசம் அணிகளுடன் இந்திய அணி க்ரூப் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது.