சினிமா
Published:Updated:

வென்ற இந்தியா... வருங்காலம் பிரகாசிக்குமா?

இந்தியா
பிரீமியம் ஸ்டோரி
News
இந்தியா

- ஸ்ரீராம நாராயணன்

கிரிக்கெட்டில் ஐந்தாவது முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்றிருக்கிறது இந்தியா. அதுவும் தொடரில் ஒரு போட்டியில்கூடத் தோற்காமல்!

கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இந்த உலகக்கோப்பை இந்திய அணிக்கு சவால் நிறைந்த தொடராகவே இருந்தது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் U16, U19 போன்ற இளம் வீரர்களுக்கான தொடர்கள் நிறைய நடைபெறவில்லை. இந்த உலகக்கோப்பை தொடங்குவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்புதான் 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர்ப் போட்டிகள் தொடங்கப்பட்டன. இடையில், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருந்த ராகுல் டிராவிட் இந்திய சீனியர் அணிக்குப் பயிற்சியாளராகிவிட வி.வி.எஸ்.லக்‌ஷ்மண் உள்ளே வந்தார். போதிய தொடர்களில் விளையாடாதது, மாறிய தலைமை ஆகியவற்றுக்கு இடையில்தான் யாஷ் துல் தலைமையிலான ஓர் அணி தேர்வு செய்யப்பட்டு உலகக்கோப்பைக்கு அனுப்பப்பட்டது. மேலும் ஒரு சோதனையாக, போய் இறங்கியவர்களில் சிலருக்கு கொரோனா தொற்றிக்கொள்ள, முகாமில் பதற்றம் சூழ்ந்தது. அணியின் கேப்டனான யாஷ் துல்லே இரண்டு போட்டிகளில் ஆட முடியாமல்போக, மாற்று வீரர்கள்கூட இல்லாமல் சரியாக 11 பேரை மட்டுமே வைத்துக்கொண்டு இந்திய அணி லீக் போட்டிகளில் ஆடி முடித்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதிப்போட்டியில்தான் அத்தனை வீரர்களும் முழு உடற்தகுதியோடு தயாராக முடிந்தது.

வென்ற இந்தியா... வருங்காலம் பிரகாசிக்குமா?

யாஷ் துல், ராஜ் பவா, ரவிக்குமார், ஷேக் ரஷீத், ரகுவன்ஷி, தினேஷ் பனா என ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்கள் ஏரியாவில் கலக்க, டீமாகவும் இந்தியாவால் வெற்றிவாகை சூட முடிந்திருக்கிறது.

வழக்கம்போல கோப்பை வென்றவுடன் ‘இவர்தான் அடுத்த கோலி, இதோ அடுத்த ரோஹித்’ என ஒப்பீடுகள் வரத்தொடங்கிவிட்டன. கடந்த பத்தாண்டுகளில் இப்படி ஒப்பிடப்பட்ட பல இளம் வீரர்கள் இப்போது காணாமல் போய்விட்டார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

U19 கோப்பை வென்ற உன்முக்த் சந்த் இங்கே போதிய வாய்ப்புகள் கிடைக்காததால் அமெரிக்காவிற்குப் பறந்துவிட்டார். அடுத்து கோப்பை வென்ற ப்ரித்வி ஷாவும் இப்படியான எதிர்பார்ப்புகளால் பிரஷர் ஏறி சீனியர் அணியில் பெர்பாம் செய்யத் தவறினார். இவர்களுக்கெல்லாம் முன்னால் கோப்பை வென்ற அம்பதி ராயுடுவிற்கு இறுதிவரை இந்திய சீனியர் அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை.

2010-க்கு முன்புவரை நிலைமை வேறு. சேவாக், கைப் தொடங்கி கோலி, ரோஹித் வரை U19 அணியில் கோலோச்சியவர்கள் சீனியர் அணியில் முக்கிய இடம்பிடித்து அணிக்கு வெற்றி மேல் வெற்றி வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். 2011 உலகக் கோப்பை வென்ற அணியில் இப்படியான வீரர்களே அதிகமிருந்தார்கள்.

ஆனால் அதன்பின் நிகழ்ந்த ஐ.பி.எல் வருகை எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. ஐ.பி.எல்லில் பெர்பாம் செய்தால் மட்டுமே சீனியர் அணியில் வாய்ப்பு என்றானதால் இந்த ஜூனியர் வீரர்களுக்கு அழுத்தம் அதிகமானது. ரஞ்சி போன்ற தரம் வாய்ந்த உள்ளூர்ப் போட்டிகளில் இவர்கள் கவனம் செலுத்தத் தவறினர். அத்தனை பேரும் ஐ.பி.எல் பக்கம் ஒதுங்க, போட்டியும் எதிர்பார்ப்பும் அதிகமாகின. அதுவே பலரின் கரியர் சீக்கிரம் முடியவும் காரணமானது.

வென்ற இந்தியா... வருங்காலம் பிரகாசிக்குமா?

இப்போது கோப்பை வென்ற அணியிலும் சீனியர் அணிக்காக விளையாடக் கூடிய தகுதி வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஐ.பி.எல் என்கிற அளவீட்டு முறைக்குள் அடக்காமல் தனிக்கவனம் செலுத்தி பி.சி.சி.ஐ பட்டைதீட்ட வேண்டும். கோலி, ரோஹித் என சீனியர் அணியின் இருபெரும் வீரர்களை மையம்கொண்டு இயங்கி வரும் இந்திய அணியில் 2023 உலகக்கோப்பைக்குப் பின் பெரிய மாற்றங்கள் இருக்கலாம். அதற்குள் அடுத்த தலைமுறை வீரர்களுக்குப் போதிய பயிற்சி கொடுத்துத் தயார் செய்வது அவசியம். அப்போதுதான் ‘இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்’ என இப்போது கூறப்படும் புகழுரைகள் அர்த்தமுடையதாக இருக்கும்.