Published:Updated:

`களத்தில் 6 மணிநேரம்!' - ஒரே இன்னிங்ஸில் விராட் கோலி குவித்த சாதனைகள் #ViratKohli

இந்திய அணியின் கேப்டனாக 50வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய கோலி, இன்று ஒரேநாளில் பல்வேறு சாதனைகளைத் தன்வசமாக்கினார்.

விராட் கோலி
விராட் கோலி ( BCCI )

ஒரே இன்னிங்ஸில், டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்து அசத்தியிருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. புனேவில் நடைபெறும் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி, இந்திய அணியின் கேப்டனாக கோலி களமிறங்கும் 50வது போட்டியாகும். இதன்மூலம் 49 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்த கங்குலியின் சாதனையை கோலி முறியடித்திருந்தார்.

Virat Kohli
Virat Kohli

இன்றைய இன்னிங்ஸில் சதமடித்த கோலி, அதை இரட்டைச் சதமாக மாற்றி அசத்தினார். 173 பந்துகளில் சதமடித்த கோலி, 295 பந்துகளில் இரட்டை சதமடித்தார். ரஹானே 59 ரன்களுக்கு ஆட்டமிழந்த பின்னர், 4வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன் கோலி கைகோத்தார். இந்த ஜோடி, தென்னாப்பிரிக்க பந்துவீச்சை திறம்பட சமாளித்தது. 4வது விக்கெட்டுக்கு கோலி - ஜடேஜா ஜோடி 225 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா, 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கோலி, 254 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

விராட் கோலி சரியாக 200 ரன்களைக் கடந்தபோது, தன் டெஸ்ட் கரியரில் 7,000 ரன்களை கூடவே சேர்த்து கடந்துள்ளார். இவர் இந்த மைல்கல்லை வெறும் 138 இன்னிங்ஸ்களில் எட்டினார். இதன்மூலம் 7,000 ரன்களை 4வது இடத்தை அவர் பிடித்தார். மேலும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மிக வேகமாக ஆயிரம் ரன்களை டெஸ்ட் போட்டிகளில் (19 இன்னிங்ஸ்கள்) கடந்த வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றார்.

ரோஹித், மயாங்க், அஷ்வின், ஷமி, ஜடேஜா... டீம் கோலி முழுக்க மேட்ச் வின்னர்ஸ்! #INDVsSA

அதேபோல், விராட் கோலியின் ஏழாவது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர்களான சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரின் சாதனையை (6 இரட்டை சதங்கள்) முறியடித்தார் கோலி. சர்வதேச அளவில் கோலிக்கு முன்பாக டான் பிராட்மேன் (12), சங்ககாரா (11), லாரா (9) ஆகியோர் இருக்கிறார்கள். சுமார், ஆறு மணிநேரம் களத்தில் நின்ற கோலி டெஸ்ட் போட்டியில் தனது அதிகபட்ச ரன்களையும் இன்று பதிவு செய்தார் (254 ரன்கள் நாட் அவுட்).

Virat Kohli
Virat Kohli

கடைசி 15 ஓவர்களில் அவர் ஆடிய வேகத்துக்கு அதிகபட்சம் இன்னும் 5 ஓவர்களில் அவர் 300 ரன்னைக் கடந்திருக்கலாம். ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே இருந்தது. ஆனால், சதத்தை நோக்கி விளையாடிய ஜடேஜா ஆட்டமிழந்ததும் இந்திய அணியின் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் கோலி. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 605 ரன்கள் என்ற இமாலய ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்களான மார்க்ரம் ரன் எதுவும் எடுக்காமலும், எல்கர் 6 ரன்களிலும் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

50-வது டெஸ்ட்... நம்பர் 1 டீம்... கேப்டன் கோலி செய்த அந்த முக்கிய மாற்றம் என்ன?! #Kohli50

விசாகப்பட்டினம் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் கலக்கிய ஷமி பந்துவீச்சில் பவுமா வெளியேறினார். இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 36 ரன்களை எடுத்திருக்கிறது. இதில், 4 ஓவர்கள் பந்துவீசிய ஜடேஜா, அந்த நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசி அசத்தினார்.