Published:Updated:

IND vs SL: சீறிய குல்தீப் - சிராஜ் கூட்டணி; நிதானம் காட்டிய ராகுல்; தொடரை வென்றது இந்தியா!

Rahul - Hardik ( BCCI )

இந்தியாவின் வேகப்பந்தில் வேகம் இழந்து, சுழல் பந்தில் சுருண்டுவிட்டது, இலங்கை அணி என்பதே நிதர்சனம். அதேபோல், இந்திய அணியின் ஃபீல்டிங்கும் அருமை!

IND vs SL: சீறிய குல்தீப் - சிராஜ் கூட்டணி; நிதானம் காட்டிய ராகுல்; தொடரை வென்றது இந்தியா!

இந்தியாவின் வேகப்பந்தில் வேகம் இழந்து, சுழல் பந்தில் சுருண்டுவிட்டது, இலங்கை அணி என்பதே நிதர்சனம். அதேபோல், இந்திய அணியின் ஃபீல்டிங்கும் அருமை!

Published:Updated:
Rahul - Hardik ( BCCI )
இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதல் ஒருநாள் போட்டியில் மட்டையில் மாயஜாலம் காட்டியதை போல இரண்டாவது போட்டியில் பௌலிங்கில் தீயாகத் தகித்திருக்கிறது இந்திய அணி.

முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங் செய்வதாக முடிவு எடுத்தது. இலங்கை அணியின் தொடக்கவீரர்களாக அவிஷ்கா ஃபெர்னாண்டோ - நுவனிது ஃபெர்னாண்டோ இணை தொடங்க, முதல் ஓவரை ஷமி வீசினார்.

முதல் ஐந்து ஒவர்களையும் ஷமி, சிராஜ் மாறிமாறி வீசினர். 5 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பு எதுவும் இன்றி 27 ரன்களை எடுத்தது இலங்கை. 6வது ஓவரை சிராஜ் வீச, மிடில் ஸ்டம்ப் சிதற, அவிஷ்கா 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சிராஜ் சீரான விதத்தில் கடந்த காலங்களில் நன்கு தேர்ந்து வருகிறார். முக்கியமாக பௌலிங்கில் புதிய பந்தில், பவர்ப்ளேவில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

Siraj
Siraj
BCCI

ஒன் டவுனில் குஷால் மெண்டீஸ் களமிறங்கினார். நுவனிது - குஷால் இணை சாதுர்யமாக பேட்டிங் செய்தனர். இவர்கள் ரன்ரேட் குறையாமல் பார்த்துக்‌ கொண்டனர். 10 ஓவர் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 51 ரன்கள் எடுத்திருந்தது இலங்கை. நுவனிது - குஷலும் நன்றாக ஸ்ட்ரைக்கை மாற்றினர். இருமுனைக்கும் இடையே நல்ல ஓட்டமிருந்தது. இந்த இணை 50+ பார்ட்னர்ஷிப் தாண்டிச் செல்ல, 16 ஒவர்கள் முடிவில் 91/1 என ஸ்கோர் இருந்தது. 17வது ஒவரை வீச வந்தார் நேற்றைய இரவின் நட்சத்திரம் குல்தீப். ஈடன் கார்டன் குல்தீப்பிற்கு நன்கு பழகிய மைதானம். அதைச் சரியாக பயன்படுத்திக் கொண்டார். 17வது ஓவரின் கடைசிபந்தில் LBW முறையில் குஷால் மெண்டிஸின் விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப். இது ஆட்டத்தின் போக்கை இந்தியா பக்கம் சற்று திருப்ப, 18வது ஓவரை வீசிய அக்ஸர், புது பேட்ஸ்மேன் தனஞ்ஜெயாவை டக் அவுட் செய்து இலங்கை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அவ்வளவுதான், குல்தீப் - அக்ஸர் சுழலில் மாட்டிக்கொண்டது இலங்கை அணி. ஆட்டத்தில் இலங்கையின் வேகம் சரியத்தொடங்கியது.

நிதானம் காட்டிய நுவனிது தனது அறிமுக ஒருநாள் போட்டிலேயே தனது அரைசதத்தை 21வது ஓவரில் பதிவுச் செய்தார். ஆனால் என்ன, அடுத்த 22வது ஓவரை அக்ஸர் வீச, முதல் பந்திலேயே அசலங்காவுடனான தவறான தகவல் பரிமாற்றம் காரணமாக ரன் அவுட் ஆனார். நல்ல முறையில் செட்டிலான பின்னர் தேவையற்ற முறையில் அவுட். 22 ஒவர் முடிவில் இலங்கை 122/4 என ஸ்கோர் இருந்தது. 23வது ஓவரில் குல்தீப் தனது ஐந்தாவது பந்தில், முந்தைய போட்டியில் சதம் விளாசிய ஷனாகா (கேப்டன்) விக்கெட்டை வீழ்த்த, போட்டியில் இந்திய ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. அடுத்தடுத்த விக்கெட், ரன்ரேட் தடுமாற்றம் எனத் தள்ளாடியது இலங்கை அணி. ஹசரங்கா, கருணரத்னே, துனித் சிறிது ரன்கள் தேற்றினாலும், யாரும் நிலைத்து நிற்கவில்லை.

Kuldeep
Kuldeep
BCCI
40வது ஓவரில் சிராஜ் இறுதி 2 விக்கெட்டையும் வீழ்த்த, 39.4 ஓவர் முடிவில் 215க்கு அனைத்து விக்கெட்டையும் பறிக்கொடுத்தது, இலங்கை.

இந்தியாவின் வேகப்பந்தில் வேகம் இழந்து, சுழல் பந்தில் சுருண்டுவிட்டது, இலங்கை அணி என்பதே நிதர்சனம். அதேபோல், இந்திய அணியின் ஃபீல்டிங்கும் அருமை!

கடந்த போட்டியில், கோலி - ரோஹித் பேட்டிங் அற்புதமாக இருந்த நிலையில், இன்றும் பெரிய வாணவேடிக்கை நிகழும் என எண்ணியவர்களுக்கு ஏமாற்றம்தான். இலங்கை அணியின் அசத்தல் பந்துவீச்சு, இந்தியாவை ஆட்டம் காண வைத்துவிட்டது. ரோஹித் - கில் இணை ஆட்டத்தைத் தொடங்கியது. அவர்கள் நல்ல தொடக்கத்தைத் தந்தாலும் அதைத் தொடர தவறிவிட்டனர். 5வது ஓவரின் கடைசி பந்தில் கருணரத்னே ரோஹித்தின் விக்கெட்டை எட்ஜ் ஆக்கி வீழ்த்தினார். 6வது ஓவரில் நன்கு ஆடிய கில், முதல் இரண்டு பந்தையும் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால், அடுத்த பந்தும் அவசரம் காட்ட அவுட்டாகி வெளியேறினார்.

இப்படியாக மீண்டும் ஸ்ரேயாஸ் - கோலி முக்கியமான பார்ட்னர்ஷிப்பை அமைக்க வேண்டியிருந்தது. இருவருமே பூஜ்யத்தில் இருந்தனர். ஆறு ஓவர்கள் முடிவில் 46/2 என்பதாக ஸ்கோர் இருந்தது. அடுத்தத்தடுத்த விக்கெட் இழப்புகள் ரன் குவிப்பைத் தடுமாறச்செய்ய, 10வது ஓவரில், முந்தைய போட்டியில் சதம் விளாசிய கோலி, குமாரா பந்தில் போல்ட் ஆனார். இது ஆட்டத்தின் தன்மையையே மாற்றிவிட்டது. ஆனால், குமாரா-வின் சிறப்பான பந்துவீச்சு பாராட்டப்பட வேண்டியது. (பின்வந்த 31வது ஓவரில், மைதானத்திலேயே குமாராவைப் பாராட்டும் விதமாக ஹர்திக் பாண்டியா தம்ஸ் அப் காட்டினார்).

Rahul
Rahul
BCCI

பிறகு, 15வது ஓவரில் ரஜிதா பந்தில் ஸ்ரேயாஸ் விக்கெட் விட்டார். அடுத்தடுத்து சீரான இடைவெளி விக்கெட் இந்திய அணி வெற்றிக்கு இடையூறாகியது. 17 ஓவர்கள் முடிவில் 91/4 என்ற நிலையில் இந்திய அணி இருந்தது. ஹர்திக் - ராகுல் இணைந்து மெல்ல போட்டியை நகர்த்தினர்.

ஓவர் அதிகம் இருக்க, விக்கெட் கைவசம் இல்லை என்ற நிலையில் நிதானமாக ஆடியது இந்தக் கூட்டணி. குறைந்த இலக்கு என்பது மேலும் வசதியாகிப் போனது. டெஸ்ட் போட்டியை ப்போல் பொறுமையாக போட்டியை நகர்ந்தியது இந்த இணை.

குறிஞ்சி மலர் போல அவ்வப்போது பவுண்டரிகள் வந்தன. 75 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்த நிலையில் 35வது ஓவரில் கருணரத்னே ஹர்திக்கின் விக்கெட்டை எடுத்து, இந்த இணையை உடைத்தார். மேலும், நிதானத்தைக் கடைப்பிடித்தார் ராகுல். 35வது ஓவர் முடிவில் 165/5 என ஸ்கோர் இருந்தது. அதன்பின் வந்த அக்ஸர், குல்தீப் ராகுலுக்கு நல்ல உறுதியையும், ஒத்துழைப்பை வழங்க 44வது ஓவரில் 219 ரன் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இறுதிவரை ஆட்டமிழக்காத ராகுல் 64 (103) ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரையும் இந்தியா கைப்பற்றியது.

Rahul
Rahul
BCCI
நேற்றைய தினம் பந்துவீச்சாளர்களுக்கான நாளாகவே அமைந்திருந்தது. இந்தியாவில் குல்தீப், அக்ஸர், சிராஜ் சீறினால், இலங்கையில் குமாரா, கருணரத்னே முக்கியமாக ஹசரங்கா (10 ஓவரில் 28 ரன்கள் மட்டுமே) ஆகியோர் அசத்தியிருந்தனர்.