உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இடையில் உள்ள ஐந்து தடை கற்களில் முதல் தடைக்கல்லை இந்திய அணி வெற்றிகரமாக தாண்டி உள்ளது. குல்தீப்பின் ஐந்து விக்கெட்டுகள், கில் மற்றும் புஜாராவின் சதம் என நம் கொண்டாட்டத்திற்கு பல விஷயங்களை இந்த டெஸ்ட் போட்டி கொடுத்துள்ளது.
எல்லா கொண்டாட்டங்களையும் விட மிகப் பெரிய கொண்டாட்டம் எதுவென்றால் மீண்டும் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஆடுவதுதான். டி20 உலகக்கோப்பையை மனதில் வைத்து சில காலமாக இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தது. ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற நாடுகள் எல்லாம் அயல் நாடுகளில் டெஸ்ட் தொடர்களை வெல்வதை பார்த்த ஒவ்வொரு இந்திய ரசிகர்களுக்கும் இந்திய அணியும் எப்போது டெஸ்ட் போட்டியில் விளையாடும் என்ற ஏக்கம் நிச்சயமாக இருந்திருக்கும். அதற்கு முடிவு கட்டும் விதமாக வங்கதேசத்துடன் முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா தொடங்கியது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் காயம் ஏற்பட்டதன் விளைவாக ரோகித் இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக ஆடினார். டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கே எல் ராகுல் மற்றும் கில் இணைந்து இந்திய அணிக்கு துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்த போது கில் வெளியேறினார். கூடவே வெகு சீக்கிரமாக ராகுலும் வெளியேற பலத்த ஆரவாரத்துக்கு மத்தியில் களத்திற்குள் வந்தார் கோலி. ஆனால் அவர் சந்தித்த ஐந்தாவது பந்தியிலேயே lbw முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இந்தியா போன்ற மிகப்பெரிய அணியை 48 ரன்களுக்குள் மூன்று விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இருந்தது வங்கதேசம்.
ஆனால் அந்த சந்தோஷத்தை நீண்ட நேரம் பண்ட் நீடிக்க விடவில்லை. எதிரணியின் பந்துவீச்சுக்கு எதிர் தாக்குதல் நடத்திய பண்ட் விரைவாக ரன்கள் சேர்த்தார். டி20 கிரிக்கெட்டில் சமீப காலமாக சிறிது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் இன்னும் சோடை போகவில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணமாக 45 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
பண்ட் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தை நன்கு பயன்படுத்திக் கொண்ட புஜாரா மற்றும் ஸ்ரேயாஸ் கொஞ்சம் இலகுவாக ரன்கள் சேர்க்கத் தொடங்கினர். ஆனால் சுமார் 190 பந்துகளை எதிர்கொண்ட பின்னரும் ஸ்ரேயாஸ் தனக்கு வழக்கமாக விரிக்கப்படும் வலையான ஷார்ட் பிட்ச் பந்துவீச்சு முறையில் ஆட்டம் இழந்தது கிரிக்கெட் ஆர்வலர்கள் பலருக்கும் ஏமாற்றத்தைத் தான் கொடுத்தது. 86 ரன்களுக்கு ஸ்ரேயாஸ் அவுட் ஆனார். சதம் கடப்பார் என்று நினைத்த புஜாராவும் 90 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் இந்தியா 293 ரன்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் கூட அடிக்க முடியாத நிலையில் இருந்தது. ஆனால் அஷ்வின் மற்றும் குல்தீப் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஒன்பதாவது விக்கெட்டுக்கு இவர்கள் இணைந்து 92 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணி 400 ரன்களை கடந்தது
404 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட் ஆக அதன் பின்பு வங்கதேசம் தன் இன்னிங்சை ஆரம்பித்தது. இதற்காகவே காத்திருந்தது போல தான் வீசிய முதல் பந்தியிலேயே சிராஜ் விக்கெட் வீழ்த்தினார். அப்போது ஆரம்பித்த சறுக்கல் வங்கதேசத்துக்கு கடைசி வரை நிற்கவே இல்லை. வங்கதேசத்தின் டாப் ஆர்டர் வீரர்கள் யாரிடமுமே இந்திய பந்து வீச்சுக்கு பதில் இல்லை. அதுவும் முக்கியமாக குல்தீப் வீசிய சுழற்பந்துவீச்சுக்கு மொத்த வங்கதேச மிடில் ஆர்டருமே தகர்த்து விட்டது. 150 ரன்கள் மட்டுமே எடுத்து வங்கதேச அணி ஆல் அவுட் ஆனது. Follow on வழங்காமல் மீண்டும் இந்தியாவே பேட்டிங் ஆட முடிவெடுக்க ராகுல் மற்றும் கில் மீண்டும் துவக்கம் தந்தனர். இந்த முறையும் ராகுல் சற்று வேகமாக அவுட் ஆனாலும், கில் மற்றும் புஜாரா இணைந்து சிறப்பாக ஆடினர். இந்தியாவின் வருங்கால பேட்டிங் மன்னனாக பார்க்கப்படும் கில் டெஸ்ட்டில் தனது முதல் சதம் கடந்தார். மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாக சதம் அடிக்காமல் இருந்து வந்த புஜாராவும் இரண்டாம் இன்னிங்க்ஸில் சதம் கடந்தார். இருவரின் சதங்கள் காரணமாக 513 ரன்களை வங்கதேசத்துக்கு இலக்காக வைத்தது இந்தியா.

மிக வேகமாக போட்டி முடிந்து விடும் என்று நினைத்த நிலையில் வங்கதேச அணி முதல் விக்கெட்டுக்கு சுமார் 46 ஓவர்கள் விளையாடி 124 ரன்கள் எடுத்தது. ஆனால் அதன் பின்பு சீரான இடைவெளிகளில் விக்கெட் விழ தொடங்கியது. வங்கதேசம் சார்பாக அறிமுக வீரர் சாகீர் ஹாசன் சதம் அடித்தார். அனுபவ ஆல்ரவுண்டர் சகீப் கடைசி நேரத்தில் சில சிக்சர்களை பறக்க விட வங்கதேசம் 324 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 188 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.

ஆறு போட்டிகளில் ஐந்தையாவது வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் கண்ட இந்தியா முதல் போட்டியை வென்றுள்ளது.
ஆனால் இந்த தொடரை விட அடுத்து வரவிருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் தான் மிக முக்கியமான ஒன்று. கோலி, புஜாரா ஆகியோரின் ஆட்டத்தை விட இந்த டெஸ்ட்டில் பெரிதாக விக்கெட்டுகளை வீழ்த்தாத அஷ்வினின் பவுலிங் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்துதான் இந்தியாவின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு பலிக்குமா இல்லையா என்பது தெரியவரும்.