சினிமாக்காரர்களை மட்டுமே கொண்டாடுகிறோம்! - எம்.ஜி.ஆர் பிடிக்கும் ஆனா... - இதுதான் என்னோட அரசியல்...

தமிழர்கள் எதிர்க்குரல் எழுப்பணும்... இளைஞர்களுக்கு உதவ ரெடி!
இந்திய கிரிக்கெட்டில் தடம்பதித்த முக்கியமான தமிழர்களில் ஒருவர் முரளி விஜய். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் ஆகச்சிறந்த ஓப்பனர்கள் என ஒரு பட்டியலைத் தயாரித்தால் அதில் முரளி விஜய் பெயரைத் தவிர்க்கவே முடியாது. சி.எஸ்.கே-வின் பெருமித விசில் சத்தம் காதைக் கிழிப்பதற்கு விஜய்யுமேகூட முக்கியப் பங்களிப்பாளராக இருந்திருக்கிறார். அப்படிப்பட்டவர் திடீரென கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார். முரளி விஜய் பேட்டிங் ஆடும்போது வெளிப்படும் ஒரு ஞானியை ஒத்த நிதானம்தான் அவரின் தனித்தன்மை. அந்த நிதானம்தான் அவரின் வசீகரமும்கூட. அவருக்கே உரிய ஸ்டைலில் சலனமேயின்றிப் பேசத்தொடங்கினார் முரளி விஜய்.
``திடீரென ஓய்வை அறிவித்திருக்கிறீர்களே? கிரிக்கெட் ஆடும் அத்தனை நாடுகளிலும் ப்ரீமியர் லீக் போட்டிகள் நடக்கின்றன. அந்த வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக்கொள்ள விருப்பமில்லையா?’’
‘‘கிரிக்கெட் ஆடும் அத்தனை வீரர்களுமே ஏதோ ஒரு கட்டத்தில் ஓய்வு பெற்றுத்தான் ஆக வேண்டும். இதுதான் நான் ஓய்வு பெறுவதற்கு சரியான நேரம் என்று கருதினேன். உலகம் முழுவதும் சென்று மற்ற வீரர்கள் ஆடுகிறார்கள் என்பதற்காக நானும் அதையே செய்ய முடியாது. அந்தந்தச் சூழலில் என்ன முடிவை எடுக்க வேண்டுமோ, அதைப் புற அழுத்தங்கள் எதுவுமின்றி சுதந்திரமாக எடுக்க விரும்புகிறேன். அந்தவகையில் எடுக்கப்பட்டதுதான் இந்த ஓய்வு முடிவும்!’’

``டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் தலைசிறந்த ஓப்பனர்களில் ஒருவர் நீங்கள். குறிப்பாக, வெளிநாடுகளில் அசாத்தியமாக ஆடியிருக்கிறீர்கள். அந்த நினைவுகளைக் கொஞ்சம் பகிர முடியுமா?’’
‘‘இந்திய அணிக்காக ஆடியது ஒரு பொற்காலம். ஒரு தமிழனாக உலக அரங்கில் நின்று சிறப்பாக ஆடியதை நினைத்து எப்போதுமே பெருமிதம் கொள்வேன். ‘அணிக்காக ஆடுகிறோம், அணியின் வெற்றிக்கு நம்முடைய பங்களிப்பையும் வழங்க வேண்டும்’ என்ற எண்ணம் மட்டுமே என்னை உந்தித்தள்ளும். வெளிநாடுகளில் ஓப்பனிங் செய்வதற்கு, சென்னையில் இருக்கும்போதே மனரீதியாகத் தயாராகத் தொடங்கிவிடுவேன். அதைக் களத்தில் சரியாகச் செயல்படுத்தினாலே போதும் என நினைப்பேன். நினைவுதெரிந்த நாளிலிருந்தே கிரிக்கெட் ஆடுவதால் அனுபவத்தின் வழி ஒருவித நிதானமும் பொறுமையும் இயல்பிலேயே கிடைக்கப் பெற்றிருக்கிறேன். அதுவும் பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.’'
``சி.எஸ்.கே-விற்காகவும் நீண்ட காலம் ஆடியிருக்கிறீர்கள். உங்களுடைய கரியரில் சி.எஸ்.கே எப்போதும் ஸ்பெஷல்தானே?’’
‘‘ஆம். சி.எஸ்.கே-விற்காக ஆடியது மறக்கமுடியாத நாள்கள். தொடக்கத்தில் சி.எஸ்.கே சாம்பியன் பட்டத்தை வென்றபோதும் அணியில் முக்கிய வீரராக இருந்தேன். பின்னர், சி.எஸ்.கே கடின காலங்களைக் கடந்து வந்து சிறப்பான கம்பேக் கொடுத்த போதும் அணியில் இருந்தேன். சி.எஸ்.கே ஒரு கூட்டுமுயற்சி. ஒரு தரமான கம்பேக்கைக் கொடுக்க வேண்டும் என அனைவரும் இணைந்து உழைத்திருந்தோம்.'’

``சச்சின், தோனி, கோலி மாதிரியான நட்சத்திர வீரர்களுடன் நீங்கள் நிறைய ஆடியிருக்கிறீர்கள். அவர்களிடம் கற்றுக்கொண்டவை என்னென்ன?’’
‘‘சச்சின், தோனி, கோலி மூவரின் முக்கியமான பல மைல்கல் சாதனைகளின்போது உடன் இருந்திருக்கிறேன். அதெல்லாம் நல்ல அனுபவம். சச்சின் கடவுள் போன்றவர். அவர்களின் ஆட்டத்தைப் பார்த்து தேவையானவற்றை எடுத்துக்கொள்வேன். பொதுவாக நான் எனக்குள் இருந்துதான் அதிகம் கற்றுக்கொள்ள நினைப்பேன். என் அனுபவம்தான் எனக்கான கற்றல். மற்றபடி சச்சின், தோனியெல்லாம் கிரிக்கெட் வீரர்கள் என்பதைத் தாண்டி இந்தியாவுக்கே உத்வேகம் அளிப்பவர்கள்.’’
``சமீபத்தில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் உங்களைப் பற்றி அடித்த கமென்டுக்கு காட்டமாக பதில் சொன்னீர்களே?’’
‘‘ஆம். ஒரு ரெக்கார்டு லிஸ்ட்டில் என் பெயர் முதலிடத்தில் இருப்பதைப் பார்த்து மஞ்ச்ரேக்கர் கமென்ட் அடித்தார். ரோகித் சர்மாவின் பெயர் அந்த இடத்தில் இருந்திருந்தால் ‘ஆச்சர்யமாக இருக்கிறதே' என கமென்ட் செய்திருப்பாரா? இது ஒரு அரசியல் விளையாட்டு. தென்னிந்தியர்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என நினைக்கிறார்கள். அதற்கான பதிலடிதான் என்னுடைய ட்வீட். மஞ்ச்ரேக்கருக்குப் பின்னால் எல்லாவிதத்திலும் தாக்கம் செலுத்தக்கூடிய மும்பைப் பின்னணி இருக்கிறது. இப்படி கமென்ட்டெல்லாம் அடித்துவிட்டு அடுத்த நிகழ்ச்சியிலேயே அவர்தான் மீண்டும் கோட் சூட் போட்டுக் கொண்டு அமர்கிறார். அப்படியெனில், அவர்களெல்லாம் நம்மை இந்தியர்களாகவே பார்க்கவில்லையோ என்கிற எண்ணம்தான் தோன்றுகிறது. கோலியும் ரோகித்தும் மட்டுமே ஹீரோ இல்லை. இந்திய அணிக்காக ஆடும் அத்தனை பேரும் ஹீரோக்கள்தான். வடக்கிலிருந்து வரும் இப்படியான தாக்குதல்களுக்கு எதிராகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். எதிர்க்குரலை எழுப்ப வேண்டும். ஒரு தமிழனுக்கு இன்னொரு தமிழன்தான் ஊக்கமாக இருக்க வேண்டும். ஆனால், நாமே நமக்குள் முரண்பாடுகளோடு வாழ்வதை சகிக்க முடியவில்லை. நாம் எக்கச்சக்கமான பெருமிதங்களைக் கொண்டிருக்கிறோம். அந்தப் பெருமைகளை முதலில் நாம் உணர வேண்டும். சினிமாக்காரர்களை மட்டுமே எப்போதும் கொண்டாடிக் கொண்டி ருக்கிறோம். அதைத் தாண்டிப் பல துறைகளிலும் நிறைய சாதனையாளர்கள் இருக்கிறார்கள். கிரிக்கெட்டிலுமேகூட ரஞ்சி டிராபி வரைக்குமாவது மேலெழும்பி வரும் வீரர்களை மட்டும்தான் நாம் கவனிக்கிறோம். அதற்கும் கீழ் டிவிஷன் அளவில் ஏராளமான வீரர்கள் ஆடுகிறார்கள். அவர்களுக்கும் வெளிச்சம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இந்த வேற்றுமைகளைக் களைந்து இந்தியன் என்கிற உணர்வோடு முன்னேற முடியும்.'’
``அரசியல்ரீதியாகவும் கருத்துகளை முன்வைக்கிறீர்கள். அரசியல் ஆசை எதுவும் இருக்கிறதா?’’
‘‘அரசியல் அவ்வளவு எளிதான விஷயமா? எனக்கு சிறுவயதிலிருந்தே எம்.ஜி.ஆரைப் பிடிக்கும். அவர் தொடக்கக்காலத்திலிருந்தே சிரமப்பட்டு அரசியலுக்குள்ளேயே பயணித்துப் பெரிய தலைவராக உருவெடுத்தார். மக்களுக்காகப் பல நல்ல திட்டங்களைச் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் போன்றவர்கள் செய்த சேவையைத்தான் அரசியலாக நினைக்கிறேன். இப்போது ஓய்வு பெற்றுவிட்டேன். என்னால் இயன்ற வரை தமிழ் மக்களுக்குத் தேவையானதைச் செய்ய நினைக்கிறேன். அதுதான் என் அரசியல்.’'
``இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த சேத்தன் சர்மா குறித்த புலனாய்வுச் செய்தி ஒன்று சர்ச்சையாகியிருக்கிறதே?’’
‘‘அதுசார்ந்து முழுமையான தகவல்கள் எதுவும் எனக்குத் தெரியாது. ஆனாலும், பொதுவாக அணித்தேர்வு மற்றும் தேர்வுக்குழு சம்பந்தமான விஷயங்களில் பி.சி.சி.ஐ கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். கிரிக்கெட்டுக்காக வீரர்கள் தங்கள் வாழ்வையே அர்ப்பணிக்கிறார்கள். அப்படியிருக்க, ஒரு வீரருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்பு மறுக்கப்பட்டுவிடக்கூடாது.’’

``உலகக்கோப்பையை வென்று பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த முறையாவது இந்திய அணி உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறதா?’’
‘‘அணித்தேர்வு சரியாக அமைந்தால் வெற்றி கிட்டும். கடந்த காலங்களில் அதில்தான் இந்திய அணி சறுக்கியதென நினைக்கிறேன். இந்த முறை உலகக்கோப்பை இந்தியாவில்வேறு நடக்கிறது. உலகக்கோப்பையை வெல்வது ஒரு பெரிய கனவு. இந்திய அணி உறுதியாக அரையிறுதி வரை முன்னேறிவிடும் என நம்புகிறேன். அதன்பிறகு அன்றைய நாளின் ஆட்டத்தைப் பொறுத்துதான் எல்லாம் முடிவாகும். சரியான அணி சென்றால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.’’
``அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?’’
‘‘16-24 வயதில் இளைஞர்கள் என்ன மாதிரியான பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதுவே அவர்களின் எஞ்சிய வாழ்க்கையைத் தீர்மானிக்கும். இந்தக் கட்டத்தில் இளைஞர்கள் எந்த கவனச்சிதறலுக்கும் ஆட்படாமல் இருக்க வேண்டும். அதற்கு என் அனுபவத்தின் வழி அத்தனையையும் செய்யத் தயாராக இருக்கிறேன். இளைஞர்களின் நலன் சார்ந்த விஷயங்களுக்கு யார் வேண்டுமானாலும் எப்போதும் என்னைத் தொடர்புகொள்ளலாம். அடுத்து என்ன என்கிற கேள்வியை எப்போதும் நான் கேட்டுக்கொண்டதில்லை. என் விருப்பப்படி வாழ நினைக்கிறேன். எல்லாமே சரியாக நடக்கும் என நம்புகிறேன்.’’