புதையலை அடைவதற்கான வரைபடத்தில் திசைகள் மட்டும் அழிந்து போயிருந்தால் அதைப் பின்பற்றுவரின் நிலை எப்படி இருக்குமோ அப்படித்தானிருந்தது இந்தாண்டில் இந்தியாவின் நகர்வுகளும்.
அதன் வாயிலாக எதிர்பாராத சில பாதைகள் திறக்கப்பட்டாலும், பல சமயங்கள் அடைக்கப்பட்ட கதவுகளையே வெறித்துப் பார்க்க வேண்டிய நிலையே இருந்தது. சாவித்துவாரத்தின் வழியாக வெற்றிகள் வந்தாலும் சாளரத்தின் வழியாக தோல்விகள் வந்து கொண்டிருந்தன.
அவ்வகையில் இதோ இவ்வருடம் இந்திய அணி சந்தித்த உயரங்களையும் தவறிய தருணங்களையும் பற்றிய ஒரு ரீவைண்ட்.
குழப்ப முடிச்சுக்கள்:
`உலகக்கோப்பை' என்பது மட்டுமே கண்களில் தெரிய அதை எட்டுவதற்காக எல்லா முறைகளையும் ஒன்றை மாற்றி ஒன்றாக பரிட்சித்துக் கொண்டே இருந்தனர். வீரர்கள் சுழற்சி முறையில் ஆடவைக்கப்பட்டனர் அதிலும் வெவ்வேறு பேட்டிங் பொஸிஷனில். கேப்டன்களாக பலரும் அரியணையை அலங்கரித்தனர். ஓய்வு, காயம், எல்லோருக்கும் வாய்ப்பு என ஏதோ ஒரு காரணத்தினால் `நிரந்தர பிளேயிங் 11' என்பதே பேராசை போலானது. பைலேட்டரல் தொடர்களில் இதன் தாக்கம் பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பையில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆசிய மற்றும் டி20 உலகக்கோப்பை:
வருடத்தின் முதல் நாளில் எடுக்கும் உறுதிமொழியை ஓரிரு மாதங்களிலேயே மறந்துவிடுவதுதானே மனித இயல்பு? இந்திய அணியையும் அத்தகைய அம்னீஸியா ஆட்டிப்படைத்தது. 2021 உலகக்கோப்பையில் வீழ்ச்சியின் காரணம் டிஃபென்சிவ் மோடில் ஆடியதென உணர்ந்து அதன்பின்பு வந்த தொடர்களில் அட்டாக்கிங் மோடுக்கு மாறியிருந்த இந்தியா 2022 உலககோப்பையிலோ பழைய பாணியிடமே தஞ்சமடைந்தது. போதாக்குறைக்கு வேகப்பந்து வீச்சப் படையின் பலவீனத்தை உணர்ந்தும் அதனை சரிசெய்ய முடியவில்லை. பும்ரா மற்றும் ஜடேஜாவின் காயங்களால் ஏற்பட்ட வலி இந்தியாவின் கால்களில் விலங்கிட, அதைமீறி இறுதிப் போட்டிக்குள் இந்தியாவால் எட்டிக்கூடப் பார்க்க முடியவில்லை. பாகிஸ்தானை வீழ்த்தியதில் மட்டுமே ஆறுதல்பட்டுக் கொண்டது.
கோலியின் சதம்:
1000 நாட்களாகியும் வராமலிருந்த கோலியின் சதம் ஒருவழியாக வந்து சேர்ந்து இந்தாண்டில் புக்மார்க் செய்யப்படக்கூடிய ஒன்றாக அமைந்தது.
ஆசியக்கோப்பையில் ஆஃப்கானுக்கு எதிராக யாருமே எதிர்பார்க்காத டி20 ஃபார்மட்டில் அவரது 71-வது சதம் வந்து சேர்ந்தது. பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் அதற்கடுத்த சதத்தை அடித்தார். டெஸ்ட் ஃபார்மட்டில் மட்டும் இன்னமும் அவரது சதத்திற்கான காத்திருப்பு தொடர்கிறது.

வியனுலகத்தை இவை வியக்க வைத்தாலும் உணர்வுப்பூர்வமான ஒன்றாக மாறியது உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான கோலியின் 82 ரன்கள் இன்னிங்ஸ்தான். ராஃபின் பந்தில் 18.5-வது ஓவரில் அடிக்கப்பட்ட அந்த சிக்ஸர் பலரது இதயத்திலும் காலத்தால் அழிக்க இயலாத கல்வெட்டாகப் பதிக்கப்பட்டது.
கங்குலியைக் கைகழுவிய பிசிசிஐ:
கங்குலி என்னும் ஆளுமையின் ஆதிக்கம் அத்தனை சுலபமாக முடிவுக்கு வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என்பதே பலரது அனுமானமாக இருக்க பிசிசிஜயோ அதிரடியாக அவரை வழியனுப்பி ரோஜர் பின்னியை அதிகாரத்தில் அமர்த்தியது. பிசிசிஐயின் 36-வது தலைவராக ரோஜர் பின்னி தேர்ந்தெடுக்கப்பட்டார். சேத்தன் ஷர்மா தலைமையிலான தேர்வுக்குழுவும் விரைவிலேயே மாற்றியமைக்கப்பட உள்ளது.

இங்கிலாந்துடனான டெஸ்டில் தோல்வி:
பகையை மிச்சம் வைத்துவிட்டு வந்ததற்கான பலனை இந்தியா இந்தாண்டு அனுபவித்தது. 2021-ல் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு டெஸ்டில் ஆடி 2/1 என தொடரில் முன்னிலை வகித்தது இந்தியா. பின் கோவிட்டைக் காரணம் காட்டி தொடரைப் பாதியில் கைவிட்டு வந்திருந்தது. மீதமிருந்த ஒரு டெஸ்டில் ஆட இந்தாண்டு இந்தியா இங்கிலாந்துக்குப் பயணப்பட இம்முறை இங்கிலாந்தோ அசாத்திய பலம் கொண்டதாக Bazz Ball-ஆல் தரமுயர்த்தப்பட்டிருந்தது. விளைவு, ஐந்தாவது டெஸ்டில் தோற்று 2/2 என டெஸ்ட் தொடர் டிராவாக ஏமாற்றத்துடன் இந்தியா திரும்பியது.
சூர்யாவும் பாண்டியாவும்:
சச்சின் டெண்டுல்கருக்கு 2010 போல, விராட் கோலிக்கு 2016 போல எந்தவொரு வீரருக்கும், ஏதோ ஒரு ஆண்டு தொட்டதெல்லாம் துலங்கும் ஆண்டாக மாறும். அவர்களது கரியரின் பிரைமாக உச்சத்தைத் தொட வைக்கும். சூர்யக்குமார் யாதவுக்கும் ஹர்திக் பாண்டியாவுக்கும் இந்த ஆண்டு அத்தகைய நினைவு கொள்ளத்தக்க ஆண்டாக மாறியது.
இந்தியாவின் டி20 வெற்றிகள் எல்லாமே சூர்யக்குமாரை சுற்றியே பின்னப்பட்டன.

டிரெண்ட் பிரிட்ஜில் இங்கிலாந்துக்கு எதிராக அவரால் அடிக்கப்பட்ட 117 ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 68, மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிராக 76 என பல அதிரடி இன்னிங்ஸ்களை ஆடினார். டி20-ல் 180-க்கும் அதிகமான அவரது ஸ்ட்ரைக்ரேட் அந்த ஃபார்மட்டில் ஆல் டைம் கிரேட்களில் ஒருவராக ஏற்கனவே அவரை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது.
பாண்டியாவின் எழுச்சியும் இந்தாண்டு மறுக்கவோ மறைக்கவோ முடியாததாக உருவெடுத்தது. முதன்முதலாக ஐபிஎல்லை சந்தித்த குஜராத் அணிக்கு தலைமையேற்று கோப்பையை ஏந்த வைத்தது மட்டுமல்ல, தனிப்பட்ட வகையில் ஒரு வீரராகவும் இந்தாண்டு அவருடைய பன்முகத்தன்மையை வெளிக் கொணர்ந்தது. பவர் ஹிட்டராக, மணிக்கு 140 கிமீ-க்கு மேலான வேகத்தை எட்டும் வேகப்பந்து வீச்சாளராக, துல்லியமான ஃபீல்டராக என பல பரிமாணத்திலும் ஜொலித்தார். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அவரது தலைமைத்துவத்தின் தனித்தன்மையும் வெளிவந்தது. மொத்தத்தில் அவரது சிறந்த ஆண்டுகளில் ஒன்றாக இது அமைந்தது.
ஸ்ரேயாஸ் மற்றும் இஷானின் சாதனைகள்:
இந்தாண்டு மூன்று ஃபார்மட்டிலுமே ஆடிய ஸ்ரேயாஸ் அதில் ஒருநாள் மற்றும் டெஸ்டில் இணையற்ற வகையில் ஆடியிருந்தார். ஒருநாள் போட்டிகளில், 55.7 ஆவரேஜோடு 724 ரன்களையும், டெஸ்டிலோ, 60.3 சராசரியோடு 422 ரன்களையும் குவித்திருந்தார்.
இன்னொரு புறமோ, முன்னதாக சச்சின், சேவாக், ரோஹித் ஆகிய இந்தியாவின் மிகப்பெரிய வீரர்களால் மட்டுமே அடிக்கப்பட்டிருந்த ஒருநாள் ஃபார்மட்டின் இரட்டை சதத்தை ஆண்டு முடியும் தருவாயில் இஷான் கிஷன் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிவேக இரட்டை சதம் இது என்பதுவும் அதனை மேலும் சிறப்பித்தது.

பங்களாதேஷுக்கு எதிரான அந்தப் போட்டியில் வெறும் 126 பந்துகளில் இளம் வீரரான இஷானின் இரட்டை சதம் வந்திருந்தது.
மேன்கேடிங் மற்றும் ஃபேக் ஃபீல்டிங் சர்ச்சைகள்:
சர்ச்சைகள் இல்லாவிட்டால் சுவாரஸ்யம் ஏது? இந்தியாவின் தீப்தி ஷர்மா நான் ஸ்ட்ரைக்கர் முனையிலிருந்த இங்கிலாந்தின் சார்லி டீனை ரன் அவுட் (மேன்கேடிங்) செய்த சம்பவம் சர்ச்சைகளுக்கு வித்திட்டது. விதிகளுக்கு உட்பட்டதென்றாலும் நீண்ட விவாதங்களும் சார்பான எதிரான கருத்துக்களும் வலைதளங்களை துளைத்தெடுத்தன. உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், நோ பால் சர்ச்சையிலும் பின்னர் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் ஃபேக் ஃபீல்டிங் சர்ச்சையிலும் கோலி சிக்கினார்.
ஜெய் ஷாவின் கருத்து:
"2023-ல் ஆசியக் கோப்பையில் ஆட இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது, வேறொரு பொதுவான நாட்டில் நடந்தால் பங்கேற்கும்" என்ற ஜெய் ஷாவின் கருத்து பல விமர்சனங்களைக் கிளப்பியது. அப்படியானால் இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலகக்கோப்பையிலிருந்து பாகிஸ்தான் வெளியேறும் என்ற எதிர்க்கருத்தும் அந்தப்பக்கமிருந்து எழுந்தது. பொதுவான ரசிகர்களோ விளையாட்டையும் அரசியலையும் தனி தனி டிராக்கில் பயணம் செய்ய அனுமதியுங்கள் என்ற வேண்டுகோளை முன்வைத்தனர்.
மகளிர் கிரிக்கெட்:
இந்திய மகளிர் கிரிக்கெட் இந்தாண்டு பல முகடுகளை முத்தமிட்டது. காமன்வெல்தில் வெள்ளியை வென்றது, ஆசிய கோப்பையைக் கைப்பற்றியது, தொடர்ந்து 16 டி20 போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது என சிறந்த ஆட்டங்களை வெளிப்படுத்தியது. கிரிக்கெட்டில் வீரர்களுக்கு இணையான அதே சம்பளம் வீராங்கனைகளுக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் பிசிசிஐ-க்கு `சபாஷ்' போட வைத்தது. மேலும் பெண்களுக்கான ஐபிஎல்லும் உறுதி செய்யப்பட்டு அதற்கான பணிகளும் துரிதக்கதியில் நடந்து வருவது மகளிர் கிரிக்கெட்டுக்கான விடியலாகப் பார்க்கப்படுகிறது.

ரோஹித் - டிராவிட் கூட்டணி:
இந்த காம்போ கலவையான விமர்சனங்களையே எதிர்கொண்டது. உண்மையில் இந்தாண்டு இந்தியா ஆடிய ஒட்டுமொத்த போட்டிகளில் இவர்கள் இருவரும் இணைந்து பயணித்த போட்டிகள் சரிபாதியாகவே இருக்கும். மோதலும் இல்லை அதேநேரம் பாராட்டப்படுமளவு இருவருக்குள்ளும் ஒத்ததிர்வும் இல்லை என்பதையே பல தருணங்களிலும் பார்க்க முடிந்தது. இருவரும் இணைந்து எடுத்த பல முடிவுகள் அணியை பின்னோக்கிப் பயணிக்க வைத்தன, 2007 ஒருநாள் உலகக்கோப்பையை இழந்தபோது அணியிருந்த நிலைமைக்கு எடுத்துச் சென்றுள்ளன என்ற கருத்தே வட்டமிடுகிறது.

மொத்தத்தில் இந்தியாவுக்கு இந்தாண்டு மிக சுமாரான ஆண்டாகவே அமைந்தது. இருப்பினும் ஆண்டின் இறுதியை பங்களாதேஷுடனான டெஸ்ட் தொடரை வென்று டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான ரேஸினை உயிர்ப்போடு வைத்து நேர்மறையாக முடித்துள்ளது இந்தியா.