19 - வயதுக்குட்பட்டோருக்கான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வந்தது. இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், குவைத், வங்கதேசம், இலங்கை, நோபாள், மற்றும் யு.ஏ.இ ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டன.

க்ரூப் ஏ வில் அனைத்து போட்டிகளும் வெற்றிபெற்ற இந்திய அணியும், 2 வெற்றிகளை பெற்ற ஆப்கானிஸ்தான் அணியும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின. அதே போன்று குரூப் பி யில் அன்னைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்ற வங்கதேசமும், 2 போட்டிகளில் வெற்றிபெற்ற இலங்கை அணியும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறின.
அரையிறுதி ஆட்டங்கள் இரண்டும் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்த இந்திய மற்றும் வங்கதேச அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதி ஆட்டம் இன்று இலங்கையில் கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணிக்கு வங்கதேச அணியினர் தொடக்கத்திலே அதிர்ச்சி அளித்தனர். முதல் மூன்று வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 8 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் துருவ் சற்று பொறுப்புடன் விளையாடினார். சிறப்பாக விளையாடிய துருவ் 33 ரன்கள் எடுத்தார். பின்வரிசையில் களமிறங்கிய கிரன் லால் 37 எடுத்தார். இவர்கள் இருவரின் உதவியுடன் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. இறுதியில் இந்திய அனி 32.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் எடுத்தது.
பின்னர் 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியை இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் பெவிலியன் அனுப்பி வைத்தனர். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 78 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது இந்திய அணியின் வெற்றி உறுதி என எண்ணியபோது இறுதி கட்டத்தில் களமிறங்கிய வங்கதேச வீரர்கள் சற்று நிலைத்து நின்று ஆடி இந்திய அணிக்கு பிரஷர் கொடுத்தனர்.

இறுதியில் 33 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதர்வா 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவர் ஆட்டநாயகனாகவும் தேர்தெடுக்கப்பட்டார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் 1989 -ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 2016 -ம் ஆம் ஆண்டு முதல் அனைத்து வருடமும் இந்த போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 8 தொடர்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் இந்திய அணி 7 முறை கோப்பையை கைபற்றியுள்ளது. 2012 -ம் ஆண்டு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் டையில் முடிந்ததால் இரு அணிகளும் கோப்பைய பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.