Published:Updated:

வெ.இ அணிக்கு எதிரான 2 -வது டெஸ்ட் - `கேப்டன் கோலி' குறிவைக்கும் சில சாதனைகள்

பிரேம் குமார் எஸ்.கே.

பேட்ஸ்மேனாக பல்வேறு சாதனைகள் செய்திருந்தாலும், அவ்வப்போது கேப்டனாகவும் சில சாதனைகளை முறியடித்துவருகிறார்.

kohli
kohli ( AP )

இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து, தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியாகத் தொடங்கப்பட்டுள்ளதால், டெஸ்ட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது.

Team India
Team India
AP

முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றிபெற்று 60 புள்ளிகள் பெற்றது. இந்நிலையில், ஜமைக்காவில் இன்று தொடங்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று, 120 புள்ளிகளையும் பெற இந்திய அணி முனைப்புக்காட்டிவருகிறது.

இந்திய அணி வெற்றிபெறுவது, வீரர்கள் காம்பினேஷன் எனப் பல விஷயங்கள் இருந்தாலும், கோலி முறியடிக்க இருக்கும் சாதனைகளும் சில இருக்கின்றன. பேட்ஸ்மேனாக பல்வேறு சாதனைகள் செய்திருந்தாலும், அவ்வப்போது கேப்டனாகவும் சில சாதனைகளை முறியடித்துவருகிறார். இந்தப் போட்டியில், கோலி முறியடிக்க வாய்ப்புள்ள சில சாதனைகளைப் பார்க்கலாம்.

kOhli
kOhli
AP

இன்றைய போட்டியில் கோலி சதமடிக்கும்பட்சத்தில், அது கேப்டனாக கோலி அடிக்கும் 19 -வது சதமாக அமையும். கேப்டனாக அதிக சதமடித்த பட்டியலில், 19 சதங்களுடன் ஆஸ்திரேலிய வீரர் பாண்டிங் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்த டெஸ்ட்-டில் சதமடிப்பதன்மூலம் பாண்டிங் உடன் இரண்டாம் இடத்தைப் பகிர்ந்துகொள்வார் கோலி. இந்தப் பட்டியலில், தென்னப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் 25 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை முறையடிக்க முடியும். அதாவது, தோனி கேப்டனாக 60 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு 27 வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். கோலி, தற்போது வரை 47 போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டு, 27 வெற்றிகளைப் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதன்மூலம் அதிக டெஸ்ட் வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்ற பட்டியலில் முதலிடம் பெறுவார் கோலி.

Ishanth - jadeja - kohli
Ishanth - jadeja - kohli
AP

கடந்த போட்டியில் வெற்றிபெற்றபோதே கோலி, அந்நிய மண்ணில் கேப்டனாக அதிக வெற்றியைப் பதிவுசெய்த இந்திய கேப்டன் என்னும் சாதனையைப் படைத்தார். முன்னதாக, கங்குலி அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்தார். கேப்டனாக கோலியின் டெஸ்ட் வெற்றி, சராசரி 57.44% ஆக இருக்கிறது. இந்திய கேப்டன்களில், கோலிக்கு மட்டுமே வெற்றி சராசரி 50% -க்கும் அதிகமாக இருக்கிறது.