Published:Updated:

100 கோடி ஜெர்ஸிக்களின் கனவு... கேப்டன் ஹர்மன்ப்ரீத் எங்கிருந்து வந்தவர் தெரியுமா?#HBDHarmanpreet

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் பிறந்தநாள் கட்டுரை!

அன்று மார்ச் 8, 1989. ஒட்டுமொத்த உலகமும் மகளிர் தின கொண்டாட்டத்தில் மகிழ்ந்திருக்க, ஒருவர் மட்டும் அதனினும் அதிகமான மகிழ்ச்சியில் திளைத்திருந்தார். பஞ்சாபிலுள்ள ஒரு கடைக்கோடி கிராமத்தின் மருத்துவமனையில், பிறந்து சில மணித்துளிகளே ஆன தன் மகளை, கண்களில் கண்ணீர்த் துளிகளோடு கரங்களில் தாங்கி நின்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்தார் அவர். அந்தத் தகப்பனின் பெயர், ஹர்மந்தர் சிங் புல்லர். அவர் கரங்களின் கதகதப்பில் உறங்கியிருந்த அவர் மகளின் பெயர் ஹர்மன் ப்ரீத் கவுர். இந்தப் பெயர்தான் இன்று நடக்கும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில், இந்திய அணியை வழிநடத்தும் கேப்டனின் ஜெர்ஸியில் பதிந்திருக்கும், படித்துப் பாருங்கள்!

75,000 டிக்கெட்ஸ், கேட்டி இசை... உலக சாதனைப் படைக்குமா இந்தியா வெர்ஸஸ் ஆஸ்திரேலியா கிரிக்கெட்!

இந்த 30 ஆண்டுக்கால பயணம், ஏதோ அதிர்ஷ்டத்தால் நிகழ்ந்ததல்ல, அனுதினமும் விதைத்த கடின உழைப்பால் விளைந்தது. கனவை நோக்கிய பெரும் ஓட்டத்தில் பாத வெடிப்புகளையும், முள் கிழிசல்களையும், சிராய்ப்புகளையும் உதிர்ந்த வியர்வைகளையும் துச்சமென உதறித்தள்ளியதால் கிடைத்தது. ஹர்மன் பிறந்தபோது, அவருக்காக சட்டை வாங்கச் செல்கிறார் அவரின் தந்தை ஹர்மந்தர். `குட் பேட்டிங்' எனும் வாசகத்துடன் கிரிக்கெட் வீரனின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு சட்டை அவர் கண்ணில்படுகிறது. கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்ட ஹர்மந்தர், ஆசைஆசையாய் அந்தச் சட்டையை வாங்கி தன் மகளுக்கு அணிவிக்கிறார். அதன் கூடவே அவரின் ஆர்வத்தையும். குழந்தை வளர்கையில், சட்டை பற்றாமல் போகிறது. ஆனால், ஆர்வமோ வற்றாமல் நாளுக்குநாள் வளர்கிறது. அதுதான் இன்று அவரை இந்திய ஜெர்ஸி அணிய வைத்திருக்கிறது. அதுவும், கேப்டனாக..!

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

ஹர்மந்தர், தன் மகளை மாலை நேர கிரிக்கெட் ஆட்டங்களுக்கு அழைத்துச் செல்வார். அங்கு, ஆண்களுடன் இணைந்து விளையாடுவார் ஹர்மன். `ஒரு பெண் குழந்தையை கிரிக்கெட் விளையாட வைப்பதால் உனக்கு என்ன கிடைக்கப்போகிறது?' என அக்கம்பக்கத்தினர் கேள்விகளாலும் கேலிகளாலும் துளைத்தெடுப்பர். அவர்களின் பேச்சை காதிலேயே வாங்கிக்கொள்ளாத ஹர்மந்தர், தன் மகளுக்கு தன் கையாலேயே பேட் ஒன்றை செதுக்கிக் கொடுத்து விளையாட வைத்தார். அப்படி ஆண்களுடன் இணைந்து, வியர்க்க விறுவிறுக்க சுறுசுறுப்பு குறையாமல் விளையாடிக்கொண்டிருந்த ஹர்மனைக் காண்கிறார் கமல்திஷ் சிங் சோதி எனும் கோச். ஹர்மனின் திறமையைப் புரிந்துகொண்ட சோதி, ஹர்மனின் பள்ளிக்கான செலவையும் விளையாட்டு உபகரணங்கள் செலவையும் தன்னுடையதாக ஏற்றுக்கொண்டு ஒரு பள்ளியில் சேர்த்துவிடுகிறார்.

அதிகம் புகழ்பெறாத அந்தப் பள்ளியில் கிரிக்கெட் அணியில் சிறப்பாக விளையாடி, பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் கேம்பினுள் நுழைந்து, பெரோஸ்பூர் மாவட்ட அணியில் தேர்வாகி தன் திறமையை நிரூபித்து பஞ்சாப் சீனியர் அணியில் இடம்பிடித்தார் ஹர்மன். அங்கிருந்து நார்தன் ஜோன், அப்படியே இந்திய டி20 மகளிரணி. மார்ச் 2009-ல் இந்திய அணிக்காக முதல் முறையாகக் களமிறங்கிய ஹர்மன், 2012-ம் ஆண்டு டி-20 அணியின் கேப்டனும் ஆனார்.

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

ஷேவாக்கை முன்மாதிரியாகக் கொண்டுள்ள ஹார்மனின் ஆட்டமும் அவரைப் போலவே களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும். 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் வெளிநாட்டு டி20 ஃபிரான்சைஸில் கையெழுத்திட்ட முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். வுமன் பிக்பாஷ் லீக்கில் சிட்னி தண்டர்ஸ்க்காக களமிறங்கிய அவர், தனது முதல் ஆட்டத்திலேயே 28 பந்துகளில் 47 ரன்கள் அடித்து அசத்தினார். அதைப்பற்றி ட்விட்டரில் பதிவிட்ட கில்கிறிஸ்ட், ஹர்மனின் ஆட்டத்தைப் பார்த்து மிரண்டுபோனதாகச் சொல்லியிருந்தார்.

இந்திய அணிக்காக விளையாட வெளிநாடு செல்லும்போது அவருடைய தந்தையின் நண்பர்கள் ஏர்போர்ட்டுக்கு வந்துள்ளார்கள். அப்போது ``பெண்களால் கயிற்றை தாண்டி அடிக்க முடியாது (பவுண்டரிகளை அடிக்க முடியாது) என்று தெரிந்தும், பெரிய 'ஹிட்'களை ஏன் முயற்சி செய்கிறீர்கள்? ஒன்று அல்லது இரண்டு ரன்களை ஓடி எடுங்கள்" என்று கூறியிருக்கிறார்கள். அவர்களுக்கு தன் பேட்டால் பதில் சொன்ன ஹர்மன், 2017 உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 171 ரன்கள் விலாசினார். அதுவரை மகளிர் கிரிக்கெட்டில் ஆர்வம் செலுத்தாத இந்தியர்களில் பெரும் பங்கினர் #Harmanpreet என்ற ஹேஷ்டேக்கில் அவரை டிரெண்டு செய்தனர். மகளிர் கிரிக்கெட் இந்தியாவில் புத்துயிர் பெற்றது!

ஹர்மன்ப்ரீத் கவுர்
ஹர்மன்ப்ரீத் கவுர்

இந்திய அரசின் அர்ஜுனா விருதும் 2017-18-ம் ஆண்டுக்கான பிசிசிஐ- உலகின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதையும் வென்றிருக்கிறார். நவம்பர் 2018-ல் நடைபெற்ற மகளிர் டி20 உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 51 பந்துகளில் 103 ரன்கள் ஸ்கோர் செய்து டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். இப்போது, இந்திய அணியின் கேப்டனாக, உலகக்கோப்பையின் இறுதிவரை அழைத்து வந்திருக்கிறார். களத்தில் இத்தனை சாதனைகளை நிகழ்த்திய தன் மகள், களத்தில் விளையாடுவதை ஒருமுறைகூட நேரில் கண்டதில்லை இவரின் பெற்றோர்கள். இன்று நடக்கும் போட்டியைத்தான் காணவிருக்கிறார்கள்.

இந்த ஆறு பேர் மட்டும் ஃபுல் ஃபார்மில் இருந்தால்... உலகக்கோப்பை நமக்குத்தான்! #T20WorldCup

2012-ம் ஆண்டு, பஞ்சாப் காவல்துறையில் பணிக்காகக் காத்திருந்த ஹர்மனுக்கு நிராகரிப்பே மிஞ்சியது. ஆனால், 2017-ம் ஆண்டு அதே பஞ்சாப் காவல்துறையின் டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டார். தான் சரியாக விளையாட முடியாமல் போகும் போதெல்லாம் அந்த 171 ஸ்கோரை நினைத்து பார்த்து ஊக்கம் அடைவதாகச் சொல்லும் ஹர்மனிடம், அவருடைய ஆசை என்னவென்று கேட்ட போது, "போட்டியின் வெற்றிக்கான ஷாட் என்னுடைய மட்டையிலிருந்து வர வேண்டும்" என்று கூறுகிறார். இன்றைய போட்டியிலும் இந்தியாவின் வெற்றிக்கான ஷாட் உங்கள் மட்டையிலிருந்து வர வேண்டுமென, மகளிர் தின வாழ்த்தாகவும் பிறந்தநாள் வாழ்த்தாகவும் சொல்லி பெருமைகொள்கிறோம். இந்தியாவுக்கு பெருமை சேருங்கள் ஹர்மன்..!

அடுத்த கட்டுரைக்கு