Published:Updated:

மீண்டும் அரை சதம் அடித்தார் மித்தாலி ராஜ்... ஆனால், இந்தியாவின் தோல்வி ஏன்?!

ஆடவர் கிரிக்கெட் அணி தந்த அதே வலியை, மகளிர் அணியும் தர, இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் சோகம் தொடர்கதையாகி உள்ளது.

இந்தியப் பெண்கள் அணி, பேட்டிங் பலவீனங்களைச் சரிசெய்து, தொடரைச் சமன் செய்து சம பலம் காட்டுமா அல்லது இங்கிலாந்து, தொடரைக் கைப்பற்றுமா என்னும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய போட்டியில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற, இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது.

கடும் விமர்சனத்துக்கு உள்ளான இந்தியாவின் பேட்டிங் அணுகுமுறை, கொஞ்சமேனும் மாறுமா என்னும் எதிர்பார்ப்போடு, போட்டி தொடங்கியது. டாஸை வென்ற இங்கிலாந்து, இந்தியாவை பேட்டிங் செய்யப் பணித்தது. இந்தியாவின் சார்பில், பூனம் ராட்டுக்கு பதிலாக, மிடில் ஆர்டரின் ஸ்ட்ரைக் ரேட்டை அதிகரிக்கும் நோக்கில், ரோட்ரிக்ஸ் சேர்க்கப்பட்டார். ஸ்நே ராணாவும், பூனம் யாதவ்வும், பூஜா மற்றும் ஏக்தாவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டிருந்தனர். இங்கிலாந்து எந்த மாற்றமுமின்றிக் களமிறங்கியது.

ஓப்பனர்களாகக் களமிறங்கிய ஸ்மிரிதி மந்தனா மற்றும் ஷெஃபாலி விக்கெட்டை விடக் கூடாது, ரன்களையும் ஏற்ற வேண்டுமென்பதில், மிக கவனமாக இருந்தனர். அதனால், இந்தப் பார்ட்னர்ஷிப் கணிசமான ரன்களை ஸ்கோர் போர்டில் பதிவேற்றியது. வழக்கம் போல், பிரண்டை சிறப்பாக கவனித்தார் ஷஃபாலி. மறுபுறம், மந்தனாவும், ஷாட் செலக்ஷனில் மிக கவனமாகவே இருந்தார். 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பைக் கடந்திருந்த இக்கூட்டணியை, கேட் கிராஸ் முறித்தார். 22 ரன்களோடு ஸ்மிரிதி வெளியேற, ஒன்டவுனில், ரோட்ரிக்ஸ் உள்ளே வந்தார்.

IND W v ENG W | Women's Cricket
IND W v ENG W | Women's Cricket
David Davies

அவரின் மீது, மிக அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்தப் பொறுப்பை முழுவதுமாக உணராமல், இரண்டு பவுண்டரிகளை அடுத்தடுத்து எடுத்த திருப்தியோடு, கிராஸின் பந்துவீச்சில் ஃபிளிக் ஷாட் ஆட முயன்று, பிரன்ட்டிடம் கேட்ச் கொடுத்து, வெளியேறினார். மிதாலி உள்ளே வர, அதற்கு அடுத்த ஓவரிலேயே, அரைசதத்தை நோக்கி ஆடிக் கொண்டிருந்த ஷஃபாலியை, எக்லஸ்டோன் காலி செய்தார். அப்பந்தை இறங்கி வந்து ஆட ஷஃபாலி முயற்சிக்க, அது அவருக்குப் போக்குக் காட்டி, விக்கெட் கீப்பர், ஜோன்ஸிடம் தஞ்சமடைந்தது. கண்ணிமைக்கும் நொடிக்குள், ஸ்டம்பைக் காலி செய்தார் அவர். ஷஃபாலி, கிரீஸுக்குள் திரும்பிவர முயன்று, சென்டிமீட்டர் கணக்கில், அதனைத் தவற விட்டார். 100 பந்துகளில், 77 ரன்களைச் சேர்த்து, மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா. அடுத்ததாக இணைந்த மித்தாலி, ஹர்மன்ப்ரீத் கூட்டணி, சற்று நேரம் தாக்குப் பிடித்தது.

ஆங்கரிங் ரோலை வழக்கம் போலச் செய்யத் தொடங்கினார் மித்தாலி. ஆனால், போன போட்டியில் செய்த தவறை, திரும்பச் செய்யாமல், ஓரளவு ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஸ்மார்ட் கிரிக்கெட் ஆடினர். ஒரு ஓவர் மந்தமானால், மறு ஓவரே, கொஞ்சம் சுதாரித்து ரன் சேர்க்க, 'சோ ஃபார் சோ குட்' என்றுதான் நகர்ந்தது போட்டி. ஆனாலும், ரன் ரேட் 4.2 என்ற அளவிலேயே இருந்தது எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தியது‌. 70 ரன்களை பார்ட்னர்ஷிப்பில் சேர்த்தது இந்தக் கூட்டணி. ஆனால், அதை நிலைக்க விடவில்லை இங்கிலாந்து.

இம்முறையும் மீட்புக்கு கிராஸ்தான் வந்தார். ஹர்மன்ப்ரீத்தின் விக்கெட்டை அவர் வீழ்த்த, 19 ரன்களோடு வெளியேறினார் அவர். இதுதான் போட்டி இந்தியாவின் கைகளிலிருந்து நழுவத் தொடங்கிய தருணம். இந்த நிலையிலிருந்து, விக்கெட் சரிவை, இந்தியாவால் தடுத்து நிறுத்த முடியவே இல்லை. டாமினோஸ் கேமில், ஒரு கார்டு விழுந்தால், அத்தனையும் வரிசையாகச் சாயுமே, அப்படித்தான் தொடர்ந்து இந்தியா விக்கெட்டுகளைப் பறிகொடுத்த விதமும். தீப்தி மற்றும் ஸ்நே ராணா கூட பொறுப்பான ஆட்டத்தை ஆடவில்லை. 145 என்பதிலிருந்து, ஸ்கோரை, 221-க்குக் கொண்டு வந்து நிறுத்துவதற்கே மிகவும் திணறியது இந்தியத் தரப்பு. ஒன்பதாவது விக்கெட்டாக வெளியேறிய மித்தாலி மட்டுமே, 59 ரன்களைச் சேர்த்திருந்தார். இவருக்கு அடுத்தபடியாக, பின்வரிசை வீராங்கனைகளில், கோஸ்வாமி, இறுதிவரை, 19 ரன்களோடு களத்தில் நின்றார். மற்ற அனைவரும், இணைந்து எடுத்த ரன்கள், வெறும் 24 மட்டுமே.

IND W v ENG W | Women's Cricket
IND W v ENG W | Women's Cricket
David Davies

மத்திய வரிசை வீராங்கனைகள் மட்டுமல்ல, இந்தியாவுக்கு நல்ல ஃபினிஷர்களும் இல்லை என்பதே கசப்பான உண்மை. ஸ்நே ராணாவும், தீப்தியும் ஒருசில போட்டிகளில், அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அணிக்கு எல்லா நேரமும், முழுப் பங்களிப்பை அவர்கள் அளிப்பதில்லை. இன்னொரு நாள், இன்னொரு அரைசதம் என அடித்த மித்தாலி, இங்கிலாந்தில், தன்னுடைய 14-வது அரைசதத்தைக் கடந்தார். ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டுக்கும் சேர்த்து, இங்கிலாந்தில் அதிகமான அரைசதங்களை கடந்த இந்தியராக மித்தாலியே இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக, ராகுல் டிராவிட், ரோஹித் மற்றும் கோலி, 13 அரைசதங்களோடு இரண்டாமிடத்தில் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

222 ரன்கள் எடுத்தால் போட்டியில் வெற்றி, தொடரையும் கோப்பையையும் கைப்பற்றலாம் என்பதால், உற்சாகமாகக் களமிறங்கியது இங்கிலாந்து. மித்தாலி ராஜுக்கு கழுத்தில் வலி ஏற்பட்டதால், அவருக்கு பதிலாக, கேப்டனாக ஹர்மன்ப்ரீத் தொடர்ந்தார். தொடக்கத்தில், பந்து வீச்சில், இந்தியா கொஞ்சம் மிரட்டியதென்றே சொல்ல வேண்டும். ஷிகா பாண்டே, ஆறு பந்துகளையும் கட்டுக்கோப்பாய் வீசி, அதுவும் வின்ஃபீல்டுக்கே மெய்டனெல்லாம் கொடுத்து அசத்தலாக ஆரம்பித்தார்‌. அவர் ஏற்றிய பிரஷரிலேயே, டம்மி பியூமன்ட்டை குட் லெங்க்த்தில் வீசிய ஒரு அற்புதமான பந்தால், கோஸ்வாமி காலி செய்தார். இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. அடுத்ததாக உள்ளே வந்த கேப்டன் நைட், சந்தித்த இரண்டாவது பந்தையே, பவுண்டரிக்கு அனுப்பி, அமர்க்களமாக ஆரம்பித்தார்.

பாரம்பரியம் மாறாமல், பௌலர்களைக்குத் தண்ணீர் காட்டியது இந்த கூட்டணி. எனினும், பூனம் வீசிய பந்தை, கோஸ்வாமியிடம் கேட்ச் கொடுத்து, நைட் வெளியேறினார். அடுத்த சில ஓவர்களிலேயே, வின்ஃபீல்டையும் ஷிகா பாண்டே அனுப்பி வைக்க, சூடு பிடித்தது போட்டி. இந்திய பௌலிங் யூனிட், சிறப்பாகவே செயல்பட்டு, ஜோன்ஸ் மற்றும் நட்டாலியா ஸ்கீவருக்கு அழுத்தம் தந்தனர். இறுதியாக, ஸ்நே ராணா, ஸ்கீவரின் விக்கெட்டை வீழ்த்த, அதகளம் காட்டியது இந்தியா. தொடர், உயிர்ப்போடு இருக்குமென்ற நம்பிக்கையோடு போட்டியைத் தொடர்ந்து பார்த்தனர் இந்திய ரசிகர்கள்.

IND W v ENG W | Women's Cricket
IND W v ENG W | Women's Cricket
David Davies

அதனைப் பொய்யாக்கும் நோக்கோடு, ரன்களைச் சேர்த்தார், ஜோன்ஸ். அவரையும் பூனம் யாதவ், 28 ரன்களோடு வெளியேற்ற, இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசப்பட்டது‌. ஆனால், அதில் இருள் பூசினார் டங்லி. இங்கிலாந்து கிரிக்கெட்டில் ஆடும் முதல் கருப்பினப் பெண்ணாக போன போட்டியில் அறிமுகமான டங்லிக்கு, போன போட்டியில், தன்மீது வெளிச்சம் பாய்ச்சிக் கொள்ளும் வாய்ப்பு வரவில்லை. ஆனால், இப்போட்டியில், இங்கிலாந்து இன்னிங்ஸின் கதாநாயகியே அவர்தான். ஆறாவது வீராங்கனையாகக் களமிறங்கிய டங்லி, பிரன்ட்டுடன் இணைந்து, அசைக்கவே முடியாத பார்ட்னர்ஷிப்பைக் கட்டமைத்தார். இந்தியாவின் கையிலிருந்த போட்டியை, மொத்தமாகத் தட்டிப் பறித்து, வெற்றிக் கனவைக் கலைத்தார் டங்லி. போன போட்டியில், அறிமுகமாகியும், பேட்டிங் செய்ய வாய்ப்புக் கிடைக்காத டங்லி, இந்தப் போட்டியில், அரைசதம் கடந்து, கடைசி வரை களத்தில் நின்றார்.

ஓய்வு பெற வேண்டிய மித்தாலி ராஜ் தொடர்ந்து விளையாடுவது ஏன்… பெண்கள் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது?!

இறுதிவரை, ஆட்டமிழக்காத இக்கூட்டணி, 47.3 ஓவரிலேயே, இலக்கை எட்டியது. இவர்களது 92 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால், வெற்றியை, சுலபமாகச் சுவைத்தது இங்கிலாந்து. தீப்தியின் பந்தில், பவுண்டரியாக வின்னிங் ஷாட் அடித்த பிரன்ட், வெற்றியை உறுதி செய்தார். ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.

IND W v ENG W | Women's Cricket
IND W v ENG W | Women's Cricket
David Davies

போன போட்டியில் செய்த அதே தவறை, சற்று வேறு மாதிரி, திரும்பச் செய்துள்ளது இந்தியா. ஸ்ட்ரைக் ரேட் போன போட்டியில், தோல்விக்குக் காரணமாக அமைந்ததென்றால், இம்முறை பின்வரிசை வீராங்கனைகளின் மோசமான பேட்டிங், காரணமாக அமைந்தது. தென் ஆப்ரிக்காவுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரை இழந்ததற்கு அடுத்தடுத்தாக மேலும் ஒரு தொடரை இழந்துள்ளது இந்தியா. இரண்டு அடுத்தடுத்த தொடர் தோல்வி, அவர்களது நம்பிக்கையை ஆட்டங்காண வைத்துள்ளது. சனிக்கிழமை நடைபெறும் இறுதி ஒருநாள் போட்டி, இறுதிப் போட்டியாக, இருக்கக் கிடைத்த வாய்ப்பை மொத்தமாகக் கோட்டை விட்டு ஏமாற்றத்தைப் பரிசளித்துள்ளது இந்திய மகளிர் அணி. தற்போதுள்ள நிலையில், 2022 உலகக் கோப்பையை நினைவில் நிறுத்தி, அணியில் அதிரடி மாற்றங்களைச் செய்வதே அவசியமானதாகிறது.

ஆடவர் கிரிக்கெட்டில் ஒரு தோல்வி பல விளைவுகளையும், களையெடுப்புகளையும் நிகழ்த்தும். ஆனால், மகளிர் கிரிக்கெட்டில், அது ஒரு சாதாரண நிகழ்வாக மட்டுமே கடந்து செல்லப்படுகிறது. இது மாறி, இங்கேயும் பல மாற்றங்களைச் செய்ய வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம் என்பதனை உணர்ந்து, பிசிசிஐ அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு