Published:Updated:

சூர்யகுமார் 50, பாண்டியா எக்கானமி, ரோஹித் கேப்டன்ஸி... இங்கிலாந்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸா?!

சூர்யகுமார்

ஒன்டவுனாக சூர்யகுமார் இறங்கினார். சர்வதேசக் கிரிக்கெட்டில் தான் சந்தித்த, முதல் பந்தையே, சிக்ஸராக ஓவர்லெக்கில் தூக்கி அடித்து, ஒரு அற்புதமான ஷாட்டோடு, தனது வரவை அறிவித்தார்.

சூர்யகுமார் 50, பாண்டியா எக்கானமி, ரோஹித் கேப்டன்ஸி... இங்கிலாந்தை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸா?!

ஒன்டவுனாக சூர்யகுமார் இறங்கினார். சர்வதேசக் கிரிக்கெட்டில் தான் சந்தித்த, முதல் பந்தையே, சிக்ஸராக ஓவர்லெக்கில் தூக்கி அடித்து, ஒரு அற்புதமான ஷாட்டோடு, தனது வரவை அறிவித்தார்.

Published:Updated:
சூர்யகுமார்

சூர்யகுமார் அற்புதமாய் அரை சதமடிக்க, ஷ்ரேயாஸ் பவர் ஹிட்டராக உருவெடுக்க, தாக்கூர் இரண்டு பந்துகளில் பேக் டு பேக் விக்கெட்டுகள் வீழ்த்த, விராட் கோலி டாஸைத் தோற்றும் வெல்ல வேண்டிய முக்கியமானப் போட்டியில் வென்றிருக்கிறது இந்தியா. 2-2 என இந்தியா - இங்கிலாந்து தொடர் சமநிலையில் இருப்பதால் சனிக்கிழமை நடைபெறயிருக்கும் இறுதிப்போட்டி என்பது டி20 உலகக்கோப்பைக்கான முன்னோட்டமாகவே மாறியிருக்கிறது.

டாஸை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன் பௌலிங்கைத் தேர்ந்தெடுக்க, டாஸின்போது பேசிய கோலியோ, ''நான் டாஸ் வென்றிருந்தாலும், சவாலாய், பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்து, இதுவரை முயற்சிக்காத விஷயங்களை எல்லாம் முயற்சித்திருப்போம்'' என்றார். தசைப்பிடிப்பின் காரணமாக, இஷானுக்கு பதிலாக மீண்டும் சூர்யகுமார் அணிக்குள் வந்திருப்பதாகச் சொன்னார் கோலி. இதனால் கேஎல் ராகுலின் இடம் உறுதியாக இருந்தது. மூன்றுபோட்டிகளாக சொதப்பிய யுவேந்திர சஹால் வெளியே அனுப்பப்பட்டு, ராகுல் சஹார் சேர்க்கப்பட்டிருந்தார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஓப்பனிங் இறங்கிய இந்தியக்கூட்டணியை, ரஷித்தின் ஸ்பின்னோடு வரவேற்றது இங்கிலாந்து. முதல் பந்தையே சிக்ஸருக்கு லாங் ஆஃபில் அனுப்பிய ரோஹித், அதே ஓவரில் இன்னொரு பந்தை பேக்வேர்ட் ஸ்கொயர் லெக்கில் பவுண்டரிக்கு அனுப்பி மிரட்ட, அமர்க்களமாய்த் தொடங்கியது இந்தியா.

கோலி
கோலி

இதன்பின் வழக்கம்போல் தங்கள் அதிவேகப்பந்துகளால், அரங்கை அதிர வைக்கத் தொடங்கினர், ஆர்ச்சரும் உட்டும். குறிப்பாக, போட்டியின் மூன்றாவது ஓவரில், உட்டின் சராசரி வேகம் 147 KMPH. இந்த ஓவரில், ஒரு லெக் பையைத் தவிர வேறு ரன்கள் எதுவும் வரவில்லை. இதனைத் தொடர்ந்து வந்த ஆர்ச்சரின் ஓவரில், எதிர்பாராத விதமாக, 125 கிலோ மீட்டர் வேகத்தில் ஆர்ச்சர் பந்துவீச, பந்தின் வேகத்தைக் கணிக்காமல், முன்பாகவே அடித்த ரோஹித், பந்தை ஆர்ச்சரிடமே கொடுத்து, மீண்டுமொரு ஏமாற்றத்தைத் தந்தார்.

ஒன்டவுனாக சூர்யகுமார் இறங்கினார். சர்வதேசக் கிரிக்கெட்டில் தான் சந்தித்த, முதல் பந்தையே, சிக்ஸராக ஓவர்லெக்கில் தூக்கி அடித்து, ஒரு அற்புதமான ஷாட்டோடு, தனது வரவை அறிவித்தார். ராகுலுக்கு பதிலாக சூர்யக்குமாரை இறக்கலாம் என்ற கருத்துகள் எழுந்த நிலையில், இருவருமே பார்னர்னர்ஷிப் போட்டுஆடும் நிலை வந்தது. ஒருபுறம், வாய்ப்புக்காக பல வருடங்களாகக் காத்திருந்தவர், மறுபறமோ, இந்தப் போட்டியை, தனக்கான கடைசி வாய்ப்பாகக் கருதி ஆட வேண்டியவர். இந்தக் கூட்டணியின் ஆட்டம் மிகுந்த நம்பிக்கையளிப்பதாகவே தொடங்கியது. பவர்ப்ளே ஓவர்களில் அணியின் ஸ்கோரை 45/1 என எடுத்துச் சென்றது இந்தக் கூட்டணி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரஷித், அவுட்சைட் த ஆஃப் ஸ்டம்ப்பில், ஃபுல் டாஸாக வீசிய பந்தை, சூர்யக்குமார், பவுண்டரிக்கு அனுப்பி வைத்த பின், அதற்கடுத்த பந்தை, எக்ஸ்ட்ரா கவரில் மிக அருமையான ஒரு சிக்ஸராக மாற்றினார். எனினும் சின்னதாக ஒரு கேமியோ இன்னிங்ஸ் ஆடி, 24 பந்துகளில், 42 ரன்களைக் குவித்திருந்த இந்தக் கூட்டணியை, ஸ்டோக்ஸ் முறித்தார். இந்த பார்ட்னர்ஷிப்பில், 7 பந்துகளில், 7 ரன்களை மட்டுமே, ராகுல் சேர்த்திருந்தார். மொத்தமாக இரண்டு பவுண்டரிகளை அடித்திருந்தாலும், இந்தப் போட்டியிலும், தனது தேர்வை நியாயப்படுத்தவில்லை ராகுல்‌.

கடந்த இரண்டு போட்டிகளில் தனது ஃபார்மை மீட்டெடுத்த கோலியை, ஒரு கூக்ளியால் காலி செய்து அனுப்பினார் ரஷீத். பந்தைக் கணிக்காமல், இறங்கி வந்து ஆடிய கோலியின் பேட்டில் பந்து சிக்காமல், கீப்பரிடம் தஞ்சம் புக, கோலி கோட்டைத் தொடும்முன், பெய்ல்ஸ், பட்லரால் தரையைத் தொட்டது. ஒரு ரன்னோடு வெளியேறினார் கோலி. நிச்சயம் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்கிற போட்டிகளில் கோலியின் ஆவரேஜ் இதுவரை, 41. ஆனால் இன்றோ, அது ஒற்றை இலக்கில் முடிவைக்கண்டது.

ராகுல்
ராகுல்

பன்ட் உள்ளே வந்தார். மறுமுனையில், சூர்யகுமார், வீசப்பட்ட யார்க்கர், கூக்ளி என எல்லாப் பந்துகளுக்கும், விடையை வைத்திருந்தார். ஒவ்வொரு ஷாட்டையும், தன்னை இத்தனை நாள் தேர்ந்தெடுக்காமல் போனவர்களை நோக்கிய எச்சரிக்கை சமிக்ஞையாக அனுப்பிக் கொண்டிருந்த சூர்யகுமார், 28 பந்துகளிலேயே தனது முதல் அரைச்சதத்தை அடித்து அசத்தினார். அதன்பிறகு பன்ட், 'இது என் முறை' என அதிரடியை ஆரம்பித்தார். சாம் கரணின் பந்தை, ஃபைன் லெக்கில், சிக்ஸருக்கு அனுப்பிய சூர்ய குமார், அடுத்த பந்தையும் ஃபைன் லெக்கில் தூக்கி அடிக்க, அது மலானின் கைகளில் சேர்ந்தது. சாஃப்ட் சிக்னலில் அது அவுட் என அறிவிக்கப்பட, மூன்றாவது நடுவரோ அதை சரிபார்க்க நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார். பந்து ஒரு கோணத்தில், தரையைத் தொட்டது தெளிவாகத் தெரிந்தாலும், சாஃப்ட் சிக்னல், ஃபீல்டருக்குச் சாதகமானதாக முடிந்தது. இன்னும் ஒரு பெரிய ஸ்கோரோடு வெளியேறியிருக்க வேண்டிய சூர்யகுமார், 57 ரன்களோடு வெளியேறினார்.

அடுத்ததாக ஷ்ரேயாஸ் உள்ளே வந்து அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதுதான் இந்தியா ஒரு பெரிய ஸ்கோரை எட்டித் தொடக் காரணமாக இருந்தது. விக்கெட் விழுந்தாலும் அடுத்தடுத்து வந்தவர்களெல்லாம் அதிரடி முகம் காட்டிக்கொண்டே இருந்தனர். ஷ்ரேயாஸ் 18 பந்துகளில், 31 ரன்களைக் குவித்து, அணியின் ஸ்கோரை 174-க்கு எடுத்துச் சென்று விட்டார். ஆர்ச்சர் வீசிய கடைசி ஓவரில், சுந்தருக்கு கொடுக்கப்பட்ட அவுட் எனும் நடுவரின் முடிவு சரியா என்பதும் விவாதப்பொருளானது. இரண்டு விக்கெட்டுகளை ஆர்ச்சர் எடுத்துக் கொள்ள, சுந்தரும் தாக்கூரும் ஆளுக்கொரு பவுண்டரி அடிக்க, 185/8 என முடித்தது இந்தியா.

தான் விளையாடிய முதல் போட்டியிலேயே, அரைசதமடித்து சூர்யக்குமார் அசத்த, 185 என்னும் நல்ல டார்கெட்டை செட் செய்தது இந்தியா. பௌலர்களின் கையில்தான் இனி எல்லாமே என்ற எண்ண ஓட்டத்தோடே தொடங்கியது இரண்டாம்பாதி ஆட்டம். முதல் ஓவரை, மெய்டன் ஓவராக வீசி சிறப்பான தொடக்கம் கொடுத்தார் புவி. அடுத்த ஓவரை யாரும் எதிர்பாராத வகையில் பாண்டியாவிடம் கொடுத்தார் கோலி. இந்த ஓவரிலும் இரண்டு ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது இங்கிலாந்து. எனினும் புவனேஷ்வரின் அடுத்த ஓவரிலேயே ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் ராய் - பட்லர் கூட்டணி கொண்டாட்ட மோடுக்குத் தயாரானது. ஆனால், அந்த ஓவரின் கடைசிப் பந்திலேயே பட்லரை ஆட்டமிழக்கச் செய்தார் புவனேஷ்வர்.

ராயுடன் இணைந்தார் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் டேவிட் மலான். இவர்கள் நிதானமாக ரன்குவிப்பில் ஈடுபடத் தொடங்கினார்கள். மிகக் கட்டுக்கோப்பாகப் போய்க் கொண்டிருந்த ரன்ரேட்டை, பவர்ப்ளேவின் கடைசி ஓவரில் பந்து வீசவந்த சுந்தர், எகிறச் செய்தார். 17 ரன்களை சுந்தர் வாரித்தர, 48 ரன்களை எட்டித் தொட்டது இங்கிலாந்தின் ஸ்கோர். அடுத்தாக, தனது முதல் ஓவரை வீச வந்த ராகுல் சஹாரின் பந்தில், ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயற்சித்து, போல்டாகி, மலான் ஆட்டமிழக்க, பேர்ஸ்டோ உள்ளே வந்தார்.

தாக்கூர்
தாக்கூர்

இன்னொரு பக்கம், ராயின் அதிரடி தொடர்ந்து அச்சுறுத்தினார். எனினும் 40 ரன்களில் இருந்த ராய் பாண்டியா வீசிய பந்தை, டீப் மிட் விக்கெட்டில் அனுப்ப, அதனை சூர்யகுமார் கேட்ச் பிடிக்க ஏமாற்றத்தோடு வெளியேறினார். பென் ஸ்டோக்ஸ் உள்ளே வந்தார். சஹாரின் ஓவரில், பேர்ஸ்டோவுக்கான ஒரு ரன்அவுட் வாய்ப்பு தவற விடப்பட, ரன்களைக் குவிக்க ஆரம்பித்தது இந்தக் கூட்டணி. தாக்கூர், சுந்தர், சஹார் பந்துகள் எல்லாம், பலத்த அடி வாங்கத் தொடங்கின. பார்ப்பது நேரலையா, ஹைலைட்ஸா எனக் குழப்பம் கொள்ளும் ஆட்டம் காட்டியது இந்தக் கூட்டணி. சென்ற போட்டிவரை, அசத்தலாக பந்துவீசிக் கொண்டிருந்த சுந்தரின் எக்கானமி, இந்தப் போட்டியில், 13.

போட்டியைத் தொடர்ந்து பார்த்துத்தான் ஆக வேண்டுமா என ரசிகர்கள் தலையைத் தொங்கப் போட்ட தருணம், இந்தியாவுக்குத் தேவைப்பட்ட பேர்ஸ்டோவின் விக்கெட்டை சஹார் வீழ்த்தினார், எனினும், ஸ்டோக்ஸ் எதிர்ப்பக்கம் அச்சமூட்ட, கொண்டாட்டமேயின்றி, அடக்கி வாசித்தது இந்திய அணி.

24 பந்துகள்... எடுக்க வேண்டிய ரன்களோ 46 மட்டுமே... என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எனும் திக்திக் நிமிடங்கள் தொடங்கின. கோலி காயம் காரணமாக வெளியேற, ரோஹித் கடைசி நான்கு ஓவர்கள் கேப்டன்ஷிப் செய்தார். தாக்கூர் போட்டியின், 17-வது ஓவரை வீச வந்தார். அந்தப் பந்தை ஆஃப் கட்டராக தாக்கூர் வீச, அதனை லாங் ஆஃபில் அனுப்பினார் ஸ்டோக்ஸ். சூர்யகுமார் கிரவுண்டைத் தொட முயன்ற பந்தை அற்புதமாகக் கேட்ச் பிடிக்க, அரை சதத்தைத் தொடமுடியாத ஏமாற்றத்துடன் வெளியேற, அடுத்தப் பந்தில் மார்கனையும் தாக்கூர் வெளியேற்றி அப்படியே போட்டியை இந்தியாவின் பக்கம் கொண்டுவந்துவிட்டார். சாம் கரண் - ஜோர்டன் கூட்டணி இணைந்தது.

கோலி
கோலி

போட்டியில் தன்னுடைய கடைசி ஒவரை வீசவந்த பாண்டியா, அதில் ஆறு ரன்களை மட்டுமே கொடுத்து, சாம் கரணின் விக்கெட்டையும் வீழ்த்தினார். 4 எனும் எக்கானமியோடு, இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி, அற்புதமான ஸ்பெல்லை வீசியிருந்தார் பாண்டியா.

புவனேஷ்வரின் பத்தொன்பதாம் ஓவரில், பத்து ரன்கள் வந்துசேர, இறுதி ஓவரில், 23 ரன்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலையில் வந்து நின்றது போட்டி. முதல் பந்தில் ஸ்லோ கட்டர் மூலமாக ஒரு ரன் கொடுத்த தாக்கூர், இரண்டாவது பந்தில், பவுண்டரியையும், புதிதாக எடுக்கப்பட்ட பந்தில் சிக்ஸரையும் கொடுக்க, கடைசி நிமிட திக் திக் நிமிடங்களுக்குள் போட்டி பயணிக்க ஆரம்பித்தது.

ரோஹித்துடன் நீண்ட உரையாடலுக்குப்பின் பந்துவீசிய தாக்கூர் அடுத்த இரண்டு பந்துகளை வொய்டாக வீசி, மேட்ச்சை அப்படியே இங்கிலாந்தின் பக்கம் போகவைக்கப் பார்த்தார். ஆனால், அடுத்தப் பந்தில் ஒரு ரன் மட்டுமே கொடுத்த தாக்கூர், அதற்கடுத்த பந்தில் ஜோர்டனின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியவர், போட்டியின் கடைசிப் பந்தையும் டாட் பாலாக வீசி, இந்தியாவை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வைத்தார்.

இக்கட்டான நேரத்தில், போட்டியை மாற்றும் அந்த இரண்டு பந்துகள் மூலமாக, இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியை வெற்றியின் பக்கம் கொண்டுபோன தாக்கூரின் அந்த ஒரு ஓவர்தான், கேம் சேஞ்சிங் மொமன்ட்!

செய் அல்லது செத்து மடி என்னும் சூழ்நிலை தரும் உத்வேகத்தை வேறு எதனாலும் தர முடியாது. இது போன்ற போட்டிகளில், இதுவரை இந்தியா பெரும்பாலும், தோல்வியைத் தொட்டதில்லை. அதை மறுபடியும் ஒருமுறை நிரூபித்திருக்கின்றது இந்தியப் படை. சனிக்கிழமை நடக்க இருக்கும், இறுதிப் போட்டி, யார் சாம்பியன் என்பதை முடிவுசெய்திருக்கிறது.

இதற்கிடையே இந்தப்போட்டியில் ''இங்கிலாந்தை, இந்திய அணி வீழ்த்தவேயில்லை. மும்பை இந்தியன்ஸ் என்கிற கிளப் அணியே வீழ்த்திவிட்டது. இங்கிலாந்தை வெல்ல கிளப் அணியே போதுமானது'' என மீம்கள் பரக்கின்றன. சூர்யகுமார் அரை சதம் அடிக்க, ஹர்திக் பாண்டியா 16 ரன்களே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்த, பரபரப்பான கட்டத்தில் ரோஹித் கேப்டனாகப் பொறுப்பேற்று வழிநடத்த இது மும்பை இந்தியன்ஸின் வெற்றி என கொண்டாடுகிறார்கள் மும்பை ரசிகர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism