Published:Updated:

`சேஸிங் மிஸ்ட்ரஸ்' ஸ்மிருதியின் ருத்ரதாண்டவம்; ஆஸ்திரேலியாவிற்கு முதல் தோல்வியைக் கொடுத்த இந்தியா!

Smriti ( BCCI )

கோலியை எப்படி `சேஸிங் மாஸ்டர்' என்று அழைக்கிறோமோ அதேபோல் ஸ்மிரிதியையும் `சேஸிங் மிஸ்ட்ரஸ்' எனக் கொண்டாடலாம்.

`சேஸிங் மிஸ்ட்ரஸ்' ஸ்மிருதியின் ருத்ரதாண்டவம்; ஆஸ்திரேலியாவிற்கு முதல் தோல்வியைக் கொடுத்த இந்தியா!

கோலியை எப்படி `சேஸிங் மாஸ்டர்' என்று அழைக்கிறோமோ அதேபோல் ஸ்மிரிதியையும் `சேஸிங் மிஸ்ட்ரஸ்' எனக் கொண்டாடலாம்.

Published:Updated:
Smriti ( BCCI )
"உன்னை மலைக்க வைப்பது முன்னிருக்கும் மலையல்ல, உனது காலணிக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் கூழாங்கற்கள்தான்", என குத்துச்சண்டை வீரர் முகமத் அலி கூறுவதுண்டு. உண்மையில், ஆஸ்திரேலிய அணியைப் பார்த்த மாத்திரத்தில் பல அணிகளும் இத்தகைய மனரீதியான கூண்டுக்குள் அடைபட்டு விடுவதுண்டு. அவர்களது வெற்றியின் அடித்தளமே இதுதான். ஆனால், அப்படிப்பட்ட தரவுகளால் தகர்ந்தோ தளர்ந்தோ விடாமல் ஆஸ்திரேலியாவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி இடுவதில் இந்தியாவிற்கு எப்போதுமே எல்லையற்ற இன்பமுண்டு. இந்திய பெண்கள் அணி இப்போது அதைச் செய்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரின் இரண்டாவது போட்டியை இந்திய அணி சூப்பர் ஓவர் வரை கொண்டு சென்று த்ரில் வெற்றி பெற்றிருக்கிறது.

கடந்தாண்டுகூட 26 ஒருநாள் போட்டிகளில் தொடர் வெற்றியைச் சுவைத்திருந்த ஆஸ்திரேலியாவிற்கு தோல்வியின் கசப்பை இந்தியாதான் கற்பித்தது. அது இம்முறை டி20-லும் நீண்டுள்ளது. கடந்தாண்டு ஏப்ரலிலிருந்து கணக்கிட்டால், ஆடியிருக்கும் 16 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலிய மகளிர் அணி வீழ்த்த முடியாததாக வலம் வந்தது. அதனை ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்தியப்படை, படேல் மைதானத்தில் இரண்டாவது டி20-ல் கிடைத்த வெற்றி மூலமாக மாற்றியுள்ளது.

இவ்வளவுக்கும், இதே மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20-ல் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா தோல்வியைத் தழுவியிருந்தது, அதுவும் 9 விக்கெட் வித்தியாசத்திலான மோசமான தோல்வி. அதிலிருந்து இரு நாள்களுக்கு உள்ளாகவே மீண்டு வந்து பதிலடி கொடுத்துள்ளது இந்தியா.

India
India
BCCI

"எவ்வளவு ரன்களை எடுப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "185 ரன்களை சுலபமாக எட்டுவோம்", என ஆஸ்திரேலியக் கேப்டன் ஹீலே போட்டிக்கு முன்பாகவே கூறியிருந்தார். இந்தியாவின் ஷஃபாலியோ, "மூணேவை முதலில் ஆட்டமிழக்கச் செய்ய முடிகிறதா பார்க்கலாம்", என சிரிப்புக்கிடையே கூறியிருந்தார். கடந்த போட்டியில் மூணேவின் ஆட்டம் அவரை அப்படிப் பேச வைத்திருந்தது. இப்போட்டியிலும் 152 ஸ்ட்ரைக்ரேட்டில் எடுக்கப்பட்ட அவரது 82 ரன்கள், ஷஃபாலியின் வார்த்தையை மெய்ப்பித்தன. ஒயிடு யார்க்கர் ஸ்கொயர் ஆஃப் தி விக்கெட்டிலோ லென்த் பந்துகள் ஸ்கொயர் லெக் ஃபீல்டருக்கு மேலாகவோ பறந்து கொண்டிருந்தன. மெக்ராத்தோ தேவிகாவின் ஃப்ளைடட் டெலிவரியில் ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரி தேற்றினார், அஞ்சலியின் ஸ்லோ பாலோ ஸ்கொயர் ஆன் தி லெக் சைடில் பவுண்டரிக்கு விரட்டப்பட்டது.

வில்லிலிருந்து விடுபட்ட அம்பின் கதிதான் இருவரின் பேட்டை சந்தித்த பந்துகளுக்கும்... அவை பெரும்பாலும் பவுண்டரிக்குள் தஞ்சம் புகவே விரைந்தன. இந்திய பௌலிங்கோ அச்சுறுத்தும் அம்சங்களால் நிரம்பவில்லை. வீசிய எந்த பௌலரது ரன்ரேட்டும் எட்டுக்குக் கீழ் இறங்கவேயில்லை. பந்து ஓரளவு டர்ன் ஆனபோதும், அதைப் பயன்படுத்தி விக்கெட்டுக்கான வியூகம் வகுக்க இந்தியத் தரப்பு தவறிவிட்டது. தீப்தியை நான்காவது ஓவரில் வீசவைத்த நகர்வு மட்டுமே பலன் தந்து ஹீலேயின் விக்கெட்டைப் பலிவாங்கியது. மற்றபடி இந்தியா முதல் பாதியில் மொத்தமாக சரணடைந்தது‌ என்பதே நிதர்சனம். ஃபீல்டிங்கிலும் இன்னமும் முன்னேற்றம் தேவை. ஆறாவது ஓவரில் மெக்ராத்தின் விக்கெட் வாய்ப்பு கேட்ச் டிராப்பால் பறிபோனதும், மிஸ் ஃபீல்டால் சில பவுண்டரிகள் தடுக்கப்படாததும் ஃபீல்டிங்கின் குற்றங்களைச் சுட்டியது. கடைசி 5 ஓவர்களில் 53 ரன்களைக் குவிக்க விட்டதுதான், 187 என்ற மிரட்டும் ஸ்கோருக்கு வழிவகுத்தது.

இந்திய ஆண்கள் கிரிக்கெட்டின் சமீபகால சோகமான தடுமாற்றத் தொடக்கம் இங்கேயும் இருந்திருந்தால், இப்போட்டியில் இந்திய அணிக்கு எண்ட் கார்டு போடப்பட்டிருக்கும். ஆனால் இந்தியப் பெண்களோ இன்டெண்டோடு மட்டுமல்ல இன்னமும் பல இத்யாதி நேர்மறை வார்த்தைகளுக்கும் பொருள் விளக்கம் தருமாறே தொடங்கினர்.

Smriti
Smriti
BCCI
பொதுவாக பார்வையாளர்கள் அற்ற வெற்று இருக்கைகள் சூழ, அமைதிகுடி கொண்ட தரம் குறைந்த பிட்ச்களிலுமே ஆடிப்பழகிய பெண்கள் அணிக்கு, சுற்றியிருந்த 45,238 ஜோடிக் கண்களில் தெரிந்த ஆர்வமும் அவர்களது ஆரவாரமும் இன்னுமொரு உத்வேகத்தைக் கொண்டு வந்திருந்தது. `ஹவுஸ் ஃபுல்' என்ற அறிவிப்புப் பதாகை எல்லாம், பெண்கள் கிரிக்கெட்டின் பெரிய போட்டிகளில்கூட நாம் பார்த்திராதது.

நம்பிவந்த அந்தக் கூட்டத்தை ஏமாற்றாதவாறு, என்டர்டெய்ன்மெண்ட்க்கு உத்திரவாதம் அளித்தது இந்தியா. பவர்பிளேவிலே 47 ரன்கள் எனச் சிறந்தத் தொடக்கத்தை ஷஃபாலியும் ஸ்மிரிதி மந்தனாவும் கொடுத்தனர்.

பாக்கெட் டைனமைட்டான ஷஃபாலியையும் மிஞ்சும் அவதாரத்தை ஸ்மிரிதி இப்போட்டியில் எடுத்தார். ஆஃப் சைடின் ஆண்டவர் என கங்குலிக்கு புகழாரம் சூட்டுவதுண்டு, அதனை இத்தலைமுறையில் ஸ்மிரிதி மந்தனாவின் பெயருக்கு மாற்றி எழுதலாம். அந்தளவிற்கு ஆஃப் சைடில் அவரது ஆதிக்கம் தொடர்ந்தது. ஃபீல்டர்களுக்கு இடையேயான இடைவெளிகளில் பந்து பயணித்துக் கொண்டே இருந்தது. அச்சத்தின் அரிச்சுவடியே அறியாதது போலிருந்தது அவரது ஆட்டம்.

கோலியை எப்படி `சேஸிங் மாஸ்டர்' என்று அழைக்கிறோமோ அதேபோல் ஸ்மிரிதியையும் `சேஸிங் மிஸ்ட்ரஸ்' எனக் கொண்டாடலாம். டி20-ல் சேஸிங்கில் அதிகபட்சமாக 20 அரைசதங்களை கோலி எட்டியிருக்கிறார் என்றால், பெண்கள் பக்கம் ஸ்மிரிதிதான் அதிகபட்சமாக 12 அரைசதங்களை விளாசியுள்ளார். 9 மற்றும் 10-வது ஓவர்களில் மறுமுனையிலிருந்த இருவரது விக்கெட்டுகளை எடுத்தாலும்கூட இவரை அசைக்க முடியவில்லை.

10-வது ஓவருக்குப்பின் கியரை மாற்றி ரன்ரேட்டையும் இவர் முடுக்காவிட்டால் இறுதி ஓவர்கள் இந்தியாவிற்கு இன்னமும் சவாலானதாக மாறியிருக்கும்.

Smriti
Smriti

கார்ட்னரின் பந்துகளை துவம்சம் செய்து ரிச்சா அடித்த இரு சிக்ஸர்கள்தான் இறுதி ஓவரில் 14 ரன்கள் தேவையென்று கொண்டுவந்து நிறுத்தியது. அனுபவம் வாய்ந்த மேகனின் அந்த ஓவரில் அடிக்கப்பட்ட தேவிகாவின் இரு பவுண்டரிகள்தான், போட்டியை சூப்பர் ஓவருக்கு அனுப்பியது. அதிலும் இறுதிப்பந்தான வொய்ட் யார்க்கரை அவர் பவுண்டரியாக்கியது அவரது அபாரத் திறமையின் வெளிப்பாடு. பேட்டிங்கும் லெக் ஸ்பின்னும் அறிந்த அவரைப் போன்ற ஒரு வீராங்கனை எப்போதுமே அணிக்கான புதையல்தான். 187 ரன்களை இந்தியா எட்டியதும் இவர்களது இறுதிக்கட்ட அதிரடியால்தான்.

சூப்பர் ஓவரில் அனுபவமிக்க கிரகாமின் ஓவரின் முதல் பந்தையே கொஞ்சமும் பணியாமல் ரிச்சா லாங் ஆனிற்கு மேல் சிக்ஸராக்கிய விதமாகட்டும், ஸ்மிரிதி இன்சைட் அவுட் ஷாட்டில் அடித்த அந்த சிக்ஸராகட்டும் எல்லாமே வெல்லும் முனைப்பைக் காட்டியது. குறிப்பாக ஸ்ம்ரிதியின் அந்த சிக்ஸர் ராஃபிற்கு எதிராக வந்த அந்த கோலியின் சிக்ஸர் போல சிலாகிக்க வேண்டியது. 20 ரன்கள் என்பதே சூப்பர் ஓவருக்கு மிகச்சிறப்பான ஸ்கோர்தான்.

இதனை இந்தியா டிஃபெண்ட் செய்த விதமும் அற்பதமே. முதல் பந்தில் ரேணுகாவின் யார்க்கர் திட்டமிட்டபடி வீசப்படாவிட்டாலும், இரண்டாவது பந்தில் ரன்அவுட் வாய்ப்பு தவறவிடப்பட்டாலும், மூன்றாவது பந்தில் ஹர்மன்ப்ரீத்தின் வியூகம் கைகொடுத்தது. ஸ்ட்ரெய்டில் லாங் ஆஃபில் நிறுத்தப்பட்ட ஃபீல்டரும், ஸ்லோவாக ஸ்லாட்டில் விழுந்த பந்தும் கார்ட்னரின் விக்கெட்டை வீழ்த்தி போட்டியை ஏறக்குறைய முடித்து வைத்து விட்டது. இறுதிப் பந்தில் சிக்ஸர் வந்திருந்தாலும் அதற்கு முந்தைய இரு பந்துகள் வெற்றியை இந்தியாவின் பக்கம் பதியமிடக் காரணமாகின.

இது கேப்டனாக டி20-ல் ஹர்மன்ப்ரீத்தின் 50-வது வெற்றி. மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட்டிற்கும் சேர்த்தே, 50+ டி20 வெற்றிகளைப் பதிவேற்றியவராக ஹர்மன்ப்ரீத் மட்டுமே தற்சமயம் இருக்கிறார். தோனி 42 டி20 வெற்றிகளோடு இரண்டாவது இடத்தில் உள்ளார். அதிலும், தலைமையேற்ற 84 போட்டிகளில், 60 சதவிகிதம் வெற்றி, காமன்வெல்த் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம், ஆசியக் கோப்பையை வென்றது என ஹர்மன்ப்ரீத்தின் கேப்டன்ஷிப் மகுடத்தில் வைரங்கள் ஒளிர்ந்து கொண்டே இருக்கின்றன.

16 டி20களில் தொடர்ந்து வென்ற சாதனை புரிந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது மட்டுமல்ல, தொடரையும் 1-1 என சமன்படுத்தியிருப்பதும் சிறப்பானதே. இதோடு நிற்காமல், ஆறுதலடைந்து விடாமல், அதே துடிப்பைத் தக்கவைத்து 4-1 என்ற கணக்கில் தொடரை வெல்ல முனைய வேண்டும்.

இப்போட்டியை ஓ.டி.டியில் தொடக்கத்தில் 5 லட்சம் பேர் பார்க்கத் தொடங்கினர், அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து சூப்பர் ஓவரில் 11 லட்சம் வரை வந்து நின்றது. பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பதைப் போல், தனக்கான விளம்பரத்தை இந்தியப் பெண்கள் அணி தானே செய்து கொண்டது. அடுத்த அணியின் வெற்றிக்கு முடிவுரை எழுதுவது சிறப்பெனினும், எந்த இடத்திலும், எந்த ஃபார்மேட்டிலும், எந்தச் சமயத்திலும், எந்த அணியாலும் வீழ்த்த முடியாத அணியாகவும் இந்தியா உருவெடுக்க வேண்டுமென்பதே அடுத்தகட்ட முன்னேற்றம்.

பெண்கள் ஐபிஎல் என்பது அந்த இடத்தை அணி அடைவதற்குரிய பயிற்சிக்கான வாகனமென்றாலும், மக்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பும் பேராதரவுமே உந்துவிசை. இனிவரும் நாள்களிலும் இது தொடர வேண்டும்.