Published:Updated:

`விமர்சனம் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள்!’ - பும்ரா விஷயத்தில் பதிலடி கொடுத்த ஷமி

முகமது ஷமி - பும்ரா
முகமது ஷமி - பும்ரா

``மக்கள் மிகவும் வித்தியாசமாக சிந்திக்க முயல்கிறார்கள். ஒருசில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் வீரர்களின் மீதான பார்வை மாறுகிறது” என்று ஷமி கூறியுள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாகச் சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடிய டி20, ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடினார். ஆனால், காயத்துக்குப் பின் பும்ரா விளையாடிய போட்டிகளில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், அணியின் சக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பும்ராவின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.

முகமது ஷமி
முகமது ஷமி

நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகிறது. இன்று நடைபெற்ற பயிற்சி போட்டிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஷமி, ``வெளியிலிருந்து வீரர்களை விமர்சிப்பது எளிதானது. ஆனால், காயங்களில் இருந்து மீண்டுவர அதிக அவகாசம் தேவைப்படும். சமீப காலமாக வீரர்களை விமர்சிப்பதன் மூலம் சிலர் பணம் சம்பாதிக்கின்றனர். இந்தியாவுக்காக பும்ரா செய்துள்ள சாதனைகளை எப்படி மறக்க முடியும். அவற்றை எப்படி புறக்கணிக்கிறார்கள்? பும்ராவைப் பற்றிய கருத்துகளை மக்கள் தெரிவிப்பது நல்லது. வெறும் 3 அல்லது 4 போட்டிகளில் அவர் விளையாடியதை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாது” என்றார்.

`கீமோ பாலின் கடைசி நேர அதிரடி; கீளின் போல்ட்டாக்கிய ஷமி'- 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி #NowAtVikatan

விளையாட்டு வீரர் என்பவர் வித்தியாசமானவர் என்று தொடர்ந்த பேசிய ஷமி, ``எல்லா வீரர்களுக்கும் காயங்கள் ஏற்படக்கூடும். அத்தகைய தருணங்களில் எழும் விமர்சனங்களில் இருந்து நேர்மறையான சிலவற்றை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். வீரர்களுக்கு அவைதான் சாதகமாக அமையும். மக்கள் மிகவும் வித்தியாசமாக சிந்திக்க முயல்கிறார்கள். ஒருசில போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் வீரர்களின் மீதான பார்வை மாறுகிறது” என்றார். இந்த விஷயங்களைப் பற்றி வீரர்கள் அதிகம் சிந்திக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

இந்திய அணி வீரர்கள்
இந்திய அணி வீரர்கள்

விளையாட்டில் அனுபவத்தின் தேவை குறித்து பேசிய அவர், ``எளிதில் பதற்றமடையாமல் இருக்க அனுபவம் முக்கியமானது. பல்வேறு வகையான சந்தர்பங்களை நீங்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரம் என்ன செய்ய வேண்டும் எனத் தெரிய வேண்டும். இதுதான் முக்கியமானது. அனுபவம் மிக்க வீரர்கள் அணியில் இருக்கும்போது இளம் வீரர்களை எளிதாக பயிற்றுவிக்க முடியும். எங்கள் அணியில் இளைஞர்களை நாங்கள் வழிநடத்துகிறோம். அவர்களுடன் சிரிக்கிறோம், பேசுகிறோம், எங்களுக்கு இடையே இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், ``நீங்கள் எதையாவது சாதிக்க விரும்பினால், அதன்மீதான ஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். அதை துரத்த வேண்டும். நான் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளராக வருவேன் என நினைக்கவில்லை. ஆனால், சிறப்பாக விளையாட முடியும் என உணர்ந்தபோது அதற்காக உழைக்கத் தொடங்கினேன்” என்றும் பேசியுள்ளார்.

100 ரன் தாண்டாத கோலி, விக்கெட் இல்லா பும்ரா, நின்று அடித்த நியூஸி! தொடர் தோல்விக்குக் காரணம் என்ன?
அடுத்த கட்டுரைக்கு