கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

இப்போது தேவை சுயவிமர்சனம்!

கோலி
பிரீமியம் ஸ்டோரி
News
கோலி

90-களில் இந்திய டெஸ்ட் அணியில் சச்சின், டிராவிட், கங்குலி, லக்‌ஷ்மண் என இந்த பென்டாஸ்டிக் நால்வர் கூட்டணி எப்பேர்ப்பட்ட பெளலிங் அட்டாக்கையும் அடித்து நொறுக்கும்.

டிசம்பர் 16... அடிலெய்டில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முதல் நாள் மதியமே இந்திய அணியிடமிருந்து பிளேயிங் லெவன் பட்டியல் வந்துவிட்டது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே இரண்டாவது முறை!

கேப்டனாகக் கோலி தடுமாறும் இடமே சரியான பிளேயிங் லெவனைத் தேர்ந்தெடுக்காமல் சொதப்புவதுதான். கடந்த காலங்களில் இங்கிலாந்து, நியூஸிலாந்து மைதானங்களில் இந்தியா தொடர் தோல்விகளைச் சந்திக்க, இந்த ப்ளேயிங் லெவன் சொதப்பல்கள்தான் மிக முக்கியமான காரணம். இந்தப் பட்டியலும் அப்படித்தான் இருந்தது. பார்மில் இல்லாத ப்ரித்வி ஷா அணியிலிருந்தார். கில், ராகுல் வெளியே உட்கார வைக்கப்பட்டிருந்தார்கள். இத்தனைக்கும் தொடருக்கு முன்பான பயிற்சிப் போட்டிகளில் ஒரு அரைசதமும் அடித்திருந்தார் கில். இந்திய அணியின் அவமானகரமான தோல்விக்கான விதை விதைக்கப்பட்டது இங்கேதான்.

இப்போது தேவை சுயவிமர்சனம்!
David Mariuz

இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடக்கும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் போட்டித்தொடர் இது. அந்த பார்டர், கவாஸ்கர் இருவருமே, ‘கில்தான் இந்திய அணியில் ஓப்பனராகச் சேர்க்கப்பட வேண்டும்’ எனக் கூட்டாகப் பேட்டியளித்திருந்த அடுத்த நாள் வெளியான அறிவிப்பில்தான் வெளியே அமர வைக்கப்பட்டிருந்தார் கில்.

இதில் கொடுமை, ஐ.பி.எல் போட்டிகளில் ஷா ஆடும் டெல்லி அணியின் பயிற்சியாளர் பாண்டிங்தான் அன்றைய போட்டியின் வர்ணனையாளர். ‘ஷா இன் ஸ்விங் பந்துகளில் தடுமாறுவார். அவர் பேட்டுக்கும் கால் பேடுக்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. அங்கேதான் ஆஸ்திரேலிய பௌலர்கள் டார்கெட் செய்வார்கள்’ என அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதேமுறையில் ஷா அவுட். ஒரு பேட்ஸ்மேனாக இவ்வளவு கணிக்கக்கூடியவராய் இருப்பது ஷாவிற்கும் நல்லதில்லை; அணிக்கும்!

இப்போது தேவை சுயவிமர்சனம்!
James Elsby

90-களில் இந்திய டெஸ்ட் அணியில் சச்சின், டிராவிட், கங்குலி, லக்‌ஷ்மண் என இந்த பென்டாஸ்டிக் நால்வர் கூட்டணி எப்பேர்ப்பட்ட பெளலிங் அட்டாக்கையும் அடித்து நொறுக்கும். ஆனால், அப்போதைய அணியில் கும்ப்ளே, ஹர்பஜன், ஜாஹீர் கானை விட்டால் வேறு பௌலர்களே கிடையாது. ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைகீழ். பும்ரா, ஷமி, அஷ்வின், இஷாந்த், ஜடேஜா, உமேஷ் என பக்கவான டெஸ்ட் பௌலர்கள் இருக்கிறார்கள். ஆனால் பேட்ஸ்மேன்களின் பார்மோ மிகக் கவலைக்குரியதாக இருக்கிறது.

டிராவிட், லக்‌ஷ்மண், சச்சின், கங்குலி போன்ற பிளேயர்கள் இப்போது அணியில் இல்லாமல் இல்லை. ரன் மெஷின் கோலி இருக்கிறார். டெஸ்ட்டுக்காகவே அளவெடுத்து உருவாக்கப்பட்டதைப்போல புஜாராவும் ரஹானேவும் இருக்கிறார்கள். விஹாரி இருக்கிறார். பின் எங்கே பிரச்னை?

90களில் இந்திய டெஸ்ட் அணி பலம் வாய்ந்ததாய் இருந்ததன் காரணம், அந்த அணியின் பிளேயர்கள் தங்கள் தவறுகளை மிகச் சீக்கிரம் திருத்திக்கொள்வார்கள். ‘அவுட் சைடு ஆப் ஸ்டம்ப்பில் பந்துவீசி தன் டிரேடுமார்க் கவர் டிரைவை ஆடத்தூண்டி அவுட்டாக்குகிறார்கள்’ என்பதை உணர்ந்த சச்சின், சிட்னி டெஸ்ட் ஒன்றில் கடைசிவரை கவர் டிரைவ் ஆடவேயில்லை. இப்படியான பயிற்சியும் புரிதலும் இப்போது மிஸ்ஸிங். இதைச் சொல்லிக்கொடுக்குமளவிற்குப் பயிற்சியாளரும் இல்லை.

இப்போது தேவை சுயவிமர்சனம்!
James Elsby

பிளேயிங் லெவன் சொதப்பல்களுக்கு வெறும் கோலியை மட்டும் கைகாட்டி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தப்பித்துக்கொள்ள முடியாது. ஒரு கேப்டனுக்கு சரியான பிளேயிங் லெவனைப் பரிந்துரைப்பது ஒரு பயிற்சியாளரின் கடமை. பயிற்சியாளர் சொல்வதைக் கேப்டன் கேட்கமாட்டார் என்றால், அனில் கும்ளேவைப் போல ரவி சாஸ்திரி எப்போதோ பதவி விலகியிருக்க வேண்டும். அந்நிய மண்ணில் தொடரும் இந்தியாவின் தோல்விகளுக்கு ரவி சாஸ்திரியும் ஒரு முக்கிய காரணம்!

போட்டி முடிந்ததும் பேசிய ஜோஷ் ஹேசில்வுட், ‘‘ஒரே மாதிரியான லைன் அண்ட் லென்த்தில், ஒரே மாதிரியான பந்துகளை வீசித்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களையும் பெவிலியனுக்கு அனுப்பினோம்’’ என்று சொன்னார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லக்கூடிய வாய்ப்பிருக்கும் ஓர் அணியின் பேட்ஸ்மேன்களைப் பற்றி எதிரணி பௌலர் இப்படிப் பேசுவது வீரர்களின் மனநிலையை உடைக்கும். ரசிகர்களை இன்னும் அதிகமாகவே உடைக்கும்.

பயிற்சியாளரிடமோ, கேப்டனிடமோ பிரச்னை என்றால் அதைப் பற்றி வெளிப்படையாக விவாதித்து மாற்றுவழிகளை முன்னெடுக்க வேண்டியதுதான் இப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியத் தேவை.