Published:Updated:

IND vs AUS: ஹர்மன்ப்ரீத்தும் ஜெமிமாவும் போராடினார்கள்; இந்தியா எங்கே போராடியது?

Harman & Jemimah

ஒரு முழுமையான செயல்பாட்டைக் கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் திறன் அத்தனையையும் கொட்டி, அதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமே இல்லை எனும் நிலையை எட்டியிருந்தால் அதைப் போராட்டமிக்க தோல்வி என வர்ணிக்கலாம். ஆனால், இந்த இந்திய அணி அப்படித் தோற்கவில்லையே?

Published:Updated:

IND vs AUS: ஹர்மன்ப்ரீத்தும் ஜெமிமாவும் போராடினார்கள்; இந்தியா எங்கே போராடியது?

ஒரு முழுமையான செயல்பாட்டைக் கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் திறன் அத்தனையையும் கொட்டி, அதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமே இல்லை எனும் நிலையை எட்டியிருந்தால் அதைப் போராட்டமிக்க தோல்வி என வர்ணிக்கலாம். ஆனால், இந்த இந்திய அணி அப்படித் தோற்கவில்லையே?

Harman & Jemimah

மீண்டும் ஓர் உலகக்கோப்பை தோல்வியை இந்திய அணி சந்திருக்கிறது. இந்த முறை இந்தியப் பெண்கள் அணி ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பையின் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து மோதிய இந்திய பெண்கள் அணி, 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. நெருங்கி வந்து தோல்வி... போராடி தோல்வி என எப்படி நெகிழ்ச்சியாக எழுத முற்பட்டாலும் இது ஒரு ஏமாற்றமிக்க தோல்வி என்பதை மறுத்துவிடவே முடியாது.

ஒரு முழுமையான செயல்பாட்டைக் கொடுத்து அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் திறன் அத்தனையையும் கொட்டி, அதற்கு மேல் செய்வதற்கு ஒன்றுமே இல்லை எனும் நிலையை எட்டியிருந்தால் அதைப் போராட்டமிக்க தோல்வி என வர்ணிக்கலாம். ஆனால், இந்த இந்திய அணி அப்படித் தோற்கவில்லையே? முழுத் திறனையும் அணியினர் வெளிப்படுத்தவே இல்லை. முக்கியமான இந்த அரையிறுதியிலுமே எக்கச்சக்கக் குறைகளோடுதான் ஆடியிருந்தனர்.

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 172 ரன்களைக் குவித்திருந்தது. இந்த 172 ரன்களில் பெத் மூனியும் மெக் லேனிங்கும் இணைந்து மட்டுமே 103 ரன்களை எடுத்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி 170+ ஸ்கோரை எடுப்பதற்கு மிக முக்கிய காரணமே இந்தக் கூட்டணிதான். லீக் போட்டிகளிலுமே கூட இந்த இரு வீராங்கனைகள் சிறப்பாக ஆடியிருந்தனர்.

அரைசதமே அடிக்காவிட்டாலும் மெக் லேனிங் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 41 ரன்களை அடித்திருந்தார். வங்கதேசத்திற்கு எதிராக 48 ரன்களை அடித்திருந்தார். நேற்றைய போட்டியில் 49 ரன்கள். ஒரு கேப்டனாக அணிக்குத் தேவைப்படும் போதெல்லாம் முன் நின்று சிறப்பாக ஆடிக்கொடுத்திருக்கிறார். அதேமாதிரிதான் பெத் மூனியும் லீக் போட்டிகளில் மட்டுமே இரண்டு அரைசதங்களை அடித்திருந்தார். நிலைத்து நின்று சிறப்பான தொடக்கத்தைத் தொடர்ந்து கொடுத்துக் கொடுத்திருந்தார். இப்படிப்பட்ட இரண்டு முக்கியமான வீராங்கனைகளை எந்தளவுக்குச் செயல்பட விட முடியாமல் தடுத்திருக்க வேண்டுமோ அந்தளவுக்குத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி அப்படிச் செய்யவே இல்லை. லேனிங் மற்றும் மூனி இருவருக்குமே மூன்று நான்கு கேட்ச்சுகளை இந்திய வீராங்கனைகள் தவறவிட்டிருந்தனர். அந்த கேட்ச் ட்ராப்களே இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையின்மையைக் கொடுத்துவிட்டது.

Team Australia
Team Australia
ICC

போட்டிக்குப் பிறகான பேட்டியிலுமே கூட ஹர்மன்ப்ரீத் கவுர் தோல்விக்குக் காரணமாக இந்த கேட்ச் ட்ராப்புகளையே குறிப்பிட்டிருந்தார். பேட்டிங்கிலுமே கூட ஒரு முழுமையான அணியாக இந்தியா க்ளிக் ஆகவே இல்லை. இந்திய அணியின் டாப் 3 பேட்டர்கள் மூவருமே சிங்கிள் டிஜிட்டில் அவுட் ஆகியிருந்தனர். ஸ்மிருதி மந்தனா, யஸ்திகா பாட்டியா, ஷெஃபாலி வர்மா என மூவருமே பவர்ப்ளேக்குள்ளாகவே வீழ்ந்திருந்தனர். பெரிய ஸ்கோரை சேஸ் செய்யும் போது ஒரு நல்ல தொடக்கம் கிடைக்காதது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதன்பிறகு, ஹர்மன்ப்ரீத் - ஜெமிமா என இருவருமே நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜெமிமா ரன்ரேட்டை குறையவிடாமல் அதிரடியாக ஆடினார்.

ஹர்மன்ப்ரீத் கவுர் நிலைத்து நின்று பார்ட்னர்ஷிப்பை முன்னோக்கி நகர்த்த முற்பட்டார். லேனிங்கும் மூனியும் ஆஸ்திரேலிய அணிக்காக 103 ரன்களை அடித்ததைப் போலத்தான் இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத்தும் ஜெமிமாவும் இணைந்து 95 ரன்களை அடித்திருந்தனர். ஆனால், ஆஸ்திரேலிய இணைக்கு டாப் ஆர்டரில் அலிஷா ஹீலி மற்றும் மிடில் ஆர்டரில் கார்ட்னர் இருவரிடமும் இருந்து நல்ல ஒத்துழைப்பு கிடைத்திருந்தது. இந்திய இணைக்கு அப்படியான ஒத்துழைப்பு கிடைக்கவே இல்லை.

"நானும் ஜெமிமாவும் ஆடும் போது சேசிங் செய்துவிடுவோம் எனும் நம்பிக்கை இருந்தது" என ஹர்மன்ப்ரீத் கூறியிருந்தார். இது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம். அவருடைய ரன் அவுட் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்பதும் ஏற்கக்கூடியதுதான். ஆனால், "நாங்கள் ஒரு அணியாகப் போராடினோம்" என்ற கூற்றை எந்தவிதத்திலும் ஏற்கவே முடியாது.

Run Out
Run Out
ICC
ஹர்மன்ப்ரீத் போராடினார். ஜெமிமா போராடினார். ஆனால், ஒரு அணியாக இந்திய அணி போராடவே இல்லை. இதுதான் உண்மை. இந்தப் போட்டி என்றில்லை. இந்தத் தொடர் முழுவதுமே கூட இந்திய அணி முழுமையாக ஒன்றிணைந்த செயல்பாட்டைக் கொடுக்கவே இல்லை. மிதாலி ராஜ் உட்பட முன்னாள் வீராங்கனைகள், விமர்சகர்கள் என எல்லாருமே அதைத்தான் சொல்லியிருந்தார்கள். ஹர்மன்ப்ரீத்துமே கூட அதைத்தான் கூறியிருக்கிறார்.

இப்படிக் குறைபாடுகளுடன் ஆடி இவ்வளவு தூரம் வந்ததே மகிழ்ச்சி என்கிறார். இது இந்த ஒரு தொடரின் கதை என்றால் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், எல்லா தொடரிலுமே இதேதான் நிலைமை. 2017 உலகக்கோப்பையிலுமே இப்படித்தான் இறுதி வரை வந்து தோற்றார்கள். 2020 டி20 உலகக்கோப்பையிலுமே இதே ஆஸ்திரேலியாவிற்கு எதிராகத்தான் இறுதிப்போட்டியில் தோற்றார்கள். ஆண்கள் அணியைப் போன்றே நாக் அவுட் வரை முட்டி மோதி வந்து நாக் அவுட்டில் மொத்தமாகச் சொதப்புவதே பெண்கள் அணிக்கும் வழக்கமாகியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

முக்கியமான போட்டிகளிலும் இயல்பாகவே ஓர் அணியாக முழுமையாக ஆதிக்கம் செலுத்த வேண்டும். அப்படி ஒரு நிலையை எட்டும்போதுதான் உலகக்கோப்பை கனவு நிஜமாகும்.