ஒருநாள் தொடரின் கடைசிப் போட்டியில், தங்களை வீழ்த்தியதற்கான விலையை முதல் டி20-லேயே இலங்கையை கொடுக்க வைத்துள்ளது இந்தியா.
ஆண்டு இறுதியில் நடக்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நடைபெறும் ஒவ்வொரு டி20 தொடரும் முக்கியமானது என்பதால் இரு அணிகளுமே அதற்குரிய முன்னெடுப்புகளைக் கையிலெடுக்கும் என எதிர்பார்க்கப்பட, அதற்கேற்றாற் போல் வருண் சக்ரவர்த்திக்கு டி20 கேப் வழங்கப்பட்டதோடு, இங்கிலாந்துக்கு விமானம் ஏறக் காத்திருக்கும் பிரித்விக்கும் அறிமுக வீரராகக் களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கையும் தம் பங்கிற்கு, இரு வீரர்களை அறிமுகப்படுத்தி இருந்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டாஸ் வென்ற ஷனகா, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார். ஓப்பனராக பிரித்வியும் தவானும் களமிறங்கினர். முதல் டி20-யின் முதல் பந்து மட்டுமல்ல அது பிரித்வி, டி20 அரங்கில் சந்திக்கும் முதல் பந்தும் என்பதால் எதிர்பார்ப்பு சற்று எகிறவே செய்தது. ஒருநாள் போட்டியையே, டி20 மோடில் ஆடுபவர், இன்றைய நாளில் டி10 மோடுக்குக் கூட மாறுவார் என்றெல்லாம் ரசிகர்கள் காத்திருக்க, நடந்ததோ வேறு! அத்தனை பில்டப்களையும் காற்றில் பறக்க விட்டு, சமீரா ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை, வேண்டி விரும்பி, "தொட்டே ஆவேன்!", எனத் தடவிக் கொடுக்க, அது கீப்பரிடம் போய் அடைக்கலமானது. கோல்டன் டக்கைப் பரிசாகப் பெற்று வெளியேறினார் பிரித்வி. "நிலையற்றதன்மையே, உனக்குப் பெயர்தான், பிரித்வியா?!" எனக் கேட்க வைத்து, சாம்சனின் இன்னொரு நிழலாய், அடிக்கடி, விக்கெட்டை வாரிக் கொடுத்து வெளியேறுகிறார் பிரித்வி.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஒன்டவுனில் இந்தியா, சாம்சனை இறக்கியது. சாம்சனும் தவானும், விக்கெட் விழவிடாது, இன்னிங்ஸை முன்னெடுத்துச் செல்வதே இப்போதைக்கு வேலை என நிதானமாக ஆடினர். வாய்ப்புக் கிட்டிய போது மட்டும் பெரிய ஷாட்டுக்குப் போயினர். பவர் பிளேயின் முடிவில், 51 என ஓரளவு சிறப்பாகவே நகர்ந்தது, இந்திய இன்னிங்ஸ்.
இதை உடைக்க ஷனகா, ஹசரங்காவைக் கொண்டு வர, வீசிய முதல் பந்திலேயே இந்தப் பார்ட்னர்ஷிப்பை உடைத்தார், இலங்கையின் சமீபத்திய சென்ஷேஷனான ஹசரங்கா. இன்னொரு நாள், இன்னொரு சிறப்பான தொடக்கம், இன்னொரு தவறான ஷாட்டில் ஆட்டமிழப்பு, இதுதான் சுழற்சி முறையில் சாம்சன் செய்து வருவது.

சூர்யக்குமார் உள்ளே வந்தார். தவான் பொறுமையாக ரன்களைச் சேர்க்க, வழக்கம் போல் சூர்யாவின் பேட், பாலோடு ஆரம்பம் முதல் அதிரடி பாஷை பேசத் தொடங்கியது. 11 ஓவர்களில், 87 ரன்கள் வந்து சேர்ந்திருக்க, இதன்பின் தவானும் பீஸ்ட் மோடுக்கு மாறத் தொடங்கினார். தனஞ்சயா ஓவரில் பவுண்டரி, சிக்ஸரோடு தனது ஸ்ட்ரைக் ரேட்டைக் கூட்டிக் கொள்ள, சூர்யக்குமாரும் ஸ்வீட் ஸ்வீப் ஷாட்களை எலகெண்டாக ஆடிக் கொண்டிருந்தார்.
இந்தச் சமயத்தில், மிக மெதுவாக வானம் தூறத் துவங்க, அடித்து ரன் ஏற்றும் அவசரத்தில், அதனை கிரீஸிலிருந்து இறங்கி வந்து அடித்து அதை பந்தாராவிடம் கொடுத்து, 46 ரன்களோடு தனது அரை சதத்தை தவறவிட்டு, தவான் வெளியேறினார். நிம்மதி அடைந்தது இலங்கை! அவர்களுக்குத் தெரியும், ஒவ்வொரு விக்கெட்டும், தங்களது விடியலுக்கான வழி என்று.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதன்பிறகு, ஹர்தீக் பாண்டியா இறங்கி வந்தார். அவருக்கு ஆரம்பத்தில் இருந்து எதுவுமே சரியாகச் செல்லவில்லை. 33 பந்துகளில், ஓவர் த லாங் ஆனில் அடித்த சிக்ஸர் மூலமாக, தனது அரை சதத்தை சூர்யக்குமார் பூர்த்தி செய்ய, மறுபுறம் நின்று 'பேடு கட்டி, கை கட்டி', வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் பாண்டியா. சிக்ஸர் அடித்து அசத்திய சூர்யக்குமார், அடுத்த பந்தையே லாங் ஆஃபில் இருந்த மென்டீஸிடம் கொடுத்து விடைபெற, 16-வது ஓவரின் ஓட்டத்தில் 127 ரன்கள் மட்டுமே இந்தியாவின் பக்கம் வந்திருந்தது.

இஷான் கிஷன் உள்ளே வந்தார். டெத் ஓவர்களுக்கு உரிய பத்துப் பொருத்தத்தில் ஒன்று கூடப் பொருந்தி வராது மெதுவாகவே ரன்கள் ஒன்றிரண்டாய்ச் சேர்ந்தன. இஷான் கிஷன் மட்டும் அவ்வப்போது, ஒரு சில பெரிய ஷாட்களை சுத்திச் சுத்தி அடித்துக் கொண்டிருந்தார். ஒரு பந்துக்கெல்லாம் அடித்த மாத்திரத்தில், கீப்பிங் செய்வதைப் போல், உருளக்கூடச் செய்தார். ஆனால், எங்கே இருக்கிறார் எனத் தேடும் படி இருந்தது, ஹர்திக்கின் ஆட்டம். அதனால், 19-வது ஓவரில் அவரது விக்கெட் விழுந்தாலும், அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இறுதியாக, தட்டித் தடுமாறி, 164 ரன்களோடு இந்தியா, "இது எப்படிப் போதும்?", என்ற கேள்வியைக் கேட்க வைத்து முடித்தது.
ஒருநாள் போட்டிகளில் டி20 போல் அவசரம் காட்டும் வீரர்கள், டி20-ல் விக்கெட் விழவே அவசரம் காட்டுவது போல் இருந்தது. இஷான் ஓரளவு முயன்றாலும், தவான், சூர்யக்குமார் தவிர்த்து, மற்றவர்கள் எல்லோரும் பொறுப்புணர்ந்து விளையாடவில்லை என்பதே உண்மை.
165 ரன்கள் மேல் கண்கள் வைத்து இறங்கிய இலங்கைக்கு, தொடக்கம் சரியாகத்தான் இருந்தது. புவ்னேஷ்வர் சரியான லைன் கிடைக்காமல், லெக் சைடில் எல்லாம் வொய்ட் கொடுத்துக் கொண்டிருந்தார். மினோட், ஆன் சைடில் ஒரு பவுண்டரியை, அனுப்பி வைக்க, அதற்கடுத்ததாக இன்னொரு பவுண்டரியை அடித்துக் கொள்ளச் சொல்லி மினோட்டுக்கு, ஒரு ஃபுல் டாஸ் பாலை, சஹாரே போட்டுக் கொடுத்தார். பிடித்துக் கொள்ளச் சொல்லி கைக்கு வந்த கேட்சை ஹர்தீக் கை விட்டார். ஆக மொத்தம், முதல் இரு ஓவர்கள், இந்தியாவுக்குச் சரியாக அமையாமல் போக, மூன்றாவது ஓவரிலேயே தவான், க்ருணாலை இறக்கினார்.

பொறுப்பான ஆஃப் ஸ்பின்னராய், அவர் இடக்கை ஆட்டக்காரரான மினோட்டை அனுப்பி வைக்க, போட்டி மெதுவாய், இந்தியாவை அடிக்கண்ணில் பார்த்தது. ஆனால், ஃபெர்ணான்டோ - தனஞ்சயா இணை, அவ்வளவு எளிதில் விட்டுத் தருவதாக இல்லை. ரன்களைக் கணிசமாகச் சேர்க்கத் தொடங்கினர்.
வருண் சக்ரவர்த்தியை தவான் கொண்டு வர, ரன்களைக் கட்டுப்படுத்த முடிந்தது, ஆனால், விக்கெட் விழவில்லை. அதனால், தாமதிக்காது சஹாலை, தவான் இறக்க, ஒருநாள் தொடரில், முதல் பந்தில் செய்த மாயத்தை, இப்போட்டியில், இரண்டாவது பந்தில் செய்தார் அவர். தனஞ்சயாவின் ஸ்டம்ப் சிதறியது. கோலி பாசறையின் சுழல் கத்தி, பழைய பளபளப்பைப் பெற்று, டி20 உலகக் கோப்பைக்கு, முழுவீச்சில் தயாராகி வருகிறது.
ஃபெர்ணான்டோ இருக்கும் வரை, இலங்கைக்கு எந்தக் கவலையும் இல்லை என்பதால் அடுத்ததாக அவர் மீது திரும்பியது இந்தியாவின் கவனம். இம்முறை, இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்த புவனேஷ்வர் குமார், ஃபெர்ணான்டோவைக் காலி செய்ய, 3 விக்கெட்டுகளை இழந்ததோடு தடுமாறத் தொடங்கியது இலங்கை. அச்சமயமே ஆட்டம் முழுமையாக இந்தியாவின் பக்கம் திரும்பி விட்டது.
எனினும் பந்தாரா - அசலங்கா கூட்டணி, இந்திய பௌலர்களை, கொஞ்சம் கலங்கடித்தது. அடிக்க வேண்டிய ரன்கள், ஓவருக்கு 12 என பயமுறுத்தினாலும், 40 ரன்களைச் சேர்த்தார்கள் இவர்கள். அடுத்து எப்படியும் அடித்து ரன் ஏற்றுவார்கள் என்ற எண்ணம் தோன்ற, அந்த எண்ணத்தோடு ஸ்டம்பையும் அடித்து நொறுக்கினார் ஹர்தீக். பந்தாரா வெளியேற, அசலங்கா மறுமுனையில், போராடிக் கொண்டே இருந்தார்.

எனினும் கட்டுக்கோப்பாக பந்து வீசிய இந்திய அணி, அரை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த அசலங்காவையும் சாஹர் மூலமாக வெளியேற்ற, இதோடு இலங்கை மொத்தமாய் சரிந்து சாயந்து விட்டது.
ஐந்து விக்கெட்டுகளை எடுக்க, 15 ஓவர்களை எடுத்துக் கொண்ட இந்தியா, அடுத்த ஐந்து விக்கெட்களை, வெறும் மூன்றே ஓவர்களில், முட்டிச் சாய்த்து விட்டது. அதில் சஹாரும், வருண் சக்ரவர்த்தியும் ஆளுக்கொரு விக்கெட்டை எடுக்க, மூன்று விக்கெட்டுகளை மொத்தமாக கபளீகரம் செய்த புவனேஸ்வர், "டி20 உலகக் கோப்பைக்கு நான் தயார்!", எனச் சொல்லாமல் சொல்லி இருந்தார். அவரது எக்கானமி எப்பொழுதும் அவருக்காகப் பேசுமென்றாலும், இந்தப் போட்டியில், அவர் மொத்தமாக எடுத்த நான்கு விக்கெட்டுகளும் அவருக்காக உரக்கவே பேசின.
இலங்கையின் பேட்ஸ்மென்களில், ஆறு பேர் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்திருந்தனர். பௌலிங்கில் அவர்களுக்கு இருக்கும் வெல்ல வேண்டுமென்ற வெறி, பேட்டிங்கின் போது காணாமல் போய் விடுகின்றது. இந்தியாவின் பக்கமும் இதே நிலைமைதான். ஒருநாள் போட்டிகளில் காணப்பட்ட பேட்டிங் குறைபாட்டை, இந்தியா இன்னமும் முழுதாய்ச் சரி செய்யவில்லை.

எது எப்படியிருப்பினும், 18.3 ஓவர்களிலேயே, அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க வைத்த இந்தியா, இலங்கையை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகனாக, புவனேஷ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இரண்டாவது போட்டியையும் இந்தியாவே வென்று தொடரைக் கைப்பற்றுமா, அல்லது இலங்கை பதிலடி கொடுத்து, தொடரை சமன் செய்யுமா, தெரிந்து கொள்ள நாளை வரை காத்திருப்போம்.