Published:Updated:

`பும்ரா மேஜிக்; ரஹானே கிளாசிக்!’ - கேப்டனாகக் கங்குலி, தோனி சாதனைகளை முறியடித்த கோலி

பிரேம் குமார் எஸ்.கே.

டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய கேப்டன் என்னும் சாதனையைத் தோனியுடன் பகிர்ந்துள்ளார் கோலி!

Team India
Team India ( AP )

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி ஆண்டிகுவா மைதானத்தில் 22-ம் தேதி தொடங்கியது. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டி என்பதால் முக்கியமான போட்டியாக எதிர்பார்க்கப்பட்டது.

டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததுடன் சிறப்பாகப் பந்துவீசி இந்திய அணியைத் திணறடித்தது. எனினும் ரஹானே மற்றும் ஜடேஜாவின் அரை சதங்களின் உதவியுடன் 297 என்னும் ஸ்கோரை எட்டியது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை இந்திய அணியின் இஷாந்த் ஷர்மா கவனித்துக்கொண்டார். சிறப்பாக பந்துவீசி பேட்ஸ்மேன்களைக் கலங்கடித்த இஷாந்த் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இறுதியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ரன்கள் எடுத்தது.

பின்னர் 75 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது இந்திய அணி. மூன்றாம் நாளின் முடிவில் கோலி 51 ரன்களுடனும் ரஹானே 53 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில் நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. நாளின் தொடக்கத்திலேயே கோலி வெளியேற, ரஹானேவுடன் சேர்ந்தார் ஹனும விஹாரி.

பொறுமையாக விளையாடிய ரஹானே சதமடித்து ஆட்டமிழந்தார். 242 பந்துகளை சந்தித்த ரஹானே 5 பவுண்டரிகளின் உதவியுடன் 102 ரன்கள் எடுத்தார். மறுபுறம் நேர்த்தியாக விளையாடி வந்த விஹாரியும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 343 ரன்களுடன் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து மேற்குகிந்திய தீவுகள் அணிக்கு 419 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.

மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தன் `மேஜிக்கல்’ பந்துவீச்சால் அதிர்ச்சி அளித்தார் பும்ரா. தொடக்க ஓவர்களை வீசிய இஷாந்த மற்றும் பும்ரா மேற்கிந்திய தீவுகள் அணியை வேரோடு சாய்த்தனர். ஒருகட்டத்தில் 37 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதிக் கட்டத்தில் களமிறங்கிய ரோச் (38) மற்றும் கம்மின்ஸ் (19) ஆகியோரின் உதவியுடன் 100 என்னும் மூன்று இலக்கு ரன்னை தொட்டது.

இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 26.5 ஓவர்களில் 100 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பும்ரா 8 ஓவர்கள் வீசி, வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இஷாந்த் 3 விக்கெட்டுகளும் ஷமி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பேட்டிங் செய்ய கடினமான ஆடுகளத்தில் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக் விளையாடிய ரஹானே ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்திய அணி அபார வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 60 புள்ளிகள் பெற்றுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் குறைந்த ரன்னை (100) பதிவு செய்தது. முன்னதாக 2006-ம் ஆண்டில் நடைபெற்ற போட்டியில் 103 ரன்னுக்கு ஆட்டமிழந்தது குறந்தபட்ச ஸ்கோராக இருந்தது.

Team India
Team India
AP

இந்திய அணியின் கேப்டன் கோலி, இந்த வெற்றியின் மூலம் கேப்டனாகச் சில சாதனைகளைச் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பதிவு செய்த இந்திய கேப்டன் என்னும் சாதனையைத் தோனியுடன் பகிர்ந்துள்ளார். தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டு, 27 வெற்றிகளைப் பதிவுச் செய்துள்ளார். கோலி 47 போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டு 27-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் கங்குலி 21 வெற்றிகளுடன் இருக்கிறார்.

அதேநேரத்தில் அந்நிய மண்ணில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்னும் சாதனையைப் படைத்துள்ளார் கோலி (12 வெற்றி). இந்தச் சாதனையை அவர் கங்குலியை (11 வெற்றி) பின்னுக்குத் தள்ளி பெற்றுள்ளார். 308 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது, இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் 4-வது பெரிய வெற்றியாகும்.

Kohli
Kohli
AP

மேலும் அந்நிய மண்ணில் இந்தியா பெறும் மிகப்பெரிய வெற்றி இதுதான். முன்னதாக இலங்கை அணிக்கு எதிராக 2017-ம் ஆண்டு காலே மைதானத்தில் 304 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அந்நிய மண்ணில் பெற்ற பெரிய வெற்றியாக இருந்தது.