Published:Updated:

டிக் டாக் தடை: `அப்போ அன்வர்?’ - வார்னரைக் கலாய்த்த அஸ்வின்

வார்னர்
வார்னர்

``இந்திய சினிமாவின் பாடல்களில் வரும் நடனங்களை அவ்வளவு எளிதாகப் பண்ண முடியவில்லை. மிகவும் கடினமாக உள்ளது” - வார்னர்

இன்றைய `ஹாட் டாபிக்’ டிக் டாக்தான். டிக் டாக் பிரியர்கள் அதைத் தடை செய்ததற்கு எதிராகவும் டிக் டாக் மீது ஆர்வம் இல்லாதவர்கள் டிக் டாக் தடையை சர்காஸம் செய்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். லாக்டௌன் காலத்தில் டிக் டாக் பலரது பொழுதுபோக்கு விஷயத்திலும் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது என்றே கூறலாம்.

வீட்டில் முடங்கிக் கிடந்த சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உட்பட பலரும் டிக் டாக் வழியாக மக்களுடன் தொடர்பில் இருந்த வண்ணம் உள்ளனர். டிக் டாக் தடை சாமானிய மக்களுக்கு மட்டும் இல்லாமல் பிரபலங்களுக்கும் பெரும் அதிர்ச்சியாகவே இருந்திருக்கும் என்றே கூறலாம்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரைக் கலாய்த்து ட்வீட் ஒன்று செய்துள்ளார். சமூக வலைதளங்களில் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்றும் இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன்கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு நேற்று அறிவிப்பை வெளியிட்டது.

இந்த அறிவிப்பு வெளியானது முதல் மத்திய அரசின் இந்த நடவடிக்கை மற்றும் இனிமேல் டிக் டாக் பிரபலங்களின் நிலை என டிக் டாக் தடையை ஒட்டி பல்வேறு விஷயங்கள் குறித்தும் மீம்ஸ்கள் குவியத் தொடங்கின. இந்த மீம்ஸ்களில் டேவிட் வார்னரும் சிக்கினார். அதுமட்டுமல்ல, அஸ்வினும் தனது பங்குக்கு ட்விட்டரில் டேவிட் வார்னரை டேக் செய்து, ``அப்போ அன்வர்?” என்று பதிவிட்டுள்ளார்.

`புட்டபொம்மா' வார்னர்... `கும்முரு டப்புரு' வாட்ஸன்... அப்ப தல தோனி?! 5ஜி மித்ரோன்ஸ்!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகளிலும் கடுமையான ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் கூடுவதற்கான வாய்ப்பு இல்லாமை, பயணத்தடை, அதிகமாகி வரும் வைரஸ் பரவல் உள்ளிட்ட பல காரணங்களால் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறவில்லை. இதனால், கிரிக்கெட் பிரபலங்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பல நாட்டு கிரிக்கெட் பிரபலங்களும் வெவ்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வகையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் டிக் டாக் செய்து வந்தார். புட்ட பொம்மா, ஷீலா கி ஜவானி, இஞ்சி இடுப்பழகி என இந்தியாவின் பல மொழிகளிலும் வெளியான படங்களில் உள்ள பாடல்களை டிக் டாக் செய்து வந்தார். இந்தியாவில் டேவிட் வார்னரின் டிக் டாக் `செம ஹிட்’ அடித்தது என்றே கூறலாம்.

ஐ.பி.எஸ் போட்டிகளில் விளையாடுவதால் அவருக்கு ஏற்கெனவே அதிக ரசிகர்கள் இருந்துவந்த நிலையில், டிக் டாக் அவருக்கு இன்னும் அதிகமான ரசிகர்களைக் கொடுத்தது எனலாம். ரோஹித் சர்மாவுடனான கலந்துரையாடலில் டிக் டாக் செய்வது தொடர்பாக வார்னர் பேசும்போது, ``இந்திய சினிமாவின் பாடல்களில் வரும் நடனங்களை அவ்வளவு எளிதாகப் பண்ண முடியவில்லை. மிகவும் கடினமாக உள்ளது” என்று கூறியிருந்தார். இந்த நெருக்கடியான சூழலில் டிக் டாக் செய்வதன் மூலம் மக்களின் முகத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் கூறினார்.

இந்த நிலையில், தற்போது இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டதால் வார்னர் இந்திய ரசிகர்களுக்காக வெளியிடும் டிக்டாக் வீடியோக்களை இந்தியர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வார்னரைக் கலாய்க்கும் விதமாக அஸ்வின், `பாட்ஷா' திரைப்படத்தில் வரும் வசனத்தைப் பதிவிட்டுள்ளார். அதாவது, `அப்போ வார்னரின் நிலைமை?’ என்ற தொனியில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட சில முன்னணி வீரர்கள் வார்னரை டிக் டாக் செய்வதால் கலாய்த்து வந்தனர். ஆனால், பாலிவுட் பிரபலங்களில் பலரும் வார்னரைப் பாராட்டினர். தற்போது நெட்டிசன்கள் பலரும் வார்னர் சோகமாக இருப்பது போன்ற புகைப்படங்களைப் பகிர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

`புட்டபொம்மா' வார்னர், `மியூசிக்கல் ட்ரீட்' அனிருத், `அப்டேட்' அஜித்... - சோஷியல் மீடியா டாக்ஸ்
அடுத்த கட்டுரைக்கு