Published:Updated:

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்: யாருக்கு இடம் கிடைக்கும்? இந்திய அணிக்கு என்னென்ன தலைவலிகள்?!

Team India ( AP )

இளைஞர்களின் செயல்பாடுகள் ஒருபக்கம் என்றால், கடந்த ஓரிரு வருடங்களாகவே இருந்துவரும் சீனியர் பேட்டர்களின் பிரச்னை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 95 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார் புஜாரா.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடர்: யாருக்கு இடம் கிடைக்கும்? இந்திய அணிக்கு என்னென்ன தலைவலிகள்?!

இளைஞர்களின் செயல்பாடுகள் ஒருபக்கம் என்றால், கடந்த ஓரிரு வருடங்களாகவே இருந்துவரும் சீனியர் பேட்டர்களின் பிரச்னை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 95 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார் புஜாரா.

Published:Updated:
Team India ( AP )
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்று, தாங்கள் இந்திய மண்ணில் அசைக்க முடியாத சக்தி என்பதை நிரூபித்துள்ளது கோலி அண்ட் கோ. அடுத்ததாக, தென்னாப்பிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடர் வரும் 26-ம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடருக்கான அணித் தேர்வு எளிதாக இருக்கப்போவதில்லை. வழக்கமாக இந்திய பிளேயிங் லெவனைத் தேர்வு செய்வதுதான் பெரும் குழப்பமாக இருக்கும். சர்ச்சைகள் கிளம்பும். ஆனால், இப்போது ஸ்குவாட் செலக்‌ஷனே பெரும் தலைவலியாக இருக்கப்போகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே ரெட் பால் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் இந்தியாவுக்கு புதிய ஸ்டார்கள் தொடர்ந்து உருவெடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நியூசிலாந்து தொடரும் சில ஸ்டார்களைக் கண்டெடுத்திருக்கிறது. அறிமுக போட்டியிலேயே சதம், அரைசதம் என அசத்தியிருக்கிறார் ஷ்ரேயாஸ் ஐயர். ஹோம் மேட்சுகளில் அஷ்வின், ஜடேஜாவுக்கு இணையாக தன்னாலும் கன்சிஸ்டென்ட்டாக செயல்பட முடியும் என்று நிரூபித்திருக்கிறார். 4 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்கு நல்லபடியாக கம்பேக் கொடுத்திருக்கிறார் ஜெயந்த் யாதவ்.

Century in first International innings | ஷ்ரேயாஸ் ஐயர்
Century in first International innings | ஷ்ரேயாஸ் ஐயர்

இவர்கள் போக, இரண்டாவது சாய்ஸ் ஓப்பனர்களாக இருந்த மயாங்க் அகர்வால், சுப்மன் கில் ஆகியோரும் இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டனர். முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்ந்தே 30 ரன்கள் மட்டும் எடுத்திருந்த மயாங்க், மும்பை டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமும், இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதமும் அடித்தார். முதல் இன்னிங்ஸில் அஜாஸ் படேல் சுழலில் மொத்த இந்திய அணியும் தடுமாற, 100 ஓவர்கள் நிலைத்து நின்றார் இவர்.

அதேபோல் சுப்மன் கில்லும் தன் கன்சிஸ்டென்சியை ஓரளவு நிரூபித்திருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் என தொடர்ந்து சொதப்பியவரை, நியூசிலாந்துக்கு எதிராக மிடில் ஆர்டரில் விளையாடவைக்க நிர்வாகம் முடிவெடுத்திருந்தது. கே.எல்.ராகுல் காயமடைந்ததால் மீண்டும் ஓப்பனராகவே இறங்கினார். பெரிய இன்னிங்ஸ் ஆடாவிட்டாலும், ஓரளவு நல்ல தொடக்கம் கொடுத்திருக்கிறார் அவர். 4 இன்னிங்ஸ்களில் மூன்று முறை 40+ ஸ்கோர்கள் அடித்திருக்கிறார். அவரது பெர்ஃபாமன்ஸையும் புறந்தள்ள முடியாது. மாற்று கீப்பராக களமிறங்கிய கே.எஸ்.பரத் கூட சிறப்பாகவே செயல்பட்டார்.

Ajinkya Rahane
Ajinkya Rahane
AP

இந்த இளைஞர்களின் செயல்பாடுகள் ஒருபக்கம் என்றால், கடந்த ஓரிரு வருடங்களாகவே இருந்துவரும் சீனியர் பேட்டர்களின் பிரச்னை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து வெறும் 95 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார் புஜாரா. அதிலும் அதிகபட்சமான 47 ரன்கள் ஓப்பனிங் இறங்கி அடித்தது. உலகின் தலைசிறந்த நம்பர் 3 பேட்டர்களுள் ஒருவராக இருந்தவர், இப்போது இடிந்த சுவராக மாறிவிட்டார். ரஹானேவின் இடம் அதைவிட பெரிய கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறது. துணைக் கேப்டன். ஆனால், இப்போது பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்பதே சந்தேகமாகிவிட்டது. இரண்டாவது போட்டிக்கான அணியிலேயே அவர் இடம்பெறவில்லை. காயம் என்று அறிக்கை விட்டுவிட்டார்கள்.

இப்படியொரு சூழ்நிலையில் ஒரு புதிய ஸ்குவாடை இந்தியா வெளியிடவேண்டியிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றுவிட்டு, இங்கிலாந்து மண்ணிலும் வெற்றியை நெருங்கியிருக்கும் அணிக்கு, மிச்சம் இருப்பது தென்னாப்பிரிக்கா மட்டுமே. அங்கு தங்கள் முதல் டெஸ்ட் தொடரை வெல்ல இந்தியா முழு பலத்துடன் களமிறங்கும்.

சமீபமாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 17-20 வீரர்களைக் கூட தேர்வு செய்து அனுப்புகிறது இந்திய கிரிக்கெட் போர்டு. கொரோனா பிரச்னை, வீரர்கள் காயம் போன்றவற்றால் பாதிக்கப்படாமல் இருக்க அதிக வீரர்க்ளை அனுப்புகிறது. ஆனால், இந்தச் சூழ்நிலையிலும் ஒரு சில வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதுதான் பெரும் கேள்விக்குறியாக இருக்கிறது.

அஷ்வின்
அஷ்வின்

கோலி, ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட், பும்ரா, அஷ்வின், ஜடேஜா, சிராஜ், ஷமி, இஷாந்த், உமேஷ் ஆகியோர் கட்டாயம் அணியில் இடம்பெற்றுவிடுவார்கள். என்னதான் சமீபமாக சொதப்பினாலும், புஜாராவின் இடத்துக்கு எந்தப் பிரச்னையும் வந்துவிடாது. தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அதிக வேகப்பந்துவீச்சாளர்களே களமிறக்கப்படுவார்கள் என்பதால், இங்கிலாந்தில் சிறப்பாகச் செயல்பட்ட ஷர்துல் தாகூருக்கு அணியில் இடம் கிடைத்துவிடும். பேக் அப் கீப்பருக்கான இடம் ரித்திமான் சஹாவுக்கு உறுதி. இந்தத் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து தன் பேட்டிங் திறமையையும் நிரூபித்திருக்கிறார் அவர்.

இந்த 13 இடங்களும் உறுதி செய்யப்பட்டவை. எந்த மாற்றமும் இருக்காது. மற்ற இடங்களுக்குத்தான் பி.சி.சி.ஐ ஆயிரம் காரணங்கள் சொல்லவேண்டியிருக்கும். பேக் அப் ஓப்பனருக்கான இடத்துக்கு மயாங்க் அல்லது கில் இருவரில் ஒருவர்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இருவருமே இந்தத் தொடரில் சிறப்பாக ஆடியிருப்பதால் தொடக்கத்திலேயே தலைவலி தொடங்கிவிடும்.

எப்போதும் ஒரு ஸ்குவாட் அறிவிக்கும்போது கூடுதல் பௌலர்களைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஏற்கெனவே 7 பேட்டிங் ஆப்ஷன்கள் இருப்பதால், அதிகபட்சம் இன்னும் இரண்டு வீரர்கள் இந்த அணியில் இருக்கலாம். ஷ்ரேயாஸ் ஐயர் தடுமாறிய மிடில் ஆர்டருக்கு நம்பிக்கைக் கொடுத்திருக்கிறார். பிளேயிங் லெவனிலேயே ரஹானேவின் இடத்தைப் பெற்றுவிட வாய்ப்புண்டு.

தென்னாப்பிரிக்கத் தொடருக்குத் தயாராவதற்காகவே, நியூசிலாந்து தொடருக்குத் தேர்வு செய்யாமல், இந்திய ஏ அணிக்கு ஆட ஹனுமா விஹாரி தென்னாப்பிரிக்கா அனுப்பட்டிருக்கிறார். அவரை அணியில் சேர்க்காவிட்டால், அதுதான் மிகப்பெரிய சர்ச்சையை உண்டுசெய்யும். இவர்கள் போக, அணியின் துணைக் கேப்டன் ரஹானே வேறு இருக்கிறார். இந்த மிடில் ஆர்டர் தேர்வு மிகப்பெரிய தலைவலியாக இருக்கப்போகிறது.

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி பெரும்பாலும் ஒரு ஸ்பின்னரோடு ஆடவே வாய்ப்பு அதிகம். அதனால், அதிக ஸ்பின்னர்கள் இடம்பெறமாட்டார்கள். பெரிய ஸ்கோராக இருக்கும்பட்சத்தில், அக்‌ஷர் படேல் பேக் அப் ஆப்ஷனாகத் தேர்வு செய்யப்படலாம். அஷ்வின், ஜடேஜா இருவரும் சமீபமாக அவ்வப்போது காயமடைவதால், இன்னொரு கூடுதல் ஸ்பின்னர் இருப்பது நல்லதுதான். தென்னாப்பிரிக்க ஏ அணியுடன் விளையாடிக்கொண்டிருக்கும் இந்திய ஏ அணி பௌலர்கள் நவ்தீப் சைனி, தீபக் சஹார் யாரேனும் கூடுதல் பௌலராக அணியில் இடம்பெறக்கூடும்.

IND v NZ
IND v NZ
பிளேயிங் லெவன் தேர்வைப் பற்றி சொல்லவே தேவையில்லை. வழக்கம்போல் ஜடேஜாவா அஷ்வினா என்ற கேள்வி, ரஹானே வேண்டுமா என்ற கேள்வி, எந்த 4 வேகப்பந்துவீச்சாளர்கள் என ஆயிரம் கேள்விகள் எழப்போகின்றன. ஆனால், தென்னாப்பிரிக்க அணி முன்பைப் போல் இல்லை என்பதால், எப்படியும் வெற்றி வசப்பட்டுவிடும்.