Published:Updated:

INDvSL: அணியின் அச்சாணியாக சதமடித்து நொறுக்கிய விராட் கோலி; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

VK & SKY |INDvSL ( BCCI )

நகரும் சக்கரத்தின் இயக்கம் மையத்தில் உள்ள அச்சாணியைச் சுற்றியே அமையும். ஒருநாள் ஃபார்மட்டில் கோலி எப்போதும் அணிக்கு அந்த அச்சாணியாகவே இருந்து வந்திருக்கிறார்.

INDvSL: அணியின் அச்சாணியாக சதமடித்து நொறுக்கிய விராட் கோலி; வெற்றியுடன் தொடங்கிய இந்தியா!

நகரும் சக்கரத்தின் இயக்கம் மையத்தில் உள்ள அச்சாணியைச் சுற்றியே அமையும். ஒருநாள் ஃபார்மட்டில் கோலி எப்போதும் அணிக்கு அந்த அச்சாணியாகவே இருந்து வந்திருக்கிறார்.

Published:Updated:
VK & SKY |INDvSL ( BCCI )
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கிறது இந்திய அணி.
Rohit
Rohit
BCCI

டாஸை இழந்ததோ முதலில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதோ "Blessing in disguise" என்பது போல் இந்தியாவிற்குச் சாதகமாகவே இருந்தது. டாஸின் போது ரோஹித் கூறியதைப் போல, அடிப்படை விஷயங்களை சரியாகச் செய்வது மட்டுமல்ல வித்தியாசமான அணுகுமுறையும் கடினமான சூழ்நிலைகளும் முன்னர் எட்டாத உயரங்களை எட்ட வைக்கும். எனவே இரண்டாவது பாதியில் பனிப்பொழிவு என்னும் சவாலை எப்படி இந்திய பௌலர்கள் எதிர்கொள்வார்கள் என்ற ஆர்வம் முன்னரே எழுந்தது.

ஓப்பனிங்கில் கில் இறங்குவார் என்று ரோஹித் முன்னதாகக் கூறியிருந்தது பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பலையைக் கிளப்பியது. காரணம் சமீபத்தில் இரட்டை சதம் அடித்த இஷானை வெளியே அமர வைப்பதா என்ற ஆதங்கம்தான். உண்மையில் கில் ஒருநாள் போட்டிக்கென்றே அளவெடுத்து செய்த ஆட்டபாணியை உடையவர் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்று. இப்போட்டியிலும் அதனை சந்தேகத்திற்கிடமின்றி கில் நிரூபித்தார். 

ராகுல், தவான் ஆகியோருடன் ஓப்பனிங் இறங்கிப் பழகிய ரோஹித் கில்லுடன் இறங்குவது இதுவே முதல்முறை. இவர்களுக்கிடையேயான ஒத்ததிர்வு முதல் போட்டியிலேயே அற்புதமாக அமைந்தது. இந்த லெஃப்ட் - ரைட் காம்பினேஷன் அதுவும் பேட்டிங் பிட்சில் இலங்கையைக் கலங்கடித்தது. கில் ஆஃப் சைடில் ரன்குவிக்க, ரோஹித்தோ லெக் சைடைக் கட்டி ஆண்டார். ஓரளவு ஸ்விங்கும் மூவ்மெண்டும் பௌலர்களுக்குக் கைகொடுத்தாலும் அவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்தது இவர்களது பேட்டிங். மதுஷங்கா ஓவரில் கில் அடித்த ஹாட்ரிக் பவுண்டரியும், ரோஹித் வேட்டையாடிய ரஜிதாவின் ஓவரும் அதற்கான சான்றுகள். இந்த 143 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் அடுத்தகட்ட அதிரடிகளுக்கு அடித்தளமானது.

நகரும் சக்கரத்தின் இயக்கம் மையத்தில் உள்ள அச்சாணியைச் சுற்றியே அமையும். ஒருநாள் ஃபார்மட்டில் கோலி எப்போதும் அந்த அச்சாணியாகவே இருந்து வந்திருக்கிறார். இன்னுமொரு முறை கோலியின் அந்த அரிதாரத்தைப் பார்க்க முடிந்தது. கோலி - ஸ்ரேயாஸ் கூட்டணி சராசரியாக ஓவருக்கு 7 என்ற ரன்ரேட்டில் மத்திய ஓவர்களை நிரப்பியது ஸ்கோர் அடிவாங்காமல் பார்த்துக் கொண்டது.

வழக்கத்திற்கு மாறாக கேஎல் ராகுல் வந்தபின் ரன்ரேட் மேலும் அதிகரிக்கத் தொடங்கியது. ராகுலும் ஓரளவு சிறப்பாக ஆடினார்தான், இருப்பினும் மறுமுனையில் செட்டில் ஆகியிருந்த கோலி அதிரடி காட்டத் தொடங்கினார். ஒருநாள் போட்டியில் ஒரு இன்னிங்ஸை எப்படிக் கட்டமைக்க வேண்டுமென்பதில் எப்போதுமே கோலிக்கு அத்துப்படிதான். இப்போட்டியிலும் அப்படித்தான்.

VK
VK
BCCI

29 பந்துகளில்கூட 31 ரன்களை மட்டுமே சேர்த்திருந்த கோலி, தனஞ்சயாவின் சுழல்பந்தை மிட்விக்கெட்டிற்கு மேலே பறக்கவிட்டு 47 பந்துகளில் அரைசதம் அடித்த கையோடு கியரை மாற்றத் தொடங்கினார். சமீபத்தில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளுவதில் அவருக்கு இருந்த சிரமம் பற்றி பலரும் கவலை தெரிவித்திருந்தனர். இப்போட்டியில் அந்த பலவீனம் காணாமல் போயிருந்தது. ஹசரங்கா, துனித்தின் பந்துகளுக்கும் இதே நிலைதான். 80 பந்துகளிலேயே வந்து சேர்ந்த சதமும் அவரது நம்பிக்கைகான அடையாளமே.

VK
VK
BCCI

52, 81 ரன்களில் இருந்தபோது இருமுறை கோலியின் கேட்சினை இலங்கை கோட்டை விட்டிருந்தது. இதன்பிறகுதான் அவரது அதிரடியும் ஆரம்பமாகி இலங்கை செய்த காஸ்ட்லி தவறாக முடிந்தது. இருப்பினும் இந்தியாவின் பக்கமும் தடுமாற்றங்கள் இல்லாமல் இல்லை. 41-வது ஓவரிலேயே 300 ரன்களை இந்தியா கடந்து விட்டது. மீதமிருந்த 9 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது. டி20 போலவே ஒருநாள் போட்டிகளிலும் இறுதி ஓவர்களில் துரிதமாக ரன்சேர்ப்பது அவசியம். அதனை செய்ய இந்தியா தவறியது.

தொடக்கம் அபாரம்தான், மத்திய ஓவர்களும் பிரமாதம்தான் ஆனால் ஃபினிஷிங் டச் கொடுக்க இந்தியா தவறிவிட்டது. 400-ஐ கடக்க முடியாதென்றாலும் இன்னமும் 15 - 20 ரன்கள் என்பது எட்டியிருக்கக் கூடியதே. ஓப்பனிங் உடைசலை சரிசெய்த இந்தியா இதற்கும் வழிபார்க்க வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரை அவர்களது பந்துவீச்சும் மிரட்டுவதாக இல்லை. டி20 தொடரில் ஸ்பின்னர்கள் ஒன்றிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒன்றிலும் அசத்தியிருந்தனர். இப்போட்டியிலோ எல்லோருடைய ஸ்பெல்லுமே சராசரியாகவே இருந்தது. 3 ஓவர்கள் வீசி 22 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்த ஷனகா இன்னமும் ஒருசில ஓவர்களை வீசியிருந்தால் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம். 

374 என்பது கடினம்தான் எனினும் முன்னதாக ஒரு போட்டியில் இந்தியா இங்கே 414-ஐ எட்டியிருக்க, சேஸ் செய்த இலங்கையோ 411 வரை எட்டியிருந்தது. பனியின் குறுக்கீடும் இலங்கையின் வாய்ப்பு வாசலை பெரிதாகத் திறக்குமென எதிர்பார்க்க வைத்தது. 

எப்போதும் புதுப்பந்தின் சுமைகளை பெரிதாகத் தாங்குவது பும்ராதான். அவர் இன்னமும் முழுத்தகுதி அடையாததால் சிராஜ் - ஷமியின் பக்கம் அது திரும்பியது. புதுப்பந்துடன் பவர்பிளேயில் சில விக்கெட்டுகளுக்கான உத்திரவாதத்தைத் தரவேண்டிய பொறுப்பு அவர்களிடம் சேர்ந்தது. கடினமான இலக்குதான் என்றாலும் சரியான தொடக்கமும், ஒரு பெரிய பார்ட்னர்ஷிப்பும் எதையும் சாத்தியமாக்கும். எனவே வளரவளர வெட்ட வேண்டியது பௌலர்களின் கடமை. அதனை மிகச் சிறப்பாகவே செய்தது இந்தியத்தரப்பு.

10 ஓவர்களுக்குள்ளேயே சிராஜ், ஃபெர்ணான்டோ மற்றும் மெண்டீஸ் இருவரையுமே காலி செய்ததுதான் இலங்கையைத் தள்ளாட்டத்துடன் தொடங்க வைத்தது. 38/2 என அந்த சமயத்தில் திணறியது இலங்கை. இதே இடைவெளியில் முன்னதாக இந்தியா விக்கெட் இழப்பின்றி 75 ரன்களை எட்டியிருந்தது. இந்த வேறுபாடுதான் போட்டி முழுவதும் கூட்டுத்தொடரில் கூடிக்கொண்டே இருந்தது. 

ஓப்பனராக இறங்கிய நிஷாங்கா ஒருபுறம் அணைக்கட்டி சரிவைத் தடுக்க போராடிக் கொண்டிருந்தார். அடுத்தடுத்து வெளியேறிய மெண்டீஸ் மற்றும் அசலங்கா இன்னமும் சிறிதுநேரம் பொறுமையாக அவருக்குத் துணையாக நின்றிருந்தால் போட்டியின் போக்கில் அது மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும். இறுதியாக செட்டில் ஆகியிருந்த நிஷாங்கா மற்றும் அற்புதமான ஃபார்மில் இருக்கும் ஷனகாவின் மீதுதான் இலங்கையின் மொத்த நம்பிக்கையும் தேங்கியது.

Umran
Umran
BCCI

31 - 33 ஓவர்கள்தான் பல நாடகங்களை அரங்கேற்றியது. உம்ரானின் அதிவேகம் நிஷாங்காவைக் கலங்கடித்தது. புல் ஷாட் ஆடமுயன்று மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து நிஷாங்கா வெளியேறினார். அந்த ஓவரில் 2 ரன்களை மட்டுமே விட்டுத்தந்து உம்ரான் மாலிக் அற்புதமாக வீசியிருந்தார். ஹசரங்கா உள்ளேவர சாஹல் அடுத்த ஓவரை வீசினார்.

Chahal
Chahal
BCCI
லெக் ஸ்பின்னர் வெர்ஸஸ் லெக் ஸ்பின்னருக்கு இடையேயான போட்டியில் அடுத்தடுத்த மூன்று பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசி ஹசரங்கா அதிரவைக்க அந்த ஓவரின் கடைசிப் பந்திலேயே சாஹல் கம்பேக் கொடுக்க 16 ரன்களோடு ஹசரங்காவும் வெளியேறினார். 33-வது ஓவரில் உம்ரான் மாலிக்கின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஃபுல் லெந்தில் வந்த பந்தை டிரைவ் செய்ய துனித் வெல்லலேஜ் முயல அது எட்ஜாகி கில்லின் கையில் தஞ்சமானது.

இவ்வளவு களேபரத்துக்கும் நடுவில் ஷனகாவின் போராட்டம் மட்டும் தொடர்ந்து கொண்டிருந்தது. 179/7 என 200 ரன்களையாவது எட்ட முடியுமா என்றிருந்த நிலையிலிருந்து அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றார், அந்த சமயத்தில் வெறும் 10 ரன்களுடன் களத்திலிருந்த ஷனகா. இறுதியில் ஏழு விக்கெட்டுகள் விழுந்து அதன்பின் 127 ரன்களை இலங்கை எடுத்திருந்தது. அதில் 98 ரன்களை ஷனகா மட்டுமே அடித்திருந்தார். அதிலும் ஷனகா - ரஜிதா பார்ட்னர்ஷிப் இந்தியர்களின் பொறுமையை ரொம்பவே சோதித்தது. கொஞ்சமும் அஞ்சாமல் ஓவருக்கொரு பெரிய ஷாட் என சிறப்பாக ஆடினர். இக்கூட்டணி சந்தித்த 73 பந்துகளில் 19-ஐ மட்டுமே ரஜிதா சந்தித்தார். அவர்மீது அழுத்தம் படியாமல் ஷனகா அதை எடுத்துச் சென்ற விதம் அற்புதமாக இருந்தது.

இப்போதெல்லாம் இது அடிக்கடி காணப்படும் காட்சியாக மாறிவிட்டது. ஷனகாவின் ஒவ்வொரு இன்னிங்ஸுமே ஒன்றைவிட மற்றொன்று தரமுயர்த்தப்பட்டுக் கொண்டே போகிறது. நல்ல நிலையில் ஓடும் தேரினை இழுப்பதைவிட ஒரு சக்கரமின்றி பழுதாகி நிற்கும் தேரினை பேலன்ஸ் செய்து இழுத்துச் செல்வது மிகவும் கடினம். பல சந்தர்ப்பங்களில் அதனைத்தான் ஷனகா செய்கிறார். அவருடைய நிதானமும் அணியை எடுத்துச் செல்லும் பாங்கும் இலங்கை அணிக்கு ஒரு சிறப்பாக தலைமை கிடைத்திருப்பதை உறுதிசெய்து கொண்டே இருக்கிறது. மற்ற வீரர்களும் துணை நின்றால் இலங்கை முன்பைப் போல் மீண்டும் ஒரு வலுவான வீழ்த்த முடியாத அணியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Shanaka
Shanaka
BCCI
மொத்தத்தில் கோலியின் சதத்திற்கு எந்த விதத்திலும் குறைவானதில்லை ஷனகாவின் சதம் இன்னமும் சொல்ல வேண்டுமென்றால் ஒருபடி அதிகமாகவே சொல்லலாம். இன்னிங்ஸ் தோல்வி அடைய வேண்டிய இடத்தில் டிரா செய்வதைப் போல் ஒரு மோசமான தோல்வியிலிருந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் என்பது வரை கொண்டு வந்து நிறுத்தியதே ஷனகா எனும் ஒற்றை மனிதரின் போராட்டத்தால்தான்.

இந்தியாவைப் பொறுத்தவரை டெத் ஓவர்களில் ரன்களைக் களவாடத் தவறிய பேட்ஸ்மேன்களைப் போலவே டெய்ல் எண்டர்களை முடிக்கவும் பௌலர்கள் திணறினர். ஆல்அவுட் ஆக்கியிருக்க வேண்டிய போட்டியில் எட்டு விக்கெட்களை மட்டுமே வீழ்த்த முடிந்ததும் பலவீனத்தின் அறிகுறிதான். அடுத்தடுத்த போட்டிகளில் இந்தியா இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

1/0 என தொடரில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளது இந்தியா. டி20 தொடர் ஸ்க்ரிப்ட் போல இரண்டாவது போட்டியில் இலங்கை பதிலடி கொடுக்குமா?